மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவின் கதையில் இப்படி வருகிறது ”காலையில் எழுந்ததும் மப்ளரைக் கட்டிக்கொண்டு கம்பிளியை நன்றாகப்போர்த்திக் கொண்டு கிளம்பி கரிமலை ஏறி இறங்கி நீலிமலையைச் சுற்றிக்கொண்டு பாறைக்கடவு தாண்டி சின்னாறில் இறங்கி மறுபக்கம் ஏறினால் வரும் மண்சாலையோரமாக இருக்கும் கேசு அம்மாவனின் சாயாக்கடைக்குப் போய் சுடச்சுட பெட்காபி குடிப்பேன்” கிட்டத்தட்ட அதேமாதிரியான சூழலில் அமைந்த ஏராளமான ‘ஓணம் கேறா மூலைகள்’ முன்பெல்லாம் மலைநாடான எங்கள் ஊர்ப்பக்கம் இருந்திருக்கின்றன. பக்கத்து வீடு என்பது குடையும் கம்பும் கைவிளக்குமாக ஒருமணி நேரம் நடந்தால் வரக்கூடியதாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம் கேரளத்தில் உள்ள ஊர்களில் பெரும்பாலானவை காட்டுக்குள் மக்கள் குடியேறி மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டவை என்பதே. பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் மரத்தடியாக [மஞ்சாலுமூடு] தோப்பாக [ ஆலஞ்சோலை] ஆற்றிலிறங்கும் இடமாக [தூணக்கடவு] இருக்கும். இங்கே ஒருசிலர் காட்டுக்குள் ஒரு நீருள்ள நிலப்பகுதியை வளைத்து குடில் அமைத்துக் கொள்கிறார்கள். அந்தப்பகுதியில் கடுமையாக உழைத்து விளைநிலத்தை உருவாக்குகிறார்கள்.அதற்கு அடுத்த வளைப்பு இன்னொரு ஓடைக்குள் வெகுவாகத்தள்ளி இருக்கும்.காட்டுமிருகங்களைத்தவிர அஞ்சக்கூடியதாக ஏதும் அங்கே இல்லை.
பின்னர் ஊர் பெரியதாகும்போதுகூட ஓவ்வொருவரும் அவரவர் தோட்டத்துக்குள் வீடு கட்டி வாழும் முறையே நீடித்தது. இன்றும் கேரள கிராமங்களில் பெரும்பாலானவை அப்படித்தான் உள்ளன. பக்கத்து வீடு என்பது பக்கத்து தோப்புக்குள் இருப்பதுதான். என் இளமைப்பருவத்து வீடு இரண்டேக்கர் தோட்டம் நடுவே இருந்தது. பக்கத்து வீடு கூப்பிட்டால்– கொஞ்சம் உரக்கவே கூப்பிட வேண்டும்– கேட்கும் தூரத்தில். ஊரில் நெருக்கமாக மக்கள் வாழ்வது சமூகத்தின் கீழ் படிநிலைகளில் வாழ்பவர்களின் இடத்தில்தான். அவற்றை குடி என்று சொல்வார்கள். சேரி என்ற சொல்லுக்கு சமானமான சொல் அது. நிலம் வாங்கி வீடுகட்டும் வசதி இல்லாதவர்கள் வாழுமிடம் அது. நான் நாகர்கோயிலுக்கு முதன்முறையாக வந்தபோது அதிர்ந்து போய் மீண்டு ஊருக்குத்திரும்பி அம்மாவிடம் சொன்னேன், நாகர்கோயில் ஊரே இல்லை பெரிய குடி என்று. சென்னையை இன்றுகூட மாபெரும் குடி என்றே என் ஆழ்மனம் எண்ணுகிறது.
நாகர்கோயிலில் நான் கொஞ்சம் நிலம் வாங்கி வீடுகட்டினேன். பக்கத்து வீடு தொட்டுவிடும் தூரத்தில்தான். ஆனால் ஒவ்வொரு வீடும் தனியாக காம்பவுண்டுக்குள் இருக்கும். தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து பழகிய என் அக்கா வந்தால் ”என்னடா வீடு இப்டி தனியா இருக்கு? பயமா இருக்கே” என்பார். திருவரம்பில் நான் வாழ்ந்த வீட்டில் தென்னைகளில் காற்று ஓடும் ஒலி மட்டுமே கேட்கும். நாங்கள் சத்தமாகப்பேசுவதில்லை. பொதுவாக எங்களூரில் வீட்டுக்குள் சத்தமாகப் பேசுவதை தவிர்ப்பார்கள். ஆகவே எப்போதும் தீவிரமான அமைதி நிலவும். இப்போது நான் வாழும் பார்வதிபுரம் அத்துடன் ஒப்பிடும்போது சத்தமான பகுதி. ஆனால் மதுரையில் இருந்து நண்பர் சண்முக சுந்தரம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பிலாக்காணம் வைப்பார் ”என்ன சார் வீடு ஓன்னு கெடக்கு.. ..ஊரே கம்முன்னு இருக்கு” மதுரைத்தெருக்களை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவருக்கு எப்படி மூச்சுத்திணறும் என்று.
தமிழர்கள் கூடிவாழ்பவர்கள். நீர் வசதி இல்லாத தமிழ் மண்ணில் எங்கே ஊற்றுள்ள கிணறு இருக்கிறதோ அதைச்சுற்றி நெருக்கமாக வீடுகளை அமைத்துக்கொண்டார்கள். அருகே கோயில். சுற்றிலும் தெருக்கள். சுற்றி காவல்மதில் இதுவே ஒரு தமிழ் கிராமம். ஆகவே மனிதர்கள் செறிந்து வாழ்வது அவர்களின் பண்பாடு. மேலும் தமிழ்நாட்டில் எப்போதுமே கள்ளர் பயம் மிக அதிகம். பெரும்பாலான தமிழ் வீடுகளும் ஊர்களும் திருடனை மனதில்கொண்டே உருவானவை. மதுரை அந்த நெரிசலின் உச்சம். எந்நேரமும் ஒரு திருவிழா நெரிசல். எந்ந்நேரமும் பாட்டுச்சத்தம். தூசி. உக்கிரமான வெயில்.
பாட்டுமேல் மதுரைக்காரர்களுக்கு இருக்கும் மோகத்தை எங்குமே பார்க்க முடியாது. எல்லா டீக்கடைகளிலும் பாட்டுகள் அலறிக்கொண்டிருக்கும். மொத்த மதுரையே மம்மத ராஜா என்று ஓலமிடும். ஜம்முவில் இருந்து மதுரை வரும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸின் ஏறினால் உடனே பெட்டிக்குள் குட்டி ஸ்பீக்கர்களைக் கட்டி பாட்டு போட ஆரம்பித்துவிடுவார்கள் மதுரை திரும்பும் மக்கள். பெட்டி ஒரு கிராமம் ஆக மாறிவிடும். என் பிரச்சினை என்னவென்றால் நான் அமைதியான வீட்டை விரும்புகிறவன். ஆனால் இம்மாதிரி மக்கள் நெரிசலில் உள்ள உயிர்த்துடிப்பு மேல் பெரும் மோகமும் உண்டு. அந்தக்கூட்டத்தில் இயல்பாகக் கரைந்து விடுவேன்.
கன்பெரா அருகே அந்த பிக்னிக் இடத்திற்குச் சென்றிறங்கி அவசரமாக சிறுநீர் கழிக்கச்சென்றபோது அருகே ஒரு பலகை இருந்தது. கிளிண்டின் வீடு இருந்த இடம்.[Clints homestead] ஆச்சரியத்துடன் அந்த வீட்டை தேடினேன். வீடு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. மீண்டும் வந்து பலகையை கூர்ந்து படித்தேன். அந்த இடத்தில் 1892ல் கிளிண்ட் என்பவரின் அப்பா ஒரு சிறிய மரவீட்டைக் கட்டி அந்த நிலத்தில் திராட்சை பயிரிட ஆரம்பித்தார். அப்பகுதியில் சற்று அப்பால் நின்ற சிறிய மண்குன்றில் இருந்து நீர் ஊறி வருகிறது. மழையும் கொஞ்சம் பெய்யும். திராட்சையை தானே பிழிந்து ஒயின் தயாரித்து அதை கொண்டுசென்று விற்பது அவர்களின் வாழ்க்கை. அதன்பின் கிளிண்ட் தன் மனைவியுடனும் இரு மகள்களுடனும் ஒரு பையனுடனும் அங்கே வாழ்ந்தார். கிளிண்ட் இறந்தபின் மகன் சிட்னிக்கு வேலைக்குச் சென்றான். கிளின்டின் இரு மகள்களும் மனைவியும் அங்கேயே வாழ்ந்தார்கள். இரு மகள்களும் மணமாகிச்சென்ற பின் கிளிண்டின் மனைவி அங்கே வாழ்ந்தாள். அவள் இறந்தபின் அங்கே எவரும் வாழவில்லை.
என்ன முக்கியம் என்றால் கிளிண்டின் பக்கத்துவீடு முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தது என்பதே. குதிரைமேல் பயணம்செய்தால் முழுப்பகலும் சென்றபின்னர்தான் பக்கத்துவீட்டை அடையமுடியும். மாதம்தோறும் சந்தைக்குச் செல்வார்கள். சந்தைக்குச் சென்று திரும்ப நான்கு நாட்கள் ஆகும். மூன்று வெவ்வேறு இடங்களில் இரவு தங்க வேண்டியிருக்கும். உப்பு, தீப்பெட்டி, மருந்துகள் முதல் அனைத்து பொருட்களையும் முன்னரே யோசித்து வாங்கி வைக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை பெரிய சிக்கல் ஏதுமில்லாமல் சென்றிருக்கிறது. அதை மலையாளிகளால் புரிந்துகொள்ள முடியும். மதுரைக்காரர்கள் வந்தால்தான் திக்பிரமைபிடித்து நின்றிருப்பார்கள். அந்தப்பலகையில் கிளிண்டின் பழைய வீடு மற்றும் குதிரையின் படம் இருந்தது. அந்தக்குதிரைமேல் கிளிண்டின் மகள் சிரித்துக்கொண்டு ஒரு சீமாட்டி போல அமர்ந்திருக்கிறாள். அவள் சீமாட்டிதானே, அந்த நிலப்பகுதியே அவளுக்குக் கட்டுப்பட்டது– கிட்டத்தட்ட குமரிமாவட்டம் அளவுக்கு நிலம். பழங்காலத்தில் குமரிமாவட்டத்தில் இந்த அளவு இடத்துக்குள் எட்டு தனி ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கிறார்கள்!
அந்த இடத்துக்கு திரும்பும் வழியில் ஈமு பறவைகளைப் பார்த்தேன். மறுபடியும் ஒரு சொற்குழப்பம். பறவை, ஆனால் ஈமு பறக்காது. பறக்காத ஒன்றுக்கு ஏன் பறவை என்று பெயர். சிறகிருப்பதனாலா? பேசாமல் சிறகை என்று பெயரிட்டிருக்கலாம். சாலையோரமாக சாலைக்கு வரமுடியாமல் ஒரு கம்பிவலை போட்டிருந்த வேலிக்கு அப்பால் ஒரு சிறிய சேற்றுக்குட்டை ஓரமாக சோம்பலாக நின்றிருந்தன. ஒன்று மெல்ல குனிந்து ஒரு ஹோஸ் பைப்பை குளத்தில் போட்டது போல தலையை போட்டு நீரை உறிஞ்சி குடித்தது. இன்னொரு ஆஸ்திரேலிய விசித்திரம் இந்தப்பறவை.
ஆஸ்திரேலியக் கண்டத்திலேயே பெரிய பறவையான இது நெருப்புக்கோழிக்கு அடுத்தபடியாக உலகின் பெரிய பறவை. ஒருவகை நெருப்புக்கோழி என்றுதான் தோன்றிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஆறரை அடி உயரமாந்து. ஒரு வைக்கோல்சுருளை குச்சிகளில் வைத்து நடமாட விட்டது போன்ற அமைப்புள்ளது. கழுத்து ஒட்டகம்போல நீளமானது, காரணம் கால்கள் நீளமாக இருப்பதுதான். சிறப்பாக ஓடக்கூடியது. புல்வெளி மற்றும் அரைப்பாலைவனங்களில் அதிகமாக வாழ்கிறது. சிறகடித்து ஓடக்கூடியதென்பதனால் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரைச் செல்லக்கூடியது என்கிறார்கள். கிட்டத்தட்ட கோழிதான். புழுப்பூச்சிகள் கொட்டைகள் சின்னச் செடிகள் எல்லாவற்¨றையும் தின்னும்
ஈமு ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையர் வந்தபோது கடுமையாக வேட்டையாடப்பட்டு அழிய நேர்ந்தது. கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஈமு கிட்டத்தட்ட இல்லாமலே ஆனது. ஆனால் பாலைவனப்பகுதிகளில் நீர்ப்பாசனத்திட்டங்கள் மூலம் விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது அங்கே ஈமு பல்கிப்பெருகியது. இன்று அது ஒரு வணிக வளர்ப்பு. இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் அது வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் ஈமு வளர்க்கும் பண்ணைகளை ஆரம்பித்தார்கள். அவை வெற்றிகரமாக நடக்கின்றனவா தெரியவில்லை.
ஈமுவின் கால்தான் நம்மைப்போன்ற அன்னியரின் பார்வைக்கு மிகமிக ஆச்சரியமளிப்பது. மட்கிய இரு மரக்கிளைகள் போன்ற கால்கள். தோல்கூட இல்லாத வலுவான இரு எலும்புகள் என்று தோன்றும். ஈமு பயங்கரமாக சிறகடித்து கூவும் என்றார்கள். காரில் இருந்து இறங்கி கொஞ்சநேரம் அதைப்பார்த்து நின்றோம். அவை எங்களை சக உயிர்களாக எண்ணியதாகவே தெரியவில்லை. ஈமுக்கள் பொதுவாக இலட்சியக் காதலர்கள். சண்டை வந்தால் முரட்டுக்கால்களால் அடித்துக்கொள்ளும் என்றாலும் பொதுவாக சேர்ந்தேதான் இருக்குமாம். பொதுவாக சாந்தமான ஜீவன். யாரையும் அது தாக்கியதாகச் செய்திகள் இல்லை, நல்ல காதல் வாழ்க்கை இருப்பதனால் வந்த சாந்தமாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியா ஈமுவுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தேசியப்பறவை இது. கங்காருபோல இதுவும் ஆஸ்திரேலியத் தனித்தன்மைக்கான அடையாளம். ஆஸ்திரேலியாவில் கிட்டத்த 600 இடங்கள் ஈமுவின் பெயரில் இருந்து உருவாகிவந்திருக்கின்றன என்கிறார்கள்.
அந்த இடத்துக்கு வந்ததே ஆஸ்திரேலியாவின் இன்னொரு தேசிய விசித்திரமான குவாலா கரடிகளைப் பார்ப்பதற்குத்தான். அப்பகுதி முழுக்க ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள். திறந்த புல்வெளிகளில் குடும்பங்கள் பிக்னிக்கைக் கொண்டாடிக்கொண்டிருந்தன. சராசரி ஆஸ்திரேலியக் குடும்பத்தின் ஒரு மகிழ்ச்சியான தருணம் என்ன என்பதைக் காணமுடிந்தது. ஒரு நல்ல கார். அப்பா அம்மா குழந்தைகள், பெட்டிகளில் பானங்கள், இறைச்சி அடைக்கபப்ட்ட சுருள்ரொட்டிகள், ஒரு நாய். ஒரு இளவெயில்நேரம், புல்வெளி. ஒரு சில புத்தகங்கள். இசைக்கருவிகள். அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருக்க குழந்தைகளும் நாயும் புல்வெளியில் பந்து விளையாடின.
நாங்கள் வழிகாட்டிப்பலகையைக் கூர்ந்து நோக்கினோம். அதில் ஒரு முப்பது கிலோமீட்டர் புதர் நடை [Bushwalk] பற்றி போட்டிருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் புதர்நடை என்று ஒரு முக்கியப் பொழுதுபோக்கு உள்ளது. உணவு நீர் தூங்கும் வசதி ஆகியவற்றுடன் ஓரிரு நாட்கள் விரிந்த நிலவெளியில் நடக்கச்செல்கிறார்கள். அதற்கான குழுக்கள் உள்ளன. கட்டணம் கொடுத்து அவற்றில் உறுப்பினராக ஆகிக்கொள்ளலாம். அப்படிப்பட்ட குழுக்கள் இல்லாமல், வழிகாட்டி வசதிகள் இல்லாமல் பயணம்செய்வது மிகமிக ஆபத்தானது. வழிதவறினால் கண்டுபிடிப்பதற்குள் நூறு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். வழிகேட்க மானுட ஜென்மங்கள் கண்ணிலே படாத தேசம்
குவாலா கரடியை பார்ப்பதற்காக யூகலிப்டஸ் காட்டுக்குல் அலைந்தோம். இந்த மிருகத்தின் அபூர்வ குணங்களில் முக்கியமானது இது யூகலிப்டஸ் மரத்தின் தைலம் மிகுந்த இலையை தின்னும் என்பதே. ஜலதோஷமே பிடிக்காது போல. பெரும்பாலும் எந்த உயிருமே யூகலிப்டஸ் இலையை தின்பதில்லை. அந்த மரத்தின் பட்டைகளிலும் இலைகளிலும் புழுப்பூச்சிகள் அனேகமாக இருப்பதில்லை. அதன் சருகுகள் விழுந்து மூடிய தரையிலும் உயிர் நடமாட்டம் குறைவு. ஆகவே யூகலிப்டஸ் காட்டில் பறவைகள் அரிதாகவே காணப்படும். காடே மௌனமாக இருக்கும். ஊட்டியில் யூகலிப்டஸ் காடும் சோலைக்காடும் மாறி மாறிக் காணப்படும். நீர் ஓட்டமும் ஆழமான மேல்மண்ணும் உள்ள பள்ளங்களில் சோலைகள். ஆழமில்லாத மேல்மண் கொண்ட இடங்களில் யூகலிப்டஸ். 1910 வாக்கில் விறகுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்து ஊட்டியில் நட்ட மரம் யூகலிப்டஸ். பின்னர் முதல் உலகப்போரில் எரிபொருள் தேவை அதிகமாக எழுந்தபோது மானாவாரியாக நட்டு நிறைத்தார்கள். அக்காலத்தில் நிலக்கரிப் பஞ்சம் ஏற்பட்டமையால் ரயில்கள் யூகலிப்டஸ் விறகில் ஓடின. ஊரெங்கும் தைலமணம் வீசுமாம்.
யூகலிப்டஸ் காடு வழியாகச் செல்லும்போது ஒரு பெரிய சினிமாக்காட்சியில் மரங்களைக் காண்பது போன்ற பிரமையே எழுந்தது. சத்தமே இல்லாத ஓங்கிய மரங்கள். பிரமை பிடித்து வரிசையாக நின்றன அவை. நன்றாக போர்த்தப்பட்டது என்னும் பொருள்வரும் கிரேக்க சொல்லில் இருந்து உருவானது யூகலிப்டஸ் என்ற வார்த்தை. ஆனால் யூகலிப்டஸ் பட்டைகளை உரித்து உரித்து எப்போதும் விறகுக்குச் சமானமான ஒரு தோற்றத்தில்தான் இருக்கிறது. ஏறத்தாழ 700 வகை யூகலிப்ட்ஸ் மரங்கள் உண்டாம். பெரும்பாலும் எல்லாமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவை. மேல்மண்ணில் உள்ள நீரை உறிஞ்சியழிக்கும் தன்மை கொண்டது இந்தமரம் என்று இதற்கு எதிராக தமிழ்நாட்டு இயற்கையியலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்போது வனத்துறையும் யூகலிப்டஸ் நடுவதை கைவிட்டுவிட்டிருக்கிறது.
கோலா கரடி என்பது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கரடி. அது கரடியே அல்ல. நம்மூர் பழ உண்ணி அல்லது மரநாய் மாத்ரியான ஒரு சிறிய மிருகம். யூகலிப்டஸ் மரத்தின் உச்சிக்கிளைகளில் இலைகளைத்தின்றுவிட்டு பெரும்பாலான நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும். ‘தண்ணீர் குடிக்காதது’ என்ற பொருளில் உருவான சொல் இது என்று சில இடங்களில் படித்தேன். ஆஸ்திரேலிய பழங்கொடி மொழியில் கூலா என்று இது சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதை கரடி என்று சொல்லக்கூடாது என்று குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் சுற்றுமுள்ள தீவுகளிலும் குவாலாக்கள் உள்ளன. அடர்த்தியான சாம்பல்நிற முடி கொண்டது. குவாலாக்கள் மரக்கி¨ளைகள் வழியாக மரநாய் போல பயணம் செய்யும். மிக மெதுவான இயக்கம் கொண்ட மிருகம் இது.
நெடுநாட்கள் இந்த மிருகம் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வந்தது. இதன் தோல் ஆடைகளுக்காக பயன்பட்டது. ஆனால் அதைக்காட்டிலும் இதை வேட்டையாடிக் கொல்வதென்பது சுடும் திறமையைக் காட்டுவதாக அமைந்திருந்தது. ஆகவே ஏராளமான குவாலாக்கள் கொல்லப்பட்டன. வம்ச அழிவின் விளிம்புக்குச் சென்ற இம்மிருகங்கள் சமீபகாலமாக ஆஸ்திரேலிய அரசால் பாதுகாக்கபப்டுகின்றன. அதைக் கொல்வதும் வீடுகளில் வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆறிவில்லாத மனிதர்களை கழுதை என்று திட்டும் வழக்கம் நமக்குண்டு, ஆனல் கழுதை புத்திசாலியான மிருகம். வேண்டுமென்றால் குவாலா என்று திட்டலாம்.பூமியில் வாழ்பவற்றிலேயே ஒப்புநோக்க மிகச்சிறிய மூளை கொண்ட உயிரினம் இதுவே.
குவாலாவின் மூளை சிறியதாக ஆனமைக்கு என்ன காரணம்? முதல் விஷயம் அது உணவைத்தேடிச்செல்லவேண்டியதே இல்லை. அதற்கான உணவு அதைச்சுற்றித்தான் இருக்கிறது. ஆகவே அது உணவு உண்ணும் நேரம் மட்டும் விழித்திருந்தால் போதும். மிஞ்சிய நேரம் ஆனந்தமாக தூங்கலாம். இரண்டாவதாக அதற்கு அது வாழும் அந்த உயரத்தில் இயற்கை எதிரியே இல்லை. ஆகவே எதைப்பற்றியும் கவலை தேவையில்லை. மிருகங்களில் அது ஒரு சுகவாசி. கடவுள் செல்லம் கொடுத்து சீரழித்த குழந்தை. இயற்கையின் சவால்களே இல்லாததனால் அதன் மூளை பரிணாம வளர்ச்சியே கொள்ளவில்லை. அதன் மூளையின் இரு பருப்புகள் நடுவே இணைப்பே பரிணாமத்தில் உருவாகி வரவில்லை என்று சொல்கிறார்கள். குவாலாவின் உடலியக்கம் மிகமிகக் குறைவு. ஆகவே அதற்கு அதிக புரோட்டின் தேவையில்லை. அதனால் அது யூகலிப்டஸ் இலைகளை மட்டும் உண்டே வாழமுடிகிறது. இந்தியாவில் தேவாங்கு இதைப்போன்ற ஒரு சோம்பேறி மிருகம்.
நன்றாகத்தேடியும் குவாலாவை காணவே முடியவில்லை. அதைக் காண்பது அனேகமாக சாத்தியமே இல்லை என்றார் ரகுபதி. ஆகவே திரும்பிவிடலாமென்று தீர்மானித்தோம். காரில் ஏறி கன்பராவை நோக்கிச் சென்றோம். செல்லும் தோறும் இருட்ட ஆரம்பித்தது. முந்தைய நாள் கன்பராவைச்ச்சேர்ந்த என் வாசகியான சித்ரா என்னைச் சந்திக்கவேண்டுமென சொல்லியிருந்தார். அவர் திருச்சியைச் சேர்ந்தவர். அவரது கணவர் தேவ் கணிப்பொறி வல்லுநர். அவர்கள் வீட்டுக்கே சென்று மாலையுணவு சாப்பிடலாமென எண்ணி கிளம்பினோம். யோகன் என்ற நண்பரும் முந்தைய நாள் சந்திக்க வேண்டுமென சொல்லியிருந்தார். அவரை அங்கேயே வரச்சொல்லியிருந்தோம்.
சித்ரா அனேகமாக தினமும் என் இணைய தளத்தை வாசிப்பதாகச் சொன்னார். பலவகையிலும் அது ஒரு உரையாடல், அவர் எனக்கு எதுவுமே எழுதியதில்லை என்றாலும் கூட. தினமும் நான் அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். அந்த மாலை ஓர் இனிய சந்திப்பாக இருந்தது. தேவ் அதற்கு முன்னர் அவர்கள் நியூசிலாந்தில் வேலை பார்த்ததாகச் சொன்னார். ”இந்த மாதிரி ஊர் இல்லை சார் அது. எங்கே பாத்தாலும் பச்சைப்பசேல்னு இருக்கும். டிராப்பிக்கல் வெதர்…”
ஆஸ்திரேலியாவில் சர்வதேசப் பொருளாதார மந்தநிலை பாதிக்குமா என்று கேட்டேன். ”இப்ப வரை பாதிக்கலை.அதுக்கான சான்ஸ் ரொம்பவே இருக்கு. அதைப்பத்தித்தான் பேசிட்டே இருககங்க. இந்த நாட்டோட பொருளாதாரம்கிறதே கனிமங்களை நம்பித்தான் இருக்கு. முக்கியமா இரும்பும் நிலக்கரியும். இவங்க அதிகமா இதை ஏற்றுமதி செய்றது சீனாவுக்கு. சீனா இப்ப பொருளாதார ரீதியா வளர்ந்துட்டே இருக்கிற நாடுங்கிறதனாலே இதெல்லாம் அவங்களுக்கு அளவில்லாம தேவைப்படுது. ஆனா சீனாவோட மொத்த பொருளாதாரமும் அமெரிக்காவை நம்பி இருக்கு. அமெரிக்கா விழுந்துட்டப்போ சீனாவுக்கு பெரிய அடிவிழுந்திருக்கு. அந்த பாதிப்பு கண்டிப்பா ஆஸ்திரேலியாவுக்கும் வரும்” என்றார் தேவ்
”அவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வருமா?” என்றேன். ”இப்ப முதலாளித்துவத்துக்கு விழுந்திருக்கிற அடி முன்னாடி கம்யூனிசத்துக்கு விழுந்திருக்கிற அடிக்குச் சமானமானதுன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா அதைப்பத்தி அதிகமா பேசாம தவிர்க்கிறாங்க. சீனா இப்ப உள்ள நெருக்கடியைச் சமாளிக்க பெரிய அளவிலே கட்டுமானத்திட்டங்களை அறிவிச்சிருக்கு. ஆனா அதுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதுக்குமேலே அது இறக்குமதியை குறைக்க ஆரம்பிக்கும். அப்ப ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பாதிப்பு வரும்” என்றார் தேவ்.
சித்ராவும் அருண்மொழியும் திருச்சியில் ஒரே பள்ளியில் சாவித்ரி வித்யாலயாவில் படித்திருக்கிறார்கள். சித்ரா கொஞ்சநாள் முன்னால் படித்திருக்கிறார். ”’நான் பாத்ததில்லை” என்றாள் அருண்மொழி. பார்த்திருந்தால் கூட கண்டுபிடிக்கவா முடியும்? யோகன் என்னிடம் என்னுடைய நாவல்களைப் பற்றி கேட்டார். அவர்கள் இட்லி சாம்பார் எல்லாம் சாப்பிட்டார்கள். நான் வழக்கம்போல இரு ஆப்பிள்களும் ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டேன். நானே ஒரு குவாலாவாக ஆகிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டேன். உச்சியிலமர்ந்து கொண்டு இலைதழைகள் சாப்பிடுகிறேன்
ஆனால் மனித உடல் மிகமிகக் குறைவான உணவுக்காக படைக்கபப்ட்ட ஒன்று. நம்பமுடியாத அளவுக்கு குறைவான உணவில் மனிதன் வாழ முடியும். சொல்லப்போனால் உணவின் அளவு குறையும்போதுதான் மனிதனுக்குச் சுறுசுறுப்பும் திறனும் நோயின்மையும் உருவாகின்றன.மனிதனுக்கு கொழுப்பு அறவே தேவையில்லை, அதை மனித உடலே உருவாக்கிக் கொள்ளும். வளர்ந்தபின் புரோட்டீன் குறைவாகவே தேவை. மாவுச்சத்து ஒரு டம்ளருக்குமேல் தேவையில்லை. ஏனென்றால் இயற்கை மனிதன் உணவைத்தேடி அலைந்து கொஞ்சமாக உண்ணவேண்டுமென விதித்திருக்கிறது. அதை விட்டுவிட்டு கோலா போல சுகவாசியாக ஆகும்போதுதான் மூளை குறுக ஆரம்பிக்கிறது.