அன்புள்ள ஜெ,
நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் பெரியாரை மட்டும் எப்போதும் எதிர்த்தே எழுதுகிறீர்கள்? இதை விளக்கமுடியுமா?
செம்மணி அருணாச்சலம்
அன்புள்ள செம்மணி அருணாச்சலம்,
நீங்கள் தொடர்ந்து என் கருத்துக்களை வாசிப்பவர், நாம் ஓர் உரையாடலில் இருக்கிறோம். ஈவேரா பற்றி நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்காவது ஈவேரா அவர்களைப் பற்றி அவமதிப்பாக எதையாவது சொல்லியிருக்கிறேனா? எங்காவது அவரது வரலாற்றுப்பாத்திரத்தை அல்லது அவர் தமிழ்ச்சமூகத்துக்கு அளித்த சேவையைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறேனா? நான் ஒரு முறைகூட அவரைப்பற்றிய மதிப்பையும் அவரது பங்களிப்பையும் பற்றிய ஒரு குறிப்பு இல்லாமல் அவரை விமரிசித்ததில்லை.
ஆனாலும் விமர்சனங்களே அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கான காரணத்தை நம்முடைய பெரியாரியர்களிடம்தான் நீங்கள் பார்க்கவேண்டும். ஸ்மார்த்த பிராமணர்கள் எப்படி சந்திரசேகர சரஸ்வதி அவர்களை முனிவர் என்றும் ஞானி என்றும் மனித தெய்வம் என்றும் அற்புதங்கள் நிகழ்த்தியவர் என்றும் சொல்கிறார்களோ அதே மனநிலைதான் பெரியாரியர்களிடமும் உள்ளது. அவர்கள் ஈவேரா அவர்களை தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்றும் தமிழக வரலாற்றின் தலைசிறந்த சீர்திருத்தவாதி என்றும் தமிழக முற்போக்கு அரசியலின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.
சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஞானி அல்லது மகான் என்று ஒருவர் சொல்வது அவரது சொந்தச் சாதிப்பிடிப்பினால். அதற்குமேல் அந்தக் கூற்றுக்கு மதிப்பேதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையான தீவிரத்துடன் சந்திரசேகர சரஸ்வதி பிராமணர்களின் ஆசாரங்களை வலியுறுத்தியதனால் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்கமுடியாத, அதேசமயம் வைதிகர் என்ற இடத்தையும் விரும்பக்கூடிய லௌகீக பிராமணர்களால் ஒரு போர்த்தந்திரமாகவே சந்திரசேகர சரஸ்வதி ஒரு ஞானி என்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
வைதிகரல்லாத ஒருவர் உண்மையிலேயே அப்படிச் சொன்னாரென்றால் ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார், நாராயணகுரு போன்றவர்களிடமிருக்கும் அனுபூநிநிலையை சுட்டிக்காட்டி அந்த கடந்த நிலை ஒருபோதும் ஆசாரவாதிகளுக்குக் கைகூடுவதில்லை, அவர்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்பேன். அவர்களின் நூல்களையும் தனிவாழ்க்கையையும் சுட்டிக்காட்டுவேன்.
ஆனால் பெரியாரியர்கள் ஈவேரா அவர்களைத் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்று சொல்வது மட்டுமல்ல அதை ஒரு அதி உக்கிரமான பிரச்சாரமாகவே சொல்லி சூழலில் நிலைநாட்டி வருகிறார்கள். அவர் இல்லாவிட்டால் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் மாடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற ஒற்றைவரியை எந்த வரலாற்றுப்பிரக்ஞையும் இல்லாமல் சொல்லி நிறுத்தி வருகிறார்கள். அதன் விளைவாக தமிழகத்தின் தலித் அரசியல் முன்னோடிகளை,தொழிற்சங்க முன்னோடிகளை,சீர்திருத்த முன்னோடிகளை இருட்டில் தள்ளுகிறார்கள்.
இந்நிலையில் ஈவேரா அவர்களின் உண்மையான மதிப்பைச் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஈவேரா அவர்கள் தமிழ்ப்பண்பாட்டின் மிகமுக்கியமான சமூக சீர்திருத்தவாதி என்பதில் ஐயமில்லை. தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் அவருடைய பங்கு மறுக்கமுடியாதது. ஆனால் அவரை அசல்சிந்தனையாளர் என்று சொல்வது சிந்தனை என்றால் என்ன என்றே தெரியாத நிலைக்கே கொண்டுசெல்லும். அவருடைய பேச்சும் எழுத்தும் சிந்தனையாளனுக்குரியதல்ல.
ஈவேரா அவர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் செவிவழியாக பொதுவாகப் புரிந்துகொள்ளும் கிராமிய அணுகுமுறையாகவே இருந்தது. அவர் மிகச்சிக்கலான இந்தியப்பண்பாட்டுப் பின்னலை, மதச்சிந்தனைகளை, இந்தியவரலாற்றின் நெடுங்காலப்பரிணாமத்தை அறிய எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. மிகப்பொத்தாம்பொதுவாக முரட்டுத்தனமாக அதை அணுகி அதன்மூலம் பெற்ற முடிவுகளை ஓங்கிச் சொன்னார்.
ஈவேரா அவர்களுக்கு முன்னாலும் அவரது சமகாலத்திலும் இந்தியச் சமூகத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்ந்த சிந்தனையாளர்கள் பலர் உண்டு. அவர்களை நோக்கிச் செல்லத் தடையாக இருப்பது ஈவேரா அவர்களைப்பற்றி உருவாக்கப்படும் இந்த மிகை மதிப்பீடுதான்.
ஈவேரா அவர்களின் கருத்துவெளிப்பாட்டுமுறை என்பது கருத்துப்பூசல் சார்ந்தது. சொல்லப்போனால் ‘கன்னாபின்னாவென்று’ வசைபாடுவது அது. அது நம்முடைய கிராமத்துப் பெரியவர்களிடம் உள்ளது. வசைபாடுவது என்பதே ஒரு சாதாரணத் தமிழ் மனநிலை. எங்காவது எவரையாவது யாராவது ஒருவர் வசைபாடுவதை நாம் தமிழகத்தில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்தக் காரணத்தால்தான் ஈவேரா அதிகமாக ரசிக்கப்பட்டார், படுகிறார். ஆனால் அது சிந்தனையாளனின் வழி அல்ல. இக்காரணத்தால்தான் அவரை அவர் காலத்துச் சிந்தனையாளர்கள் எவரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் ஒரு விவாதமே சாத்தியமல்ல.
ஈவேரா அவர்களின் இந்த பொத்தாம்பொது பார்வையும் முரட்டு வெளிப்பாடும் தமிழில் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஏனென்றால் இது பின்பற்ற எளிதானது. எந்த அறிவார்ந்த உழைப்பையும் கோராதது. அதேசமயம் சிந்தனையாளராக செயல்படுகிறோம் என்ற நிறைவையும் அளிப்பது. ஒருவர் அம்பேத்கரையோ இ.எம்.எஸ்ஸையோ பின்பற்றினால் எதை எதிர்க்கிறோமோ அதையே ஆழமாகக் கற்கவேண்டும் என்ற கட்டாயத்தை அடைவார். ஈவேரா அவர்களைப் பின்பற்றினால் தீவிரமாக வசைபாடினால் மட்டும் போதும். தமிழகத்தில் தலித்தியரும் மார்க்ஸியரும்கூட ஈவேராவின் அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான காரணம் இதுவே.
ஆகவேதான் ஈவேரா அவர்களை விமர்சித்தாகவேண்டியிருக்கிறது. அவரது வழிமுறைகள் ஒரு சிந்திக்கும் சமூகத்துக்கு உரியன அல்ல என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய பங்களிப்பை ஏற்றபடியே அதைச் சொல்லியாகவேண்டும். சொல்லப்போனால் ஈவேரா அவர்களிடம் எனக்கிருக்கும் ஒரே விமர்சனம் இது மட்டும்தான். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.
ஈவேரா அவர்களின் வைதிக எதிர்ப்பு எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்பதை என் எழுத்துக்களைப் பார்க்கும் எவரும் அறிந்துகொள்ளலாம். இந்திய ஞானமரபுக்குள் உள்ள அவைதிகப்போக்குகளை அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நான் பல்லாண்டுக்காலமாக எழுதி வருகிறேன். ஈவேரா அவர்களின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் அனேகமாக அனைத்திலுமே எனக்கு உடன்பாடுதான் உள்ளது. நேர்மாறாக சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் சமூகக் கருத்துக்களில் எவற்றுடனும் உடன்பாடு இல்லை.
ஆனால் நான் ஈவேரா அவர்களை விமர்சிப்பது அவர் சிந்தனையாளராக எனக்கு எதையுமே அளிக்கவில்லை என்பதைக்கொண்டுதான். கிட்டத்தட்ட அவரது அதே தரப்பை எடுத்த அம்பேத்கரின் ஒவ்வொரு பக்கமும் என்னை வளரச்செய்கிறது. இ.எம்.எஸ்ஸும் கெ.தாமோதரனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவும் ராகுல்ஜியும் எனக்குக் கற்பிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் விமர்சனம் அதற்காகவே.
ஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு. அவரது செயல்பாடுகளில் காந்தியவாதிகளுக்கு நிகரான அர்ப்பணிப்பு எப்போதும் இருந்துள்ளது. நான் எப்போதும் அவரை காந்தி அல்லாத இன்னொருவரிடம் ஒப்பிட்டதில்லை. ஈவேரா அவர்களை என்னுடைய குருமரபு தங்கள் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணி வந்திருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நான் ஈவேரா அவர்களை வைத்திருப்பதும் அந்த இடத்தில்தான்.
ஏற்கனவே நான் சொல்லியதுதான் இது. இன்று நான் ஈவேராவைச் சந்தித்தால் என் ஆசிரியரின் ஆசிரியராக அவரை எண்ணி முதலில் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவேன். அதன்பின்னர் அவரிடம் அவரைப்பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து பேசுவேன். அவரைப்பற்றி நான் அறிந்தவரையில் அவர் என்னை முழுமனதுடன் ஆசியளிக்கவும் நான் சொல்லும் எல்லா விமர்சனங்களையும் கேட்கவும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.
பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை நிலைநாட்டும் அரசியல் நோக்குடன் உருவாக்கும் மிகைகளையும் வரலாற்றுத்திரிபுகளையும்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். வைக்கம் போராட்டம் ஓர் உதாரணம். இந்தத் திரிபுகள் மூலம் அவர்கள் உண்மையான போராளிகள் பலரை மறைக்கிறார்கள் என்பதே என்னுடைய விமர்சனம். பக்தர்களால் வரலாறு திரிபு செய்யப்படுவதென்பது இங்கே சாதாரணம். சந்திரசேகர சரஸ்வதி அவர்களுக்கும் காந்திக்குமான சந்திப்பின் வரலாறு திரிக்கப்பட்டது போல. இரண்டையுமே மறுத்து நானறிந்த உண்மையைச் சொல்கிறேன்.
சந்திசேகர சரஸ்வதி அவர்கள் ஒரு மடத்தாலும் அதைச்சேர்ந்தவர்களாலும் ஊடகத்தில் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் ஈவேரா அவர்களுக்கு ஐம்பதாண்டுக்கும் மேலாக பிரம்மாண்டமான அரசு ஆதரவு உள்ளது. சந்திரசேகர சரஸ்வதி அவர்களைத் தமிழில் எவரும் விமர்சிக்கலாம். பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை விமர்சனத்துக்கே அப்பாற்பட்டவராக நினைக்கிறார்கள். ஈவேரா அவர்களின் பெயரைச் சொல்வதே அவமதிப்பு என்னும் கெடுபிடிநிலையை உருவாக்குகிறார்கள். அம்மனநிலையில்தான் ஈவேரா பற்றி நான் சொல்லும் சாதாரணமான விமர்சனங்களும் வரலாற்றுத்தகவல்களும் எல்லாம் பெரும் தாக்குதல்களாகக் கொள்ளப்படுகின்றன.
நடுநிலையாளர்கள் சிலர் தவிர எவரும் என்னுடைய தரப்பைப் புரிந்துகொள்ளப்போவதில்லை என நான் அறிவேன். சந்திரசேகர சரஸ்வதி பற்றிய கட்டுரையை ஆசார பிராமணர்கள் அவர்களின் ‘மகாப்பெரியவா’ பற்றிய கடும் விமர்சனமாகவே பார்ப்பார்கள். பெரியாரியர்களுக்கு அது ‘சங்கராச்சாரி’யைப் பாராட்டும் கட்டுரையாகத் தெரியும். என்னுடைய ஈவேரா விமர்சனங்கள் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டவை என ஆசாரபிராமணர்கள் நினைக்கிறார்கள். பெரியாரியர்கள் அவற்றை வசைபாடல்களாக எண்ணுகிறார்கள்.
இரண்டுநாட்களுக்கு முன்னால் ஒருவர் ஈவேரா அவர்கள் மணியம்மையை மணந்துகொண்டதைப்பற்றிக் கடுமையான விமர்சனம் முன்வைத்து அதனடிப்படையில் ஈவேரா அவர்களை மதிப்பிட்டார். நான் சொன்னேன் ‘உங்களுக்கு ஒரு சுயநலமில்லாத உக்கிரமான சீர்திருத்தவாதி ஒருவர் தேவை என்றால் நீங்கள் அவரது மிகைநடத்தைகளையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்.’ அவர் உடனே என்னை ஒரு பெரியாரியர் என வசைபாட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கே சந்தேகமாகிவிட்டது, நான் யார் என்று. இதை எழுதி அதை நானே தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
ஜெ