காந்தியும் விதவைகளும்

அன்பின் ஜெ எம்.,

காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் .

[சந்திரசேகரர் உள்ளிட்ட மடத் தலைவர்கள் தலை முடி மழிக்காத விதவைகளின் முகத்தில் விழித்தால் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த மாட்டார்கள் என்பதற்காகவே அவர்கள் முன்னிலையில் விதவையர் செல்வது கூடப் பாவம் என அஞ்சிய நிலையே வெகு நாள் நீடித்திருந்தது. 1920 காலகட்டத்தில் – தஞ்சைக் கிராமம் ஒன்றில், வழக்கறிஞராக இருந்த ஒருவர், சந்திரசேகரருக்குப் பாதபூஜை செய்ய வேண்டுமென்பதற்காகவே -முடி களையாமல் வைத்திருந்த – பத்து வயதுப் பாலிய விதவையான தன் குழந்தைப் பெண்ணைக் கிராமத்து எல்லையிலுள்ள வேறொரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு மடாதிபதிக்குப் பாதபூஜை செய்த சம்பவத்தை என் தாய் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை ஆவேச உணர்ச்சியுடன் நேரடி அனுபவமாக எனக்கு விவரித்திருக்கிறார்கள்.]

இவ்வாறு பிஞ்சுப் பருவத்தில் நிகழும் குழந்தை மணங்களும் வைதவ்யக் கொடுமைகளும் சனாதனத்திற்கே சாபக் கேடுகளாய் அமைந்திருப்பவை என்பதை தான் நடத்தி வந்த இதழ்களில் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு அக்கொடுமைகள் சார்ந்த சமூக மனச்சாட்சியைத் தூண்டியதில் காந்திக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் மறுப்பதற்கில்லை.

என்றாலும் இது சார்ந்து நீண்ட நாட்களாக என் நெஞ்சைக் குடைகிற ஐயம் ஒன்றும் இருக்கிறது. காந்தி சார்ந்த பன்முக விளக்கங்களை விரிவான பின்னணியில் வைத்து வரும் தாங்களே இந்த ஐயத்தையும் தெளிவிக்க முடியும் என எண்ணுவதால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.

விதவை மறுமணத்தை வெளிப்படையாக ஏற்றவர், ஆதரித்தவர் காந்தியடிகள். வைதவ்யம் என்பது எந்தக் காரணத்தாலும் ஒரு பெண்ணின் மீது திணிக்கப்படக்கூடாது என உறுதியாகக் கருத்துரைத்திருப்பவர். ஆனாலும் கூட ‘எந்த ஒரு பெண் தானே விரும்பி வைதவ்யத்தை மேற்கொள்ளுகிறாளோ அவளே என் வணக்கத்துக்குரியவள்’ என்றும் ஓரிடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நிச்சயம் இதை ஒரு முரண்பாடு என நினைத்து நான் இந்த ஐயத்தை வைக்கவில்லை; விதவை நிலையைத் தேர்வு செய்வதும் மறுதலிப்பதும் அந்தந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்ற பொருளிலேயே அவர் அதைச் சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் கூட வைதவ்யம் காக்கும் பெண்ணே தன் வணக்கத்துக்குரியவள் என்று அவர் சொல்லும் அந்தக் கூற்று அவரது சீர்திருத்தக் கருத்தின் தூண்டுதலால் மறுமணம் செய்யத் துணிந்து முன் வரும் பெண்ணின் மனம் உளைச்சலுக்கு ஆளாக்கித் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை அவள் கொள்ள வழி வகுத்து விடாதா..? அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா-? தெளிவிக்க வேண்டுகிறேன்.

எம் ஏ சுசீலா

அன்புள்ள சுசீலா,

காந்தியின் இந்தக்கருத்தில் குழப்பமாக ஏதும் இல்லை. பாலியல் குறித்த அவரது நிலைப்பாடே புலன்ஒறுப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அவர் பாலுறவு பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று முழுமையாகப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.

காந்தியைப் பொறுத்தவரை பாலுறவு என்பது முழுக்கமுழுக்க இனவிருத்திக்கான இன்றியமையாத செயல்பாடு மட்டும்தான். அதை இன்பத்துக்காகச் செய்வதென்பது பாவம். பாலுறவில் இருக்கும் நாட்டம் என்பது மனித மனத்தை உலகியலில் கட்டிப்போடுவது. ஆகவே அது ஆன்மீகத்துக்கு எதிரானது.

காந்தி ஆன்மீகத்தை பக்தி, சேவை இரண்டின் கலவையாகவே கண்டார். பக்தியிலும் சேவையிலும் மனம் ஈடுபடுவதற்குக் காமமே முதல் தடை. ஆகவே புலன்களை ஒடுக்கியாகவேண்டும் என்று நினைத்தார்.

இதில் அவர் வெளிப்படையாக இருந்தார். தனக்கு அந்தக் கட்டுப்பாட்டை நாற்பது வயதிலேயே விதித்துக்கொண்டார். பிறருக்கும் அதே ஆலோசனையைச் சொன்னார். வேதனையான வேடிக்கை என்னவென்றால் மிக இளம் வயதுடையவர்களுக்கு, திருமணமே செய்யாதவர்களுக்குக் கூட அவர் புலன் ஒடுக்கத்தையே அறிவுறுத்தினார்.

திருமணமான தம்பதிகள் கூட தாம்பத்தியத்திலேயே முற்றிலும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று காந்தி ஆலோசனை சொல்லியிருக்கிறார். மக்கள் சேவைக்கு வருபவர்கள் திருமணத்தைத் தவிர்க்கவேண்டும் என்றும், திருமணமானாலும் புலனடக்கம் பயிலவேண்டும் என்றும் சொன்னார். இதையெல்லாம் அவர் கிட்டத்தட்ட கட்டாய விதியாகவே தன் ஆசிரமங்களில் வலியுறுத்தி வந்தார். அவரை ஏற்றுப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

காந்தியின் பார்வையில் இல்லறம் என்பது ஒருபடி கீழானதே. லௌகீகத்தில் சிக்கிக்கொள்ளாமல் பக்தியும் சேவையும் செய்வதே உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ்பவர்கள் மேலானவர்கள். காந்தி எல்லாவகையான உலக இன்பங்களும் மனதை சுயநலத்தில் ஆழ்த்துபவை என்று நினைத்தார். இன்றியமையாத அளவுக்கு மேல் எந்த உலக இன்பத்தை அடைந்தாலும் அது ஆன்மீகமாக நம்மை அழிக்கும் என்றார்.

இதை அவர் எல்லா மனிதர்களுக்கும்தான் சொன்னார். அவருக்கே உரிய அப்பாவித்தனத்துடன் நேருவுக்கே இந்த ஆலோசனையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் ஒருபடி மேலாகப் போய் இந்திராகாந்திக்கே காந்தி இந்த ஆலோசனையைத்தான் சொன்னார்.

ஆகவே புலனடக்கம் பயிலும் விதவை, திருமணம் செய்த விதவையை விட மேலானவள் என்று காந்தி சொன்னதாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. புலனடக்கம் பயிலும் எவரும் குடும்பம் நடத்தும் எவரையும்விட மேலானவர் என்றே அவர் சொன்னார். ஒரு விதவை மறுமணம் செய்ய விரும்பினால் காந்தி அது இயல்பானதே என்பார், அதற்கு அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பார். ஆனால் அவள் அவரிடம் ஆலோசனை கேட்டால் திருமணம் செய்யாமல் சேவையும் பக்தியுமாக வாழவேண்டும், அதுவே மேலான வாழ்க்கை என்றே சொல்வார்.

இந்த மனநிலையை காந்தி அவரது குடும்பத்தின் சமணப்பின்புலத்தில் இருந்தே பெற்றுக்கொண்டார். சமணம் இரண்டாயிரமாண்டுகளாக இந்த மதிப்பீட்டைத்தான் முன்வைக்கிறது. பின்னர் காந்தி புரிந்துகொண்ட மரபான கிறித்தவத்தின் மதிப்பீடுகளும் இதனுடன் இணைந்தே சென்றன.

காமத்தை காந்தி புரிந்துகொண்ட விதமும் சரி, அதை வெல்ல அவர் முயன்ற விதமும் சரி எனக்கு ஏற்புடையவை அல்ல. அது அவரது சமணப்பின்புலமும் அவரது முதல்குருவான ராய் சந்திராவும் அவருக்கு அளித்த ஒரு குறைபட்ட புரிதல் என நினைக்கிறேன். அது இந்து ஞானமரபுக்கு உரியதும் அல்ல. காந்தி சமண ஞானத்தைக் கிறித்தவ வழிமுறைகளுடன் கண்டபடி குழப்பிக்கொண்டார்.

புலன் ஒடுக்கத்தை இந்து யோக மரபு அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை. அப்படிப் பரிந்துரைப்பது மிகமிக ஆபத்தானது. முழுமையான புலனடக்கம் யோகத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. யோகம் புலன்களை வெல்வதற்குப் பல வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அகத்தையும் புறத்தையும் பழக்கும் வழிமுறைகள் அவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மூர்க்கமாக புலன்களை ஒடுக்குவது மனக்கொந்தளிப்புக்குத்தான் கொண்டு செல்லும். காந்தியின் ஆசிரமங்களில் அந்தக் கொந்தளிப்புகள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்கின. நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் காந்தியின் பாலியல் புரிதல்களைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.

நானும் இதைப் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஆனால் காந்தி சொன்னதை இன்னும் விரிவான பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். காந்தியின் இந்த நிலைப்பாடு அவரது காலகட்டத்துக்குப் புதியது அல்ல. உலகமெங்கும் அவரது சமகாலச் சிந்தனையாளர்கள் பலர் பாலியல் ஒறுப்பை முன்னிறுத்தினார்கள். காந்தி பாலியலை எப்படிப் பார்த்தாரோ அதற்கு சமானமாகவே தல்ஸ்தோயும் பார்த்தார். தன் மாணவர்களுக்கு அவர் பாலியல் ஒறுப்பை வலியுறுத்தினார்.

சொல்லப்போனால் காந்தியின் காலகட்டம் கிட்டத்தட்ட முடியும்போதுதான் தனிமனிதனின் பாலியல் சுதந்திரத்தின் முக்கியத்துவம் ஐரோப்பிய சிந்தனையில் ஒரு முக்கியமான விஷயமாக ஆகியது. அதற்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு தொடக்கப்புள்ளி. அதற்கு முன் அங்கே பாலியலின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய அனைவருமே கிறித்தவ மதமரபால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்த பாலியல் அடக்குமுறை உலகில் எங்குமே இருந்ததில்லை.

அதை எதிர்த்து ஐரோப்பாவின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தத்துவவாதிகளும் சேர்ந்து பாலியல் சுதந்திரத்தை, பாலியல் உரிமையை வாதிட்டு நிலைநாட்டினார்கள். அதை அவர்கள் தனிமனித உரிமையின் ஒரு பகுதியாகவே கண்டார்கள். ஆனால் அதைத்தொடர்ந்து வந்த முதலாளித்துவம் பாலியலை ஒரு முக்கியமான வணிகப்பொருளாக ஆக்கியது. முதலாளித்துவம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. கட்டற்ற நுகர்வுக்கு கட்டற்ற இன்ப நாட்டம் தேவை. கட்டற்ற இன்பநாட்டம் கட்டற்ற பாலியல் வழியாகவே வரமுடியும்.

ஆகவே பாலியல்சுதந்திரத்தை முன்னிறுத்தியது முதலாளித்துவம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் அதைப் பெருக்கியது. நுகர்வுக்கான விளம்பரத்துக்குப் பாலியல் முக்கியமான ஊடகமாக ஆகியது. நவீன வணிக ஊடகம், பாலியலை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான சிந்தனைகளைப் பல தளங்களில் இன்றைய முதலாளித்துவம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. உடலைக் கொண்டாடுதல், வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் நவீனமுதலாளித்துவம் இன்று முன்வைப்பதெல்லாம் நுகர்வைக் கொண்டாடுவதைத்தான்.

நம்மைச் சுற்றி ‘அனுபவி, பயப்படாதே, தயங்காதே, கட்டுப்படுத்திக்கொள்ளாதே, குற்றவுணர்ச்சி தேவையே இல்லை’ என நவீனமுதலாளித்துவம் முழங்கிக்கொண்டிருக்கிறது. அதன் நடுவே நின்றுகொண்டு நாம் காந்தியைப் பார்க்கிறோம். அவர் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எங்கோ இருப்பவர் போலத் தோன்றுகிறது. அவர் பாலியல்பற்றிச் சொன்னதெல்லாம் அடக்குமுறை போலத் தோன்றுகிறது.

சாமானிய மனிதர்கள் உலக இன்பங்களுக்காக வாழ்பவர்கள். யோகிகளைப்போல அவர்களும் புலன்களை ஒடுக்கவேண்டும் என காந்தி சொன்னது அசட்டுத்தனம். ஆனால் காமமும் நுகர்வுவெறியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என அவர் உணர்ந்திருந்தார். கட்டற்ற நுகர்வு உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என அவர் நினைத்தார். அதற்காகவே நுகர்வையும் காமத்தையும் கட்டுப்படுத்தவேண்டுமென வாதிட்டார். அதில் ஓர் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைராஜராஜன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபவாவும் யோகியும் நானும்