வயதடைதல்

சிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும்.

இந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். ஒரு வரி காதில் விழுந்தது –

ரெண்டு துறவறமும் லெச்சணமாய் இல்லறமும்
பண்டு சொன்னவிதம் பாங்காக முடிச்சானே

தெக்கன்பாடல்கள் என்று சொல்லப்படும் நாட்டார்பாடல்களில் ஒன்றான புலைமாடசாமி பாடல் எனப் பிறகு தெரிந்துகொண்டேன். புலைமாடசாமியின் அப்பா முத்துப்பட்டனின் வாழ்க்கைக்கதை. அந்த வரியின் அர்த்தம் என்ன? ஒரு வாழ்க்கையில் இரண்டு துறவும் இல்லறமும் இருக்கவேண்டும் என்று பழங்காலத்தில் இருந்தே சொல்லப்பட்டமுறையின்படி வாழ்ந்து தன்னுடைய பிறவியை நிறைவடையச் செய்தார் என்கிறது பாடல்.

என்னபொருள் அதற்கு? ஒரு வாழ்க்கையிலே எது இரண்டு துறவு? நான் அதைப் புராணமும் சாஸ்திரமும் படித்த சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். யாருக்கும் சொல்லத்தெரியவில்லை. நாலைந்துவருடம் கழித்து அதேபோல நாட்டுப்புறக் கதைப்பாடல் பாடும் பெரியவர் எனக்கு விளக்கம் அளித்தார்.

பண்டைய இந்திய மரபில் உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன.

எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஆசாரங்கள் என்று தள்ளிவிடாமல் இன்றைய நவீன சிந்தனையைக் கொண்டு இந்தக் கட்டங்களை நாம் அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையைப்பற்றிய ஆச்சரியமான ஒரு தெளிவு இதில் இருப்பதைக் காணமுடியும்.

முக்கியமான விஷயம் குழந்தைப்பருவத்தை வாழ்க்கையின் ஒரு காலகட்டமாக இந்துமரபு நினைக்கவில்லை என்பதுதான். ஏனென்றால் எல்லாக் குழந்தைப்பருவமும் ஒன்றுதான். மகிழ்ச்சியாக விளையாடி வாழவேண்டிய பருவம் அது. சொந்தமாக எந்த முடிவும் எடுக்கவேண்டியதில்லை. குழந்தை செய்யும் எந்த விஷயத்துக்கும் அது பொறுப்பல்ல. ஆகவே அதை நம் வாழ்க்கையின் தொடக்கமாகக் கொள்ளவேண்டியதில்லை.

இன்றைய நிலையை வைத்து யோசித்துப்பார்த்தால் இதிலுள்ள நுட்பமான அனுபவ உண்மை நமக்குப் புரியவரும். ஒரு குழந்தைக்கு எந்தவகையான வாழ்க்கைச் சுமையையும் ஏற்றக்கூடாது. அதாவது ஒரு புரோகிதன் தன் குழந்தையை எதிர்காலப் புரோகிதனாக நினைத்துப் புரோகித வாழ்க்கைக்குள் கொண்டு வரக்கூடாது. ஒரு சிற்பி தன் குழந்தையை சிற்பவேலைக்குள் கொண்டுவரக்கூடாது. குழந்தைக்கு உலகவாழ்க்கையில் உள்ள எந்தப் பொறுப்பும் தெரியக்கூடாது. அப்போதுதான் உண்மையான குழந்தைப்பருவம் அதற்கு இருக்கும்.

நண்பர்களே, இன்றைய வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். இரண்டு வயதில் பிரிகேஜி வகுப்பில் சேரப்போகும் குழந்தைக்குப் போட்டித்தேர்வு வைக்கிறார்கள். அதற்கு அந்தக் குழந்தையை ஒருவயதில் இருந்தே பழக்குகிறார்கள். குழந்தைப்பருவமே அதற்குக் கிடையாது. பிறந்து வெளியே வந்து மருத்துவச்சி குழந்தையைத் தன் கையில் எடுத்து அம்மாவுக்குக் காட்டியதுமே அம்மா முடிவுசெய்துவிடுகிறாள் – இந்தக்குழந்தை ஐஐடியில் படிக்கவேண்டும் என்று. தட்டாரப்பூச்சியின் வாலில் கல்லைக்கட்டி விடுவதுபோலக் குழந்தைகளிடம் வாழ்க்கையை சுமத்தி விடுகிறார்கள்.

நிகழ்காலமே ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு எதிர்கால பயத்தை ஊட்டிவிடுகிறார்கள். ஒரு அம்மா பையனிடம் சொல்வதைப் பார்த்தேன். ‘இப்டியே வெளையாட்டுத்தனமா இரு… குட்டிச்சுவராப்போயி ஓட்டலிலே தட்டுதான் எடுப்பே’ குழந்தைக்கு வயது இரண்டு. அது மகிழ்ச்சியுடன் ‘எவ்ளோ பெரிய தட்டு?’ என்று கேட்டது. ‘போ சனியனே’ என்று ஓர் அறை வைத்தாள் அம்மா. இதை ரயிலிலே பார்த்தேன். ரயில்பயணத்தில்கூட குழந்தையை அந்த ரயில்பயணத்தைப் பார்க்கவிடாமல் வீட்டுக்கணக்கு செய்யவைத்துக்கொண்டிருந்தாள்.

புராணமரபைப் பொறுத்தவரை ஒருவன் வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவனுடைய உபநயனம் நடந்த நாள்முதல்தான். அதற்குப்பின்னர்தான் அவன் தனிமனிதன். அதற்குப்பின்னர்தான் அவனுக்கு வாழ்க்கையில் பொறுப்பும் கடமைகளும் வருகின்றன. அதற்குப்பிறகுதான் அவன் தன் வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும், எதுவாக ஆகவேண்டும் என்பது தீர்மானமாகிறது.

உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.

உபநயனம் எல்லாக் கல்விக்கும் உண்டு. கல்வி பல வகையாக இருந்தது. வேதம் கற்பது ஒரு கல்வி என்றால் மருத்துவம் கற்பது இன்னொரு கல்வி. சிற்பம் கற்பது இன்னொரு கல்வி. ஒரு குழந்தையை அது எந்தத் துறையில் கல்வி கற்கவேண்டுமோ அந்தத் துறையில் சேர்த்து விடுவது உபநயனம் மூலம்தான். இது எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் செய்யவேண்டும். அதுவரை பிள்ளைகளை சும்மா அப்படியே விளையாட விட்டுவிடவேண்டும். இதுதான் சாஸ்திரம்.

வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? ஆனால் உலகம் முழுக்க இந்த வழக்கம் இருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள மாஸாய் [Maasai] பழங்குடிகளைப்பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே மாஸாய் பழங்குடிகளைப் போல அந்த அளவுக்கு சந்தோஷமான குழந்தைகள் வேறு எங்குமே கிடையாது. பன்னிரண்டு வயது வரை மாஸாய் ஆண்குழந்தைகள் எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. எந்தக் கல்வியும் கற்கவேண்டியதில்லை. எந்தப் பொறுப்பும் சுமக்கவேண்டியதில்லை. பெண்கள் ஒன்பது வயதுவரை அப்படி இருக்கலாம்.

ஆமாம், தூங்கி விழித்ததுமுதல் இரவுவரை பிடித்ததுபோல விளையாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். மாஸாய் குழந்தைக்கு சொந்த வீடு என்ற பொறுப்பு கூட இல்லை. அந்த மாஸாய் சாதியின் எந்த வீட்டிலும் அது சாப்பிடலாம். குழந்தைகள் அந்த கிராமத்துக்கே பொதுவானவை. அவற்றை எவரும் கண்டிப்பதுகூட இல்லை.

பதினைந்து வயதில் மாஸாய் பழங்குடிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு சடங்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தச்சடங்குகள் மிக விரிவானவை. அதைச்செய்ததும் ஆண்குழந்தைகளை வேட்டைக்குக் கூட்டிச்செல்கிறார்கள். வேட்டையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களுக்கு பெண்களுக்குரிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஆரம்பிக்கிறது. உபநயனம் என்பது அதுவேதான்.

உபநயனம் முடிந்த இளைஞனை பிரம்மசாரி என்று சொன்னார்கள். பிரம்மசாரி என்றால் இன்று திருமணமாகாதவன் என்ற அர்த்தம் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் மாணவன் என்றுதான் பொருள். பழங்காலத்தில் உபநயனம் முடிந்ததும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில்லை. அவர்கள் குருகுலத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். குருவுடன் கூடவே தங்கிக் கல்வி கற்கிறார்கள்.

படிப்பு முடிந்ததும் குருநாதரிடம் விடை பெற்றுத் திரும்பத் தன்னுடைய குடும்பத்துக்கு வருகிறான் மாணவன். கிருஹஸ்தாசிரமம் ஆரம்பிக்கிறது. அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் தன் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். பிள்ளைகள் பிறக்கின்றன. அவற்றுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் செய்கிறான். அதாவது குடும்பவாழ்க்கை வாழ்கிறான்.

பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள். மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம்.

வானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.

பழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. ஆனால் இந்த விஷயத்துக்குப் பழங்காலத்தை விட இன்றுதான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் இதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்.

இன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் முதியவர்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் சும்மா இருக்கிறார்கள்.

சும்மா இருக்க முடியுமா? அதுவும் முடியாது. வாழ்க்கையில் இருந்து விலகவில்லையே. பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள்.பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும் உலகம் என்ன என்றே அவர்களுக்குப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே ஆயிரம் பிரச்சினைகள். ‘யாருமே நான் சொல்றதைக் கேக்கறதில்லை’ ‘யாருமே என்னை வந்து பாக்கறதில்லை’ என்று புலம்பிக்கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நரகம்.

நீங்கள் இன்று இளைஞர்கள். நீங்கள் உங்களைப்பற்றி யோசியுங்கள். இன்றைக்கு ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் வேலைக்குப் போவீர்கள். ஒரு நாற்பது வருடம் அந்த வேலையைச் செய்வீர்கள். உங்களுக்கு அறுபது வயது ஆகும்போது அன்றைக்கு வரக்கூடிய தொழில்நுட்பம் உங்களுக்கு என்ன என்றே தெரியாததாக இருக்கும். அன்றைக்கு உள்ள பையன்கள் அதை சும்மா போட்டு விளையாடுவார்கள். நீங்கள் கற்றுக்கொண்டதெல்லாம் நாற்பது வருடம் பழைய விஷயமாக இருக்கும்.

அன்றைக்கு நீங்கள் யோக்கியமாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது. ஒதுங்காமல் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் தலையிட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? காலம் என்பது கண்ணில்லாத மிருகம். அதற்குக் குறுக்கே சென்றால் உங்களை முட்டித் தூக்கி வீசிவிட்டுச் செல்லும். அடிபட்டுக் கிடந்து புலம்பவேண்டியதுதான்.

ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். நீங்கள் இன்றைக்குப் படிப்பது எதற்காக? உங்களுக்கு எது உள்ளூர ஆசையோ அதற்காக இல்லை. உங்கள் குடும்பத்துக்காக. சமூகத்துக்காக. நாளைக்கு நீங்கள் வேலை செய்வதும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்தான். பல கட்டாயங்கள் இருக்கும் இல்லையா? அந்தக் கட்டாயங்களால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் ஒத்திப்போடுவீர்கள். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பீர்கள். அந்த விஷயங்களை நீங்கள் செய்யவேண்டாமா? வாழ்க்கை திரும்ப வராது அல்லவா?

சுந்தர ராமசாமியின் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் அறிவியல்துறையில் பெரிய ஆய்வாளராக இருந்தார். கடுமையாக உழைத்துப் பல சாதனைகள் செய்தார். சட்டென்று ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கே வந்து ஒரு பள்ளிக்கூடம் நடத்த ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்டேன் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று. ‘இது என் ஆத்ம திருப்திக்கான வேலை. சயண்டிஸ்டாக நான் செய்யவேண்டியதை செய்துவிட்டேன். பிள்ளைகளுக்கு செய்யவேண்டியதை செய்து விட்டேன். இனி எனக்கு செய்யவேண்டியதை நான் செய்யவேண்டும்’ என்றார். அதுதான் வானப்பிரஸ்தம்.

ஆம், ஒரு வாழ்க்கை துறவிலேதான் முழுமை அடையும். இருபது வயதிலே நீங்கள் கைகளை நீட்டி எல்லாவற்றையும் அள்ளி அள்ளி எடுக்கிறீர்கள். கல்வியை அள்ளுகிறீர்கள். வேலையை அள்ளுகிறீர்கள். அதிகாரத்தை அள்ளுகிறீர்கள். செல்வத்தை அள்ளுகிறீர்கள். புகழை அள்ளுகிறீர்கள். அதன் பின் ஒரு வயதில் அந்தக் கல்வி வேலை அதிகாரம் செல்வம் புகழ் எல்லாமே கனமாக ஆகும். நம் உடம்பு அந்த கனத்தைத் தாங்காது. அதற்குமேல் அவற்றை சுமந்துகொண்டிருந்தால் நரகம்தான். ஆகவே ஒவ்வொன்றாகத் துறக்கவேண்டும். அதுதான் வானப்பிரஸ்தம்.

காளிதாசனின் ரகுவம்சம் காவியத்தில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திலீபன் தன்னுடைய மகன் வயது வந்ததும் நாட்டையும் பொறுப்புகளையும் மகனிடம் கொடுத்துவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்கிறான் என்ற வருணனை வருகிறது. அப்படி ஒதுங்க முடிவது பெரிய மனபலம். அவனுக்கு நிம்மதி உண்டு.

நான் முதலிலே சொன்ன அந்தப் பாட்டுக்கு வருகிறேன். மனித வாழ்க்கையில் இரண்டு துறவு கண்டிப்பாகத் தேவை என்கிறது அந்தப்பாட்டு. அதில் ஒரு துறவு இதுதான். வானப்பிரஸ்தம் என்னும் துறவு. சரி, இன்னொரு துறவு என்ன?

நண்பர்களே, பிரம்மசாரி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? பிரம்மசரிய விரதம் கொண்டவன் என்று அர்த்தம். பிரம்மத்தை உபாசிப்பது தவிர வேறேதும் செய்யாதவன் என்று சொல்லலாம். பிரம்மம் என்றால் கடவுள். இங்கே கல்விதான் கடவுள். ஆம், பிரம்மசாரி என்றால் கல்வியை மட்டுமே கடைப்பிடிப்பவன். அதுவும் ஒரு துறவுதான். என்னிடம் அந்த நாட்டுப்புறப் புலவர் சொன்னார். ‘ரெண்டு துறவறம் இருக்கு தம்பி…ஒண்ணு படிக்கிற காலத்திலே. ரெண்டு படிச்சதை எல்லாம் மறந்து கடைசிக்காலத்துக்கு வேண்டியத மட்டும் செய்ற காலத்திலே’

உபநயனம் வரை பிள்ளைகளைக் கட்டுப்பாடில்லாமல் ஏன் வளர்த்தார்கள் தெரியுமா? அதன்பின் கல்வியைத்தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான். பழையகாலகட்டத்தில் பிரம்மசாரிகள் சுவையான உணவை உண்ணக்கூடாது. உயர்தரமான உடைகளை அணியக்கூடாது. வசதியான படுக்கைகளில் படுக்கக்கூடாது. ஒரு பற்றற்ற துறவி போலவே வாழ வேண்டும்.

விஷ்ணுபுராணத்தின்படி மூன்று விஷயங்களை பிரம்மசாரிகள் பேணவேண்டும். சௌசம், ஆசாரம், விரதம். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சௌசம். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை ஆசாரம் என்றார்கள். புலன் இன்பங்களுக்கான நாட்டங்களை ஒடுக்கிக் கல்வியை மட்டுமே கவனிப்பதை விரதம் என்றார்கள்.

இதையெல்லாம் இப்போது சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். பழைய சரக்கு என்பீர்கள். நானும் இதெல்லாம் இப்போது தேவை என்று சொல்ல வரவில்லை. பழையகாலம் பழையகாலம்தான். அது திரும்பி வராது.

ஆனால் நாம் படித்தவர்கள், சிந்திப்பவர்கள். அகழ்வாய்விலே ஒரு பழைய சிலை கிடைத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம் இல்லையா? அதைப்போல இதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

கல்விக்கு ஒரு தியாகம் தேவைப்படுகிறது. அந்தத் தியாகத்தைச் செய்யாமல் உண்மையில் எதையும் நாம் கற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் கல்விப்பருவத்தை ஒரு துறவுப்பருவமாக நம் முன்னோர் உருவாக்கியிருப்பதற்கான காரணம்.

நீங்கள் கற்கும் முறையான தொழிற்கல்வியை விட்டுவிட்டு வேறு வகையான கல்வியைப்பற்றி யோசியுங்கள். உதாரணமாக உங்களிலே ஒருவர் ஒரு சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்யவேண்டும்?

முதல் விஷயம் துறவுதான் நண்பர்களே. உங்கள் சுகபோகங்களைத் துறந்தே ஆகவேண்டும். அப்படித் துறவியாக ஆனபின்னர் அடுத்து ஒரு இயக்குநரின் கீழே சென்று சேரவேண்டும். ஆயிரம் வருடம் முன்னால் ஒரு குருகுலத்திற்கு எப்படி மாணவன் சென்றானோ அதேபோலத்தான் இங்கேயும் குருவுடன் சென்று சேரவேண்டும். பழைய குருகுல அமைப்பில் குருவின் கூடவே இருக்கவேண்டும். குருவுக்கு சேவைசெய்யவேண்டும். குரு திட்டினாலும் அடித்தாலும் விட்டுவிடக்கூடாது. குரு செய்வதை நீங்களும் செய்யவேண்டும். அப்படித்தான் கற்றுக்கொள்ள முடியும். இன்றும் சினிமாவிலே அப்படித்தான்.

என்னுடைய இளம்நண்பர் ஒருவர் பொறியியல் படித்துவிட்டுக் கணிப்பொறித்துறையிலே வேலைபார்த்தார். அவருக்குத் திரைப்படத்துறை மேல் பெரும் மோகம். அவரை இன்றைய முக்கியமான இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டேன். பொறியியலாளராக இருந்தபோது சொகுசாக வாழ்ந்தவர் அவர். சோம்பேறியும்கூட. எப்படி வேலைசெய்யப்போகிறாரோ என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அவர் வேலைசெய்வதைப்பார்த்து எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் அவர் சொன்னார். ‘சார் நான் நேற்று ராத்திரி முழுக்க இசையமைப்பாளருடன் இருந்தேன். அதிகாலை நான்குமணிக்கு வீட்டுக்குச் சென்றேன். இரண்டுமணிநேரம் தூங்கிவிட்டு நேராக அலுவலகம் வந்தேன். இரவு வரை இங்கே வேலை. இரவில் மீண்டும் ஒலிப்பதிவுக்குச் செல்வேன். இப்படித்தான் ஒருமாதமாக வேலை செய்கிறேன். என்ன சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. என்ன உடை அணிகிறேன் என்ற ஞாபகமே இல்லை. சார் கண்ணாடியில் முகம்பார்த்தே இரண்டுவாரமாகிறது…’

‘கஷ்டமாக இருக்கிறதா?’ என்றேன் ‘சார், இப்போதுதான் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஒரு மாசத்திலே நான் கற்றுக்கொண்டது மொத்த வாழ்க்கையிலும் கற்றுக்கொண்டதை விட அதிகம். கற்றுக்கொள்வதை விட சந்தோஷமானது உலகத்தில் வேறு எதுவுமே இல்லை சார்…’ சட்டென்று சோர்ந்து ‘…ஆனா கிட்டத்தட்ட இருபத்திரண்டு வருசம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படித்தபோது கற்றுக்கொள்வதன் சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை சார்’.

‘அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்’ என்றேன். ‘ஆமா சார்…வாழ்க்கையிலே பெரும்பகுதி வீணாப்போச்சு’ என்றார். ‘நல்லவேளை மிகவும் பிந்திவிடவில்லை’ என்றேன்.

கிட்டத்தட்ட இதே விஷயத்தைக் கொஞ்சநாள்முன் அமெரிக்கா சென்றிருந்தபோது என் வாசகி ஒருவர் சொன்னார். கணக்கியல்துறையில் உயர்கல்வி கற்றவர் அவர். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து முன்னோடியான ஒரு கணக்கியலாளரிடம் பணியாற்றியபோதுதான் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் நானாக உருவானேன்’ என்றார்.

வாழ்க்கையில் எதையாவது சாதித்த ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு குருகுலப்பருவம் இருக்கும். அது ஒரு துறவு வாழ்க்கையாக இருக்கும். கல்வியை மட்டுமே உபாசனை செய்யும் பிரம்மசரிய வாழ்க்கையாக இருக்கும் அது.

ஆனால் நம்முடைய சமூகம் இன்று எப்படி குழந்தைப்பருவத்தை அழித்திருக்கிறதோ அதைப்போலக் கல்விப்பருவத்தையும் அழித்துவிட்டிருக்கிறது. இன்று நாம் கல்வியை ஒரு தவமாகக் கற்கிறோமா? அதற்காக எதையாவது துறக்கிறோமா?

நம்முடைய கல்வி நிறுவனங்களில் ‘பயிற்சி’ [training ]யைத்தான் அளிக்கிறார்கள். ‘கல்வியை’ [education] அல்ல. கல்வியை ஒரு துறவாக ஒரு தவமாக மட்டுமே அடைய முடியும். சிலசமயம் நீங்கள் இருபது வருடம் கல்விநிறுவனங்களில் படிப்பீர்கள். நீங்கள் கல்வி பெறுவது ஆறுமாதகாலம்கூட இருக்காது. அந்த ஆறுமாதக் கல்வியை வைத்துக்கொண்டுதான் மிஞ்சிய வாழ்க்கையை முழுக்க நீங்கள் சந்திக்கிறீர்கள். இதுதான் உண்மை.

நமக்கு இன்று தேவையாக இருப்பது முதலில் நம் பிள்ளைகளுக்கு உண்மையான குழந்தைப்பருவம். அந்தக்குழந்தைப்பருவம் முடிந்ததும் அதற்குத் தேவை உண்மையான கல்விப்பருவம். அக்குழந்தையின் இயல்புக்கு ஏற்ற கல்வி. முழு ஈடுபாட்டுடன் பிற அனைத்தையும் துறந்து அது கற்கும் கல்வி. அதாவது பிரம்மசரியம்.

இன்று நமக்கு நம்முடைய அமைப்பு இவற்றை அளிப்பதில்லை. ஆகவே நாம்தான் இதை தேடிக்கொள்ளவேண்டும். இந்தக் கல்வியைக் கல்வி என நினைக்காதீர்கள். இது ஒரு சான்றிதழ் மட்டுமே. இதைவைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு தொடக்கத்தை மட்டுமே அளிக்கும்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சான்றிதழ் என்பது ஒரு பூணூல். இந்த சான்றிதழ் கையில் கிடைப்பதுதான் உபநயனம். இனிமேல்தான் கல்விப்பருவம் ஆரம்பம். இனிமேல்தான் நீங்கள் பிரம்மசாரிகள். முன்பெல்லாம் உபநயனம் ஒருவாரம் நடக்கும். இப்போது இருபது வருடம் நீளமாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இனிமேல் ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும். உங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் குருகுலத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த குருகுலத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும். அதற்காகப் பிற அனைத்தையும் துறந்து ஒரு துறவுவாழ்க்கையை வாழவேண்டும். அங்கே கற்றதுதான் உங்களுடைய கல்வி. அங்கேதான் நீங்கள் நீங்களாக ஆவீர்கள்.

அதுதான் நாம் நம்முடைய பாலியத்தில் இருந்து கரையேறும் இடம். அதுதான் நம்முடைய சுய அடையாளத்தின் தொடக்கம். அப்படி ஒன்றுக்காகத் தேடுங்கள்.

நன்றி

[சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலையில் ஆற்றிய உரை]

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 5, 2012

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75