அம்மாவின் இடம்

உண்மைத்தமிழன் என்ற பதிவர் எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்தேன். புனைவு கலக்காத நேரடியான பதிவு என்பதனாலேயே ஒரு வாழ்க்கையின் சித்திரம் கண்முன்னால் வந்தது. அம்மா, அண்ணா, அக்காக்கள் – ஒரு பையன். அந்தப்பையனின் நடத்தை மிகவும் அதிகப்படியானது. பிறிதொரு பண்பாட்டில் அதை பெரிய குற்றமாகவேகூட எடுத்துக்கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் அந்தவயதில் அது இயல்பானதே என்றுதான் சொல்வார்கள்.

கிட்டத்தட்ட இதேவகையான பதிவைத்தான் ராஜ்கௌதமனின் சுயசரிதைத்தன்மை கொண்ட நாவலான ‘சிலுவைராஜ் சரித்திரம்’ முன்வைக்கிறது. சிலுவை அவன் அம்மாவை நடத்தும் விதம் இதுதான்.

தமிழகத்துப் பையன்களிடம் இந்த நடத்தையை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன். அடித்தளத்தில் மட்டும் அல்ல, நடுத்தரவர்க்கத்திலும் கூட. [உயர்வட்டம் எப்படி என எனக்கு நேரடியாகத் தெரியாது] ஒப்பீட்டளவில் இந்த நடத்தையைக் கேரளத்தில் கண்டதில்லை. கேரளத்தாக்கமுள்ள குமரிமாவட்டத்திலும்தான்.தருமபுரியில் நான் வாழ்ந்த காலகட்டத்தில் இதைக் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். இதை ஒரு பண்பாட்டுப்பிரச்சினையாகவே காண்கிறேன்.

நான் பார்த்தவரை தமிழ்நாட்டில் அன்னையர் ஆண்குழந்தைகளை மிகையாக சீராட்டி கொஞ்சிக்குலாவி வளர்க்கிறார்கள். ஆண் குழந்தை பிறந்ததுமே அதை மகாராசா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆண்குழந்தைக்கு பெண்குழந்தைகள் அனைத்தைவிடவும் மேலான இடம் அளிக்கப்படுகிறது. அதற்கு எல்லாவிதமான சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

ஒருமுறை ஒரு இரண்டுவயதுக் குழந்தை வடை வாங்கித்தரவில்லை என்பதற்காகத் தன் அம்மாவை வைது, உதைத்து, கல்லை எடுத்து வீசி அடம்பிடிப்பதைக் கண்டேன். அம்மா அதை அக்குழந்தையின் ஆண்மைத்தனம் என ரசித்து சிரித்துக்கொண்டே இருந்தாள். பெண் குழந்தை என்றால் பொட்டைக்கழுதைக்குத் திமிராடீ என அடிதான் விழுந்திருக்கும்.

உண்மைத்தமிழன்

ஆண்குழந்தை இளமையிலேயே அன்னையின் அந்தச் சலுகையை ஒரு உரிமையாக எடுத்துக்கொள்கிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததுமே தான் ஒன்றும் அபூர்வப்பிறவி இல்லை என அதற்குப்புரிகிறது. அந்த அதிர்ச்சியை அது தாண்டிச்செல்லும் வழி என்பது தன்னுடைய அனைத்து அதிகாரங்களும் மூர்க்கங்களும் செல்லுபடியாகும் ஒரு அந்தரங்கவெளியாக அம்மாவுடனான உறவை ஆக்கிக்கொள்வதுதான். பல குழந்தைகள் இந்தவயதில்தான் அம்மாவை மிக அலட்சியமாக நடத்த ஆரம்பிக்கின்றன.

அதிலும் இந்தப் பரீட்சைவெறிக் கல்வி வந்தபின்னர் பையன்கள் அம்மாக்களை தங்களுக்குக் குற்றேவல் செய்யும் அடிமைகளாகவே நினைக்கிறார்கள். அதட்டுகிறார்கள், ஏவுகிறார்கள், வசைபாடுகிறார்கள். அம்மாக்களும் அந்த அடிமைவேலையைப் பேரானந்தத்துடன் செய்கிறார்கள். படித்த, வேலைபார்க்கும் பெண்கள் கூட அதை ஏதோ பெரும் பாக்கியம்போலப் பாய்ந்து பாய்ந்து செய்கிறார்கள்.

இந்த அன்னையரின் மனநிலை போலக் கீழ்த்தரமான பெண்ணடிமைத்தனம் வேறில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளை ஒரு அபூர்வமான வைரம் என எண்ணிக்கொள்கிறார்கள். ‘எங்க ராஜு சாக்ஸ தொவைக்கலைன்னா அப்டியே தூக்கி மூஞ்சியிலே வீசிடுவான்’ என பெருமையடித்துக்கொள்கிறார்கள். தன்னுடன் படித்த ஒரு பையன் சூடான டீயை தூக்கி அம்மாமுகத்தில் வீசிவிட்டான் என ஒருமுறை அஜிதன் சொன்னான்.

ஒரு மனைவியாகப் பெண் ஒடுக்கப்படுவதைப்பற்றி நினைக்கும் நாம் அம்மாவாக அவள் ஒடுக்கப்படுவதைக் கண்டுகொள்வதே இல்லை. அது ஒரு தாயின் பேரின்பம் என எண்ணிக்கொள்கிறோம். இது அவள் விரும்பிச்செய்வது என்பது பொய். இது ஒரு பண்பாட்டுப் பயிற்றுவிப்பு மட்டுமே. ஆணை அவன் அன்னையே ஒரு கேவலமான ஆணாதிக்கவாதியாக உருவாக்கி விட்டுவிடுகிறாள்.

இதன் மறுபக்கத்தை அப்பாக்கள் செய்கிறார்கள். ஆண்குழந்தை தன் அப்பா அம்மாவை நடத்தும் விதத்தை கவனித்துக்கொண்டே இருக்கிறது. அவரை அது மானசீகமாகப் பிரதி எடுக்கிறது. ஒரு கட்டத்தில் அதைத் தானே செய்ய ஆரம்பிக்கிறது.

உண்மைத்தமிழனின் கட்டுரையில் தெரிவது இளமையிலேயே பழகிப்போன ஒரு மனநிலையை அனிச்சையாக அம்மா மேல் செலுத்தும் போக்குதான். அது சுற்றிலும் எல்லா வீட்டிலும் உள்ள நடைமுறைதான். அதைக்கண்டு எவரும் அதிர்ச்சி அடைவதில்லை, எவரும் நல்லுபதேசமும் சொல்வதில்லை. ‘பரவால்ல பெத்தபுள்ளதானே….ஆம்புள அப்டித்தான் இருக்கும்’ என அம்மாவுக்குத்தான் அறிவுரை சொல்வார்கள்.

இந்த மனநிலை அதிகமும் கேரளத்தில் இல்லை என்பதற்கு இங்கே நெடுங்காலமாக இருந்துவந்த பெண்வழிச் சொத்துரிமை காரணமாக இருக்கலாம். பெண்ணின் இடம் இங்கே திட்டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள் திடமான ஆளுமை கொண்டவர்கள். கேரளத்தில் அம்மாவை ஒருமையில் அழைப்பதே பெரும் மரியாதைக்குறைவாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் பெண்கள் என்றும் குடும்ப அடிமைகள். சொத்துரிமை இல்லாமை காரணமாக அவர்களின் பிற எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன. அந்த மனநிலை இன்றும் நீடிக்கிறதுபோல.

தனிமனித உறவுகளில் உரசல் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. அதிலும் வறியசூழலில் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழும் வாழ்க்கையில் கோபமும் பூசலும் மிக இயல்பானவை. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அம்மாவிடம் மட்டும் அந்த எல்லையை வைத்திருப்பதில்லை. உண்மைத்தமிழன் அவரது எல்லா உணர்வெழுச்சிகளுக்கும் வடிகாலாக அம்மாவை நடத்தியிருக்கிறார். பெரும்பாலானவர்கள் அதன்பின் மனைவியை அப்படி நடத்த ஆரம்பிக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் இன்று இன்னொரு பண்பாட்டுத்தளத்துக்கு முதிர்ச்சியடைந்து வந்தபின்னர் மிகுந்த உணர்ச்சிகரத்துடன் அம்மாவை நினைத்துக்கொள்கிறார். அந்தத் துயரம் ஆழமானது. அதற்கு ஒரு சொல்லும் ஆறுதலாக அமையாது. அனைவரிடமும் அப்படி சில கண்ணீர்த்துளிகள் இருக்கும்.

முந்தைய கட்டுரைகூடங்குளம் – சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்ஹிந்து