புல்வெளிதேசம்- 5, வீடு,சாலை,வெளி

மும்பையில் கொஞ்சநாள் நான் இருந்திருக்கிறேன் — தாராவியில். கிட்டத்தட்ட நான்குமாதம். ஒற்றை அறை கொண்ட குடியிருப்பில் ஒரு கணவனும் மனைவியும் இரு குழந்தைகளும் மூன்று விருந்தினர்களுக்கும் தூங்க வாடகைக்கு இடம் கொடுத்திருந்தார்கள். அந்த ஒற்றை அறையில்தான் கணவனும் மனைவியும் குடும்பம் நடத்தினர். மனைவி சமைத்தாள். துணிதுவைப்பதும் குளிப்பதுமெல்லாம் அந்த ஒற்றை அறைக்குள் உள்ள சிறிய சதுரவடிவமான சிமிண்ட்டாலான வடிகால்வட்டத்தில்தான். குடியிருப்பவர்கள் வெளியே சென்று பொதுக்குளியலறையில் வரிசையில் நின்று வாடகைகொடுத்து குளிக்கவேண்டும். ரயில்தண்டவாளத்தின் ஓரமாக விடிகாலையிலோ இரவிலோ சென்று மலம்கழிக்கவேண்டும். மழைக்காலத்தில் நடந்துநடந்து வீடே ஈரமாகிவிடும். அந்த ஈரத்தின்மேலேயே படுக்க வேண்டும். பொந்துக்குள் உயிர்வாழும் எலிகளைப்போல. அதைவிட மோசமான ஆண்கள் குடியிருப்புக்குப் பின்னர்சென்றேன். ஒடிவந்துவிட்டேன்.

ஆனால் அப்படி ஒரு கூரையைத்தேடிக்கொள்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மும்பையில் கடும்குளிரில் ,பருவமழையின் உக்கிரமான அருவிக்குக் கீழே திறந்த வெளியில் வாழவிதிக்கப்பட்டவர்களே அதிகம். அவர்களைப்பொருத்தவரை முப்பதாயிரம் வருடங்களாக மானுடகுலம் அடைந்த பண்பாட்டு முன்னேற்றம் எதுவும் நிகழவேயில்லை.  குகையைக் கண்டுபிடித்து தீமூட்டக் கற்றுக்கொள்ளாத நியண்டர்தால் மனிதர்கள் அவர்கள். சென்னையில் தெருவில் தங்கும் மனிதர்கள் ஆணும்பெண்ணும் நள்ளிரவில்  பழைய லாரித்தார்ப்பாயின் துண்டுகளை போர்த்திக்கொண்டு முயங்குவதைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை சென்னையில் தரையடிச்சாலையில் மழைக்கு ஒதுங்கியிருந்த மனிதர்கள் நடுவே ஓடும் நீருக்குள் பாலிதீன் கவர்கள் சுவரோரமாகச் சாத்தி வைக்கப்பட்டிருந்தன, உள்ளே கைக்குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன.

வீடு மனித நாகரீகத்தை உருவாக்குகிறது. வீட்டின் அறைகளே தனிமனித அந்தரங்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீடுகளுக்குள் வாழும் மனிதர்கள் நடுவே உள்ள உறவைக்கூட வீடுதான் தீர்மானிக்கிறது. வேண்டாவெறுப்பாக நள்ளிரவில் திரும்பிவரக்கூடிய ஒன்றாக வீடு இருக்கும்வரை எவருக்கும் குடும்பத்தின் மீதுபாசம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவர் மூச்சுக்காற்றை ஒருவர் சுவாசித்து வாழும் வரைக்கும் குடும்ப உறுப்பினர் நடுவே உரசல்களும் கசப்புகளும் மட்டுமே இருக்கும். வீடு மாறும்தோறும் மனிதமனம் அதற்கேற்ப மாறுபடுகிறது.  சிறிய இடுங்கிய வீடுகள் நம் மனதையும் இடுங்கலாக்குகின்றன. ஆடம்பரமான வீட்டை நான் சொல்லவில்லை. சிறிய எளிய வீடுகள் உண்டு. ஆனால் அங்கே வாழும் மனிதர்கள் மனக்குறுகல் இல்லாமல் புழங்கும் அளவுக்கு அந்த வீடு இருந்தாகவேண்டும்.

ஆனால் நம்மிடையே வீடு ஒன்று ஆடம்பரப்பொருளாக இருக்கிறது. அல்லது அடையமுடியாத ஒரு கனவாக இருக்கிறது.  மனதுக்கு உகந்த வீடு அமைபவர்கள் சிலரே. காரணம் அதற்கான முயற்சியே நம்மிடம் இருப்பதில்லை. நான் எப்போதுமே சற்று வசதியான வீடுகளை தேர்வுசெய்பவன்.ஏனென்றால் நான் வீட்டுக்குள் இருக்கும் நேரம் அதிகம்.  அதற்காக வாடகைக்கு இருந்த நாட்களில் புறநகர்களிலேயே வீடுதேடுவேன். நல்ல வேளையாக நான் பெருநகர்களில் வாழ நேரவில்லை. பணம் இருந்தும்கூட சிக்கனத்தால்,சேமிப்பு வெறியால் மிகச்சிறிய வீடுகளில் வாழும் மனிதர்கள் நிறையபேரைக் கண்டிருக்கிறேன். என்னிடமே என் வீட்டை கொஞ்சம் மாற்றிக்கட்டி பாதியை வாடகைக்கு விடும்படிச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

முதன்முறையாக நான் டொரொண்டோ சென்றபோது அங்கே என்னை மிகவும் கவர்ந்தவை வீடுகளே. தனியார் கட்டிய இல்லங்களும் சரி, அரசு அளிக்கும் அடுக்குமாடி பகுதிவீடுகளும் சரி வசதியானவை.  பின்னர் சிங்கப்பூர் சென்று அங்கே உள்ள அடுக்குமாடி பகுதிவீடுகளைப் பார்த்தபோதும் அதையே உணர்ந்தேன். இந்தியாவில் அத்தகைய வீடுகளில் தங்க மிகச்சிலருக்கே வாய்க்கிறது. அதற்கு ஒன்று, சின்னஞ்சிறு ஊரில் இருக்க வேண்டும். அல்லது பெரும்பணக்காரராக இருக்க வேண்டும். இடவசதி குறைவு ஒருபக்கம் இருக்க நம்முடைய வீடுகளின் வடிவமைப்பும் முட்டாள்தனமானது. நம்முடைய பெரும்பாலான வீடுகளில் நடமாட்டவழியே அதிக இடத்தை அடைத்துக்கொள்கிறது. நம்முடைய வீடுகளில்  அரசுக்குடியிருப்புகள் தவிர பிற எதுவுமே ஒரு கட்டிட வடிவமைப்பாளரின் பங்களிப்பு கொண்டவை அல்ல. கொத்தனார்கள் தங்களுக்குத் தெரிந்தவரையில் கட்டியவை. நான் குடியிருக்கும் வீடும் அப்படித்தான், நிறைய இடமுள்ள,  ஆனால் கணிசமான இடம் வீணடிக்கப்பட்ட வீடு அது.
ஆஸ்திரேலிய வீடுகள் என்னை மிகமிகக் கவர்ந்தன. முருகபூபதியின் வீட்டுக்குச் சென்றபோதே அந்த வீட்டின் அகலமும் அமைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. முருகபூபதி அங்கே நடுத்தர வருமானம் உடையவர், அவர் வாழ்வது போன்ற வீட்டில் இந்தியாவில் குட்டித்தொழிலதிபர்களே வாழமுடியும். நான்கு படுக்கையறைகள் கொண்டது அவ்வீடு. படுக்கையறைகள் வீட்டின் பக்கவாட்டில் இருபக்கமும் அமைந்திருக்க நடுவில்தான் உள்ளே நுழைவதற்கான மைய வாசலும் வரவேற்பறையும். அதை ஒட்டி உணவறை, உணவறையின் ஒருபகுதியாக சமையலறை. ஆஸ்திரேலியச் சமையலறைகள் நம் சமையலறைகளைப்போல தனி அறைகள் அல்ல. அவை உணவுக்கூடத்தை ஒட்டி  ஒரு மதுக்கடை விற்பனைப்பகுதி போன்ற அமைப்பு கொண்டவை.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல ஆஸ்திரேலியாவிலும் பெரிய கட்டுமான நிறுவனங்கள்தான் வீடுகளைக் கட்டுகின்றன. ஒரு பெரிய நிலப்பகுதியை வாங்கி ஒட்டுமொத்தமாக வீடுகளைக் கட்டி ஒரு நகரப்பகுதியை உருவாக்கி விற்கின்றன. ஆகவே நகரம் மிகவும் சீராக திட்டமிட்ட முறையில் அமைந்திருக்கிறது. பெரிய இரட்டைச் சாலைகள். அவற்றுக்கு இருபக்கமும் சைக்கிள் பாதைகள்.  அதன்பின் நடைபாதைகள். அதன்பின் புல்மேடு. அதை ஒட்டி வரிசையாக வீடுகள். வீடுகள் அனேகமாக ஒரேவகையான அமைப்பு கொண்டவை. மரத்தாலான வேலியால் பிரிக்கப்பட்டவை. உயரத்தில் இருந்து பார்த்தால் மிகச்சீராக அடுக்கபப்ட்ட பெட்டிகள் போல இருக்கின்றன குடியிருப்புகள்.

ஆஸ்திரேலிய குடியிருப்புவீடுகள் பெரும்பாலும் வளைவான ஓடுகள் வேய்ந்தவை.  அங்கே பெரும்பாலான வீடுகள் மாடி இல்லாத ஓட்டு வீடுகள்தான். நகர்மத்தியிலேயே மாடிவீடுகள் காணப்படுகின்றன. காரணம் அங்கே இடத்துக்குப் பஞ்சமே இல்லை. வீட்டுக்கூரைகள் சாய்வான ஓட்டுக்கூரைகள். நம்முடைய வளைவான கூரை ஓடுகளைப்போன்றவைதான். சிவப்பு அல்லது சாம்பல் நிறம்.  ஓடு என்றால் களிமண் ஓடு அல்ல. சிமிண்ட் கலந்த களிமண்ணால் செய்யப்பட்ட கனமான ஓடுகள். சில இடங்களில் அஸ்பெஸ்டாஸ் கூரைபோடப்பட்ட வீடுகளையும் கண்டேன். மரக்கூரை போடப்பட்ட புராதனமான வீடுகளை பல்லாரட் செல்லும் வழியில் பார்த்தேன்.

கட்டப்பட்டு வரும் வீடுகளை பல இடங்களில் பார்த்தேன். முதலில் கனமில்லாத மரச்சட்டங்களால் வீடுகளின் எலும்புச்சட்டகம் அமைக்கபப்டுகிறது. இது திட்டவட்டமாக வடிவமைக்கபப்ட்டு  தொழிற்சாலைகளில் செய்யப்பட்டு தனித்தனியான சட்டங்களாகக் கொண்டுவரப்படுகிறது. இரண்டு தச்சர்கள் இரண்டே நாளில்  ஆணித்துப்பாக்கி மூலம் ஆணியறைந்து அச்சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள். சட்டத்தின் கனத்தாலும் பலத்தாலும் வீட்டின் கட்டமைப்பு உறுதியாக நிற்பதில்லை, மாறாக குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் சட்டங்களின் பின்னலால்தான் அந்த உறுதி ஏற்படுகிறது. சுவர்களும் மரம்தான். கூரைமேல் ஓடுவேயப்படுகிறது.  மரச்சுவருக்கு வெளியே அதன்பிறகு செங்கல்சுவர் கட்டப்படுகிறது. சுட்ட செங்கல் அல்ல, அதி உயர் அழுத்தத்தில் களிமண்கலவையை அழுத்திச் செய்யப்படும் செங்கல். செங்கல் அலங்காரத்துக்காகத்தான், அதன்மேல் கூரை நிற்பதில்லை. செங்கல் மேல் எந்தப்பூச்சும் கொடுக்கப்படுவதில்லை.

சன்னல்களும் கதவுகளும் சட்டங்கள் இல்லாமல் நேராகவே செங்கல் மேல் பதிக்கப்படுகின்றன. சன்னல்கள் பெரும்பாலும் கம்பிகள் இல்லாதவை. குளிர்நாடு ஆகையால் வெளிச்சத்துக்காக ஏராளமான கண்ணாடிக்கதவுகள். எந்த ஒரு ஆஸ்திரேலியா வீட்டுக்குள்ளும் வெறும் ஒரு கருங்கல்லின் உதவியுடன் நுழைந்துவிடமுடியும். அங்கேஅந்தபயம் அனேகமாக இல்லை. நாம் நம் வீடுகளை திருடர்களை மனதில்கொண்டே கட்டியிருக்கிறோம். என் வீட்டின் எல்லா சன்னல்களுக்கும்  அரை இஞ்ச் கனமுள்ள இரும்புப் பட்டைகளையும் ஒரு இஞ்ச் கனமுள்ள கம்பிகளையும் பொருத்தியிருக்கிறேன். இருபக்கமும் வெளிக்கதவுகளுக்கு கனமான மரக்கதவுகளுக்கு வெளியே கனமான இரும்பு அழிக்கதவுகள் உள்ளன. சுவர்கள் இரண்டடி கனமாக செங்கல்லாலும் சிமிண்டாலும் கட்டப்பட்டவை. நாம் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதுகிறோம்– வசதியை விட.

ஆஸ்திரேலியாவில் மர-செங்கல் சுவர்களுக்கு இடையே மென்மையான பஞ்சுப்பொருள் வைத்து குளிர் தடுப்பு செய்கிறார்கள். உள் சுவர்களில் சிமிண்ட் பூசுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் பரப்புகளை ஒட்டி அதன்மேல் பெயிண்ட் பூசிவிடுகிறார்கள். தரைக்கு பெரும்பாலும் மரத்தையே தளமாகப்போடுகிறார்கள். ஒரு வீடு அனேகமாக நான்குபேரால் பதினைந்துநாளில் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஏராளமான வீடுகளை வேகமாகக் கட்டி எழுப்புவதற்கு இந்த முறை உதவியாக இருக்கிறது. நான் என் வீட்டுக்குமேலே நாநூறு சதுர அடியில் மூன்று அறைகள் கட்டுவதற்கு ஒருவருடம் ஆகியது. கையால் சிமிண்ட் குழைத்து கட்டி பூசி செதுக்கி செய்துகொண்டே இருக்கவேண்டும். அதில் ஆயிரம் சிக்கல்கள். ஒட்டுமொத்தமாக தொழிற்சாலைகளில் செய்து வீடுகளை நிறுவும் ஒரு அமைப்பு இந்தியாவில் உருவானால் வீடுகளின் விலைகள் பெருமளவுக்குக் குறைய வாய்ப்பிருக்கிறது. குடியிருப்புப் பஞ்சம் மிக்க இந்தியாவில் இது மிகமிக இன்றியமையாதது.

பதிமூன்றாம் தேதி காலை ஏழுமணிக்கு ஆழியாள் [மதுபாஷிணி]யும் அவர் கணவர் ரகுபதியும் குழந்தை துகிதையும் காரில் வந்தார்கள். அவர்களுடன் நானும் அருண்மொழியும் கன்பரா செல்வதாக ஏற்பாடு. ஓரளவு குளிர் இருந்தது. ஏழரைக்கு அவர்கள் வந்தார்கள். கிட்டத்தட்ட எண்ணூறு கிலோமீட்டர். எட்டுமணி நேரம் காரிலேயே பயணம்செய்து சென்றுசேர வேண்டும். ஆஸ்திரேலியாவைப்பார்க்கும் ஒரு பயணம் அது என எண்ணிக் கொண்டேன். துகிதையை கார்நடுவே சின்ன இருக்கை ஒன்றை அமைத்து பெல்ட் போட்டுக் கட்டி வைத்தார்கள். அவள் ஒரு சிறிய எலக்ட்றானிக் திரையில் கார்ட்டூன் பார்த்து மெய்மறந்து அமர்ந்திருந்தாள். எனக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய சிக்கலே காரில் ஏறியதும் சீட்பெல்ட்டை போடுவதுதான். இந்தியாவில் அவ்வழக்கமே இல்லை. ஆகவே அது நினைவுக்கே வருவதில்லை. பிறர்  சர் சர் என இழுத்து சீட்பெல்ட் போடும் ஒலி கேட்கும்போதுகூட என்ன புறாச்சத்தம் கேட்கிறதே என்று எண்ணிக்கொள்வேன். ஒருமுறை  செம்பில் பால்கறக்கும் ஒலிமாதிரி கேட்டது.

ஆஸ்திரேலியாவில் காரோட்டுவதென்பது மிக எளிது. இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இசைவிமரிசகர் ஷாஜி ஓட்டும் காரில் இருந்தால் அவர் ஒரு ஆவேசமான செஸ் ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவே தோன்றும். அங்கே எங்குமே இரட்டைச் சாலைகள். பெரும்பாலான இடங்களில் நான்குவழிச்சாலைகள். சிலசமயம் ஆறுவழிச்சாலைகள். துல்லியமான அறிவிப்புகள். சுழற்றியை கையில் பிடித்துக்கொண்டு ஓய்வாக அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டும் பாட்டு கேட்டுக்கொண்டும் ஓட்டலாம். ஆனால் தூக்கம் வந்துவிடும் அபாயம் உண்டு. சாலை முழுக்க தூக்கத்துக்கு எதிரான அறிவிப்புகள்தான். ‘தூக்கம் வந்தால் அதை என்ன செய்தாலும் தவிர்க்க முடியாது, பத்து நிமிடம் தூங்கிவிட்டு ஓட்டுங்கள்’ போன்ற அறிவிப்புப் பலகைகள் வந்தபடியே இருக்கின்றன.

வாஜ்பாயின் கனவுத்திட்டமான தங்கநாற்கரச்சாலைகள் இந்தியாவின் பலபகுதிகளில் இப்போதுதான் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. சந்திரபாபு நாயிடு ஆந்திராவில் பல இடங்களில் அதை முன்னரே முடித்துவிட்டிருந்தார்.  குறுக்குவெட்டுகள் இல்லாத அகலமான நான்குவழிச்சாலைகள் இந்தியாவின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன். அச்சாலைகள் உருவாக்கிய பொருளியல் வளர்ச்சியால் ஆந்திரா ஒரு மாபெரும் ராட்சதன் மாதிரி தூங்கி எழுந்துவிட்டிருக்கிறது. சென்னைமுதல் நாகர்கோயில் வரையிலான சாலையில் சில இடங்களே மீதி. இச்சாலைகள் வந்தபின் இங்கே விபத்துக்கள் அதிகரித்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஆறுபட்டைச் சாலையில்கூட அதிகபட்ச வேகமென்பது நூறு கிலோமீட்டர்தான். ஆனால் நானும் நண்பர் சண்முகமும் மாருதி வாகனார் காரில் விசாகபட்டினம் சாலையில் நூற்றி இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறோம். குண்டும்குழியுமான சாலையில் ஓட்டிய  நம் ஓட்டுநர்களுக்கு நல்ல சாலை போதையை அளித்துவிடுகிறது. அத்துடன் ஆக்ரமிப்புகள், சாலையோர வணிகர்கள், ஊடே பாயும் கிராமவாசிகள், மிருகங்கள், வைக்கோலும் தானியங்களும் உலரப்போடுவது…. இந்தியாவில் தங்கநாற்கரச்சாலைகளின் ஓரங்களை காபந்துசெய்யாவிட்டால் அவை சீக்கிரத்திலேயே கொலைக்களங்களாக ஆகிவிடும்.

சாலையோரங்களில் கங்காரு படம் போட்ட எச்சரிக்கைப் பலகைகளைக் கண்டோம். கங்காருக்கள் குறுக்கே பாயும் என்றார் ரகுபதி. கங்காருக்களை வந்தது முதலே தேடி காணாமல் ஏமாந்து இருந்தோம். பக்கவாட்டு புல்வெளிகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். சட்டென்று சாலையில் கார்களால் அடிபட்டு செத்துக்கிடந்த கங்காருவைப் பார்த்தோம், கிட்டத்தட்ட துவையல். மீண்டும் இன்னொன்று. சற்று தள்ளி இன்னொன்று. சாம்பல்நிறமான கங்காருகள். இந்தியாவில் ஒரு மான் காரில் அடிபட்டால் அந்த வழக்கில் இருந்து வெளிவர பத்து வருடங்கள் அல்லது பத்துலட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அங்கே கங்காருக்களின் எண்ணிக்கை மனிதர்களை விட பெருத்துவிட்டதனால் அவற்றைக் கொல்வது குற்றம் அல்ல. ஆகவே கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் காரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். முதன்முதலில் பார்த்த கங்காருக்கள் எல்லாம் சடலங்கள் என்பதில் அருண்மொழி மிகவும் வருத்தப்பட்டாள்.

பொருளாதார மந்தம் ஏற்படும்போது பெரிய கட்டுமானத்திட்டங்களைத் தொடங்குவது நவீன முதலாளித்துவ கோட்பாடு. இது கீய்ன்ஸ் கோட்பாடு எனப்படுகிறது. ஜான் மெய்னார்ட்ஸ் கீய்ன்ஸ் [John Maynard Keynes] என்ற பிரிட்டிஷ் பொருளியலாலர் உருவாக்கியது. இதன்மூலம் அரசாங்கத்தின் இருப்புநிதி மக்களிடையே பரவுகிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. கட்டுமானத்திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்பட்டும் நிதிவளர்ச்சி உருவாகிறது. ஆஸ்திரேலியா அரசு இன்றைய பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ள மாபெரும் சாலைத்திட்டங்களை தொடங்கியிருக்கிறது. போகும் வழியெங்கும் ராட்சத  மண்ணள்ளி இயந்திரங்கள் வேலைசெய்துகொண்டிருந்தன. கீய்ன்ஸின் கோட்பாடு பல காலமாகவே இந்தியாவில் இருந்திருக்கிறது.வரிவசூலில் மூன்றில் ஒரு பங்கை மன்னர் கோயில்களிலும் கோட்டைகளிலும் உள்ள களஞ்சியங்களில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருந்திருக்கிறது. பஞ்சகாலத்தில் ஏரிகள் வெட்ட ஆரம்பிப்பார்கள், கோயில்களைக் கட்டுவார்கள். ஏரிவெட்டி கோயில்கட்டியதனால்தான் பஞ்சம் போயிற்று என்ற நம்பிக்கையை நம் ஊர்களில் காணலாம்.

சாலைகளில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி ஓய்வெடுக்க வசதியாக பெஞ்சுகளும் டெஸ்குகளும் போடப்பட்டிருந்தன. ராணி மங்கம்மாள் மதுரை- குமரி சாலையில் இம்மாதிரி நூற்றெட்டு சத்திரங்களை கட்டி அங்கே மாடுகளுக்கு தண்ணிகாட்டவும் மனிதர்கள் தாகம் தீர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தாள். பல மண்டபங்கள் இப்போதும் சாலையோரம் உள்ளன. ஒரு நலம்நாடும் அரசின் கண்கள் எங்கெல்லாம் செல்ல முடியும் என்பதற்கான  தடையங்கள் இவை.

போகும் வழியில் ஒரு மெக்டொனால்ட்ஸ் கடையில் நிறுத்தி உள்ளே போய் பர்கர் சாப்பிட்டோம். பர்கரைச் சாப்பிட ஏற்ற வாயுள்ளவர்கள் ஆப்ரிக்கர்கள்தான். நான் முடிந்தவரை முதலைமாதிரி வாயைத்திறந்து கடித்து சாப்பிட்டேன். அருண்மொழி பர்கரை தனித்தனி அலகுகளாகப் பிரித்து சாப்பிட்டாள் .’பொம்புளை சிரிச்சா போச்சு பர்கரைப் பிரிச்சாப்போச்சுன்னு ஒரு பழமொழி உண்டு அருணா’ என்று சொன்னதை அவள் அவ்வளவாக ரசிக்கவில்லை.மதியம் சாப்பிட்ட அந்த பர்கரை நான் செரித்துக்கொள்ள மறுநாள் ஆகியது. ‘அத மட்டும் என்னால ஜீரணிச்சுக்கவே முடியலை’ என்ற வழக்கமான சீரியல் வசனம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.

மாலையில் ஒரு சிற்றூரை அடைந்தோம். அங்கே சாலையோரமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் நின்றிருந்தது. பாதி மண்ணில் மூழ்கி. அது முதலாம் உலகப்போரில் பங்குபெற்ற நீர்மூழ்கி. அந்த நீர்மூழ்கியின் காப்டனாக இருந்தவர் பிறந்த கிராமம் அது. அதன்மேல் ஏறி விளையாடின குழந்தைகள். இனிமையான ஒரு கிராமத்து மாலை நேரம். பையன்கள் சிலர் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  நிறைய தாத்தாக்கள் பாட்டிகளுடன் வந்து ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். கடையில் ஒரு காப்பி சாப்பிட்டோம். ஆஸ்திரேலியா காபி திருவல்லீகேணி டிகிரிகாப்பிக்கு பாட்டி. ஆகவே நான் சாக்லேட் பானம் அருந்தினேன்.

அந்த நீர்மூழ்கியின் உட்பகுதியை அங்கே மாதிரி அமைத்து வைத்திருந்தார்கள். மிகச்சிறிய விமானம் ஒன்றுக்குள் நுழைந்தது போல. சிறிய விமானத்துக்குள் நுழைந்தால் நான் பற்பசைக் குழாய்க்குள் நுழைந்த உணர்வை அடைவதுண்டு. இப்போது ஒரு ஷ¥வுக்குள் நுழைந்தது போல  உணர்ந்தேன். வீரர்கள் படுக்கும் சிறிய படுக்கைகள். மிகச்சிறிய தங்குமறைகள். மிகச்சிறிய காப்டன் அறை. ஆறடிக்கு இரண்டடி அறையில் அவரது படுக்கை, இருக்கை,மேஜை, வைப்பறை ஒலிப்பெருக்கிக் கருவிகள் எல்லாமே இருந்தன. இடத்தை மிகச்சிக்கனமாக, மிகக்கச்சிதமாக எப்படி பயன்படுத்திக்கொள்ளலாமென்பதன் சாட்சி. அதை உருவாக்க எத்தனை நிபுணர்களின் ஆராய்ச்சி தேவைப்பட்டிருக்கும். அவர்கள் ஒரு கருவறையை பார்த்தாலே போதும், அதனளவுக்கு இடத்தைப் பயன்படுத்தும் நுட்பத்தை எங்குமே பார்க்க முடியாது.

அந்த சிறிய ஷ¥ கடலுக்கு அடியில் செல்லும்போது எப்படி இருக்கும்? முப்பதாயிரம் அடி உயரத்தில் வானில் இருளில் பறக்கும்போது எப்படி இருக்குமோ அப்படித்தான். அது மேலே, இது கீழே. அவ்வளவுதான். பீட்டர் பெஞ்ச்லியின் பிரபல நாவலான ‘எக்ஸார்சிஸ்ட்’ தொடங்கும்போது கதாநாயகன் எண்ணிக்கொள்கிறான். உலகின் மீது வானத்தில் ஒரு குறிப்பிட்ட கணத்தில் எப்படியும் ஒருலட்சம்பேர் விமானங்களில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டிருப்பதுபோல சட்டென்று பூமி அழிய நேரிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதைத்தான் நானும் நினைத்தேன், நீர்மூழ்கியில் செல்பவர்கள் மேலே வந்து பார்த்தால் ஆர்ட்டிக்கில் எரிமலை வெடித்து பூமியே மூழ்கிப்போயிருந்தால் எங்கே கரையேறுவார்கள்? ஹாலிவுட்டுக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கலாம்.

அங்கே ஒரு பெரிஸ்கோப் இருந்தது. அதன் வழியாக உற்றுப்பார்த்தேன். வெளியே பிள்¨ளைகள் விளையாடுவதும் பெண்கள் நடமாடுவதும் தெரிந்தது. அங்கே யாரும் ரகசியமாக ஏதும் செய்யமுடியாது. இபப்டி ஒருசாவித்துளை இங்கே இருக்கிறது. அங்கிருந்து கிளம்பியபோது மாலை நன்றாகச் சிவந்துகொண்டிருந்தது. புல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே சென்றோம்.  மழைபெய்திருந்தமையால் புல்வெளி பச்சைக்கம்பள விரிப்பாக கண்களை நிறைத்துப் பரவிக்கிடந்தது. இம்மாதிரிக் காட்சிகளை சினிமாவில் காட்டும்போது அகலஆடியைப் போட்டு எடுப்பார்கள். காட்சியின் தொடுவான்கோடு வளைந்து தெரியும். நேரில் பார்க்கும்போதுகூட ஒரு வளைவு தெரிகிறதோ என்ற பிரமையை உருவாக்கியது நீண்டகால சினிமாப்பழக்கம். நேரில் ஒரு காட்சியை நாம் பார்க்கும்போது உண்மையில் நாம் சினிமாக் காமிராவின் ஆடி பார்ப்பதுபோல பார்ப்பதில்லை. நம் விழி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆகவே மிகநுட்பமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த பலநூறு காட்சியசைவுகளை — ஷாட்களை– நாம் ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்கிறோம். அதனால்தான் பெரும் விரிவுகள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் உணர்வு ஏற்படுகிறது

தூரத்தில் பச்சைவெளியை சாம்பல்நிறமான வானம் சந்தித்தது. அந்த விளிம்பில் புல்நுனிகள் கூட துல்லியமாகத்தெரிந்தன. குதிரைகள் சில வால்சுழற்றி மேய்ந்தன. நாலைந்து குதிரைகள் சரிவான தரையில்  தலையைக் குனித்து ஏறிச்சென்றன. செம்மரியாடுகள் புல்தரையில் ஏதோ விதைகள் போல விரிந்து கிடந்தன. உடைந்த மரத்தடியில் குடும்பஸ்திரீகள் போன்ற பசுக்கள் கூட்டமாகப் படுத்து ஏதோ வம்பளந்துகொண்டிருந்தன. சில இடங்களில் சிறிய குளங்களில் கலங்கல் நீர். அவற்றை மாடுகள் குடித்துக்கொண்டிருந்தன. புல்வெளிநடுவே இரட்டைத்தழும்பாக கார்ச்சக்கரத்தின் தடம் தொடுவான் நோக்கிச் சென்றது. வானம் மெல்ல சுழன்று கொண்டிருந்தது. பெரியதோர் பச்சை நிற இசைத்தட்டு சுழல்கிறது. மிகமிக நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது காலம். காலம் வெளியுடன் இணைந்ததுதான்போல. பிரம்மாண்டமான வெளிகளில் காலம் நிதானமாக ஆகிவிடுகிறது. இடுங்கிய தெருக்களில் அது குமிழியிட்டு ஓடிச்சென்றுவிடுகிறது.

கன்பராவை மாலை வந்தடைந்தோம். கன்பரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம். ஆகவே அதை ஒரு மாநகரமாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஒரு சிறிய ஊர். நகரத்தின் மையச்சாலையிலேயே அடுக்குமாடிக் கட்டிடங்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் தாழ்வான அழகான ஓட்டுக்கட்டிடங்கள். சாலையில் புங்கமரங்கள் போன்ற மேப்பிள் மரங்கள் இலைபழுத்து விதவிதமான நிறங்களுடன் பூச்செண்டுகள்போல நின்றன. மஞ்சள்பச்சை, மஞ்சள்செம்மை,இளஞ்ச்செம்மை நிறச்செண்டுகள். கன்பரா இருள ஆரம்பித்திருந்தது. நாங்கள் எட்டுமணிக்குத்தான் மதுபாஷினி வீட்டை சென்றடைந்தோம். வீடு இளவெம்மையுடன் கண்ணாடிகள் கண்கள் போல இருளில் ஒளிர காத்து நின்றுகொண்டிருந்தது.  விடுவதல்ல வீடு, விட்டுவிட்டு திரும்பும் இடம் அது.

 

சாலையோரம்

 

 

 


பெரிஸ்கோப்

குடியிருப்பு கான்பெரா

குடியிருப்பு கான்பெரா

முந்தைய கட்டுரைகடற்கரைக்குடி
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 6,கன்பெரா