கூடங்குளம் – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். கூடங்குளம் பற்றிய தங்களின் பதிவைப் பார்த்தேன். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். ஒரு ஆதங்கம் ஏமாற்றம் கோபம் தெரிகிறது. இதில் உந்தப்பட்டு தங்களின் தளத்தில் நீண்ட நாட்களுக்கு முன் படித்த கூடங்குளம் பற்றிய பிற கட்டுரைகளை மீண்டும் படித்தேன்.

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்து. மற்றொன்று அதைப் பார்க்கும் இயக்கும் மனிதனை சார்ந்தது. இந்த அறிவியல் கருத்தில் மனிதனின் அரசியல் அதாவது சுயநலம் பேராசை சுய விருப்பு வெறுப்புகள் கலந்துவிட்டபடியால் நம்மால் இந்த விஷயத்தில் ஒரு ஒத்த அறிவார்த்த அறிவியல் கருத்தை உருவாக்க முடியவில்லை. அதையும் உணராமல் விவாதத்தில் ஈடுபடும் மனிதனின் குணத்தால் இங்கு சுமுகமான நிலையில் கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படவில்லை.

மனிதனின் தேவைகள் அதிகரித்தபடியாலும் அசௌகரியங்களைத் தாங்கும் மனநிலை குறைந்துவிட்டபடியாலும் இன்று மின்சாரத்தேவைகள் மிக அதிகம். நான் படித்துப் புரிந்தவகையில் எந்த வழியில் நாம் மின்னுற்பத்தி செய்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கின்றன. ஆனால் மின்சாரம் வேண்டும். அதிகம் வேண்டும். அது எப்படி? இந்த ஒரு பெரிய தேவையின் முன்னால் எந்தப் போராட்டமும் வெற்றியடைவது கடினமே.

எந்தப் பற்றாக்குறை நிலையிலும் லாபம் அதிகம். அதுவும் சமுதாயத்தின் பற்றாக்குறை நிலையை சரி செய்யும் பொறுப்பும் அதை செயல் படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் ஒரே அரசியல் செயலாட்சித் துறைகள் இடத்தில் இருப்பதால் அவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அணுமின் நிலையத்தால் லாபம் பலருக்கு. அதுவும் நமக்கு கிருபை அருளும் மனதுடன் நாம் அறியாத வழிகளில் நமது வாழ்வை மேம்பட வைக்கிறோம் என்று நினைக்கும் செயலாட்சித் துறையினர் இருக்கும்போது அவர்கள் சமுதாய காந்திய போராட்டங்களை அறியாக் குழந்தைகள் செய்யும் சுட்டிகளாகவே பார்ப்பார்கள். அவர்களின் பொறுமை கடந்தால் பிரம்படிதான்.

அதிலும் இன்றுள்ள மின்பற்றாக்குறை கடின நிலையில் லாபம் காணக் காத்திருக்கும் அரசியல் செயலாட்சித் துறைகள் இருக்கும்போது இந்த விதமான போராட்டங்களை சமுதாயமெங்கும் பரவச் செய்திருக்கவேண்டாமா? அப்போதுதானே அந்தத்துறைகள் போதிய மரியாதையுடன் இந்தப் போராட்டத்தைப் பார்க்கும். இல்லையேல் இது ஒரு சட்ட ஒழுங்கு விஷயமாகவே பார்க்கப்படும். நீங்கள் நினைப்பது போல் இந்தப் போராட்டத்தில் பெரும் உண்மை இருக்குமேயானால் அவர்கள் இந்த விஷயங்களைப் பொதுத்தளத்தில் பலரறிய வைக்காமல் விட்டது ஒரு பெரும் தவறே. பலர் வந்தார்கள் உதவ இருப்பதாக சொன்னார்கள். என்ன ஆயிற்று? மேதா பாட்கர், திருமாவளவன், விஜயகாந்த்……….

அதிலும் சமுதாய உள்ளுணர்வுகளை செயல்முறைகளை அறிந்த நீங்கள் இதில் கோபப்பட என்னயிருக்கிறது? அணுஉலை எரியும். மின்னுற்பத்தி ஆகும். அதை இனிமேல் தடுப்பது கடினமே.

அன்புடன்,
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவளைகுடா பயணம்
அடுத்த கட்டுரைகூடங்குளம் – இரு கடிதங்கள்