அன்புள்ள ஜெ.எம்.,
நான் நீண்டநாட்களாக தமிழ் வார இதழ்களை வாசிப்பவன். என்னுடைய குடும்பத்திலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களை சின்னவயசு முதலே வாசிப்போம். அந்த இதழ்கள் வழியாக எனக்கெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. காந்திக்கும் சந்திரசேகரருக்கும் நடந்த சந்திப்பைப் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்ததும் என்னுடைய நம்பிக்கையிலே அடி விழுந்தது. எனக்கு பெரிய மனச்சோர்வு. நீங்கள் சொல்வது உண்மை. தீண்டாமையைக் கடைப்பிடித்த ஒருவரை எப்படி மகான் என்று சொல்லமுடியும்? இந்த உண்மைகளை நாம் அறியாமலே விட்டுவிட்டோமே என்று வருந்தினேன். காஞ்சி சங்கராச்சாரியார் நிறைய அருட்பணிகளை செய்திருக்கிறார் என்கிறார்களே. எனக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. என்னுடைய மதிப்பை நான் இழந்துவிட்டேன். ஆனால் அதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.
மு.பழனிச்சாமி
அன்புள்ள பழனிச்சாமி,
நான் எந்த ஒரு விஷயத்திலும் கருத்துக்களைக் கூடுமானவரை சமநிலையுடன் சொல்லவே முயல்கிறேன். ஒவ்வொன்றும் அதற்கான முரண்பட்ட நியாயங்களுடன் இயங்குகின்றன என்பதே என்னுடைய தரப்பு. இதைத்தான் நான் கருத்துக்களின் முரணியக்கம் என்கிறேன். என்னிடம் எப்போதுமே ‘ரெண்டிலே ஒண்ணைச்சொல்லு’ என்கிறார்கள். ‘சரி நீ எந்தப்பக்கம், அதைச்சொல்லு’ என்கிறார்கள். பலசமயம் ‘சொல்ல மாட்டேன் போ’ என்கிறேன். உடனே ‘அப்ப நீ என்ன சொன்னாலும் நீ சொல்வது இதுதான்…நீ இன்னார்தான்’ என்கிறார்கள். இந்த வம்பிலேயே என் சொற்கள் நீண்டு நீண்டு செல்கின்றன.
என்னைப்பொறுத்தவரை காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் எந்த வகையிலும் வெறுக்கப்படவேண்டியவர் அல்ல. அவர் மீது எனக்கு மதிப்புண்டு. அதை எழுதியும் இருக்கிறேன். உடனே அவரது ஆசாரவாதம் எனக்கு ஏற்புள்ளதா என்று கேட்பீர்கள். இல்லை நான் அதை எதிர்க்கிறேன். எவ்வகையிலும் ஏற்க மாட்டேன். ஆனால் அவரது ஒட்டுமொத்த ஆளுமையின் பகுதியாகவே அதை நான் பார்க்கிறேன். அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடும்போது அதையும் நான் கருத்தில்கொள்வேன்.
சந்திரசேகர சரஸ்வதி அவர்களைப் பலவகையில் காந்தியுடன் ஒப்பிடலாம். அவர்கள் கண்ணாடிப்பிம்பம் போல எதிரெதிர் நிலைகளில் சமானமானவர்கள். அவரும் காந்தியைப்போல அப்பட்டமானவர். அவரும் காந்தியைப்போலவே சுயநலமற்ற கர்மயோகி. அவருக்கான களம் எதுவோ அதில் ஒவ்வொரு கணமும் முற்றிலும் முழுமையுடன் வாழ்ந்து மறைந்தார். அவர் நம்பிய எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. அந்தக் களத்தில் உள்ள குறைபாடுகளுக்கும் பிழைகளுக்கும் அப்பால் அந்த வாழ்க்கையின் முழுமையை நாம் கருத்தில்கொண்டே ஆகவேண்டும்.
இந்தியாவின் நவீனகாலகட்டத்தில் பெரும்பாலும் அனைவருமே கருத்துக்களை நாசூக்காகச் சொல்லவும், சங்கடகரமான சொந்தக்கருத்துக்களை அந்தரங்கமாக வைத்துக்கொள்ளவும் பழகிக்கொண்டார்கள். அதுவே பொருத்தமான நடத்தை என நம்மால் இன்று ஏற்றுக்கொள்ளவும் பட்டிருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் சாதி, ஆசாரங்கள் பற்றி உள்ளூர என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என நாம் ஊகிக்கவே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க அது தெரியவரும்.
அப்படி நெருங்கி அறியும்போது காணக்கிடைக்கும் சித்திரம் எப்போதுமே அதிர்ச்சி அளிப்பது. மிகப்பெரும்பாலானவர்களுக்கு சாதி பற்றி மிகப்பழைமையான எண்ணங்களே உள்ளன எனக் காண்போம். அவை அவர்களின் பெற்றோர்களால் அளிக்கப்பட்டவையாக இருக்கும். அந்த நம்பிக்கைகளை வெளியே கொண்டுவந்து ஒரு விவாதத்துக்குத் தயாராகவோ, மறுபரிசீலனை செய்யவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. அந்த நம்பிக்கை உள்ளூர காற்றுப்படாமல் புழுங்கி நொதித்து நாறிக்கொண்டிருக்கும்.
நாம் அறிந்த பல சீர்திருத்தச் செம்மல்கள், முற்போக்குத்தோழர்கள், பகுத்தறிவுப் பகலவன்களின் அந்தரங்கம் சந்திரசேகரர் சொன்ன தரப்பில் இருந்து அதிகம் மாறுபட்டது அல்ல. இரண்டாவது ‘லார்ஜு’க்குப்பின்னர் பலர் தலித்துக்களைப்பற்றிப் பேச ஆரம்பிக்கும்போது புறங்கழுத்தில் படார் படாரென அடிவிழும் உணர்வை நான் அடைந்திருக்கிறேன். நம் சூழலில் சந்திரசேகர சரஸ்வதி சொல்லிய கருத்துக்கு அத்தனை தூரம் எதிர்க்கருத்து இருந்திருந்தால் என் தலித் நண்பர்கள் அவர்கள் சொந்தவாழ்க்கையில் சந்தித்த எந்த அவமானத்தையும் அடைந்திருக்க வேண்டியதில்லை.
சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஐம்பதாண்டுக்காலம் வசைபாடியவர்கள் பலர் அவரளவுக்கே சாதியப் பிடிப்பு கொண்டவர்கள் என்பதே உண்மை. நான் பல முக்கியமான மனிதர்களுடன் உரையாடும்தோறும் இந்த அந்தரங்கங்களை மேலும் மேலும் அறிகிறேன். ஆகவே இன்று எனக்கு ஆரம்ப கால அதிர்ச்சிகள் இல்லை. இதனால் ஒருவர் பொதுவெளியில் என்னதான் முற்போக்கும் சமத்துவமும் பேசினாலும் அதை ஒரு பாவனையாகவே காண்பேன். அவரது தனிவாழ்க்கையை வைத்தே அவரை மதிப்பிடுவேன்.
கருத்துக்களைப்பார், தனிவாழ்க்கையைப்பார்க்காதே என்று அதற்கு பதில்கூச்சல் போடுவார்கள். நான் அதை நம்பவில்லை. காரணம், பெரும்பாலான தருணங்களில் அந்தரங்கத்தை ஒளித்துக்கொள்ளவே அதி தீவிரமான பாவனைசெய்யப்படுகிறது.எனக்குத் தனிவாழ்க்கையே முக்கியம். என் தனிவாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் எவரும் பரிசீலனை செய்யலாம் என்பதே என் தரப்பு பதில்.
இச்சூழலில் ஒருவர் தான் யாரோ அதை எவ்வகை பசப்பும் இல்லாமல் அப்பட்டமாக முன்வைப்பது என்பது அபாரமான துணிவுள்ள ஒருசெயலே. அது எத்தகைய பிற்போக்குத்தனமாக இருந்தாலும் சரி. அந்த நேர்மை அந்த ஆளுமையின் ஒரு முக்கியமான சிறப்பியல்பு என்றே நான் எடுத்துக்கொள்வேன்.
சந்திரசேகர சரஸ்வதி மிகப்பழைமையான ஒரு ஆசாரவாதத்தின் பிரதிநிநி. ஆசாரவாதத்தை அசையாமல் காக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவர். அப்படி தலைமை வகிப்பதற்காகவே சிறுவயதில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதற்கான பயிற்சிகளை மட்டுமே பெற்றவர். அதற்கு அப்பால் உலகப்பழக்கமோ நவீனசிந்தனைகளுடன் அறிமுகமோ இல்லாதவர். அவருக்குக் கிடைத்த களம் அது. அவரது கர்மரங்கம் அது. அதில் அவர் ஒருநூற்றாண்டுக்காலம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்.
அந்தக் கர்மத்தை அவர் யோகமாகவே செய்திருக்கிறார். அவரது நீண்ட வாழ்க்கையில் அவரது முதல் எதிரிகள்கூட அவரது ஒழுக்கம் மீது சந்தேகம் கொண்டதில்லை. இத்தனை வருடங்களில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது நேர்மை ஐயத்துக்கு உள்ளாக்கப்பட்டதில்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள் புழங்கிய ஓர் அமைப்பின் தலைவராக இருந்த அவர், பெரும்செல்வர்களால் வணங்கப்பட்ட அவர், நடுத்தெருவில் தூங்கும் துறவியின் வாழ்க்கையையே வாழ்ந்தார். எந்த சுகபோகமும் அவரைக் கவரவில்லை. அவருக்கு சொல்லப்பட்ட வாழ்க்கைக்கான ஆசாரங்கள், நெறிகள், விதிமுறைகள் எதையும் எப்போதும் மீறவில்லை.
அந்த அமைப்பின் தலைவரிடம் நம்முடைய மரபு எந்த பரந்த சாஸ்திர ஞானத்தை எதிர்பார்க்குமோ அது அவரிடமிருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் இந்து மரபின் ஞானமும் கர்மமும் கலந்த ஒட்டுமொத்தத்தை அவர் சலிக்காமல் பிரச்சாரம் செய்திருக்கிறார். நான் எப்போதும் வாசிக்கும் நூல்களில் ஒன்று அவரது தெய்வத்தின்குரல். இந்துப்பண்பாட்டின் புராணமரபை, காவிய மரபை, சிற்பமரபை, சோதிட மரபை, வாழ்க்கைச்சடங்குகளை அவரளவுக்குக் கற்றுத்தெளிந்த பேரறிஞர்கள் மிக அபூர்வம். உண்மையான ஆர்வம் கொண்ட ஒருவருக்கு அந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவனை வெட்டித்திறக்கும் மின்னல்கள் வெளிப்படும்.
நான் கல்கியில் ஒருமுறை அவரது ஒற்றைப்பத்தி ஒன்றை வாசித்தேன். மீனாட்சி என்றால் என்ன என்று சொல்கிறார். மீன்விழி என்றால் மீனின் விளிம்புவடிவம்போல கண்ணுடையவள் என்றுதான் பொருள் சொல்கிறார்கள், அதைவிட முக்கியமான பொருள் உண்டு என்கிறார். மீன் கண்களை இமைப்பதில்லை. இறைவியும் இமையாவிழிகொண்டவள் என்பதனால்தான் அவளுக்கு மீனாட்சி என்று பெயர். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னை ஒரு கணமேனும் கண்மூடுவதில்லை. கண்ணை மூடினால் அவள் அகக்கண் பலமடங்கு கூர்மையுடன் திறந்திருக்கும். இந்தப்பிரபஞ்சம் சக்தியின் மடியில் கிடக்கும் கைக்குழந்தை– என்று அவர் சொல்லியிருந்தார்.
மின்னதிர்ச்சி பட்டதுபோல அன்று அந்த வரிகளை அறிந்தேன். மதுரைக்குப்போய் அம்மன் முன் நின்றபோது தமிழ்ப்பண்பாட்டின் கண்ணும் கருத்தும் எட்டா அடியாழத்தில் இருந்து வந்த அந்தப்பெரும்படிமம் என்னை கண்கலங்கிச் சிலிர்க்கச்செய்தது. அது அவரது சொந்த ஞானம் அல்ல, மரபின் ஞானம். ஆனால் அதைச் சொல்ல அவர் மட்டுமே இருந்தார். அந்த வரிகள் வழியாக என்னுடைய படைப்பு மனம் சென்ற தூரம் அதிகம். கொற்றவை நாவல் வரை அந்தப்பயணம் என்னைக் கொண்டு வந்து சேர்த்தது. அதுவே அவரது பணி. அதைச்சொல்பவர் என்பதே அவரது இடம்.
இந்தியாவில் எப்படியும் இருநூறு பாரம்பரிய மடங்களாவது இருக்கும். தமிழகத்தில் முக்கியமான பாரம்பரிய மடங்கள் பத்துக்குமேல் உள்ளன. இவற்றில் வெறெந்த மடாதிபதியும் தனக்கு அளிக்கப்பட்ட கர்மரங்கத்தில் இந்த அர்ப்பணிப்பைக் காட்டவில்லை. எவரும் அந்த வாழ்க்கையை ஒரு கர்மயோகமாக வாழ்ந்து முழுமைசெய்யவில்லை. நேர்மாறாக அதை வெறும் அதிகாரமாக மட்டுமே பார்த்தனர். துறவிகளாக அல்ல, மன்னர்களாகவே வாழ்ந்து மறைந்தனர்.
நாம் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை விவேகானந்தருடனும் காந்தியுடனும் ஒப்பிடலாகாது. அவர் ஏவப்பட்ட இவ்வுலகப்பணி [அதற்கான சொல் ‘நியோகம்’] அது அல்ல. அவருக்குக் கிடைத்த ‘வேடம்’ ஆசாரமான ஒரு அமைப்பின் ஆசாரமான தலைவர் என்பதே. அதை அவர் முழுமைசெய்தார். அவரை அந்தப்பணியை செய்த பிறருடன் மட்டுமே ஒப்பிடவேண்டும். அது அவரை யார் என்று காட்டும்.
அந்நிலையில் அவர் பணியாற்றிய அந்த அமைப்பு தேவையா என்பதுதான் முதல் வினாவாக எழும். இந்தியப் புரோகிதமரபு என்பது வேதகாலம் முதலே இருந்து வரக்கூடியது. எப்போதுமே அது ஆசாரவாதத்தின் குரல்தான். எப்போதுமே அது மாற்றமில்லாத தன்மைக்காக வாதாடி வந்திருக்கிறது. எல்லா மாற்றங்களுக்கு எதிராகவும் அதிஉக்கிரமாகப் போராடி வந்திருக்கிறது. புரோகிதசிந்தனையான பூர்வமீமாம்சை என்பது இந்தியாவின் எல்லா ஞானமரபுகளுக்கும் ஒரு எதிர்த்தரப்பு. இந்தியாவின் எல்லா சிந்தனைப்பாய்ச்சல்களும் அந்தப் புரோகித மரபுடன் முரண்பட்டு போராடித்தான் முன்னகர்ந்திருக்கின்றன. கபிலர் முதல் நாராயணகுரு வரை.புத்தர் முதல் விவேகானந்தர் வரை.
அப்படியென்றால் அந்த ஆசாரவாதத்தின் தரப்பு எதற்கு? அது அழியலாமே? நான் ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் கருத்துக்களின் முரணியக்கத்தை நம்பக்கூடியவன். புரோகிதர்களின் ஆசாரவாதம் இந்து மரபின் நிலைச்சக்தி. எந்த ஒரு மதத்திலும், அரசியல்கோட்பாட்டிலும் கொள்கையிலும் அப்படி நிலைச்சக்தி என ஒன்று இருக்கும். அதுவே அந்த மரபை உறுதியாக காலத்தில் நிலைநாட்டுகிறது. அதை எதிர்த்துத்தான் அந்த மரபின் எல்லா வளர்ச்சிகளும் நிகழ்கின்றன.
மாற்றத்தின் காலகட்டத்தில் நின்று பார்க்கையில் மாற்றங்களுக்கு எதிராக நிலைகொள்ளும் நிலைச்சக்தி ஓர் எதிர்மறை இருப்பாகவே தோன்றுகிறது. எல்லா வளர்ச்சிகளும் அந்த நிலைச்சக்தியுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. முழுச்சக்தியுடன் அதை உடைக்க முயல்கின்றன. அந்த எதிர்ப்பு பலசமயம் வெறுப்பாக மாறுகிறது. நான் நம்பும் இந்துஞான மரபு என்பது புரோகித மரபுக்கு முற்றிலும் எதிரானது. புரோகித மரபின் ஒரு சிந்தனையைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருப்பது. நூற்றாண்டுகளாக அதை உடைத்துக்கொண்டே இருப்பது.
ஆனால் நிலைச்சக்தியின் தேவை என்ன என்பது அந்த ஒட்டுமொத்த மரபே அழியக்கூடிய வாய்ப்பு வரும் காலங்களில் மட்டுமே தெரியவரும். இந்தியப் புரோகிதவர்க்கம் இல்லை என்றால் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இந்து மரபு அழிந்திருக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை. வேதாந்திகளும் தர்மகர்த்தாக்களும் அல்ல, ஆயுதங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச்சென்று நின்று கூட்டம்கூட்டமாக உயிர்துறந்த புரோகிதவர்க்கமே இந்து ஆலயங்களை அழியாமல் நிலைநிறுத்தியது.
பெரும்பாலான நேரங்களில் அப்பாவிகளின் கூட்டத்தற்கொலையே ஆக்ரமிப்பாளர்களை பின்வாங்கச்செய்திருக்கிறது. கோயிலின் மூலச்சிலைகளை தூக்கிக்கொண்டு நாடுநாடாக ஓடியது அவர்கள்தான். செல்வங்களைப் புதைத்துவைத்துக்கொண்டு காடுகளில் காத்துக்கிடந்ததும் அவர்களே.மீனாட்சியும் அரங்கனும் அண்ணாமலையும் எல்லாம் அவர்கள் தோள்களில் ஏறிச்சென்றே நாடோடிகளானார்கள், பின்பு மீண்டு வந்தனர்.
நூற்றாண்டுகளாக பிடிவாதமாக அழிவுக்கு எதிராகப் போராடியது இந்துமதத்தின் நிலைச்சக்தியான பிராமண ஆற்றல். உலகவரலாறில் இதற்கிணையான ஒரு பெருநிகழ்வு உண்டா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பத் திரும்ப ஆலயங்களைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் மீண்டும் இந்து மதத்தின் குறியீடுகளை அழியாமல் பேணினார்கள். நூல்களை நினைவிலும் வாய்மொழி மரபிலும் தக்கவைத்துக்கொண்டார்கள்.
பல கோயில்களை வெறும் கருத்துவடிவில் நீடிக்க வைத்தார்கள். பல ஊர்களில் முந்நூறு வருடம் கோயில் இருந்த இடத்தில் ஒரு கல்கூட மிஞ்சாத வெற்று நிலத்தில் அக்கோயிலின் நினைவை பூஜைசெய்தும் தொன்மத்தை சொல்லியும் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் தஞ்சையின் பத்தூர்.
நவீனத்துவம் தீவிரம் கொண்ட ஐம்பதுகளில் இந்துச்சாதிகளில் பெரும்பாலானவர்கள் மரபுகளைக் கைவிட்டார்கள். புதிய காலகட்டத்தின் எல்லா லாபங்களையும் அள்ளிவிடுவதற்காக முன்னால் தாவினார்கள். அந்த வேகத்தில் நம் ஆலயங்களில் பெரும்பகுதி அனைத்து இந்துக்களாலும் கைவிடப்பட்டுக் கற்குப்பைகளாக எஞ்சியது. ஆனால் அந்தக்கோயில்கள் எவற்றையும் பிராமணர்கள் கைவிடவில்லை. எந்த ஒரு கோயிலும் பிராமணர் இல்லாத காரணத்தால் பூஜை நின்று போகவில்லை. ஒரு பிச்சைக்காரன் மாதம் சம்பாதிக்கும் தொகையில் பாதிகூட வருமானம் இல்லாத நிலையில் அக்கோயில்களை தங்கள் தர்மத்துக்கு கட்டுப்பட்டு பிராமணர்கள் நிலைநிறுத்தினார்கள்.
இன்றும் ஒருவேளை நல்ல ஓட்டல்சாப்பாட்டின் விலையை மாதச்சம்பளமாக ஏற்றுக்கொண்டு தினம் மூன்றுவேளை நம் கைவிடப்பட்ட பழைய ஆலயங்களில் பூஜைசெய்யும் பலநூறு அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் அத்தகையோரைக் கண்டுகொண்டிருக்கிறேன். உலகின் எந்த மதத்திலும் அதன் பூசாரிகள் இத்தனை பரிதாபகரமான நிலையில் இல்லை. சின்னஞ்சிறு மதமான சமணத்தில்கூட!
ஆசாரவாதிகள் என்பதனாலும், அச்சமூகம் நவீன சமூகத்தில் பெற்ற லௌகீக வெற்றிகள் உருவாக்கிய பொறாமை காரணமாகவும் பிராமணர்கள் ஒவ்வொருநாளும் வசைகளைப் பெற்றுக்கொண்டு, அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டு இந்தப் பெரும் பணியை செய்து வருகிறார்கள். அவர்கள் நிலைச்சக்திகள் என்பதனால், மாற்றமில்லாமலிருப்பதே அவர்களுக்கு அளிக்கப்பட்ட தர்மம் என்பதனால் அதைச்செய்கிறார்கள்.
இந்துமதம் வேரோடு அழியவேண்டும் என்று சொல்பவர்களிடம் எனக்குப் பேச ஏதுமில்லை. அவர்கள் மூன்று வகை. எங்கோ எப்படியோ இந்துமதத்தையும் இந்தியாவையும் அழிக்க எண்ணும் மதமாற்ற அமைப்புகளின் நிதியையும் ஆதரவையும் பெற்றுக்கொள்பவர்கள் ஒருசாரார். அந்த வலுவான சிறுபான்மையினரின் உக்கிரமான பிரச்சாரத்துக்கு பலியாகி இதுதான் முற்போக்கு போல என எண்ணும் அப்பாவிகள் இரண்டாம் தரப்பு. இருதரப்புக்கும் இந்துமதம் பற்றி ஏதும் தெரியாது. ஆர்வமும் இல்லை, அறிவுத்தகுதியும் இல்லை.
உண்மையிலேயே இந்து மதத்தை ஆழ்ந்து கற்று முழுமையான எதிர்நிலை எடுத்தவர்கள் உண்டு. அம்பேத்கர் போல. ராகுல சாங்கிருத்யாயன் போல. கெ.தாமோதரன் போல.இ.எம்.எஸ் போல. அதற்கான இடம் எப்போதும் கருத்துச்செயல்பாட்டில் இருக்கிறது. மறுக்கப்படாத ஒரு கருத்துத்தரப்பு இருக்க முடியாது. ஆகவே இப்பேரறிஞர்களின் அந்த மறுப்பும் போற்றத்தக்கதே. ஓர் உண்மையான இந்து அவர்களிடம் விவாதிப்பதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ளமுடியும். நான் என்றுமே அவர்களை என் ஆசிரியர்கள் என்ற நிலையில் வைத்தே பேசுகிறேன்.
இந்துமதம் மீது அக்கறை கொண்ட ஒருவர், அது நீடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர், அதன் நிலைச்சக்தியின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டுதான் மேலே செல்வார். அது நிலைச்சக்தி என்பதனாலேயே அது எந்த மாற்றத்தையும் எதிர்க்கும். அதற்கு வந்து சேர்ந்தவற்றை அப்படியே தக்கவைத்துக்கொள்ளவே முயலும். தீண்டாமையானாலும்சரி விதவைத்திருமண மறுப்பானாலும் சரி. மனிதாபிமானமோ காலமாற்றமோ அதற்குப் பொருட்டல்ல. அது புதையல் காக்கும் பூதம். அதன் பணி அதுவே என எண்ணினால் அதை வெறுக்க முடியாது. அதை எதிர்த்து வெல்வதை முழுமையான சமநிலையில் நின்று செய்ய முடியும்.
பிராமண நிலைச்சக்தியை வெறுப்பதற்கான உரிமை யாருக்கேனும் உண்டு என்றால் தீண்டாமைக்கு ஆளான ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வந்த நாராயணகுருவின் இயக்கத்தினருக்குத்தான். ஆனால் நாராயணகுரு ஒரு தருணத்திலும் அப்படிச் சொல்லவில்லை. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சொன்னதில்லை. நிலைச்சக்தி என்ற வகையில் அவர்களை சமநிலையுடன் பார்க்க என்னை கற்பித்தவரே நித்யாதான். இந்தச்சொற்கள் பெரும்பாலும் அவருடையவை.
அப்படியென்றால் நிலைச்சக்தி அப்படியே மாறாமல் நீடிக்க வேண்டுமா? தீண்டாமை உட்பட அனைத்தும் அப்படியே இருக்கவேண்டுமா? இல்லை. நிலைச்சக்தியின் பணி மாறாமலிருப்பது மட்டுமே. அதை எதிர்ச்சக்தி மாற்றிக்கொண்டேதான் இருக்கும். காஞ்சிமடம் கூட சந்திரசேகர சரஸ்வதி காலத்தில் இருந்தது போல இன்றில்லை. அந்த மாற்றமே இயல்பானது. எந்தத் தளத்திலும் அதுவே உகந்தது.
அது நிகழாமல் ஒற்றைப்படையாக மாற்றம் நிகழ்ந்த இடங்களில் எல்லாம் வன்முறை விளைந்து ஒட்டுமொத்த அழிவே எஞ்சியது. ஸ்டாலினும் மாவோவும் உதாரணங்கள். பழமையை எதிர்கொண்டு மாற்றி புதுமை தன்னை நிகழ்த்தாமல் அது பழமையை அடித்தொழித்து மேலே வந்த இடங்களில் கொஞ்சநாளிலேயே பழமை மேலதிக வல்லமையுடன் மீண்டு வந்திருக்கிறது. முஸ்தபா கமால் பாஷாவின் துருக்கி உதாரணம்.
இந்துமதம் என்பது பலநூற்றாண்டுக்கால வரலாறுள்ள ஒரு மரபு. நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள் இணைந்து உருவானது. ஏராளமான ஞானத்தரப்புகள் கொண்டது. முற்றிலும் மாறுபட்ட குறியீட்டு முறைமைகளும் வரலாற்று அடையாளங்களும் கொண்டது. இந்த மாபெரும் அமைப்பு மானுட இனத்துக்கே ஒரு பாரம்பரியச் சொத்து என நான் நினைக்கிறேன். இன்று ஐரோப்பாவின் கார்ப்பரேட் நிதியுடன் இணைந்து வரும் கிறித்தவ மதவெறி இதை அழிக்க எல்லா ஆற்றலையும் செலவிடுகிறது. அதை ஏற்று நம்மில் பல அறிவுஜீவிகளும் இன்று கூவுகிறார்கள். இது ஒரு முற்போக்குச் செயல்பாடாகவே ஆகிவிட்டிருக்கிறது.
ஒருவேளை அந்த மாபெரும் வரலாற்றுச்சக்திகளால் இந்து மதம் அழியும் என்றால் என்றாவது ஒருநாள் மானுட இனம் அதற்காக வருந்தவேபோகிறது. பசுமைப்புரட்சியால் இயற்கையை அழித்தமைக்கு வருந்துவதைப்போல. [அதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்றே நான் நினைக்கிறேன்] இதன் மாபெரும் வரலாற்றுப்பின்புலமும், பிரம்மாண்டமான உள்விரிவும், உள்ளே நிகழும் பல்வேறுதரப்புகளுக்கிடையேயான முரணியக்கமும்தான் இதன் சிறப்பியல்புகள். அவையே இதன் தடைகளும்கூட. யானைக்கு எடையே வலிமையும் தடையுமாக இருப்பதைப்போல.
இதன் குறைகள் களையப்பட்டு இதன் பாரம்பரிய வல்லமை தக்கவைக்கப்பட்டு இது நீடிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். அதற்கு இதற்குள் ஒரு பெருவிவாதம் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும். இதற்குள் இதை நவீனப்படுத்தும் சக்திகள் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் வெறும் ஆசாரமாக தேங்கிப்போகும். அதேசமயம் இந்த நிலைச்சக்தி நீடிக்கவும்வேண்டும், இல்லையேல் இன்றைய நவீன மனத்தால் புரிந்துகொள்ளப்படாதவை எல்லாமே குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிடும். ஒற்றைபப்டையான ஒன்றாக இது கட்டமைக்கப்பட்டுவிடும்.
மிகச்சிறந்த உதாரணம் கஜூராகோ. தீண்டாமை சம்பந்தமான விஷயத்தில் காந்தியை நான் ஆதரிப்பேன். சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் என் முழு எதிர்ப்புக்குரியவர். ஆனால் காந்தி கஜுராகோவின் பெரும் கலைப்பொக்கிஷங்களை உடைத்து அழிக்கவேண்டும் என்றார். அவரால் பாலுறவை அருவருப்புடன் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் கோயில்களில் உள்ள பாலியல்சிலைகளைப் பிரபஞ்சலீலையின் சித்தரிப்பு என்று சொல்கிறார். அவற்றை உருவாக்கிய பல்லாயிரம்வருடப் பாரம்பரிய மனத்தை விளக்குகிறார்.
சந்திரசேகர சரஸ்வதி இல்லாமல் காந்தி மட்டுமே இருக்கும் ஒரு அமைப்பு இந்தியாவில் உருவாகுமென்றால் தீண்டாமையுடன் சேர்த்து கஜூராகோவும் குப்பைக்கூடைக்குப் போய்விடும். ஆகவேதான் நான் முரணியக்கத்தை வலியுறுத்துகிறேன். அதற்காக நிலைச்சக்தி தேவை என்கிறேன். அந்நிலைச்சக்தியாக ஆசாரவாத அமைப்பான காஞ்சி மடத்தை அங்கீகரிக்கிறேன். அதன் தலைவராக சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பெரும் வாழ்க்கை மதிப்பு மிக்கது என்கிறேன்.
இரு நிகழ்ச்சிகள். கோயில்பட்டி வில்லிசைப்புலவர் அய்யாக்குட்டி பற்றி எழுத்தாளர் சொ.தருமன் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். வில்லிசை என்பது ஒரு நாட்டுப்புறக்கலை. அதை தன் புலமையாலும் அர்ப்பணிப்பாலும் மேலெடுத்துச்சென்றவர் அய்யாக்குட்டி. நாட்டுப்புறக்கலைஞர் என்பதனால் அவருக்கு சமூக கௌரவம் இருக்கவில்லை. அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒருமுறை அவரைத் தன் முன் வில்லிசை செய்ய அனுமதிக்கிறார் சந்திரசேகர சரஸ்வதி. அந்நிகழ்ச்சிக்குப்பின் அவரை மடத்துக்கு வரவழைத்து ஆஸ்தான கலைஞராக அங்கீகாரம் கொடுத்து கௌரவித்தார் அவர்.
வாழ்நாள் முழுக்க அய்யாக்குட்டிக்கு சமூக கௌரவம் அளிக்கும் அடையாளமாக இருந்தது அது என்கிறார் சொ.தருமன். மேடைகளில் காஞ்சிப்பெரியவர் அளித்த அந்த அங்கீகாரத்தைச் சொல்லாமல் அவர் நிகழ்ச்சியை ஆரம்பித்ததில்லை. அத்தகைய பலநூறு பேரை நாம் சுட்டிக்காட்டமுடியும்.
இன்னொரு நிகழ்ச்சி. அறுபதுகளில் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் ஒரு காளிகோயில். நெடுங்காலமாக அது கைவிடப்பட்டுக் கிடந்தது. அதை எடுத்துக்கட்டிக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். ஆனால் உள்ளே வைக்கவேண்டிய மூலச்சிலை எப்படி இருக்க வேண்டும்? ஒரு சோதிடர் சொல்ல காஞ்சிக்குச் சென்று சந்திரசேகர சரஸ்வதி அவர்களிடம் கேட்டார்கள். அந்தமூலச்சிலையின் நகல்வடிவம் கோயிலின் சுவர்கள் அல்லது தூண்களில் எந்த இடத்தில் இருக்கக்கூடும் என அவர் சொன்னார். தேடிக்கண்டுபிடித்து நகலெடுத்து மைலாடிக்கு வந்து அதைச் செய்து கொண்டு சென்று கருவறையை நிறுவினார்கள்.
இவ்விரு செயல்களும் ஒரு மடாதிபதிக்குக் கடமையானவை. ஆனால் சாதிப்பின்புலத்தை வைத்துப்பார்த்தால் அவற்றைச் செய்யவேண்டியவை மாபெரும் சைவ மடங்கள்தான். அந்த மடங்கள் எதிலும் அதைப்பற்றிய அக்கறையோ ஞானமோ உடையவர்கள் இருக்கவில்லை. சந்திரசேகர சரஸ்வதிதான் அதைச் செய்தார். இத்தகைய பல்லாயிரம் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டமுடியும். அதற்கான அர்ப்பணிப்புடன் சந்திரசேகர சரஸ்வதி இருந்தார். ஆகவேதான் அவர் மெல்லமெல்ல முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்.
இச்செயல்களும் இந்து மதத்துக்குத் தேவையே என நான் நினைக்கிறேன். ராமகிருஷ்ண மடமோ காந்தியோ இதைச்செய்ய முடியாது. ஓர் ஆசாரவாத அமைப்பின் பணி இது. அத்தகைய அமைப்பு இல்லாவிட்டால் இவ்விஷயங்கள் மெல்ல மெல்ல அழிந்தே போகும். இந்து மதத்தின் தொன்மங்களும், ஆசாரங்களும், கோயில்களும், சிற்பங்களும் இல்லாவிட்டால் மிச்சமிருப்பது என்ன? கொஞ்சம் அச்சிடப்பட்ட நூல்கள். அவற்றை எதைக்கொண்டு புரிந்துகொள்வது? குறியீடுகள்தான் மதம். குறியீடுகள்தான் கலை, இலக்கியம். குறியீடுகளைக் கையாளும்போதுதான் தத்துவம் கவித்துவ ஆழம் கொள்கிறது. இல்லையேல் அது வெறும் சொல்வெளி.
திரும்பவும் சொல்கிறேன். ஆசாரவாதம் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயங்களைச் சுமந்துகொண்டிருக்கும். ஆனால் நம் பழமையின் செல்வமும் அங்குதான் உள்ளது. அதனுடன் நாம் மோதலாம், நிராகரிக்க முடியாது.
நாம் ஊடகங்களிலும் தனிவாழ்க்கையிலும் ஞானமோ விவேகமோ இல்லாத மனம்சூம்பிப்போன பிராமணர்களைக் கண்டு அருவருப்படைவது அடிக்கடி நிகழ்வதுதான். தங்கள் சாதிகாரணமாகவே தாங்கள் மேலானவர்கள் என நம்புபவர்கள், பிறரை இழிவாக எண்ணுபவர்கள், எங்கும் எதிலும் குழு சேர்ந்து ஆதிக்கம் செலுத்துபவர்கள். அவர்கள் தங்கள் அடையாளமாக சந்திரசேகர சரஸ்வதி அவர்களை முன்னிறுத்துகிறாரகள். நாம் அவரை அந்த மனிதர்களின் பிரதிநிதி என அடையாளப்படுத்திக்கொள்கிறோம். அதைச்செய்யக்கூடாது என நான் என்னை மீண்டும் மீண்டும் பழக்கிக் கொள்வேன்.
அதைவிட நான் என்னைப் பழக்கிக்கொள்ளும் ஒன்றுண்டு. ஒரு பிராமணர் தன் சாதியமேட்டிமையைக் காட்டும்போது வரும் எரிச்சல் அதே மேட்டிமையைக் காட்டும் வேளாளரை அல்லது கொங்குக்கவுண்டரைக் காணும்போது வருவதில்லை. அதற்குக் காரணம் நம் சுய அடையாளமே. சாதிச்சிறுமை இல்லாத எத்தனை பேர் நம்முடைய சமூகத்தில் உண்மையில் இருக்கிறார்கள்? அப்படியானால் எத்தனைபேரை நாம் விரும்பமுடியும், மதிக்கமுடியும்?
ஒரு நண்பர் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஒரு விவாதத்தில் மிகமிகக் கடுமையாகத் திட்டி நொறுக்கினார். அவரது அப்பாவையும் எனக்குத் தெரியும். நான் கேட்டேன் ‘ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். உங்கள் அப்பா ஒரு அருந்ததியரை ஒருமுறையாவது உங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காரச்செய்திருக்கிறாரா?’ திகைத்தபின் ‘இல்லை’ என்றார் நண்பர். ‘இனிமேல் அதற்கு சம்மதிப்பாரா? உங்களால் அவரிடம் பேசி அதற்குச் சம்மதிக்கவைக்கமுடியுமா?’ நண்பர் ‘சாத்தியமே இல்லை’ என்றார்.
‘இதோ காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் உங்கள் அப்பாவைச் சொல்லவும் பயன்படுத்துவீர்களா?’ என்றேன். அவரால் பதில் சொல்லமுடியவில்லை. ‘இதேதான் எல்லாருக்கும் பிரச்சினை. நம் அப்பாக்கள் எல்லாருமே இப்படித்தான். எத்தனையோ மரபார்ந்த உயரிய பண்புகளின் இருப்பிடம் அவர்கள். கூடவே மரபின் இந்த இருட்டும் அழுக்கும் அவர்களிடம் இருக்கிறது. நாளை நம் பிள்ளைகளுக்கு நாமேகூட இப்படித் தோன்றலாம். நாம் நம் அப்பாக்களை ஏற்கமுடியாது, எதிர்க்கலாம், விலகிச்செல்லலாம், அவர்களுக்கு இடமே இல்லாத புதிய உலகைப் படைக்கலாம் ஆனாலும் வெறுக்கமுடியாது’ என்றேன்.
சந்திரசேகர சரஸ்வதி ஓர் ஆசாரப் பிராமண மடத்தின் தலைவர். ஸ்மார்த்த பிராமணர்களின் குரு. தன்னை ஒரு ஆசாரவாதியாக உணரும் ஒரு ஸ்மார்த்தர் அவரை தன் ஆசிரியராக, வழிகாட்டியாகக் கொள்வதை நான் புரிந்துகொள்கிறேன். அவர் தன் பக்தியால் அவரை ஞானி என்றும் முனிவர் என்றும் சொல்லும்போது அதை சொல்பவரின் அறியாமை என எண்ணிப் புன்னகையுடன் கடந்து செல்வேன். மரபைப் பேணுவதில் அவரது பங்களிப்பை ஏற்கிறேன். அதற்கான மதிப்பை அவருக்கு அளிப்பேன். என் மதத்தின் மரபான ஞானக்குவையில் பெரும்பகுதியை அறிந்து சொன்னவர் என்பதனால் அவரைக் கூர்ந்து வாசிப்பேன். அதற்காக அவரை வணங்குவேன்.
ஆனால் அவரது சமூகக் கருத்துக்களை ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவை மானுட விரோதமானவை, இன்றைய நிலையில் இந்து மதத்துக்கு அழிவை உருவாக்குபவை என்றே நினைப்பேன். அக்கருத்துக்களுடனும் அதைச் சொல்லும் அவரது ஆளுமையுடனும் எவ்வளவு முடியுமோ அத்தனை மூர்க்கத்துடன் மோதுவேன்.
ஆனால் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை நான் வெறுக்கமுடியாது. ஏனென்றால் நியாய உணர்ச்சியும், மகத்தான நட்புணர்ச்சியும், அப்பழுக்கற்ற நேர்மையும் கொண்டவரான; அதேசமயம் சாதிவெறியரும், ஆணாதிக்கவாதியுமான என் அப்பா வயக்கவீட்டில் பாகுலேயன் பிள்ளையை நான் இன்னும் வெறுக்கவில்லை. அவரை நான் வெறுத்த நாட்கள் உண்டு. ஏதோ ஒரு கணத்தில் அவரைக் கொலை செய்வதைப்பற்றிக்கூட நினைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஆனால் இன்று அவரைப் புரிந்துகொள்கிறேன்.