கூடங்குளம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.

கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் இயலாமையுடன் என்னால் இதை எழுத மட்டுமே முடிகிறது.

மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டங்கள் (http://www.gandhi-manibhavan.org/aboutgandhi/chrono_fastsgandhi.htm) அசுரத்தனமான நுகர்வு கலாச்சாரமற்ற எளிமையான இந்தியாவில் நடந்தது. அவர் சமூக மற்றும் அரசியல் இலக்கை முன்வைத்துதான் போராட்டங்களை நடத்தினாரே தவிர நுகர்வை எதிர்த்து (அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றவை இந்த வகையல்ல) தனிப் போராட்டம் நடத்தவில்லை (பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்) என்று நினைக்கிறேன். காந்தியின் மகத்தான செல்வாக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்களின் பிரச்சாரமும் உடனுதவ, நேர்மை நியாயம் போன்ற உணர்ச்சிகள் தங்களிடத்தில் வளர்ச்சியும் மதிப்பும் பெற்ற வந்த சிறிதாவது செவிசாய்க்கும் வெள்ளையர்களை நோக்கி அவருடைய புனிதப் அரசியல் உண்ணாவிரத போரட்டங்கள் செலுத்தப்பட்டன. அதனால் ஓரளவு வெற்றியும் பெற்றார். அவருடைய சமூக உண்ணாவிரத போராட்டங்கள் இந்தியர்கள் பிளவுபட்டிருந்த பொழுதுகூட ஓரளவு வேலை செய்தது.

ஆனால் சுப. உதயகுமார், மக்கள் ஆதரவு பெற்றிருந்த அன்னா ஹசாரேக்கே செவி சாய்க்காத அதே அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடுகிறார். மேலும் அவர் எடுத்திருக்கும் இந்தக் காந்திய கருவி நுகர்வை எதிர்ப்பதாகும். காந்தி செய்து பார்க்காத பரிசோதனை இது. அன்னா ஹசாரேயும் பரவலான இலக்கை நோக்கியே போராடினார். அன்னாஹசாரேயின் போராட்டத்திற்கு பெரிய பிரச்சாரமிருந்த்ததால் அது ஓரளவு உதவி செய்தது. உதயகுமார் காந்தி அளவோ ஹசாரே அளவோ பெரிதாக தெரியப்பட்டவரில்லை. சிறுபான்மையான மக்களே உதயகுமார் பக்கமிருக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். எல்லோருடைய நலன் கருதி தான் அவர் இந்தப் போராட்டத்தை முன் வைக்கிறார் என்றாலும் அந்த ”எல்லோரும்” இவர் பக்கமில்லை. ”நமக்காக அல்லவா இவர் போராடுகிறார், நம் எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்ககூடிய ஒரு விஷயத்தை அல்லவா எதிர்க்கிறார்” என்ற பிரக்ஞையே இல்லாத மக்களுக்காக இவர் போராடுகிறார். இதில் வெற்றி பெற்றுவிட முடியுமா? இந்த மக்களுக்காக இவர் இப்படி கஷ்டப்படத்தான் வேண்டுமா?

இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் அணு உலைகளை (http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx) நிறுவப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஒரு தொழிற்சாலை வைப்பது என்றால் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வரும் மாநிலங்கள் இதில் சத்தம் போடாமல் விலகி இருப்பது கூடவா நம்மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவில்லை?. கேரளா போன்ற மாநிலங்கள் தொழிற்சாலைக்கூட வைக்க விட மாட்டர்கள். அவர்கள் அவ்வளவு சூழல் விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. விவரமாக முல்லைப் பெரியார் போன்ற கேரளத்திற்கு பயன் தரும் விஷயத்திற்கு நியாமிருக்கிறதோ இல்லையோ ஒருமித்து போராடுகிறார்கள். தமிழர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்?

மானுடத்திற்கும், இயற்கைக்கும் சிறிதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கும் தொழில் நுட்பம் ஏற்புடையதல்ல. அது முதிரா தொழில்நுட்பம். அதை பலவந்தமாக அரசும் திணிக்கிறது. மக்களும் ஆதரிக்கின்றனர். நாகரீகம் என்ற மாயையில் இயற்க்கையை விட்டு விலகி விலகிச் செல்லும் மனிதன் நாகரீகம் என்று நினைத்துக் கொண்டு பூமியை நேசிக்கத்தெரியாமல் மனதளவில் ”காட்டுமிராண்டியாகவே” ஆகிக் கொண்டிருக்கிறான்.

உதயகுமாருக்கு மானசீகமான முறையில் என் ஆதரவு உண்டு. போராட்டத்திற்கு எதேனும் நிதி உதவி வேண்டுமென்றால் நாங்களும் பங்களிக்கிறோம்.

அவர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலும், அவர் உடல்நலத்தை புரிந்துக்கொள்ளாத மக்களுக்காக விரயம் செய்வதை நான் அன்புடன் எதிர்க்கிறேன். அவருக்கு இருக்கும் அர்ப்பணம் இந்தப் போராட்டத்தில் வேறு எவருக்கும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் போரடிக்கொண்டிருக்கலாம். அதற்கு அவர் வேறு வகை போராட்டக் கருவிகளை ஆராயந்து கையில் எடுக்கவேண்டும்.

பக்ஸ்

பி.கு. கூடங்குளத்திலிருந்து பத்து பதினைந்து மைல் தொலைவிலிருக்கும் பழவூர் என் தந்தை, தாத்தா பாட்டி வாழ்ந்த விவசாய கிராமம். இன்றும் எங்கள் உறவினர்கள் பலர் இருக்கின்றனர். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது ஒரே பேச்சாக இருந்தது. நனறாக நினைவிருக்கிறது. எதோ “ஹேப்பி நியு இயர்” சொல்வது போல் கிராமத்திலிருந்த பெரியவர்களெல்லோரும் ”கூடங்குளம் பிராஜெக்ட் வரப்போகுதுடே! எல்லா பயலுக்கும் வேலை கெடச்சுரும்” என்று ஆபத்தை அறியாமல் அப்பாவித்தனத்துடனும் முட்டாள்தனத்துடனும் சந்தோஷப்பட்டார்கள்.

முந்தைய கட்டுரைசந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம்
அடுத்த கட்டுரைதுபாய் நிகழ்ச்சி நிரல்