புல்வெளிதேசம் ,9, கங்காரு

ஊட்டியில் ஒருமுறை நான் தனியாக காலைநடைசென்றுகொண்டிருந்தேன். நீலகிரி மலையணிலுக்காக அண்ணாந்து பார்த்துக்கொண்ட்டே செல்வது என் வழக்கம். மிக அழகான பிராணி அது. பூனை அளவுக்கு பெரியது. மாந்தளிரின் நிறம். அதன் சிறப்பே அதன் வால்தான். யானைப்புல்லின் கதிர் போல செந்தவிட்டு நிறத்தில் பிசிறுகள் பொலிந்து மிக அழகாக இருக்கும். காட்டில் அப்படி எதையாவது தேடிக்கொண்டே சென்றால் ஒருகட்டத்தில் காடு மறைந்து அந்த இல்லாத மிருகம் மட்டுமே நம் மனதில் இருக்கும். அப்போது அனேகமாக அம்மிருகத்தை தவற விடமாட்டோம்.

மலையணில் சட்டென்று சாலைக்குக் குறுக்காகப் பாய்ந்து கடந்தது. அதன் வால் சொடுக்கி நிமிர்ந்து காற்றில் துழாவிச்சென்றது. கிளை குலுங்கி அதை வாங்கிக்கொண்டது. கனத்த மரத்தடியில் தொற்றி மேலேறிச்சென்றது. அந்தக்கணம் அப்படியே என் நெஞ்சில் உறைந்து நின்றது. அதிலேயே வாழ்ந்துகொண்டு நடந்துகொண்டிருந்தேன். அந்த வால். அதன் சுழலல். அணில் பறக்கும்போது வால் சட்டென்று சிறகாக ஆகிவிட்டது போலிருந்தது

வால் என்னும் சொல்லின் பொருத்தமின்மை அப்போதுதான் என் நெஞ்சை அறைந்தது. வால் என்னும் ஒரு சொல்லில் எத்தனையோ விதமான உறுப்புகளை அடக்கிவிடுகிறோம். நாக்கு என்னும்போது தீயின் நாக்கையும் பாம்பின் நாக்கையும் எல்லாம் சொல்வது போல.  மனிதமொழி என்பது அவனுடைய பழங்குடிவாழ்க்கையில் இருந்து முளைத்தது. ஆகவே தெரிந்ததில் இருந்து தெரியாதை உருவகித்துப்பெயரிட்ட்டுக்கொண்டே செல்கிறது அது. பாம்புக்கும் வால் இருக்கிறது. காக்கைக்கும் வால் இருக்கிறது. குதிரைக்கும் வால் இருக்கிறது. மீனுக்கும் வால் இருக்கிறது.

அதன் பின் அந்த காட்டுநடையில் நான் கண்டவை எல்லாமே வால்கள்தான். குரங்கின் வால் என்பது ஒரு உபரியான கை தான். பன்றியின் வால் ஒரு விரல். அதன் வழியாக அது விதவிதமான சைகைகளைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. நாயின் வால் என்பது நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு நாக்கு. காகத்தின் வால் ஒரு சிறகு. ரெட்டைவால்குருவியின் வால் என்பது ஒரு சமச்சீர் எடை. அப்படியானால் பாம்பு என்பது ஒரு வால்மட்டும்தான்.

கன்பெரா அருகே உள்ள ஒரு காட்டுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி நானும் மதுபாஷினியும் ரகுபதியும் அருண்மொழியும் சென்றபோதுதான் முதல்முறையாக உயிருள்ள கங்காருக்களைப் பார்த்தோம். பார்த்ததுமே முதலில் தோன்றியது இதுதான் — கங்காருவின் வால் என்பது ஒரு கால்.

காலையில் எழுந்து துகிதையை அவளுடைய பள்ளிக்குக் கொண்டுசென்று விட்டோம். அதை அங்கே பிரி ஸ்கூல் என்கிறார்கள். காலை ஏழு முதல் மாலை ஏழுவரை அங்கே அவளை கவனித்துக்கொள்வார்கள்.  இரண்டுவேளை உனவும் தின்பண்டங்களும் கொடுப்பார்கள். துகிதை தோற்றத்தால் மட்டுமே தமிழ்ப்பெண். அவள் பிரிஸ்கூலில் இருக்கும் நேரம்தான் அதிகம். ஆகவே அவளுடைய மொழி என்பது சுத்தமான வெள்ளைக்கார உச்சரிப்பு கொண்ட ஆங்கிலம்தான். பள்ளி பல்லினக் கலவைக் குழந்தைகளின் மையம். அவளை கொண்டுவிடச்சென்றபோதே பல இனக்குழந்தைகள் வந்துகொண்டிருந்தன. அவர்கள் அனைவருமே பேசும் ஆங்கில உச்சரிப்பு ஒன்றுதான்.

பொதுவாக அங்கே பள்ளிகளில் ஆசிரியைகள் நன்றாகவே கவனித்துக்கொள்கிறார்கள் என்றார் மதுபாஷினி. அதற்குக் காரணம் ஆசிரியை வேலையை விரும்பிச் செய்பவர்கள் மட்டுமே அங்கே வருகிறார்கள். அது வேறுவழியில்லாமல் வந்துசேரும் வேலை அல்ல. இந்தியாவில் ஆரம்பக்கல்வி இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவாலே குழந்தைகள் மேல் ஆர்வமே இல்லாமல், சம்பளம் ஒன்றுக்காக மட்டும், பெரும் பணம் லஞ்சமாகக் கொடுத்து வந்துசேரும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்களில் குழந்தைமேல் அன்பு இல்லாவிட்டால் அவர்களால் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியாது. குழந்தைகள் அன்பின் வழியாகவே கற்றுக்கொள்கின்றன.

காரில் கன்பராவை விட்டு விலகிச் சென்றோம். மையச்சாலைகளைக் கடந்து கிராமங்களின் ஊடாகச் சென்றோம். *வில் நான் கண்ட ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நம் ஊரில் பொழுது மாறும் வெளிச்ச வேறுபாடுகளை அங்கே அதிகமாகக் காணமுடிவதில்லை என்பதே. இந்தியாவில் நாள் என்பது செம்மையாக விடிந்து மஞ்சள் ஒளி கொண்டு தெளிந்த வெள்ளிநிறமாகி  வெண்தீயாக எரிய ஆரம்பித்து மெல்ல அணைந்து சட்டென்று மஞ்ச்ளாகி வெகுநேரம் தீயாகி பின் அணைந்து இருள்கிறது. *வில் ஒன்பதுமணிக்கும் இங்குள்ள ஆறுமணிக்குரிய அரை இருட்டும் மூடலும்தான். அது அபப்டியே சிலசமயம் மாலைவரை நீள்கிறது. இது என் மனப்பிரமையாக இருக்கலாம். என்னால் அங்கே பொழுதை ஊகிக்கவே முடியவில்லை.

அதேபோல நிலம் மாறுபடும்போது செடிகள் மாறுபடுவதை இந்தியாவில் கவனித்துக்கொண்டே செல்வது என் வழக்கம். பள்ளமான பகுதிகளில் இஞ்சிப்புல் போன்ற கனத்த இலையுள்ள புல்கள் இருக்கும். மேட்டில் பாறைகள் நடுவே எருக்கு முதலிய செடிகள். வரண்ட நிலங்களில் புளியமரங்கள் நீருள்ள இடங்களில் மருதமரங்களும் கொன்றை மரங்களும். ஆனால் *வில் நிலம்  எங்கும் ஒரே முகபாவனையுடன் எல்லையில்லாது விரிந்து கிடந்தது.

மூடிய வானத்தின் கீழே சென்றுகொண்டே இருந்தோம். ஆறு ஒன்று எதிர்பட்டது. ஓரளவு நீர் ஓடும் நடுத்தர ஆறு. கன்பரா நகருக்கான குடிநீர் அங்கிருந்துதான் வருகிறது என்றார் ரகுபதி. கங்காருக்களைக் காணவில்லையே என்றாள் அருண்மொழி. ”ஏனென்ண்டு தெரியல்லை. நிறைய நிக்கும்கள்” என்றார் மதுபாஷினி. சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டு சென்று சற்று கடந்தபின்னர்தான் நான் கங்கருக்கள் நிற்பதைக் கவனித்தேன். புதர்களின் நடுவே சாம்பல் நிற உடலுடன் மூன்று கங்காருகள் நின்றன. காரை நிறுத்தி மெல்ல இறங்கினோம். அவை கவனம் கொண்டு எழுந்து நின்று காதுகளை செங்குத்தாக பிடித்து மெல்ல மெல்ல திருப்பியபடி எங்கள் மேல் கண்களை ஊன்றி கூர்ந்து நின்றன.

என் காலடிஓசையில் அவற்றின் உடல்சருமம் விதிர்விதிர்ப்பதைக் கண்டேன். இருந்தாலும் மெல்ல மெல்ல நடந்து முன்னால்சென்றேன். அவை என்னையே பார்த்துக்கொண்டு நின்றன. சட்டென்று ஒன்று துள்ளி தாவி ஓடியது. உடனே பிற இரண்டும் துள்ளி விலகின. அதற்குள் அருண்மொழி நாலைந்து புகைப்படங்களை எடுத்துவிட்டாள். அவை துள்ளிச்செல்ல ஆரம்பித்தபோதுதான் கவனித்தேன், அங்கே நிறைய கங்காருக்கள் இருந்தன. அவை அனைத்துமே துள்ளி துள்ளி விலகின.

கங்காரு ஒரு மான் என்ற பிரமைதான் எனக்கு ஏற்பட்டிருந்தது அதுவரை. அதே முகம். அதே பாவனைகள். மிளா போல. கொம்பு இல்லை, அவ்வளவுதான். ஆனால் அவை ஓட ஆரம்பித்தபோது ஏற்பட்ட வியப்பு கொஞ்சமல்ல. அவை எப்படி ஓடும் என்பதை ஏற்கனவே படித்திருந்தேன். ஆனால் அவை ஓடக்கண்டபோது அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. மான் ஒன்று தவளை போல துள்ளிச்செல்வது போல ஒரு விபரீதம். சின்னக்குழந்தைகள் சாக்குகுள் கால்விட்டு தவ்வி ஓட்டப்பந்தயம் போடுவதுபோல. எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

கங்காருக்கள் கொஞ்ச தூரம் தள்ளி சென்று வால்கள் மேல் அமர்ந்துகொண்டன. எங்களூரில் வயல்களுக்குச் செல்லும் பிள்ளைமார் சிலர் கையோடு கனமில்லாத ஸ்டூல் எடுத்துச் செல்வார்கள். அதேபோல ஒரு இருக்கையை நிரந்தரமாக பின்பக்கம் வைத்திருப்பதுபோல. எங்கே வேண்டுமானாலும் வசதியாக அமர்ந்து கொள்ளலாம். என்ன வலுவான வால். கால்களின் அளவுக்கே திடமானது. ஒரு கால்தான். சிவபெருமானின் மூன்றாவது கண் மாதிரி மூன்றாவது கால்.

கங்காருக்களில் 63 வகை உண்டு என்று சொல்கிறார்கள். செந்நிறமான கங்காரு, இரலைக் கங்காரு போன்றவை பெரியவை. சிறிய குரங்கு அளவிலான கங்காருக்களும் உண்டு.  ஆஸ்திரேலியாவுக்கே உரியது இந்த மிருகம். சில சிறிய வகைகள் பப்புவா நியூ கினியாவிலும் உண்டு என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வெளியாட்கள் வந்தபின் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பல உயிரினங்கள் அழிந்தே போய்விட்டன. ஆனால் கங்காருக்கள் பலவகையிலும் இங்கே செழித்து இப்போது இங்குள்ள மக்களைவிட அதிகமாக பெருகியிருக்கின்றன. உணவுக்காகவும், பயிர்களைப்பாதுகாக்கவும் கங்காருக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன என்றாலும் அவை எண்ணிக்கையில் பெருகியே வருகின்றன.

கங்காரு என்ற பெயர் ஆஸ்திரேலிய பழங்குடி மொழியில் உள்ள கங்கூர்ரு என்னும் சொல்லில் இருந்து வந்தது. அது சாம்பல்நிற கங்காருவையே குறிக்கிறது. *வில் இறங்கிய காப்டன் ஜேம்ஸ் கூக் எண்டெவர் நதிக்கரையில் இன்று கூக்டவுன் ஆக மாறியுள்ள இடத்தில் படகு பழுதாகி நின்றிருந்தபோது தன் குறிப்பேட்டில் கங்காரு என்ற பெயரை முதன்முதலாகக் குறித்தார் என்கிறார்கள். நீண்டகாலம் ஒரு ஐதீகக்கதை இருந்தது. அதாவது காப்டன் கூக் அந்த வினோத மிருகத்தைக் கண்டதும் அங்கே நின்றிருந்த பழங்குடியினரிடம் அது என்ன என்று கேட்டார். அவர்கள் தங்கள் மொழியில் ‘நீ பேசுவது புரியவில்லை’ என்னும் அர்த்ததில் கங்காரூ என்றார்கள். அதையே அம்மிருகத்தின் பெயராகக் குறித்துக்கொண்டார். உண்மையில் அது கூகு யிமிதீர் என்னும் ஆஸ்திரேலிய தொல்மொழியில் கங்காருவைக் குறிக்கும் சொல்தான் என்பதை 1970ல்தான் மொழியியலாளரான ஜான் பி ஹாவிலேண்ட் என்பவர் நிறுவினாராம்
 
வால்தவிர கங்காருவின் சிறப்பம்சம் அதன் பைதான். நெடுங்காலம் அந்தப்பையின் பயன்பாடு பற்றியெல்லாம் நிறைய ஐயங்கள் இருந்தன. அங்கே கங்காருவின் குட்டி அமர்ந்திருப்பதைக் கண்டு அது கங்காருவின் கருப்பை என்று எண்ணியவர்கள் உண்டு. அது குட்டிபோடுவதை எவருமே கண்டதும் இல்லை. பின்னர் கங்காரு முட்டைதான் போடுகிறது, முட்டைகள் விரிந்து குஞ்சுகள் பைக்குள் ஏறிக்கொள்கின்றன என்ற நம்பிக்கை பரவியது. கங்காருபோடும் குட்டிகள் மிகமிகச்சிறியதாக இருக்கும்.கிட்டத்தட்ட கொஞ்சம்பெரிய புழுக்கள் போல. அவை ஊர்ந்து அந்தப்பைக்குள் ஏறிக்கொள்கின்றன. அங்கே அவற்றுக்கு பால்சுரப்பிகள் உண்டு. பாலைக்குடித்து தாயின் உடல்வெப்பத்தில் ஊறி அங்கேயே வளர்ந்து பெரிய குட்டிகளாக ஆகி அவை வெளியே வருகின்றன. அப்போதுகூட அபாயங்களில் தாவி உள்ளே போய் ஒளிந்துகொள்கின்றன.

கங்காருக்கள்தான் தாவிச்செல்லும் உயிர்களிலேயே மிகப்பெரியவை. மணிக்கு 25 கிமீ வேகத்தில் அவை ஓடும். ஆனால் மெல்லச்செல்லும்போது முழுக்க முழுக்க வாலையே பயன்படுத்தி தத்திச்செல்லும். அவற்றின் வால் மிக ஆபத்தான ஆயுதம், முதலை வாலைப்போல. அதேபோல முன்னங்கால்களால் எதிரியைத் தாக்கி கிழிக்கும் வழக்கமும் அதற்கு உண்டு. *வில் அவ்வப்போது பலர் அதனால் கொல்லப்படுகிறார்கள். கங்காரு சராசரியாக ஐந்து வருடங்கள் வாழும். கங்காருவின் செரிமானமுறையில் நிறைய பாக்டீரியாக்கள் இடம்பெறுகின்றன. ஆகவே அதன் சாணி மிகச்சிறந்த உரம். அந்த பாக்டீரியாவை மாடுகளுக்குள் செலுத்த முடிந்தால் மாட்டுச்சாணி நான்குமடங்கு அதிகமாக மீதேன் எரிவாயு உற்பத்திசெய்யும் திறனுடன் இருக்கும் என்கிறார்கள்.

மீண்டும் காரில் ஏறி கங்காருக்களுக்காகத் தேடியபடியே சென்றோம். அந்த நிலத்தின்வழியாகச் செல்லும்போது அந்த வினோதமான சூழலில் பலநூறு வருடம் முன்பு வந்த வெள்ளையருக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை ஊகிக்க முடிந்தது. சட்டென்று ஒரு புத்தம் புதிய விசித்திரமிருகம் கண்ணெதிரே வந்து நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனைசெய்துகொண்டேன். ஆனால் ஒரு கங்காரு ஏன் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது/? ஏன் நம்மை சிருஷ்டி விசித்திரத்தை நோக்கி சிந்தனையைச் செலுத்தச் செய்கிறது? ஏனென்றால் நாம் நம்மைச்சுற்றி உள்ள மிருகங்களுக்கு பழகிவிட்டிருக்கிறோம். நம்முடைய மான் நமக்கு சாதாரனமாக தோன்றுகிறது. அது கொஞ்சம் வால்கனத்து தாவிச்சென்றால் நாம் ஆச்சரியப்படுகிறோம். அதனருகே நின்று புகைப்படம் எடுக்கிறோம். முடிந்தால் ஆட்டோகிரா·ப் கூட வாங்குவோம்.

நித்யா சைதன்ய யதியைப்ற்றிய ஒரு கதை உண்டு. சத்ய சாயிபாபாவைப் பார்த்துவிட்டு வந்த ஒருவர் நித்யாவிடம் பாபாவைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டே இருந்தாராம். ”என்ன அற்புதம் குரு, வெறும் கையில் மோதிரம் எடுக்கிறார். லட்டு எடுக்கிறார். நீங்களும் அதேபோல ஏதாவது அற்புதத்தைக் காட்டவேண்டும் குரு” நித்யா சிரித்தபடி ”அற்புதம்தானே? வா காட்டுகிறேன்” என்று கூட்டிச்சென்றார். வெளியே நின்ற தென்னை மரத்தைச் சுட்டிக்காட்டி சொன்னார்”பார் எவ்வளவு பெரிய அற்புதம்!”

அவர் வாயைப்பிளந்து நிற்க குரு சிரித்தாராம் ”தினமும் பதினைந்து லிட்டர் தண்ணீரை ஒரு தென்னைமரம் தன் உச்சிக்க்குக் கொண்டுசெல்கிரது தெரியுமா? ஒரு தென்னையில் கிட்டத்தட்ட  நூறு லிட்டர் தண்ணீர் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன தெரியுமா ? எந்த மோட்டாரும் இல்லாமல் இந்த தண்ணீர் எப்படி மேலே செல்கிரது என்று சிந்தித்துப்பார்!  எத்தனை அற்புதம்!”

நம்மைச்சுற்றி அற்புதங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப்பற்றி சிந்திக்க பல்லாயிரம் கிலோமீட்டர் பறந்து வந்து இங்கே நிற்க வேண்டியிருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

 

 

 

 

 

<br/><a href=

 

<br/><a href="http://i43.tinypic.com/5ehh95.jpg" target="_blank">View Raw Image</a>

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்