அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் அண்மையில் எழுதிய காந்திஜி காஞ்சி பெரியவர் சந்திப்பு குறித்து ஒரு சில தவறுகள் காண்பிக்க முயல்கிறேன். பாலக்காட்டு நெல்லிச்சேரி என்பது ஒரு அக்ராஹாரமே, அங்கு காந்திஜி தங்கவில்லை, அக்ரஹாரத்தின் ஒரு வீட்டின் அவுட் ஹௌசில் தான் அந்த சந்திப்பு நடந்தது. காந்திஜி பிராமணரல்லாத காரணத்தினால் ஒரு பசுவைக் கட்டினார்கள், may be for purification!
காஞ்சிப் பெரியவர் நீங்கள் சொல்வது போல் காந்திஜியை பார்ப்பதற்காக வரவில்லை, சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார் என்று எங்க வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ளே நடந்த சம்பாஷணம் பற்றி அவர்கள் இருவரும் ஒன்றும் வெளியே சொல்லவில்லை.
நீங்கள் மலையாளத்தில் சொல்லுவது போல எழுதாபுறம் நிறையவே வாசிக்கிறீர்கள், உங்கள் கற்பனா வளம் கொண்டு.
இந்த சந்திப்பு பற்றி முதலில் எழுதினது டாக்டர் தி எம் கே மகாதேவன்தான், Bhavan’s Journal இல் இது பற்றி வந்திருக்கிறது. என்கிட்டே அதன் காபியும் இருக்கிறது.
இப்படிக்கு,
சீதாராம்
ps : அந்த சந்திப்பு நடந்தது எங்கள் வீட்டில்தான்.
அன்புள்ள சீதாராம் நெல்லிச்சேரி,
தகவலுக்கு நன்றி
பொதுவாக இந்த விஷயத்தில் எழுதாப்புறம் நிறையவே இருக்கலாம். சந்திப்பு மூன்றுபேருக்கு மட்டுமே தெரியும் – ராஜாஜி, காந்தி, சந்திரசேகரர். மூவருமே அதைப்பற்றிப் பேசியதில்லை.
அக்காலகட்டத்தில் பாலக்காட்டு காங்கிரஸுடன் தொடர்பில் இருந்தவர்கள் பலர் அன்று பேசப்பட்டதைப் பற்றி சுயசரிதைகளில், கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில்தான் நான் எழுதினேன்.
நான் எழுதியதொன்றும் அபூர்வமான ஆய்வுத்தகவல் அல்ல, தமிழிலேயே பலர் எழுதிய விஷயங்கள்தான். ஆர்வமுடைய எவரும் வாசிக்கப்போனால் கிடைக்கும். கண்களை மூடிக்கொண்டால் எதுவுமே தெரியாது–காட்டினாலும்.
அந்த சந்திப்பு நிகழ்ந்த சந்தர்ப்பம், அந்தச் சந்திப்புக்கு முன்னரும் பின்னரும் சந்திரசேகரர் பேசியவை, அதை ஒட்டி அவருக்கும் ராஜாஜிக்கும் இடையே உருவான பூசல், அதில் ராஜாஜி தரப்பை எடுத்து கல்கி எழுதிய மிகக்கடுமையான விமர்சனம் ஆகியவை மலையாளத்திலும் தமிழிலும் நான் சொன்ன விதத்தில் எழுதப்பட்டவையே சரியானவை என்று காட்டுகின்றன.
இப்போது மூலநூல்களை, ஆவணங்களைத்தேட நேரமில்லை. ஒரு கட்டத்தில் மொத்தத் தகவல்களுடன் ஒரு குட்டி நூலே எழுதுகிறேன்.
இன்று காந்தி சந்திரசேகரரைச் சந்தித்து ஆசி வாங்கினார் என்று பிராமணர்கள் எழுதிக்கொண்டேஇருப்பதுதான் எழுதாதபக்கத்தை அல்ல காகிதமே இல்லாமல் வாசிப்பது. அன்று காஞ்சி சங்காராச்சாரியாருடன் கடுமையான பூசலில் இருந்த ராஜாஜி எப்படியானாலும் அன்று நடந்த சந்திப்பை இவர்கள் புனைவதுபோல ‘ஆன்மீக ஞானப்பரிமாற்றம்’ என்று இவர்களிடம் சொல்லியிருக்க நியாயமில்லை.
சாதுர்மாஸ்யம் என்பது மழைக்காலமான நான்குமாதங்களில் துறவிகள் எங்கும் செல்லாமல் மடத்திலேயே தங்கி செய்யும் பூஜைகள். அப்போது பயணமோ பிறர் வீடுகளுக்குச் செல்வதோ வழக்கமில்லை. சாதுர்மாஸ்யமாக இருந்தும் சந்திரசேகரர் பாலக்காடுக்கு வந்தார் என்பதே அன்று முக்கியமான செய்தியாகப் பேசப்பட்டிருக்கிறது.
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய சந்திரசேகர சரஸ்வதி கட்டுரையைப் படித்தேன். எனக்கு அதில் சில கேள்விகள் இருக்கின்றன. முக்கியமான ஒன்றை உங்களிடமே கேட்டு விடவேண்டும் என்று இக்கடிதம் எழுதுகிறேன்.
இந்து மதத்தில் பிராமணீயத்தை நிலைச்சக்தி என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நிலைச்சக்தியின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நிலைச்சக்தியினால் ஏற்படும் தவறுகள், கொடுமைகள் குறித்தும் அக்கட்டுரையில் படித்தேன்.
மேலும் இந்நிலைச்சக்தியில் மாற்றங்கள் வரவேண்டும் என்றும் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள்…
//
இதன் குறைகள் களையப்பட்டு இதன் பாரம்பரிய வல்லமை தக்கவைக்கப்பட்டு இது நீடிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். அதற்கு இதற்குள் ஒரு பெருவிவாதம் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். இதற்குள் இதை நவீனப்படுத்தும் சக்திகள் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
//
இப்போது எனக்குக் குழப்பம் ஏற்படுகிறது. பிராமணீயம் நிலைச்சக்தி என்றால் அதில் சிறிது சிறிதாக மாறுதல் வந்தாலும் நிலைச்சக்தி என்பதில் அந்த மாறுதல் நன்மை விளைவிக்குமா? நீங்கள் சொல்லும் பெருவிவாதத்தின் விளைவுகள் எப்படி இருக்கலாம்? பிராமணீயம் என்று தனியாக இல்லாமல் போவதா அல்லது ஹிந்துக்கள் அனைவரும் பிராமணர்களாக ஆகக் கூடிய நிலையா அல்லது இப்போது இருப்பது போலவே சிலர் பிராமணர்களாகவும் சிலர் பிராமணர் அல்லதவர்களாக இருப்பதுவுமா? பாரம்பரிய இந்து ஞான மரபின் உதாரண மனிதராக வாழ்ந்த சந்திரசேகர சரஸ்வதி போன்றவர்களிடம் நீங்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
இதில் பிராமணர்கள் என்று சொல்லும்போது நீங்கள் ஐடியில் வேலை பார்க்கிற என்.ஆர்.ஐக்களைக் குறிக்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது. பிராமண சாதியை அல்ல, பிராமணீயத்தை என்று புரிந்து கொண்டிருக்கிறேன். பிராமணீயம் என்பது இந்து ஞான மரபை – பூர்வ மீமாம்சை அடிப்படியாகக் கொண்ட அமைப்பு என்றும் அதன் படி ஒழுகக்கூடிய மக்களையே நீங்கள் பிராமணர்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்.
அன்புடன்,
ஸ்ரீகாந்த்.
***********
Email: [email protected]
http://www.sangatham.com
http://www.facebook.com/ksrikanthan
அன்புள்ள ஸ்ரீகாந்த்,
நிலைச்சக்தி என்று நான் சொல்வது எந்தச் சாதியையும் இல்லை. இந்து மதத்தின் ஆசாரங்களை கட்டிக்காக்கும் பொறுப்புள்ள அமைப்புகளை, சாதிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் சொல்கிறேன். அவற்றில் பெரும்பங்கு வகிப்பவர்கள் வைதிகர்கள் மற்றும் புரோகிதர்ககள். அவர்களின் மதமாக இருந்தது பூர்வமீமாம்சம்.
பூர்வமீமாம்சம் மிகத்தொன்மையான காலத்தில்மட்டுமே அதன் சரியான வடிவில் இருந்திருக்க முடியும். பூர்வமீமாம்சப்படி இறைவழிபாடே கூட தேவையற்றது – வேதவேள்விகளே போதும். பின்னர் பக்தி இயக்கம் பெரும் வல்லமையுடன் எழுந்தபோது பூர்வமீமாம்சகர்கள் ஆலயவழிபாடு மற்றும் அதனுடன் இணைந்த சடங்குகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.
பிராமணர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பழைமையான மடங்களும் ஆசாரவாதத்தை அடிப்படையாகக் கொண்டவையே. எந்தச் சடங்கையும் அவர்களாக மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஈவேரா அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த ஞானியார் சுவாமிகளின் வீரசைவ மடம் மிக மிகத் தீவிரமான ஆசாரப்போக்கு கொண்டது. ஓர் உரையில் சைவமும் வைணவமும் ஒன்று என்று பேசப்பட்டபோது வைணவம் என்ற சொல்லே தன் காதில் விழக்கூடாது என அவர் எழுந்து சென்றார் என்று கேட்டிருக்கிறேன்.
முரணியக்கம் என்பது மாற்றத்துக்கான ஒரு வழியே ஒழிய மாறாமலிருப்பது அல்ல. ஆசாரவாதம் நவீனமாக்கத்துக்கு எதிர்விசை. நவீனமாக்கம் தறிகெட்டுப்போகாமல் அது இழுக்கிறது. ஆனால் நவீனமாக்கம் ஆசாரவாதத்தை நவீனப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் கட்டுரை நடு நிலைமையுடனும், மிகுந்த மதிப்புடனும் எழுதப்பட்டது என்று நினைத்தேன்.
என் உள்சுற்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
எனக்குப் பேராச்சரியம் காத்திருந்தது. மிக நெருங்கிய நண்பர்களில் இருவர் சுவாமிகளைப் பற்றி மிகவும் கேவலமாக எழுதி விட்டதாக என்னிடம் walkuவாதம் (நடந்து கொண்டே :) ) செய்தனர். நிறைய மேற்கோள்கள் அதை விட நிறைய சுட்டிகள், உங்களது தகுதி (இன்மை) முதலியன வரிசையாக வந்தன (பேசிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை என இப்போது தோன்றுகிறது)
எனக்குப் புரிந்த அளவில் சொல்ல வந்த கருத்தை சொன்ன போது, ‘நீ ஜெயமோகன் fan’ என்று கூறிவிட்டார்கள். பேச வேறு விஷயமில்லை எனத் தோன்றிவிட்டது.
வணங்கும் கூட்டமொன்று.. வசை பாடும் கூட்டம் ஒன்று – இரண்டையும் நீக்கி, விஷயத்தைப் புரிந்து கொள்ள அவகாசமோ, சுவாரசியமோ ஏனோ இல்லை எனத் தோன்றிற்று.
அப்போது சொல்ல வேண்டும் எனத் தோன்றிய ஒன்று.
நீங்கள் சிறப்பாகவும், நல்லெண்ணத்துடனும், நேர்மையுடனும் எழுதியவைகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறோம்.
அன்புடன்,
முரளி
அன்புள்ள முரளி,
இது சம்பந்தமாக எனக்கு வந்துகொண்டிருக்கும் கடிதங்கள் மூன்று வகை. எனக்கு இருக்கும் ‘தகுதி’ பற்றிய வினாக்கள். நான் ஆன்மீகமான கேள்வி எதையும் கேட்கவில்லை. இந்தச் சமூகத்தில் வாழ்பவன் என்ற முறையில் இந்தச்சமூகம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்தை விவாதிக்க எனக்கு எல்லா உரிமையும் உள்ளது.
காந்தியை விமர்சிக்கையில் எழாத தகுதி பற்றிய கேள்விகள் எல்லாம் இப்போது எழுவது ஒரே காரணத்தாலேயே, சம்பந்தப்பட்டவர் பிராமணர்களின் தலைவர். அவரை விமர்சிக்க பிராமணரல்லாதவருக்குத் தகுதி கிடையாது. இதைவிடக் கடுமையான நேரடியான விமர்சனத்தை கல்கி செய்தார் எனக் குறிப்பிடப்பட்டது எவருக்கும் பெரிதாகப் படவில்லை. அதை அமுக்கிவிடவே இதுவரை முயல்கிறார்கள்.
இந்த தளத்தில் சாய்பாபா முதல் பலரைப்பற்றி விமர்சனம் வந்தபோதெல்லாம் இவர்களுக்கு அது இந்து மதத்தை அழிப்பது என்று தோன்றவில்லை.
இரண்டாவது வகைக் கடிதங்கள் எனக்கு நல்லபுத்தி வேண்டிய பிரார்த்தனைகள். அவை மேலிருந்து ‘கனிவுடன்’ பார்க்கப்பட்டவை. கீழ்ச்சாதியினனின் ஆன்மீக வறுமையைப் பரிவுடன் பார்க்கும் மேல்சாதியினனின் ‘நிதானம்’ கைகூடியவை. சம்பந்தப்பட்டவரின் அற்புதங்களைப் பட்டியலிடுபவை.
நான் பேசும் ஆன்மீகம் அற்புதங்கள் சார்ந்தது அல்ல. அது வேறு. அதை இவர்களுக்கு நான் விளக்கிவிட முடியாது.
கடைசியாக நான் இந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறேன் என்ற குற்றச்சாட்டு. இந்துமதம் அதன் உச்சநிலையில் நம்பிக்கையின் அடிப்படையிலானது அல்ல. அது சமரசமில்லாத தேடலின் அடிப்படையில் ஆனது என்பதே நான் என் குருநாதர்களிடமிருந்து கற்றது.
என்னைப்பொறுத்தவரை மானுடசமத்துவம், மனிதாபிமானம் என்னும் புள்ளிகளே இருபதாம் நூற்றாண்டின் ஆன்மீகத்தின் ஊற்றுமுகங்கள். அது என் அளவுகோல். யாருக்கானாலும்.
ஆனால் இந்தக் கடிதங்கள் எனக்கு வருத்தமோ வியப்போ அளிக்கவில்லை. நாலாயிரம் வருடத் தொன்மை கொண்ட ஆசாரவாதம் என்னும் நிலைச்சக்தி இந்த அளவாவது எதிர்வினையாற்றாமலிருந்தால்தான் அது ஆச்சரியம்.
என் நண்பர் ஒருவர் சொன்னார், வேளாளர்கூடிய இணைய சபை ஒன்றில் அவர் எளிமையாக என்.எஸ்.கிருஷ்ணனின் நடிப்பைப்பற்றி ஒரு எதிர்மறை விமர்சனம் சொன்னதும் மொத்தக் கூட்டமே பொங்கி எழுந்தது என்று. முத்துராமலிங்கத்தேவர் பற்றி ஒரு வரி சொன்னால் இன்னும் அதிக எதிர்ப்பு எழும்.
சாதிப்பற்றில் எவரும் எவருக்கும் குறைந்தவரல்ல. நான் ஒரு வெளியாளின் பார்வையில் தமிழகத்தைப் பார்க்கையில் ஒப்புநோக்க பிராமணர்களே சாதிவெறி குறைவானவர்கள், முற்போக்கானவர்கள் என்றே இன்றும் நினைக்கிறேன்.
சாதிக்கு அப்பால் சிந்திப்பவர்கள் நம்மில் மிகமிகமிகச் சிலரே. இலக்கியமும் ஆன்மீகமும் அந்த அடையாளங்களற்ற ஆழ்மனிதனிடம் மட்டுமே பேசமுயலும் என நான் நினைக்கிறேன்.
நான் எழுதிய விஷயங்கள் எவையும் ரகசியங்கள் அல்ல. எத்தனையோ காலமாகப் பலரால் விரிவாக பேசப்பட்டுவிட்டவைதான். கல்கி உள்ளிட்ட பலரால் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டவைதான். கண்ணை மூடிக்கொண்டவர்களுக்குக் காட்டுவது கடினம்.
இந்த விவாதத்தை இத்துடன் முடிக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை இனிமேலும் பேசிக்கொண்டிருப்பது மயிர்சுட்டுக் கரியாக்கும் செயல்.
ஜெ