ஆஸ்திரேலியா:கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம். நலமா?

ஆஸ்ட்ராலியாப் பயணக்கதையைத் தொடர்ந்து வாசிக்கின்றேன்.

வீடு கட்டும் முறைகள் நம் நாட்டைவிட இந்தப் பகுதிகளில் வேறுபடுவது உண்மையே. நியூஸி & ஆஸி  நாடுகளில் அநேகமாக ஒன்றுபோலதான் இருக்கிறது.
எங்கள் வீட்டைக் கட்டும்போது இதை அவதானித்து தினமும் என்ன நடந்தது என்று எழுதி வைத்திருந்தேன். அவைகளை இங்கே என் வலைத்தளத்தில் வீடு ‘வா வா’ங்குது என்ற தொடரில் பதிந்து வைத்தேன்.  நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. மொத்தம் 46 பகுதிகள்.

முதல் பதிவின் சுட்டி இது
http://thulasidhalam.blogspot.com/2007/07/1.html

கடைசிப் பகுதியின் சுட்டி இது.
http://thulasidhalam.blogspot.com/2007/11/46.html

கடைசிப் பகுதி மட்டுமாவது படித்தீர்கள் என்றால் மகிழ்வேன். அதில் வீட்டின் படம் இணைக்கப்பட்டுள்ளது.

அருண்மொழிக்கும்  குழந்தைகளுக்கும் செல்லங்களுக்கும் எங்கள் அன்பு.

என்றும் அன்புடன்,
துளசி

 

அன்புள்ள ஜெ

ஆஸ்திரேலிய பயணக்கட்டுரையை மிக விரும்பி வாசித்து வருகிறேன். நிறைய தகவல்களை அளிக்கிறீர்கள். கட்டுரைகளின் தொடக்கம் மிக சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தவை கட்டுரை நடுவே வரக்கூடிய ஆழமான சிந்தனையை காட்டும் வரிகள்தான். தூய்மையான உலக இன்பம் என்பது மிருகத்தன்மை கொன்டது என்ற வரியை வாசித்து வாசித்து சிந்தனைசெய்தேன். போர்களையும் கற்பழிப்புகளையும் எல்லாம் ஒரே வீச்சில் ஒன்றாக்ச்சேர்த்துச் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்

வாழ்த்துக்கள்

ஜெயராமன்

அன்புள்ள ஜெமோ

உங்கள் ஆஸ்திரேலியப்பயணக்கட்டுரை அருமையாக உள்ளது. சென்ற நாளில் கலிபோலி போர்முனையைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்தப்பகுதியை வாசித்து மனம் கலங்கினேன். என் தாத்தாவின் அப்பாகூட முதல் உலகப்போரில் பங்கெடுத்தவர்தான். அதில் அவர் இறந்தும் போனார். கான்பூரில் ராணுவ நினைவகம் இருக்கிறது. அங்கே செக்துப்போன வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் தான் நினைவுக்குறிப்புகள் உள்ளன என்று சொல்கிறார்கள். ஜெயமோகன் சார், சென்ற நூற்றாண்டில் எத்தனை தமிழர்கள் பஞ்சங்களிலும் போர்களிலும் புலபெயர்தலிலும் செத்து அழிந்தார்கள். கணக்கு உன்டா என்ன? ஏன் வரலாற்றுக்குறிப்பாவது உண்டா என்ன? ஈசல்கள் சாவதுபோலத்தான் இல்லையா

ரத்தினசாமி

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 8, கலைக்கூடம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்