அன்பின் ஜெ.எம்.,
அம்மாவின் இடம் அழகான பதிவு. ‘அம்மா’வின் அன்புக்கு ஓய்வு தேவையில்லைதான். ஆனால் ‘அம்மா’ என்ற அடையாளத்துடன் அவள் சுமக்கும் பொறுப்புக்களிலிருந்து சற்று ஓய்வு அல்லது அவற்றிலிருந்து ஒரு மாற்று அவளுக்குத் தேவை என்பதும் அம்மாவாகத் தன் கடமைகளை முடித்த பிறகாவது தன் தனிப்பட்ட ஆர்வங்களுக்கு அவள் வடிகால் தந்து கொள்ளட்டுமே என்பதும் நம்மில் பலருக்கும் தோன்றுவதே இல்லை. இறக்கும்வரை அவள் ‘அம்மா’ மட்டுமே…அவளும் ஒரு தனி மனுஷி என்ற எண்ணம் கிஞ்சித்தும் எழுவதே இல்லை.
இதை ஆர்.சூடாமணி தனது ‘செந்திரு ஆகி விட்டாள்’ என்ற சிறுகதையில் நுட்பமாக முன் வைத்திருந்தார். ஒரு விடுமுறைக் காலத்தில் தனது குழந்தைகளையும் உடனழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வருகிறாள் ஒரு பெண். தாய் அதே பழைய பாசத்துடன் அவளை வரவேற்கிறாள். மகளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துத் தருகிறாள்; பேரக் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்கிறாள்.
ஆனாலும் கூட மகளுக்கு அவளிடம் ஒரு மாற்றம் தெரிகிறது .முன்பு அவள் அறிந்து பழகி வளர்ந்தது போல அந்தத் தாய் எப்போதும் வீட்டிலேயே இருப்பதில்லை; வசதியற்ற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரப் போகிறாள்; தானறிந்த தையல் கலையை இலவசமாகக் கற்பிக்கச் செல்கிறாள்.
புகுந்த வீட்டிலிருந்து தான் விடுமுறைக்காக விருந்து வந்திருக்கும் நாளிலாவது அதையெல்லாம் அவள் சற்று ஒதுக்கி வைக்கக் கூடாதா என்ற மகளின் ஆதங்கம், தந்தை அதற்குத் தரும் ஒத்துழைப்பைக் கண்டு இன்னும் கூட அதிகரிக்கிறது; அவரிடம் தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்கிறாள் மகள்.
“இதுவரை அவள் மனைவியாகவும் தாயாகவும் மட்டும்தான் இருந்தாள். இப்போதுதான் அவள் ‘செந்திரு’வாக ஆகியிருக்கிறாள்’” என்கிறார் தந்தை. அந்தத் தாயின் பெயர் ‘செந்திரு’.
எம்.ஏ.சுசீலா
புதுதில்லி
அன்புள்ள சுசீலா,
ஆம், அந்தக்கதையை நான் வாசித்திருக்கிறேன். அதை வாசித்து சூடாமணிக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன்.
ஜெ
அன்பின் ஜெ.,
இது எனது சொந்தக் கதை. குறைந்தபட்சமாக எனது சுற்றத்திலும் இதுவே நிலை.
பெண் பிள்ளைகளுக்கு மிக அதிகமான சீர் செய்துதான் திருமணம் செய்ய வேண்டிய நிலை உள்ள சமூகம்.
ஆனால், பெண்கள் தான் செல்லம்.
சிறுவயதில் ஒரு முறை என் தங்கையை அடித்து விட, “பொட்டப் புள்ளையக் கை நீட்டி அடிக்கிற” என்று வாழை நாரை உரித்துக் கால்களில் ரத்தம் வர அடித்து விட்டார் என் தந்தை.
பெண்கள் பொருளாதாரத் தளத்தில் பங்களிப்பதாலோ என்னவோ, அவர்களின் உரிமை வீட்டில் அதிகம். ஆனால், அடுத்த தலைமுறை – வியாபாரம் செய்யத் துவங்கிய குடும்பங்களில், பெண்கள் பின் கட்டுக்கு நகர்ந்திருக்கிறார்கள்.
என் தங்கை வீட்டில், அவளும், அவள் கணவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அவ்வீட்டில் அவளது இடமும், வெறும் இல்லறப் பெண்ணாகச் சென்ற என் உறவினரின் இடமும் வேறு வேறு.
பெண்கள் சொத்துரிமை, படிப்பு, பொருளாதாரப் பங்களிப்பு இவை உள்ள சமூகங்களில் வேறு வழியின்றி உரிமைகளும் சலுகைகளும் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.
அன்புடன்,
பாலா
அன்புள்ள பாலா,
பொதுவாகப் பெண்ணின் இடம் பற்றி ஒரு வரியில் சொல்லிவிடமுடியாது. அது இடத்துக்கிடம் சாதிக்குச் சாதி , குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடுகிறது. ஆனால் சொத்துரிமை, நிலம் மீது உரிமை உண்டா இல்லையா என்பதே பெண்ணின் இடம் பற்றி அளக்கக்கூடிய புறவயமான அளவுகோல். மற்றவை எல்லாமே அகவயமானவை.
ஜெ
ஜெ,
அம்மாவின் இடம் கட்டுரையில் நீங்கள் சொல்லியுள்ள இக்கூற்று:
“கேரளத்தில் அம்மாவை ஒருமையில் அழைப்பதே பெரும் மரியாதைக்குறைவாகக் கருதப்படுகிறது…”
எனக்கு வேறு மாதிரியாகத் தோன்றுகிறது. நான் அம்மம்மாவை, அம்மம்மாவின் அம்மா (கொள்ளுப் பாட்டி) அம்மா மற்றும் தாய்மாமன்களை ஒருமையில்தான் அழைத்துப் பழக்கம். வாங்கள், போங்கள்
என்றால் அன்னியோன்யம் இல்லாமல் செயற்கையாக இருக்கும். இவர்கள்தான் அன்பைச் சொரிந்து என்னை வளர்த்தவர்கள். அதே சமயம் இவ்வுறவுகளுக்கு வயதொத்த 2ஆம் கட்ட உறவினர்களை எப்படி இருக்கீங்க என விளித்தே பழக்கம். பயத்துடனேஅணுகிய அப்பாவை ஒருமையில் அழைத்தது கிடையாது. ஒருமையில் அழைக்குமளவுக்குப் புரிதல் இருந்திருந்தால் இன்றுவரை இருக்கும் இடைவெளி இல்லாமற் போயிருக்கலாம்.
உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
அன்புடன்,
வாசன்
அன்புள்ள வாசன்,
என் பிள்ளையும் பெண்ணும் என்னை ஒருமையில்தான் அழைக்கிறார்கள். அப்படி அழைக்கக் கூடாதென்றில்லை. ஆனால் அப்பா அம்மா இருவரும் தங்களை வைத்துக்கொள்ளவேண்டிய இடம் ஒன்று உண்டு.
ஜெ