இன்று கூடங்குளம் விஷயத்திற்காக நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காகச் சென்றபின் நண்பர்களுடன் கூடங்குளம் போக முயன்றேன். வழியிலேயே போலீஸ் பிடித்துத் திரும்பச்சொல்லிவிட்டார்கள். அஞ்சுகிராமத்திற்கு அப்பாலேயே ‘தடை’ ஆச்சரியமாக இருந்தது. நெல்லைப்பகுதி கடற்கரையே முழுமையாக போலீஸிடம் இருக்கிறது. ஆனால் ஊடகச் செய்திகள் வேறுவகையாக உள்ளன.
அணு உலைக்குப் பெரிய அளவில் எங்கும் மக்கள் எதிர்ப்பு இல்லை. காரணம் இது ஊடகங்களால் கிறித்தவ மீனவ எதிர்ப்பாகச் சுருக்கப்பட்டுவிட்டது. அதைவிட மக்கள் மின்சாரத்துக்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மிகுந்த மனச்சோர்வுடன் திரும்பி வந்தேன்.
இந்தப்போராட்டமும் அண்ணா ஹசாரே போராட்டம் போலத்தான் முடிகிறது என நினைக்கிறேன். அதே காரணங்கள்தான். ஒன்று, ஊடகங்களால் இது ஒழிக்கப்பட்டது. இரண்டு, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட அயோக்கியத்தனத்தால் ஒழிக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே தப்பானவர், லோக்பாலை வென்றெடுக்கவும் ஊழலை ஒழிக்கவும் வேறு நல்ல வழி இருக்கிறது என்றெல்லாம் கட்டுரைகளை எழுதிக்குவித்து ஊடகங்களை நிறைத்திருந்த எல்லாச் சிந்தனையாளர்களும் இப்போது காணாமலாகிவிட்டார்கள். ஊழல் பற்றிய பேச்சே இல்லை. வரலாற்றில் ஒரு மெல்லிய வழி திறந்து வந்தது. அறிவுஜீவிகள் பேசிப்பேசியே அதை மூடிவிட்டுத் திருப்தியாகத் திரும்பிவிட்டார்கள்.
இந்தப்போராட்டம் இதுவரை மிக எளிய செலவில், மிக எளிமையாக, வன்முறை இல்லாமல் காந்தியப்போராட்டமாக நிகழ்ந்தது. ஆனால் ஊடகங்கள் முழுக்க முதலாளிகளால் நடத்தப்படும்போது காந்தியப்போராட்டத்திற்கு வேறு வழிகள் தேவையா என்றெல்லாம் யோசிக்கச்செய்தது.
இன்னும் தூரமிருக்கிறது. போராடும் தரப்பு சோர்வில்லாமல் இன்னும் தங்களைத் திரட்டிக்கொள்ளமுடியும். காந்திய வழியிலான எந்தப்போராட்டமும் கடைசியில் அதன் இலக்கை அடையத்தான் செய்யும். தற்காலிகமான பின்னடைவுகளை நீண்டகால வெற்றியாக அது மாற்றிக்கொள்ளகூடும். உதயகுமாருக்கும் பிறருக்கும் வாழ்த்துக்கள்.
ஆனால், என்ன சொன்னாலும் இதுவரையில் இந்தப் போராட்டம் தோல்விதான். ஒரே ஒரு பொறுப்பான அதிகார அரசியல்வாதியைக்கூட கொண்டுவந்து மக்களிடம் பேசவைக்கமுடியவில்லை. நம் அரசிகளும் அரசர்களும் உப்பரிகையை விட்டு இறங்கவே இல்லை. அப்படி என்றால் இதெல்லாம் எதற்காக…?
இனிமேல் எந்தப் போராட்டத்தைப்பற்றியும் பேசக்கூடாதென வெயிலில் வதங்கித் திரும்பி வரும்போது நினைத்தேன். மொத்தத்தில் இங்கே இருப்பது, கையில் இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தையும் நக்கி நக்கிக் கடைசித்துளிவரை தின்கிற, சந்ததிகளுக்கு விஷத்தையும் பாலைவனத்தையும் விட்டுச்சென்றாலும் சரி என எண்ணுகிற, லாபவெறி பிடித்த, மத்தியவர்க்கம். அவர்களின் அரசு.
குட்டிபோட்டதுமே வேட்டைக்குப் போகமுடியாவிட்டால் பன்றி சொந்தக்குட்டியைத் தின்னும். சோம்பலால் சொந்தக்குழந்தையைத் தின்கிறது நம் சமூகம்.