சந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களே, உங்களது இணைய வழி எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் நான்.

அதனாலேயோ என்னவோ உங்களைப் பற்றி அதிகம் விமர்சனமும் எனக்குள் எழுகிறது. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இந்த மடல் இயற்றுகிறேன்.

ஹிந்துத்துவச் சார்புள்ள விஷயங்கள் பற்றி நீங்கள் எழுதும் போதும் ஞான மரபுகள் குறித்து நீங்கள் கருத்துக்கள் பரிமாறும் போதும் பலர் உச்சி குளிர்ந்து போகிறார்கள். ஹிந்துத்துவ சார்புடையவர் ஜெயமோகன் என்றும் இவராவது ஹிந்து தர்மத்தை திட்டாமல் இருக்கிறாரே என்று மகிழ்ந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். அதையே காரணமாகக் கொண்டு பார்ப்பன அடிவருடி என்றும் பார்ப்பனீத்தை வளர்ப்பவர் என்றும் உங்களை வசைபாடுபவர்களும் உண்டு.

ஆனால் இங்கே நான் கவலைப்படுவதெல்லாம் உங்களை ஹிந்துதர்மத்தின் சார்புடையவர் என நம்பி உங்கள் பின்னால் ஞானமரபு தேடுதல் மயக்கத்தில் உங்களை வாசிக்கும் அப்பாவி ஹிந்துக்களைப் பற்றித்தான். காரணம் ஹிந்து பாரம்பரியம் பேசி, ஹிந்து ஞானமரபு பேசி அறிவுத்தேடலும் ஞானத் தேடலும் உள்ள ஹிந்துக்களை எல்லாம் ஆட்டுமந்தை போல கூட்டமாக உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கச் செய்து, பின்னர் அவர்களின் நம்பிக்கைகள் அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் நல்ல விஷயம் என்று நம்பும்ஹிந்து மத ஆன்மீக விஷயங்களை, உங்கள் அறிவு ஜீவித்தனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து, சுக்கு நூறாக்கி காலில் போட்டு மிதித்து அவர்களை தன் சொந்த தர்ம நம்பிக்கைகளின் மீதே சந்தேகம் கொள்ளச் செய்து இனி என்ன செய்வது, நம்பி வாழ்வதற்கு ஏதேனும் பொருள் வேண்டுமே என அவர்களை திகைத்துத் திக்கு முக்காடிப் போகச் செய்து விடுகிறீர்கள்.

இதற்கு சில முக்கிய உதாரணங்களாக, நீங்கள் ஹிந்துக்கள் அதிக மரியாதை கொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்தை ‘சீழ்கட்டி’ என்று கூறியதும், பலர் தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கும் காஞ்சி மஹா பெரியவரைப் பற்றிய உங்கள் தரப்பான விமர்சனத்ததையும் சொல்வேன். இது உதாரணம் தான். இதைப் போல பலவற்றை அறிவு ஜீவித்தனம் என்று கூறி அடித்து நொறுக்குவதைப் பார்க்க முடிகிறது.

வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் தான் ஹிந்து தர்மமும் ஆன்மீகமும், ஒரு பக்கம் நாத்திகர்களிடமும், மறுபக்கம் அறிவு ஜீவிகளிடமும் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் ஹிந்துக்களை உள்ளே இருந்து அழிக்கும் சக்தியாகப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனெனில் மற்றவர்கள் பேச்சைக் கேட்பதை விட உங்களின் பேச்சே சரி என நம்புபவர்கள் நீங்கள் சொன்ன உடனே தங்கள் நம்பிக்கைகளைத் தூக்கி எரிந்து விடத் தயாராக இருக்கிறார்கள்.

மீண்டும் உதாரணம், http://www.jeyamohan.in/?p=26158 இந்தத் திரியில் மு பழனிச்சாமி என்பவரது சராசரி நம்பிக்கை உங்களால் தகர்க்கப்பட்டது. அது அவரது விருப்பம். ஆனால் இது போல ராமகிருஷ்ண மடத்தின் மீதிருந்த பலரது மரியாதையும் மதிப்பீடும் உங்களால் தகர்க்கப் பட்டிருக்கும். இன்னும் அது போல எத்தனை எத்தனை ஹிந்துக்களின் ஆணிவேரான மதிப்பீடுகளை நீங்கள் உங்கள் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்துவதாக எண்ணித் தகர்க்கப் போகிறீர்கள்?

உங்களைப் போன்ற ஹிந்துசார்பு அறிவுஜீவிகளால் நடக்கப் போவது ஒன்றே ஒன்று தான்! நீங்கள் மதம் மாறாமல்எஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் ஹிந்துக்களின் தங்கள் சொந்த மதத்தின் மீதான நம்பிக்கைகளையும் வேறருத்து அவர்களை நிர்மூலமாக நிர்கதியாக விட்டுவைக்கப் போகிறீர்கள். நம்புவதற்கு எந்தப் பொருளும் இல்லாமல் நிற்கும் அவர்களை சிலுவையைக் காட்டி பாதிரியார்கள் இழுத்துச் செல்லப் போகிறார்கள். அதற்கான பாதையை உள்ளிருந்தே உருவாக்கித் தரும் கழுத்தறுப்பு வேலையை நீங்கள் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

ஆக நாத்திகவாதிகளும் அறிவுஜீவி ஹிந்துக்களும் சேர்ந்து ஹிந்துக்களை பிற மதங்களுக்குத் தள்ளத்தான் போகிறீர்கள் என்பது உறுதியாகிறது.

பிறரை நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள், உங்களைப் பற்றிய எனது மதிப்பீடு இதோ!

உயர்வானவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் பரிவு காட்டினால் தான் அவரை உயர்ந்தவராகக் கருத முடியும். நீங்கள் புகழ்ந்துரைக்கும் பட்சத்தில் தான் அவரது மதிப்பீடு உறுதி செய்யப்படும். உங்கள் பரிவையோ, கருணையையோ, புகழுரையையோ பெறாதவர்கள் உயர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள். இந்த பிம்பம்த்தைத் தான் நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள்.

இது ஒரு எழுத்து அரசியல்.

தெரியாமல் தான் கேட்கிறேன் நீங்கள் யார் பிறரை மதிப்பீடு செய்து கொண்டே இருக்க?? உங்களது மதிப்பீடுகள் தான் உங்களால் விமர்சிக்கப்படும் நபர்களின் மதிப்பிற்கு அளவுகோலா?

நான் மகாசுவாமிகள் பற்றி எழுதியதை வைத்து மட்டும் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. காரணம் எனக்கும் உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களது பல கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படித்து லயித்திருக்கிறேன். பிறருக்குப் படிக்க சிபாரிசு செய்திருக்கிறேன். ஆனால் உங்களது நம்பவைத்துக் கழுத்தறுக்கும் மித்ர த்ரோக முறையிலான விமர்சனங்களும், மதிப்பீடுகளும் பிறரை கீழாக மதிப்பீடு செய்து உங்களை, அவர்களை விட உயர்ந்தவன் என்கிற நிலைக்கு படிப்பவர்களை நினைக்கச் செய்துவிடும் எழுத்துக்களும், உங்களை ‘கழுத்தறுப்பவர்’ என்றே எண்ணத்தோன்றுகிறது. அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

பொதுவாக நீங்கள் பிறரால் உயர்வாக மதிக்கப்படுபவற்றையும், உயர்வாக மதிக்கப்படும் நபர்களையும், நம்பப்படும் விஷயத்தையும், எப்பொழுதும் கீழாக விமர்சித்து மிதித்து தன்னை விட அவைகள் அல்லது ‘அவர்கள்’ பற்றிய மதிப்பீடுகள் கீழானவையே என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள் அல்லது அதற்கு முயல்கிறீர்கள்.

எம் எஸ் சுப்புலக்ஷ்மி முதல், ஆன்மீக குருக்கள், மக்கள் தலைவர்கள் எனப் பலரை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். போட்டு மிதிக்கிறீர்கள். மதிப்பீடு செய்கிறீர்கள். அந்த மதிப்பீடுகள் தான் சரி என வாதிடவும் செய்கிறீர்கள். அதனை ஏற்காதவர்களை அதற்கும் கீழாக காலில் போட்டு மிதித்து வசைபாடுகிறீர்கள். உனக்கென்ன தெரியும் என்று எக்காளமிடுகிறீர்கள். இது உங்களது பாணியாகவே போய்விட்டது. ( நானறிந்தவரைப் பெரும்பாலும் இறந்தவர்களைப் பற்றியே நீர் விமர்சிக்கிறீர்!).

ஒரே நபரை புகழ்வதும், அவரையே வேறொரு இடத்தில் இகழ்வதும் செய்து அற்புதமாக அரசியல் செய்கிறீர். ‘நீங்கள் திட்டுகிறீர்கள்’ என்று கோபித்தால் நான் புகழ்ந்தேனே என்பீர்கள். ‘நீங்கள் புகழ்கிறாரீர்களே?’ என்று விமர்சித்தால் ‘நான் திட்டினேனே’ என்பீர்கள். பெரியவர் கருணாநிதிக்கும் உங்களுக்கும் இந்த வகை அரசியலில் பெரிய வித்யாசமில்லை.

நாளைக்கே, ஹிந்துக்கள் பெரிதும் மதிக்கும் ராமகிருஷ்ண மடத்தை அவமதிக்கும் விதமாக அதனை ‘சீழ்கட்டி’ என்று ஏசினாயே!’ என்று கேட்டால்! ‘நான் அதே மடத்தை எப்படிப் புகழ்ந்திருக்கிறேன் தெரியுமா?’ என்பீர்கள்.

மீண்டும் சொல்கிறேன், பிறரை கீழாக விமர்சிப்பது மூலமாக தன்னை அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் விமர்சிக்கப்படுபவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விட அவர்களை விமர்சிப்பதால் நீங்கள் உயர்ந்து நிற்பதாக உணர்கிறீர்கள். அல்லது அப்படி உணர முயற்சிக்கிறீர்கள்.

சுஜாதாவை விமர்சித்து அவர் ‘ஒன்றுமில்லை’ என்று அவர் மீது இருக்கும் உயர் மதிப்பை போட்டுடைத்து அந்த இடத்தைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள். இப்படி பிறரை கீழாக மதிப்பீடு செய்து தன்னை அவர்களை விட உயர்ந்தவன் என்கிற நிலைக்கு படிப்பவர்களை நினைக்கச் செய்துவிடும் அரசியல் செய்கிறீர்கள். உங்களைப் படிப்பவர்கள் மனதில், அவர்கள் உயர்வாக நினைத்திருப்பவரை விட, நீங்கள் எவ்வளவு உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள உதவும் உத்தி!

அது சுயநலமானது. தேவையற்றது.

இப்படியே தன்னை உயர்வானவராக அறிவு ஜீவியாகக் காட்டிக்கொள்ள ஹிந்து மதத்தை அதன் நம்பிக்கை சார்ந்த மதிப்பீடுகளை, விஷயங்களை ஒவ்வொன்றாகப் பொறுமையாக நசுக்கி உடைத்து காலில் போட்டு மிதித்து அவற்றை ஒன்றுமில்லாமல் செய்கிறீர்கள்.

உங்களைப் போன்ற அறிவு ஜீவி ஹிந்துக்களால் நடக்கப் போவது இதுதான்!

நாத்திக வாதிகள் + அறிவு ஜீவி ஹிந்துக்கள் – ஹிந்துக்கள் = ஹிந்துமத அழிப்பு!

அன்புடன் உங்களை மிகவும் நேசிக்கும்
ராம் குமார்

www.hayyram.blogspot.com

அன்புள்ள ராம்குமார்,

உங்கள் கோபம் புரிகிறது.

இந்தத் தளத்தில் நீங்கள் எதிர்வினையாற்றியது பெரும்பாலும் பிராமணசாதி விமர்சிக்கப்படுகிறது என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகும்போது மட்டுமே. பரவாயில்லை, அது உங்களுடைய சுயம்.

ஒருவர் தன்னை இந்து மதத்தின் தலைவர் என முன்வைத்துக்கொண்டு இந்துக்களில் ஆறில் ஒருபங்கு மக்களை மனிதருக்குரிய மதிப்பு ஏதும் இல்லாமல் மிருகங்களாக வாழவேண்டும், அதுவே மரபு என வாதிடுகிறார். அது இந்துமதத்தைக் காப்பது என்றும், அவர் அப்படிச் சொன்னது மனிதாபிமானமல்ல என்று சொல்வது இந்துமதத்தை அழிப்பது என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்

இந்துமதம் என்பது பிராமணர்கள் மட்டும் அல்ல . உங்கள் மகாப்பெரியவாளால் இழிசினராக நினைக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப் பரிந்துரைக்கப்பட்ட கோடானுகோடி இந்துக்களுக்கும் மனமும் உணர்வுகளும் உண்டு- இவ்விரு விஷயங்களையும் உங்கள் மனதைப் போர்த்தியிருக்கும் திரையைத்தாண்டி என்னால் உணர்த்திவிட முடியாது.

சிலருக்கு உணர்த்த முடியும் என நினைக்கிறேன். விமர்சனங்கள் எல்லாம் அதற்காகவே. நான் மதப்பிரச்சாரகன் அல்ல. எழுத்தாளன். ஆகவே அடிப்படை மனிதாபிமானம் உடையவர்கள் மட்டும் என்னை வாசித்தால் போதும்.

உங்களைப்போன்ற ஒருவரின் நிராகரிப்பு எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். நன்றி

நன்றி

ஜெ

சந்திரசேகர சரஸ்வதி

முந்தைய கட்டுரைவிரல் மொழியாக்கம்
அடுத்த கட்டுரைகூடங்குளம்- இன்னொரு கடிதம்