புல்வெளிதேசம் 8, கலைக்கூடம்

பார்வதிபுரத்தில் என் வீட்டில் இருந்து பாறையடி மலையடிவாரம் நோக்கி செல்லும் வழியில் கால்வாய் ஓரமாக ஒரு தர்ஹா உள்ளது. அங்கே நடந்த ஒரு போரில் தலைமையேற்று இறந்த ஒரு அரபு வீரரின் நினைவுக்காக உருவாக்கப்பட்ட தர்ஹா அது. அந்த தர்ஹாவுக்குச் செல்லும் வழியில் கால்வாய்க்கரையிலேயே இன்னொரு தர்ஹா  உள்ளது. இதற்கு கூரையோ கட்டிடமோ இல்லை. வெறும் ஒரு கல்லறை மட்டுமே. வருடத்தில் ஒருமுறை மட்டும் பட்டாணி முஸ்லீம்கள் வந்து அதன்மேல் பச்சைப்போர்வை விரித்து ஊதுபத்தி ஏற்றி வணங்குவார்கள். என் வீட்டருகே வசிக்கும் கேரள வரலாற்றாசிரியரான பேராசிரியர் திரிவிக்ரமன் தம்பி சொன்னார் அது போரில் இறந்துபோன ஒரு குதிரையின் கல்லறை என்று.

அது ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உலகில் போரில்கொல்ல உயிர்களில் மனிதர்களை விட்டால் அதிகமானது குதிரை உயிர்கள்தான். குதிரை பழக்கப்படுத்தப்பட்ட காலம் முதலே அது போருக்கான மிருகமாகத்தான் இருந்திருக்கிறது. எத்தனையோ படையெடுப்புகள். எத்தனையோ இடப்பெயர்வுகள். சாம்ராஜ்யங்கள் குதிரைகளால் உருவாகியிருக்கின்றன. அழிந்திருக்கின்றன. ஆனால் குதிரை எதையுமே அறியாது. அது அதிகாரத்தின் குறியீடு. இன்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் சிலைகள் குதிரைமேல்தான்  ஆரோகணித்திருக்கின்றன.  கால்தூக்கிய குதிரை போரில் இற்ந்த வீரனையும் கால்கள் ஊன்றி நிற்கும் குதிரை  வாழும் வீரனையும் குறிக்கும்.பல குதிரைகளின் வரலாறுகள் பதிவாகியிருக்கின்றன. ஆனாலும் மனிதர்கள் அந்த எளிய கம்பீரமான மிருகத்தை கொன்றுகுவித்தமைக்கு அது ஈடாகுமா?

யானைகள், காளைகள், கழுதைகள், நாய்கள், என போரில் கொல்லப்பட்ட மிருகங்கள் எத்தனையோ. பெரும் சாகசங்களைச் செய்த மிருகங்கள் உள்ளன. பெரும் தியாகங்களைச் செய்தவையும் உள்ளன. ஆனால் மிருகம் அந்த மானுட அலைகளுக்கு அப்பாற்பட்டதும்கூட. என் மகன் என் அப்பாவைப்போலவே மிருகங்கள் மேல் பெரும் பிரியம் கொண்டவன். திரைப்படங்களில் மனிதர்கள் சுட்டுத்தள்ளப்படும்போது சும்மா பார்த்திருப்பான். ஒரு குதிரை கொல்லப்படும் காட்சியைக் கண்டால்  கண்கலங்கிவிடுவான். மிருகங்களின் முகங்களைப்பார்க்கும்போதெல்லாம் இனம்புரியாத ஓர் மனமலர்ச்சியை அடைபவன் நான்.

ஆகவே கன்பெராவின் போர் நினைவகத்துக்கு வெளியே இருந்த ஒரு சிலை என்னை மிகவும் கவர்ந்தது. மான் வித் டாங்கி என்று அந்த சிலைக்குப் பெயர். முதல் உலகப்போரில் துருக்கியில் கலிபோலி பகுதியில் ஆன்சாக் படைகள் போர் புரிந்தபோது பல்லாயிரம் பேர் குண்டடிபட்டு வீழ்ந்த நாட்களில் அந்தக் கழுதையும் அதன் ஓட்டுநருமான ஜாக் சிம்ப்ஸனும் ஏராளமான பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். உண்மையில் போர்முனைகளுக்கு தண்ணீரும் உணவுப்பொருட்களும் கொண்டுசெல்வதுதான் அதன்  அன்றாடச்செயல். ஆனால் போர் ஒரு கொலைவெறியாட்டமாக ஆனபோது காயம்பட்டவர்களைச் சுமந்து திரும்புதல் அதன் பணியாக ஆகியது.

ஜாக் சிம்ப்சன் இங்கிலாந்தில் வளர்ந்தவர். சிறு வயது முதலே அவருக்கு கழுதைகள் மீது பெரும் பிரியம் இருந்தது. அங்கே ஒரு பென்னி கூலிக்கு கழுதைகள் மேல் ஏறிச்செல்வது அவரது பொழுதுபோக்கு.1915ல் கலிபோலி போர்முனைக்கு வந்தபோது அங்கே கிடைத்த கழுதை அவருடைய நண்பனும் போர்த்துணைவனுமாக ஆகியது. குண்டுமழைநடுவே ஜாக் கிட்டத்தட்ட 300 போர்வீரர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றினார். அந்தக்கழுதை இரண்டு போர்வீரர்களைச் சுமந்துகொண்டு கடுமையான போர்ச்சூழலில் வழுக்கும் நிலத்திலும் செங்குத்தான சரிவுகளிலும் நடந்து பணியாற்றியது இந்தக்கதை பின்னர் ஒரு அழகிய நூலாக எழுதபப்ட்டது The Donkey Of Gallipoli: A True Story Of Courage In World War I என்ற அந்ந்நூல் பிரபலமானது.

அந்தக்கழுதைக்கும் ஜாக் சிம்ப்ஸனுக்கும்  கன்பரா போர் நினைவக வாசலில் அழகான சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.மிக நேர்த்தியான தத்ரூபச்சிலை. போர்ச்சீருடை ஆயுதங்கள் தோல்பட்டைகள் செருப்புகள் போன்றவற்றின் சொரசொரப்பும் வழவழப்பும் துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தன. கழுதையின் உடலின் எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தன. கழுதையின் உடலில் அந்த எடையின் அழுத்தமும் அந்த நடையில் உள்ள சிரமமும் தெரிந்தது. உடலில்காயம்பட்டு கட்டுபோட்ட ஜாக் சிரமப்பட்டு மலையேறுகிறார். பலமுறை சுற்றி வந்து நான் ரசித்த சிற்பங்களில் அதுவும் ஒன்று. மகாராஷ்டிராவில் சிவாஜியின் கோட்டையான ராய்கரில் சிவாஜி சிலைக்கு முன்னால் சிவாஜியின் நாய்க்கு ஒரு சிலை உள்ளது. சரியான இந்திய நாய். அச்சிலையின் முகத்தில் உள்ள அதிதீவிரமான பிரியத்தை அப்போது நினைவுகூர்ந்தேன். நமக்கு வாழ்வளிக்கும் மிருகங்களுக்கு நாம் எவ்வகையிலாவது நன்றியுடன் இருக்கிறோமா என்ன?

போர் நினைவகத்தில் இருந்து கலைக்கூடத்துக்குச் சென்றோம். மெல்பர்ன் கலைக்கூடம் என்பது  புதிதாக உருவாக்கபப்ட்ட ஒன்று. அவர்களுக்கு நெடுங்காலப்பண்பாடு இல்லை. ஆகவே அவர்கள் பெரும் பணம் கொடுத்து பிறநாட்டுக் கலைச்செல்வங்களை வாங்கி அங்கே சேமித்திருக்கிறார்கள். வாசலிலேயே புகழ்பெற்ற சிற்பி ரோடின் வடித்த நான்கு ஞானிகளின் பெரிய சிற்பம் இருந்தது. ரோடின் வடித்த மூன்று சிற்பங்கள் அங்கே இருந்தன.ரோடின் சிலைகளில் தசைநார்களும் உடைகளும் கொள்ளும் வளைவுகளில்தான் அவரது மாபெரும் கலைத்திறன் உள்ளது. உள்ளே விதவிதமான சிற்பங்கள் ஓவியங்கள். ஒரு கலைக்கூடத்தின் சிற்பங்களைப் பற்றிப் பேசுவதென்பது உண்மையில் அந்நாட்டின் பண்பாட்டைப்பற்றியே பேசுவதாகும். கன்பரா கலைக்கூடம் என்பது உலகக் கலைகளின் ஒரு துளி.

நுழைவாசலிலேயே  குளோட் மோனே வரைந்த நீர்க்குவளை மலர்கள் [வாட்டர் லில்லீஸ்] ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. பித்தளைச் சட்டமிட்ட மிகப்பெரிய ஓவியம். வில்லியம் எம்ஸன் என்னும் இலக்கிய விமரிசகர் இலக்கியத்தில் குறிப்பாக கவிதையில் பொருள்மயக்கம் [Ambiguity ]என்பது எப்படி சிறப்பான கலையனுபவத்தை அளிப்பதாக ஆகிறது என்று விளக்கியவர். அதேபோல கண்மயக்கம் எப்படி பெரும் கலையாக ஆகிரது என்பதை விளக்குபவை மனப்பதிவிய [Impressionism] ஓவியங்கள். அருகே செல்லும்தோறும் வெறும் வண்ணத்தீற்றல்களாக இருப்பவை விலக வில்க செவ்வியல் ஓவியங்களின் துல்லியம் கொள்ளும் அற்புதம்

பாப்லோ பிக்காசோவின் பத்து அசல் ஓவியங்கள் இங்கே உள்ளன.  பலவகையான நவீன ஓவியங்கள் வழியாக கலையனுபவத்தின் பலதளங்களில் சென்று மீண்டு கடந்துசெல்வது ஓர் அபாரமான அனுபவம். சென்றமுறை இந்தியப்பயணம் செய்யும்போது நான் நண்பர்களிடம் சொன்னேன், இந்தியாவின் ஒவ்வொரு வரலாற்றுத்தலத்திலும் குறைந்தது ஒருவாரம் தங்கினால்தான் அதை காணமுடியும். ஆனால் ஒரேவாரத்தில் இந்தியாவழியாகச் செல்பவன் இந்தியா என்னும் அனுபவத்தை அடையமுடியும் என. இந்த ஒவ்வொரு ஓவியங்களையும் தனித்தனியாக பலமணிநேரம் செலவழித்துத்தான் பார்க்கவேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக அத்தனை ஓவியங்களையும் பார்த்துக்கொண்டே கடந்துசெல்வது ஒரு கனவுநிகர்த்த அனுபவம்.

பல்வேறு கோணங்களில் கலைமனங்கள் ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் முயன்றிருக்கின்றன. பல நவீன முயற்சிகளை ஒரே சொல்லில் கேனத்தனமானவை என்று சொல்லிவிடலாம். விபரீதமான காட்சி இணைப்புகள். சம்பந்தமில்லா பொருட்களை இணைத்து உருவாக்கிய அதிர்ச்சிதரும் பொருட்கள். ஆனால் கலை என்பது மனிதமனம் என்னும் அருவமான ஒன்றுக்கும் வெளியே பரந்து கிடக்கும் பருப்பொருள் என்ற உருவ வெளிக்கும் இடையேயான ஓர் ஊடாட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் மனம் என உணர்வது வெளியே உள்ள பருப்பொருட்கள் நம் அகமாக ஆகியிருப்பதைத்தான். நம் மனம் என்பது பருப்பொருட்களின் பிம்பங்கள் பலவகைகளில் முயங்கி உருவான ஒரு ஆழத்து வெளி.  ஆகவே வெளியே உள்ள பருப்பொருட்களை விதவிதமாக உருமாற்றுவதன்மூலம் ஒருவன் செய்வது தன் அகத்தை உருமாற்றுவதைத்தான். அகத்தை அறிவதற்கான முயற்சியிலேயே புறத்தே உள்ள பொருட்களை அறிய மனிதன் முயல்கிறான்- அதுவே கலை.

பிக்காஸோ காலியான வண்ணப்பெட்டி, தாள், பழைய குப்பைப்பொருட்கள் போன்றவற்றை இணைத்து விசித்திரமான கலைப்பொருட்களை உருவாக்கியிருந்தார்.  அதேபோல பிரரும் பல சிற்பங்களைச் செய்திருந்தார்கள். உலோகங்களில் செய்யப்பட்ட விதவிதமான கலைப்பொருட்கள். பழைய முயல்வேலியின் முட்கம்பிகளைச் சுருட்டிச் செய்யப்பட்டா சிற்பம். ஆணிகள்,ஸ்குரூக்களால் ஆன சிற்பம். பளபளக்கும் கண்ணாடியில் சொரசொரக்கும் கல்லில் மரத்தின் இயல்பான முடிச்சில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள். மனித மனத்தின் விசித்திரக் கனவுகள் பொருட்கள் வழியாக ஓடிச்சென்றதன் தடையங்கள் அவை.

ஆஸ்திரேலிய ஓவியர்கள் வரைந்த ஓவியப்பகுதியில் நெடுநேரம் செலவிட்டேன். அவர்களில் அதிகமானபேரும் மனப்பதிவிய பாணியில் நிலக்காட்சிகளைத்தான் வரைந்திருக்கிறார்கள். ஆச்திரேலியாவின் விரிந்த புல்வெளிகள், தூரத்தில் தொலைந்துபோய் கிடக்கும் வீடுகள், காலியான தெருக்கள், எரிந்து அணையும் அந்தி என ஒருவகை ‘ஆளில்லா நில’ த்தின் எழில். நவீன ஆஸ்திரேலிய ஓவியர்களில் ஒருசாரார் அதிர்ச்சியளிக்கும் பின் நவீனத்துவ பாணி ஓவியங்களை அதிகமும் வரைந்திருப்பதாகத் தெரிகிறது.

கீழைநாட்டுக் கலைச்செல்வங்கள் இருக்கும் பகுதியில் இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். ஆனால் விசித்திரமான ஒரு மனக்குழப்பம். இனிய மனக்குழப்பம் என்றும் சொல்ல வேண்டும். அதாவது சிலைகள் பெரும்பாலும் தெரிந்தவை, அவற்றின் முகபாவனைகளும் கைமுத்திரைகளும் மிக மிக அன்னியமானவை. தெரிந்த ஒருவர் தெரியாத மொழியில் பேசுவது போல ஒரு நிலை என அதைச் சொல்லலாம். பெரும்பாலான புத்தர் சிலைகள் பர்மா தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவை. சீன முகம். அத்துடன் கைமுத்திரைகளில் பல விசித்திரமாக இருந்தன. இருகைகளையும் அருள்புரியும் விதத்தில் விரித்த புத்தரை நான் பார்த்ததே இல்லை. ஆங்கோர்வாட், பாலி பகுதிகளைச் சேர்ந்த விஷ்ணு, அனுமார் சிலைகளின் முகங்களும் சரி நகைகளும் சரி மிக வித்தியாசமானவை. பல சிலைகளில் இருக்கும் சங்கு சக்கரத்தை வைத்துத்தான் அவற்றை விஷ்ணு என்று சொல்ல முடிந்தது.

அங்கே கண்ட ஒரு சிலை என்னை அதிரச்செய்தது. சிங்கமுகம் கொண்ட தேவி. ஆம், பிரத்யங்காரா தேவிதான். சசிகலாவும் கனிமொழியும் தேர்தல் வெற்றிக்காக ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்யும் தெய்வம். முதலாம் அதிராஜேந்திரன் இந்த தெய்வத்தை வடநாட்டில் இருந்து கொண்டுவந்ததாக ஐதீகம். தமிழ்நாட்டிலேயே பிரத்யங்காரா தேவி மிகக் குறைவாகவே கானக்கிடைக்கிறது. அனேகமாக கோயில் சுவர்களில் புடைப்புச் சிற்பமாக. ஏனென்றால் இந்த தெய்வம் ஒரு நன்மையளிக்கும் மூர்த்தி அல்ல. போர் வெற்றி மற்றும் பில்லிசூனியங்களுக்கான தெய்வம். சிலையிந் கீழ் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ” பிரத்யங்காரா தேவி. இது இந்துக்களின் ஒரு சிறு தெய்வம். லௌகீக வெற்றிக்காக மட்டுமே வணங்கப்பட்டு வருவது. போர் தெய்வமும் கூட” சரியாகத்தான் சொல்லியிருந்தார்கள். பன்னிரண்டாம் நூற்ராண்டு தென்னிந்தியா, சோழர்காலம் என்ற குறிப்பும் இருந்தது.

அந்த அரங்கின் எல்லையில் கிட்டத்தட்ட நடுநாயகமாக ஐந்தடி உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை இருந்தது. அற்புதமான ஒளியமைப்பு. தகதகவென செம்பொன்மேனி. எடுத்த பொற்பாதத்தின் நிழல் எதிர்ச்சுவரில் விழுந்திருந்தது. அங்கிருந்த எல்லா தெய்வங்களையும் ஆட்டுவிக்கும் இசையின் மூர்த்தி போல. அதன் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தேன். பொதுவாக வெளிநாட்டு கலைக்கூடங்களில் இந்து தெய்வங்களைச் சிறுமைப்படுத்தி எழுதப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இந்து தெய்வச்சிலைகளில் உள்ள தத்துவசாரம் அவர்களை தொல்லைப்படுத்துகிறது. இந்துக்கள் கல்லையும் மண்ணையும் வணங்கும் காட்டுமிராண்டிகள் என்ற அவர்களின் கோட்பாடும் நம்பிக்கையும் அச்சிலைகளால் அசைக்கபப்டுகின்றன

ஆகவே பொதுவாக சிலைகளை அவர்கள் ‘பொருள் வழிபாடு’ [Fetish ]என்னும் எளிமையான வகைப்பாட்டுக்குள் நிறுத்திக்கொள்ளவே முயல்வார்கள். பொருள்வழிபாட்டுக்காகச் செய்யபப்ட்ட ஒரு நுண்மையான பொருள் என்பதே அவர்களின் புரித்லாக இருக்கும். அதை கலை என்றோ ஞானம் என்றோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதன் பிரபஞ்சவியல் அர்த்தத்தை பொருட்படுத்தவே மாட்டார்கள். சமீபகாலமாக சில அற்பர்கள் சமூகவியல் , மானுடவியல் என்னும் பெயர்களில் கீழை தெய்வங்க¨ளை சிறுமைசெய்வதை ஆராய்ச்சி என்னும் பேரில் செய்து வருகிறார்கள். லண்டன் கலைக்கூடத்தில் பிள்ளையாரை வைத்து அதன் கீழே அது ஒரு காமம்சார்ந்த சிற்பம் என்றும் அவரது துதிக்கை ஆண்குறியின் வடிவம் என்றும் அது மோதகத்தை நாடுவது பெண்குறியை தேடுவதைக் காட்டுகிரது என்றும் எழுதப்பட்டிருந்ததாக அறிந்தேன்

கன்பெரா நடராஜர் சிலையின் கீழே எழுதப்பட்டிருந்த வரிகள் என்னைக் கவர்ந்தன். ‘பிரபஞ்சத்தை ஒரு நடனமாகவே இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் நினைக்கிறார்கள். அந்த நடனத்தையே இந்த இறைவடிவமாக செதுக்கியிருக்கிறார்கள். பிரபஞ்சத்தை ஆக்கி காத்து அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானின் நடனம் இது. இந்தச்சிலையைச் சுற்றியிருக்கும் தழல்வடிவம் பிரபஞ்சத்தின் ஒளிவடிவத்தைச் சுட்டுகிறது. கையில் உள்ள உடுக்கு பிரபஞ்ச சுழற்சியின் தாளத்தையும் இன்னொரு கையில் உள்ள தழல் ஆற்றல். அவர் மிதித்து நிற்கும் முயலகன் இருளின் குறியீடு….”என கச்சிதமான சொற்களில் அழகிய குறிப்பு. ஆச்சரியமாக இருந்தது. தென்னிந்தியா, பத்தாம் நூற்றாண்டு என்ற காலக்குறிப்பும் சோழர்காலத்தையது என்ற விவரிப்பும் இருந்தது.

அந்தக்கலைக்கூடத்தில் வெளியேறும் வழியில் தியானத்தில் அமர்ந்த புத்தரின் சிலையை கண்டேன். பெரிய சிலை. தாய்லாந்தைச் சேர்ந்தது.சற்றே சேதமடைந்திருந்தது. நடராஜர் சிலைக்கு இன்னொரு பக்கம். அது நடனம் , இது தியானம்

வெளியே வந்தோம். குளிர் ஆரம்பித்திருந்தது. அங்கே வானத்தில் ஒரு கோளம் நிற்பது போல ஒரு சிற்பம் இருந்தது. அது ஒரு வெறும் வேடிக்கை என்றுதான் எனக்குப் பட்டது. அந்தக் கலைக்கூடத்தின் வடிவமைப்பை ஏதோ ஒரு பின் நவீனத்துவச் சிற்பி செய்திருந்தார். அபத்தமான ஒரு பெரிய நீட்சி. அலுமினியத்தில் செய்யப்பட்ட ஒரு கூரை நீண்டு வளைந்து முன்னால் வந்து நின்றது. கவனத்தைக் கவரவேண்டும் என்பதல்லாமல் வேறு நோக்க்கமே இல்லாத மடத்தனமான அமைப்பு.

மழை சற்றே தூற ஆரம்பித்திருந்தது. அந்த கட்டிடத்தின் முன்னால் பலவகையான வேடிக்கையான கலைப்பொருட்கள் இருந்தன. நம்மை உருளையாகவும் கூர்மையாகவும் பிரதிபலிக்கும் எவர்சில்வர் பொருட்கள். அவற்றின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் பயணிகள். தரையில் செய்யபப்ட்ட ஒரு அலங்கார வளைப்பில்  ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் வீடு என எழுதியிருந்தது, தமிழிலும். வெளியே வரும் வழியில் ஓர் அலங்காரக்குளத்தில் ஏராளமான தலைகள் மிதப்பது போன்ர ஒரு சிற்பம் இருந்தது. விசித்திரமான மனக்கலைவை உருவாக்கியது அந்தச் சிற்பம்.

செவ்வியல்கலை நம் மனதைக் குவியச்செய்கிறது. நவீனக்கலை மனதைக் கலைக்கிறது. நம்மை சிதைத்து விடுகிறது. அதற்கான காரனங்கள் பல இருக்கலாம். அதன் மூலம் அடையும் பண்பாட்டு நகர்வு முக்கியமானதென்றே நான் எண்ணுகிறேன். ஆனால் நான் செவ்வியல் கலைகளிலேயே என்னை வெல்லும் மேன்மையைக் கண்டடைகிரேன். எல்லா நவீனக்கலைஞர்களையும் நான் என்னைவிடச் சாதாரணமானவர்களாக, நான் குனிந்து பார்க்கவேண்டியவர்களாகவே காண்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் செவ்வியல்நிலத்தில் முளைத்தவன் நான்

 

கலைக்கூடத்து வாசல்

 

தேவ கழுதை

ரோடினின் சிலை

 

முந்தைய கட்டுரைகுப்பத்துமொழி
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா:கடிதங்கள்