கடிதங்கள்

அன்பு ஜெ. எம்.,
குரு வணக்கம். இதற்கு முன் அனுப்பிய அஞ்சல் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன்.
ஆஸ்திரேலியா கட்டுரைகள் மனக்கண் முன் அந்த நாட்டின் நிலவியலை..பழக்க வழக்கங்களை..பண்பாட்டுக் கூறுகளை ஓடவிடுவனவாக உள்ளன.
புலம் பெயர்ந்தும் மாறாத சடங்கு சம்பிரதாய மத ரீதியான மரபுகளும் உண்டு. புலம் பெயர்வதாலேயே , இங்கே கைக் கொள்ளப்படும் சில மோசமான தவறான மரபுகள் கைவிடப் படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டுதானே ?
 ‘கூரைஎரிந்ததில் நிலவை ரசிக்கும் நான் ‘ என்ற வசந்திராஜாவின்(ஈழக் கவிஞர்) கவிதையைப் படித்திருப்பீர்கள்

”காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி /
  அதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள்/
  நான் சொல்ல/
  விழி விரித்துக் கேட்கிறாள் மகள்/
  ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில்/
  போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும்/
  ரகசியமாய் சிலிர்த்துக் கொள்கிறேன்/
  புலம் பெயர்ந்தமை /
  தங்கத் தட்டில் தந்த சுதந்திரம் /
  என் மகள்களுக்கும் நம் பெண்களுக்கும்
/”

 

( நன்றி; பறத்தல் அதன் சுதந்திரம்)

 
நீங்கள் புலம் பெயர்தலின் பண்ப்பாட்டுக் கூறுகளைப்பற்றி எழுதிக் கொண்டு போனதைப் படித்தபோது இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. அவ்வளவே.
தியானம் பற்றிய விளக்கங்கள் மிகவும் பயன் அளிக்கின்றன . அதற்கும் நன்றி.–
எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023

 

அன்புள்ள சுசீலா அவர்களுக்கு
நலம்தானே
ஆஸ்திரேலியாவிட்டு வந்து சினிமா வேலைகளின் பரபரப்பு.
வசந்திராஜா பற்றி நீங்கள் எழுதியதை கண்டு ஒரு மகிழ்ச்சி. ஏனென்றால் எனக்கு அவர்களை நேரடியாக தெரியும். நான் கனடா சென்றிருந்தபோது அவர்கள் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன். எழுத்தாளர் சுமதி ரூபனின் அக்கா அவர்
ஜெ

 

அன்புள்ள ஜெமோ

ஆஸ்திரேலியப்பயணக்கட்டுரையில் நீங்கள் எழுதிய பல விஷயங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறேன். மேலைநாட்டினருக்கு உண்மையிலேயே நம்முடைய கலையை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவர்களுக்கு கிடைக்கும் பள்ளிக்கல்வியிலேயே அவர்கள் ஒரு சில கருத்துக்களுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். அதாவது இந்தியா முதலிய நாடுகளில் உள்ள மதம் என்பது இயற்கையை வழிபடுவதும் பொருட்களை வழிபடுவதும் மட்டும்தான் என்று. நாம் இயற்கையையும் பொருட்களையும் பிரபஞ்ச சக்தியின் குறியீடாக எண்ணித்தான் வழிபடுகிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆகவேதான் அவர்கள் பிள்ளையாரின் துதிக்கை என்பது போன்ற அபத்தமான ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள்.ஆஸ்திரேலியாவில் நீங்கள் கண்ட அறிவார்ந்த குறிப்பு ஆறுதலை அளித்தது

சங்கர்’
சென்னை

 

அன்புள்ள ஜெமோ

நீங்கள் எழுதிய ஆஸ்திரேலியப்பயணக்கட்டுரைகளை ஆர்வமுடன் வாசித்து வருகிறேன். பயணக்கட்டுரை என்ற அளவைத்தாண்டி ஒருவகையான கலாச்சார ஆய்வாகவே அதை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். ஓவியர்கள் புற உலகை ஏன் distort  செய்கிறார்கள் என்பதற்கு அளித்திருந்த விளக்கம் அருமையாக இருந்தது. நானே அதை யோசித்தது உண்டு. நம் கனவிலே புற உலகம் distort ஆகித்தான் தெரிகிறது இல்லையா. எந்த சக்தி அப்படி நம்மை மாற்றுகிறது? அது நம் மனதில் உள்ள ஒரு தேவை. அதுதான் ஓவியத்தையும் உண்டுபண்ணுகிறது என்று சொல்லலாம்

அருமையான கட்டுரைகள்

வாழ்த்துக்கள்

சிவம்

முந்தைய கட்டுரைஆஸ்திரேலியா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் ,9, கங்காரு