பெரியார்- அறிவழகனின் கடிதம்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்னுடைய இந்தக் கடிதத்தை நீங்கள் ஒரு விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் ஒரு உரையாடலாகவும், ஒரு புனைவிலக்கிய முன்னோடி உடனான கருத்துப் பரிமாற்றம் என்ற அளவிலேயே இதனை நான் கருதுகிறேன், இருப்பினும் இந்த உரையாடல் எல்லா நேரங்களிலும் ஈ.வே.ரா என்கிற தலைப்போடு துவங்குவது வியப்பளிக்கிறது.

தொடர்புகளும், ஒப்பீட்டு நோக்கும் அறவே அற்ற சில தலைப்புகளை உங்கள் தளத்தில் பார்க்க நேரிடுகிற போது உங்கள் எழுத்தின் நோக்கம் குறித்த சில ஐயப்பாடுகள் வருவதை ஏனோ என்னால் தவிர்க்க முடிவதில்லை, சந்திரசேகரரும், ஈ.வே.ராவும் என்கிற உங்கள் புதிய ஒப்பீட்டுத் தலைப்பு ஒருவகையான சிந்தனைக் குழப்பத்தை உண்டாக்குகிறது, இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணம் செய்த மனிதர்களை ஒப்பீட்டளவில் இணைப்பது என்பது சிந்தனைத் தளங்களில் சாத்தியமற்றது மட்டுமன்றி உங்கள் எழுத்துக்களின் வலிமையை வறட்சி அடையச் செய்யுமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.

ஒரு கடிதத்திற்கு விளக்கம் அளிப்பதற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு நோக்கிலோ அதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இரு வேறு தரப்பு மனிதர்களை, வெவ்வேறு சிந்தனைத் தளங்களில் இயங்கிய இருவரை உங்கள் எழுத்தின் மூலம் ஒரே தளத்தின் கீழ்க் கொண்டு வந்திருக்கிறீர்கள். இருவேறு தாவரங்களை ஒட்டின் மூலம் இணைப்பதற்குத் தாவரவியலில் இருக்கும் சில விதிமுறைகள் போன்று ஒப்பீடுகளுக்கும், ஆய்வுகளுக்கும் என்று சில பொருத்தமான விதிகள் இருக்குமென்று என்னை விட உங்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும்.

ஈ.வே.ரா குறித்த உங்கள் நிலைப்பாடுகளை நோக்கி நான் வருவதற்கு முன்பாக சந்திரசேகரர் குறித்த சில குறிப்புகளை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன், கர்மயோகி அல்லது அப்பட்டமான கண்ணாடி போன்ற மனிதர் என்கிற வரிசையில் நீங்கள் சந்திரசேகரரையும் காந்தியையும் வரிசைப்படுத்தும் போது எனக்கு ஏனோ ஹிட்லர் நினைவுக்கு வருகிறார்,

ஹிட்லர் இவர்கள் இருவரையும் விட மிக அப்பட்டமான கர்மயோகி, தான் எடுத்துக் கொண்ட தீர்க்கமான சித்தாந்தத்தை நோக்கி அது கொலைக்களமாகவே இருப்பினும் இறுதி வரை தீவிரமாக நின்று களமாடிய மனிதன் ஹிட்லர், ஆகவே ஹிட்லரையும் இந்த வரிசையில் முன்வைக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், ஹிட்லர் தனது கொள்கையை தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று கடைசி வரை நம்பினான், அதற்காகவே அவன் மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தான்.

வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் அவன் ஒரு கர்மயோகி என்று உங்கள் சந்திரசேகரர் காந்தி ஒப்பீட்டைப் படித்த பிறகு நான் முழுமையாக நம்பத் துவங்கி இருக்கிறேன், நீங்கள் காந்தியைச் சிறுமைப் படுத்துகிறீர்களா?, இல்லை, சந்திர சேகரரைச் சிறுமைப் படுத்துகிறீர்களா?, அல்லது இருவருமே தங்கள் சனாதானக் கொள்கைகளைக் கடைசி வரை கடைபிடித்ததற்காக வாரி விடுகிறீர்களா? என்கிற குழப்பம் நீடிக்கிறது.

மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை, அதன் இழி நிலைகளை, அதன் துன்பங்களை நீக்க எவனொருவன் தனது வாழ்க்கையையும், சிந்தனைகளையும் அர்ப்பணிக்கிறானோ அவனே சிந்தனையாளனாகவும், தலைவனாகவும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று நான் கற்றறிந்த சிந்தனைகளின் நீட்சி எனக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.

சந்திரசேகரர் என்கிற மனிதர், தான் வாழ்ந்த சமூகத்தின் துன்பங்களுக்கு மூல காரணமாய் இருந்த எந்த ஒரு காரணிகளைக் குறித்தும் அதிக அக்கறை கொண்டவராய் இருக்கவில்லை, மாறாக, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய துன்பமாக இன்றும் நீடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளைக் கட்டிக் காக்கும் ஒரு அமைப்புக்குத் தலைமை தாங்கினார், தொடர்ந்து மனித சமூகத்தின் மீது வன்மையாகத் திணிக்கப்பட்டிருந்த, அதன் மன நிலையை அரித்துக் கொண்டிருக்கிற வர்ணக் கொள்கைகளை அவர் கடைசி வரை காப்பாற்றி முன்னெடுக்கத் தீவிரமான கர்மயோகியாய் இருந்தார்.

தெரிந்தோ தெரியாமலோ அவருடைய கோட்பாடுகள் கடைசித் தட்டில் வீழ்ந்து கிடந்த உழைக்கும் எளிய மனிதனைக் குறித்த எந்தக் கவலையும் கொண்டதாக இருக்கவில்லை, அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோட்பாட்டு அடையாளமாகவும், அந்த சமூகம் (உங்கள் பாணியில் சொல்வதானால்) இந்து மதத்தின் நிலைச் சக்திகளுக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும் இன்று வரை விளங்குகிறார். சந்திரசேகரர் என்கிற தனி மனிதரை வெறுக்கும், அல்லது அவரை வசைபாடும் வழக்கமான பெரியாரியர்களின் குரல் என்று நீங்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடாதென்று உங்களை விரும்பி வேண்டுகிறேன்.

சிந்தனைத் தளங்கள் மற்றும் கோட்பாட்டு விவாதங்களில் சந்திரசேகரர் போன்ற மனிதர்களை எவருடனும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, காந்தி உட்பட. ஆகவே சந்திரசேகரரை நாம் சங்கர மடத்தின் வாயிலிலேயே விட்டு விடுவது தான் பொருத்தமாக இருக்கும், சில மனிதர்களின் அல்லது பல மனிதர்களின் நம்பிக்கையில் அமைதியையும், இறையாசியையும் அவரால் வழங்க முடியும் என்றால் அந்த மனிதர்களுக்கு எதிராக நின்று கலகம் எழுப்ப வேண்டிய தேவை நமக்கு இல்லை, அவர்கள் அமைதியையும், இறையாசியையும் அடையட்டும்.

இரண்டாவதாக நீங்கள் குறிப்பிடும் பெரியாரியர்கள் என்கிற சொல்லாடலின் உள்ளடக்கத்தில் பல பிரிவுகள் காணக் கிடைக்கும் என்பதையும் நீங்கள் உணர முற்பட வேண்டும், ஈ.வே.ரா இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற நேர்மறையான சிந்தனைகளின் தொகுப்பை உள்வாங்கி அவற்றின் மூலமாக இந்த மானுட சமூகம் இன்னும் சில படிகள் முன்னேறித் தழைக்க முடியுமா என்கிற நோக்கோடு உலவிய, உலவும் முதல் பிரிவு.

திராவிட அரசியல் இயக்கங்களின் மூலமாகப் பெரியாரைத் தெரிந்து கொண்டு அவரைக் கோட்பாட்டு ரீதியில் உள்வாங்கிக் கொள்ளாத பண்ணை அரசியல் மனிதர்களின் இரண்டாம் பிரிவு, பெரியார் என்கிற பெயரை முழுமையாகத் தங்கள் அடையாளமாகப் பயன்படுத்திக் கொண்டு, சந்திரசேகரரை விடவும் தீவிரமாக வர்ணாசிரமக் கொள்கைகளை மனதில் புடம் போட்டு வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி ஐயாமார்களை உள்ளடக்கிய மூன்றாம் பிரிவு என்று எளிமையாகப் பிரித்துக் கொள்ளலாம். இனி நீங்கள் பெரியாரியர்கள் என்று குறிப்பிடும் போது மேற்கண்ட பிரிவின் எந்தப் பிரிவைச் சேர்ந்த பெரியாரியர் என்று குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

மூன்றாவதாக ஈ.வே.ரா அவர்களைத் தமிழ்ப் பண்பாட்டின் மிகமுக்கியமான சமூக சீர்திருத்தவாதி என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் அவருடைய பங்கு மறுக்க இயலாதது என்பதையும் நீங்களே சொல்கிறீர்கள், ஆகவே இங்கு விவாதிக்க இடமில்லை என்கிற புள்ளியில் அசல் சிந்தனை, போலிச் சிந்தனை மாதிரியான ஒரு சிக்கலை உருவாக்குகிறீர்கள், குழப்பம் மென்மேலும் அதிகரிக்கிறது, ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் பங்கு பெறுகிற எந்த மனிதரையும் சிந்தனையாளர் வரிசையில் மட்டுமே வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சீரற்றுக் கிடக்கும் எந்த ஒரு சமூகத்திலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்து சீரமைக்கும் மனிதர்களை அவர்களுடைய ஆற்றலை சிந்தனைத் தளத்தில் வைத்து உள்வாங்கிக் கொள்கிற போது அசல் சிந்தனையாளர் இல்லை, சிந்தனைக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை என்று அடுத்த வரிகளில் பிறழ்வது எந்த மாதிரியான தோற்றத்தை உருவாக்கும் என்று நீங்கள் அறியவில்லையா? அல்லது வேண்டுமென்றே அவதூறு செய்கிறீர்களா என்று எனக்கு விளங்கவில்லை.

சிந்தனை அல்லது சிந்தனையாளன் எப்போது அடையாளம் காணப்படுகிறான், ஏற்கனவே சமூகத்தில் பொதிந்து கிடக்கிற பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பை உடைத்து அதில் இருந்து மாறுபட்ட ஒரு நன்மை விளைவிக்கும் பாதையைத் தேர்வு செய்யும் எதையும் சிந்தனை என்றும், அப்படியான சிந்தனையை உருவாக்குபவனை சிந்தனையாளன் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களேயானால் உங்கள் மதிப்பீட்டு விதிகளின் படியே ஈ.வே.ரா ஒரு சிந்தனையாளராக உருவம் பெற்று விடுகிறார்.

இந்த சமூகத்தில் விரவிக் கிடந்த பல்வேறு வர்ணக் கோட்பாடுகளின், மதம் சார்ந்த பிளவுகளின் ஆழத்தில் சமூகம் சிக்குண்டு கிடந்த போது வேறு எவரையும் விட ஈ.வே.ரா மிகத் தீவிரமாக மாற்றுச் சிந்தனைக்கான வழிகளைக் கண்டடைந்தார், அவர் எந்தப் பல்கலைக் கழகத்திலும் சிந்தனை குறித்த ஆய்வுகளைப் படித்தவரில்லை, சிந்தனைத் தளங்களின் மீது உலவுகின்ற போது எத்தகைய நெகிழ்வுகளை, சமரசங்களை எல்லாம் நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிற பரந்து பட்ட முறையான கல்வி அறிவும் (Proper Education), வழங்கு திறனும் ( Presentation Skill ) கொண்டவராக அவர் இருந்திருக்கவில்லை.

மாறாக அவருடைய சிந்தனைகள் பட்டவர்த்தனமாக அல்லது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைக்கும் ஊரகப் பாணியில் இருந்தது என்பது உண்மைதான். ஆனால், இவ்விடத்தில் நீங்கள் ஒரு மிக இன்றியமையாத குறிப்பை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மையில் கிராமப் புறங்களில் காணப்படும் சிந்தனைத் தளங்கள், நகர்ப்புறங்களில் காணப்படும் சிந்தனைத் தளங்களில் இருந்து எந்த விதத்திலும் குறைவானதல்ல, அவ்வாறு சிந்தனைத் தளங்களைப் பிரித்துப் பார்ப்பதே சிந்தனை குறித்த நமது அறியாமையை வெளிக்காட்டுகிறதோ என்று நான் அஞ்சுகிறேன், இயற்கை மற்றும் முந்தைய நிகழ்வுகளை வைத்துப் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கும் பழக்கம் நமது கிராமப் புறங்களில் இருந்தே துவங்கியது என்று கூடச் சொல்லலாம்.

சிந்தனை என்பது ஒருவிதமான திறப்பு, கட்டுடைப்பு, திமிறல். நீண்ட கால நம்பிக்கைகளை உடைத்து அவற்றில் இருந்து தான் விடுபட்டது மட்டுமன்றி தனது சமூகத்தையும் விடுபடத் தூண்டும் செயல்பாடுகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேறுபாடுகளைக் கடந்தவை. ஆகவே செவிவழியான கிராமிய அணுகுமுறை என்கிற உங்கள் சொல்லாடலை நான் மறுக்கிறேன். அத்தகைய திறப்பையே, அத்தகைய கட்டுடைப்பையே, அத்தகைய திமிறலையே ஈ.வே.ரா செய்தார், செய்யத் தூண்டினார்.

இந்தியப் பண்பாட்டுப் பின்னல் என்பது நீங்கள் சொல்வது போலவே மிகச் சிக்கலான முடிச்சுகளைக் கொண்டது, இந்தியப் பண்பாட்டுப் பின்னல் என்பது பல்வேறு பழங்குடி இனக் குழுக்களின் வரலாற்றுத் தொகுப்பு, ஒவ்வொரு பழங்குடி இனக் குழுவுக்கும் தனியான வாழ்க்கை முறையும், இயங்கு விதிகளும் நிலை பெற்றிருந்தன, ஆனால், வெவ்வேறு காரணிகள், வெவ்வேறு கருவிகளின் துணை கொண்டு வேறுபட்ட இந்த இந்திய நிலப்பரப்பில் பொதுவான சில வாழ்க்கை முறைகளையும், இயங்கு விதிகளையும் கட்டமைக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன நிலைச் சக்திகள்.

ஈ.வே.ரா பொதுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அத்தகைய இயங்கு விதிகளில் பலவற்றை எதிர்த்தார், முரட்டுத்தனமாக அதனை அணுகினார், ஏனெனில் மென்மையான எந்த அணுகுமுறைகளாலும் அந்த இயங்கு விதிகளை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதபடி அவை வேரூன்றி இருந்தன. அத்தகைய ஒரு காலகட்டத்திலேயே அவர் வாழ்ந்தார்.

அன்றாட உணவுத் தேவைகளுக்கும், உழைப்புக்கு ஏற்ற கூலிக்கும், வாழ்க்கையை மேம்படுத்தும் கல்விக்கான வாய்ப்புக்கும் அல்லாடிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தின் எளிய மக்கள் கூட்டத்தை இந்தியப் பண்பாட்டுப் பின்னலையும், மதச் சிந்தனைகளையும், வரலாற்றின் நெடுங்காலப் பரிணாமத்தையும் நோக்கி நகர்த்த வேண்டிய எந்த ஒரு அடிப்படைத் தேவையும் ஈ.வே.ராவுக்கு இருந்திருக்கவில்லை, அவர் அத்தகைய எளிய மக்களின் பிரதிநிதியாகவே வாழ்ந்தார், தன்னை ஒரு சிந்தனையாளராக அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பி இருக்கவில்லை, மாறாக தன்னுடைய கருத்துக்களை மீளாய்வு செய்து அவை உங்கள் அறிவுக்குப் பொருந்திச் சரியானதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு உண்மையான சிந்தனையாளனின் தொனியிலேயே அவர் உரக்கப் பேசினார்.

வெறும் சிந்தனையாளனாக இருப்பது என்பது வேறு, வீரியமான சமூக மாற்றங்களை நோக்கிச் செயல்படுகிற போராளியாக இருப்பது என்பது வேறு, ஈ.வே.ரா ஒரு போராளி, அந்தப் போராளியின் பயணத்தில் தோற்றம் கொண்ட பல்வேறு கருத்துக்கள், சித்தாந்தங்கள் தன்னிச்சையாக சிந்தனைகளாக உருமாற்றம் பெற்றன, அவை உள்ளீடு செய்யப்பட்டவை அல்ல, மாறாகக் கால ஓட்டத்தில் சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளாக அவை தோற்றம் கொண்டன.

ஈ.வே.ரா வுக்கு முன்னும் பின்னுமாய்ப் பல்வேறு தளங்களில் சிந்தனையாளர்கள் தோற்றம் பெற்றார்கள், ஆனால், அவர்களின் சிந்தனைகள் சமூக மாற்றத்தை விளைவிக்கும் அளவில் வலிமை கொண்டதாக இல்லை, நீங்கள் குறிப்பிடுவதைப் போலவே அரசியல் களத்தில், தொழிற்சங்க வரலாற்றில், மதச் சிந்தனைகளில் இன்னும் பல நிலைகளில் சிந்தனையாளர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதில் எந்த முரண்களும் இல்லை, ஆனால், அந்தச் சிந்தனையாளர்கள் அனைவரும் சமூக மாற்றத்துக்கான களப் பணியாற்றி இருக்கவில்லை.

மலத்தையும், செருப்பையும் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துணிவைக் கொண்டிருக்கவில்லை, இறக்கப் போவதற்கு ஒரு மாதம் முன்பு வரையில் மூத்திரப் பையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலி வலி என்று கதறிக் கொண்டே தனது சிந்தனைகளை ஒலிபெருக்கியில் சொல்லும் போராட்ட முறையைக் கொண்டிருக்கவில்லை என்பது தான் ஈ.வே.ரா வுக்கும் அவருக்கு முந்தைய சிந்தனையாளர்களுக்கும் இடையிலான வேறுபாடாக இன்றும் இருக்கிறது. ஈ.வே.ரா இல்லையென்றால் பெரும்பான்மையானவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது, நான் உறுதியாக மாடுதான் மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும், தம்பி அஜிதன் எதாவது எழுதி இருக்கிறாரா? இருப்பின் அறியத் தாருங்கள்.

வணக்கங்களுடன்

கை.அறிவழகன்

அன்புள்ள அறிவழகன்

நலம்தானே? நீளமான கடிதமானாலும் துல்லியமான நிதானமான மொழியில் இருக்கிறது. நீங்கள் சொல்லும் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன், பெரியாரியர் என்னும்போது எப்போதுமே வெற்றுக்கூச்சல்களையும் வெறுப்பரசியலையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பெரும்கூட்டமே கண்ணுக்கு முன் தெரிகிறது. அவர்களை தாண்டி ஈவேராவை அரசியல் வழிகாட்டியாகக் கொண்டவர்ர்களை காண்பதில் ஒரு மனத்தடையை நிகழ்காலம் உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டவேண்டியது அவசியம் தேவையான விஷயம் என ஒப்புக்கொள்கிறேன்.

ஈவேரா அவர்களைப்பற்றிய உங்கள் கருத்தை புரிந்துகொண்டேன். சிந்தனை என்று சொல்லும்போது நீங்கள் உத்தேசிப்பது செயல்பாட்டாளரியத்தை. நான் உத்தேசிப்பது விரிவான வரலாற்றுத்தரிசனத்தை, வாழ்க்கைப்பார்வையை. நீங்கள் ஈவேராவை அம்பேத்கருடன் ஒப்பிட்டால் நான் சொல்வது புரியும்

அஜிதன் சில நல்ல கட்டுரைகள் எழுதியிருக்கிறான். நண்பர்கள் படிதிருக்கிறார்கள். அனுப்புகிறேன்.ஜுன் மாதம் பெங்களூர் வருவேன். அப்போது பார்ப்போம்

ஜெ

அறிவழகன் இணையதளம்

முந்தைய கட்டுரைஒளியை விட வேகமானது – விளம்பரம்
அடுத்த கட்டுரைஇனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா?