அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
நலம்தானே?
சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர சரஸ்வதி கட்டுரையில் ‘பிராமண ஆற்ற’லைப்பற்றிப் படித்ததும் தூக்கத்தில் கெட்ட கனவு ஒன்று கண்டு எழுந்ததுபோல நாள் முழுவதும் அது பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன். வாழ்வில் நிதர்சனமாக நடக்கும் பல விசயங்கள் எப்படி மறைக்கப்படுகின்றன என்பதை நேரடிவாழ்விலேயே காணக்கிடைக்கின்றன. சிலர் தூக்கத்தில் இருப்பதுபோல நடித்தாலும் உண்மை என்னவோ உறங்காமல் விழித்தே இருக்கிறது.
கொஞ்ச நாள் முன்பு சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும்போது பெரிய நாமம் போட்ட மனிதர் பயணத்தில் என்னுடன் பேசியபடியே வந்தார். சலிப்பூட்டும் நடப்பு அரசியல் பற்றிய பேச்சுக்கள்தாம். கும்பகோணத்தின் பாபநாசம் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் அவருடையது, அங்கு ஒரு பரம்பரைக் கோயில் உள்ளது. அதைப் பராமரிக்க மாதம் ஒரு முறை செல்வதைக் கேட்டபோது அவர்மீது கவனம் பெற்றுக் கேட்க ஆரம்பித்தேன். பல தலைமுறைகளாக ஒரு பழைய கோயில் தங்கள் குடும்பத்தில் உள்ளதாகவும் அதற்குமாதச் செலவிற்குக் கொடுக்க நியமிக்கப்பட்ட ஆளைப் பார்த்து தினப்படி செலவிற்குக் கொடுக்கப் போவதையும் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த எல்லா பிராமணக் குடும்பங்களும் வேலைக்காக வெளியேறிவிட்டதாகக் கூறினார். ரயில்வேயில் வேலை பார்க்கும் அவர் நினைத்திருந்தால் அவர்கூட இக்கோயிலைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால் அக்கோயிலுக்காகத் தொடர்ந்து தன் வாழ்நாளெல்லாம் செலவழித்து வருகிறார்.
அதேபோல் சென்னையில் வேலைபார்த்தபோது பழையவகை பேண்ட்டும், நைந்துபோன அரைக்கை சட்டையும் அணிந்துவரும் ஒரு பிராமணர் எங்களுடன் வேலைபார்த்தார். அவர்களுடைய சொந்தக் கோயில் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம், அந்தவிழா, இந்தவிழா என்று எதற்காகவாது பணம் வேண்டி உங்களால் முடிந்ததைச் செய்யச்சொல்லி வந்து ஒவ்வொருவரிடமும் விழாஅழைப்பிதழும், ரசீதுடனும் நிற்பார். சிலர் இல்லையென முகம் சுளிப்பதும், சிலர் வேண்டாவெறுப்பாகக் கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள். எவ்வளவு சிறிய பணமாக இருந்தாலும் மனமுவந்து சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்வார். அவர் சம்பளமாக வாங்கும் பணத்தில் ஒரு பங்கும், எங்களிடமிருந்து பெறும் பணமும் கொண்டு ஊர் சென்று செய்துவிட்டு வந்தவிழாவைப் பற்றி மறக்காமல் அனைவரிடமும் கூறுவார்.
இதற்குமேலாக ஒரு அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நபரை சந்தித்தேன். சென்னை கொட்டிவாக்கம் பகுதியின் ஒரு தெருவில் எழுபதுகளில் குடிவந்தவர். காடாக வாழைத்தோப்பாக இருந்த பகுதியை சாலைஅமைத்து, சாக்கடை, குடிநீர் என்று அனைத்து வசதிகளையும், போராடிக் கொஞ்சம்கொஞ்சமாகப் பெற்றுக் கொடுத்தார். அதே தெருவிற்குப் பின்னாளில் வந்த பலபேர் எந்த சிறுமுயற்சியும்கூட செய்யாமல் தொடர்ந்து அவரின் செய்லபாடுகளைக் குறைகூறிவந்தார்கள். அத்தனையும் கேட்டு எந்தவித சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து அவர் பணியைச் செய்துவந்தார். பக்கத்திலுள்ள கோயிலுக்கு விழா எடுப்பது, ஊர்வலம் விட வசதிசெய்வது, குடிநீர்ப் பிரச்சனை மக்களை ஒருங்கிணைத்து அரசிடம் மனுகொடுப்பது தொடர்ந்து சாகும்வரை செய்துவந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் எதிலும் தான் செய்தேன் என்ற அகம்பாவம் நான் அவரிடம் கண்டதில்லை.
அதேவேளையில் நீங்கள் சொன்னதுபோல தொடர்ந்து சாதிவெறிபிடித்த பிற சாதியினரையும் தொடர்ந்து கண்டுவந்திருக்கிறேன். வன்னியர், தேவர், கொங்குகவுண்டர், முத்துராஜா போன்ற சாதியினரின் சாதிவெறி சொல்லி மாளாது. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் அது வெளிப்படுவதை கவனிக்க முடியும்.
ஒரு முறை தஞ்சையில் கிளம்ப நின்ற பஸ்ஸில் ஏறிய பெரியாரிஸ்டுகள் இருவர் ஒரு நோட்டீசை ஒவ்வொருவரிடமும் கொடுத்து அவர்களின் பத்திரிக்கையை (புதியகலாச்சாரம்) விளம்பரப் படுத்தி விற்றுக் கொண்டிருந்தார்கள். விளம்பரம் என்ற பெயரில் இருந்த பிரசாரம், நேரடியாக எதிரில் நிற்கும் ஒருபிராமணனின் சட்டையைப் பிடித்துத் திட்டுவதுபோல் தெறித்துக் கொண்டிருந்த பிராமண எதிர்ப்பு வார்த்தைகள். முன்சீட்டில் அமர்ந்துகொண்டிருந்த நெற்றியில் பட்டை போட்ட, குடுமியுடன் இருந்த இரு பிராமணர்கள் கேட்டும் கேட்காததுபோல வெளியே உள்ளே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தில் இருந்த அனைவரின் கண்களும் அந்த பிராமணர்களை நோக்கியே இருந்தது. ஆனால் ஒரு வார்த்தைகூட எதிர்த்துக்கேட்க வில்லை. பச்சைபச்சையாகப் பேசியபோதும் அவர்களிடம் அவர்கள் காட்டும் பொறுமைக்குக் காரணம் என்ன? எந்தவித எதிர்ப்புமின்றி மரணத்தைத் தழுவும் ஒருவனால் மட்டுமே செய்யக் கூடியது எனத் தோன்றியது. ஆனால் பத்திரிக்கையை ஒருவர்கூட வாங்கவில்லை.
எது அவர்களை இத்தனை பொறுமையாக இருக்க வைக்கிறது? அவர்களின் ஆசாரவிதிகளா? அல்லது வளர்ப்பே அவர்களுக்கு அதைத்தான் சொல்லித்தருகிறதா? இத்தனை காலமாக அமுக்கப்பட்டும்கூட தங்களுக்கு இட்ட கடமை என நினைப்பதை அவர்கள் விடுவதாய் இல்லை, அது இசை, கோயில், இலக்கியம், இப்படி எத்தனையோ. எங்களூர்ப் பக்கத்தில் பிராமணப் பெண் , தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்த தலித் நபரைக் காதலித்தார்.திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவர்களது மொத்த ஊரே (அக்கிரகாரம்) பையன் ஊர்சென்று பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வந்தது.
சாதிவெறிபிடித்தவர்கள் என்று பிராமணர்களைப் பழிக்கும் மற்ற சாதியினர், பிராமணர்கள் செய்கிற முற்போக்குகளைக் கண்டுகொள்வதே இல்லை. தங்கள் சாதிப்பெண் வேறு ஒரு சாதிப் பையனை விரும்பினால், எத்தனை முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். அரிவாளைத் தூக்கிச்செல்லும் இவர்கள் தங்களை எத்தனை வீரமானவர்களாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள். இந்த சாதிவெறியர்களுக்கு யார் எடுத்துக் கூறுவது. என்று தெரியவில்லை.
அன்புடன்
கே.ஜெ.அசோக்குமார்.
அன்புள்ள அசோக்குமார்,
தமிழகத்தில் உள்ள பிராமணவெறுப்பு என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் சொந்தச் சாதிவெறியை மறைக்க, அதன் பழியை மடைமாற்றம் செய்ய, கண்டுபிடித்த ஒரு தந்திரம் மட்டுமே.
அந்தக் காழ்ப்பு கணிசமான பிராமணர்களில் பாதுகாப்பற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறதென எண்ணுகிறேன். அவர்கள் ஆசாரவாதத்தை இறுகத்தழுவ அதுவே காரணம். எனக்கு வரும் கடிதங்களும் அதையே காட்டுகின்றன
இந்தியாவில் பிராமண ஆற்றலுக்கு ஒரு பெரும் பங்களிப்பு உண்டு. இந்தியாவின் அறிவுத்தளத்துக்காக உருவாக்கப்பட்ட மரபுகளும் மனநிலைகளும் அவர்களிடம் உண்டு. அந்த மரபு இந்தியாவுக்கு எந்நிலையிலும் முக்கியமானது. இந்தியாவின் முற்போக்கு சக்திகள் கூட பிராமண அறிவாற்றலைப் பயன்படுத்திக்கொண்டவையே
எந்தப் பழைமையான மரபைப்போலவே அதிலும் காலாவதியான மனநிலைகள், எதிர்மறைக்கூறுகள் உண்டு. அவற்றை உதறி மேலெழும் ஆக்கபூர்வமான பிராமண ஆற்றலை வரவேற்பவனாகவே நான் இருக்கிறேன். என்னை அதற்காக ஒருபக்கம் பார்ப்பன அடிவருடி என்கிறார்கள். [நான் காலில் தோல் ஒவ்வாமை உடைய யுவன் சந்திரசேகர் காலைத்தவிர எதையும் வருடியதில்லை]
இன்னொருபக்கம் பிராமணனாக இருப்பதை வெறும் சாதிப்பற்று என்று மட்டுமே எண்ணுபவர்களால் வசைபாடவும் படுகிறேன்.
பொதுவாக இருபக்கமும் விமர்சிக்கப்படும்போதுதான் நமக்கு சரியான நடுநிலை இருக்கிறது என்று அர்த்தம் வருகிறது
ஜெ