காந்தியின் சனாதனம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

காந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடர் மிக அருமை. இவ்விஷயங்களில் உள்ள மிக சிக்கலான உள்ளோட்டங்களை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக மத அடிப்படைவாதம் பழமைவாதத்திற்கு எதிரானது என்பது எவ்வளவு பெரிய புரிதல். அதைப் படித்ததும் சிறிது அயர்ந்துவிட்டேன். காந்தி எவ்வளவு குறிப்பாக இதை அறிந்திருக்கிறார்.

இந்தக் கிழவர் வந்தது நமது நல்லூழ் ஒன்றே.

நன்றி

இ.ஆர்.சங்கரன்

ஆசிரியருக்கு,

மேலை நாடுகள் கிறித்துவ ஒற்றைத் தலைமையிடம் இருந்து விடுவித்துக் கொள்ளும் காலத்தில் அங்கும் மன்னர் ஆட்சி, நிலப் பிரபுக்கள் ஆட்சி, அடிமட்ட மக்கள் நசுக்கப்படல், அடிமை முறை எல்லாம் இருந்திருக்கிறது. இது உலக பொருளாதார, அரசியல் கலாச்சார வளர்ச்சியின் ஒரு பகுதியே. இது தவிர்க்க இயலாது என்பதை தெளிவாய் சொல்லி இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல ஐரோப்பிய மறுமலர்ச்சி நவீன பொறியியல், அறிவியல், கலை, இலக்கியம், வரலாற்றுப் பார்வை என பல தளங்களில் பல மனிதர்களால் நகர்த்தப்பட்டு இருக்கின்றது. மதம் சார்ந்த அமைப்பிலிருந்து வெளிவர அவர்கள் பல தளங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். “தான்” எனும் சித்தாந்தம் நிறுவ முழு வீச்சில் பயணம் சென்று இருக்கிறார்கள். அவர்களது அந்த சுய தேடலில் இந்தியப் பெருவெளி போன்ற ஒரு கலப்பு சமூகத்தை வியாபார நோக்கில் மட்டும் பார்த்திருக்கிறார்கள். கலாச்சாரமோ, பண்பாட்டுப் புரிதலோ முக்கியம் இல்லை. காலனி நாடுகள் அவர்களுக்கு ஒரு சந்தை, அவர்களது நுகர்வில் ஒரு பகுதி.

தொழில் புரட்சி காரணமாய் விளைந்த அறிவியல் அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாய் இருந்தது. வரம் பெற்ற அரக்கன் கதை நாம் புராணங்களில் காண்பதுதான் எனக்கு ஞாபகம் வருகின்றது. அறிவியல் அவர்களுக்கு வரம். மற்றவருக்கு சாபம். அந்த வரம் ஒரு சுரண்டல் கருவியாய் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மேலாண்மை எவ்வகையில் எளிதாகுமோ, வருமானம் கூடுதல் ஆகுமோ அந்த வகையில் ஆட்சி செய்ய அறிவியலைப் பயன்படுத்தினர்.

அவர்களது அந்த அறிவியல் வளர்ச்சி அவர்களுக்குக் கொடுத்த அதீத உயர்வுணர்ச்சி ஒரு “ரட்சகர்” மனப்பான்மையை அவர்களுக்கு அளித்திருக்கும். அவர்களது அறிவியல் எதையும் தருக்க ரீதியில் நிறுவக் கூடியது. எந்த அறிவியல் முறையிலும் ஒரு முதல்கட்டக் கருத்து ஊகிப்பு செய்கிறார்கள், அந்தக் கருத்தை நிறுவப் பரிசோதனை செய்கிறார்கள், பின்பு அந்தப் பரிசோதனை முடிவுகளைப் பதிகிறார்கள், முடிவில் கருத்தை நிறுவுகிறார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய நிலப் பரப்பின் மானுட அறிவியல் அதுவரை அவர்கள் காணாத ஒன்று. ஊடு பாயும் மத அமைப்புகள் அவர்கள் அறியாதது. இதை அவர்கள் பழங்குடி வாழ்வு என எண்ணி இருப்பார்களோ? அவர்களுக்குக் கையால் உணவு உண்ணுவது, கழிப்பிடம் அற்று இருப்பது, நவீன அறிவியல் அறியாதிருப்பது, பல ஆண்டு கால வாழ்வமைப்பால் அவர்கள் பாவமாக நினைக்கும் பல தெய்வ வழிபாடு செய்வது, சாதி போன்றவை ஒரு ஒவ்வாமை கொடுத்திருக்குமோ? அவர்களது துவக்க காலத் தொடர்புகள் மன்னர் அமைப்போடும், பெரு நில அமைப்போடும்தான் இருந்திருக்கலாம். அந்த அமைப்பு மிக மிகப் பிற்போக்கைக் கொண்டு போலி படாடோபத்தோடு இருந்திருக்க வாய்ப்பு அதிகம். அதைக் கொண்டு அவர்கள் இந்திய மனிதவியல் கருத்தை அமைத்திருந்தால் அந்தக் கருத்து நன்றாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன்.

காலனி ஆதிக்கக்காரர்கள் தலைமுறை தலைமுறையாய் ஒற்றை மத அமைப்பில் பயின்றவர்கள், ரோமானியர் காலம் தொடங்கிக் காலனி ஆதிக்கம் வரை அது அவர்கள் சமூகப் பயிற்சி. அவர்களது துவக்க நிலை மானுட அறிவியல் கருத்துக்கள் அந்த அடிப்படையில்தான் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. பரிசோதனையும் அதன் அடிப்படையிலேயே நிகழந்திருக்கிறது.

நமது நவீனவாதிகளும் இந்த அறிவியல் பார்வை குறித்த மயக்கத்தில் இருந்திருப்பர். ஆனால் அவர்களுக்கும் மாற்று முதல் கருத்து நிறுவி, பரிசோதித்துப் பார்க்கும் வல்லமை இருப்பது நமக்கு வாய்க்கவில்லை. இதற்குக் காரணம் இந்தியாவின் நில உடமை சமூகம் தானாக சுய தேடலென உள்ளிருந்து உடைக்கப்பட்டு மாறுதலை சந்திக்கவில்லை. அது வெளிக் காரணங்களால் உடைக்கப்பட்டு காந்தியத்தின் முயற்சியில் ஜனநாயகப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதே என் எண்ணம். காலனிய ஆதிக்கம் அதன் சுரண்டலுக்கு உருவாக்கிய ஆட்சி அமைப்பும், நிர்வாக அமைப்பும் நில உடமை சமூகம் உடைய முதல் வழி அமைத்து இருக்கின்றது. பெருமளவு வேலை வாய்ப்பை, ஒரு குமாஸ்தா கல்வி அமைப்பை நில உடமை சமூகத்திற்கு வெளியே உருவாக்கியது, வணங்கான் கதை இதை அழகாய் சித்தரிக்கும். அயோத்திதாசர் கட்டுரையிலும் இதை சொல்லி இருந்தீர்கள்.

எனக்கெனவோ காந்தி சொன்ன சுதந்திரம் என்பது நாம் பொதுவாக உபயோகிக்கும் வார்த்தை அர்த்தத்தில் இருந்திருக்குமோ என ஐயம் வருகிறது. நீங்கள் சொல்லும் காந்தி ஒரு பெருங்கனவு கொண்டவர், அவரது சுதந்திரம் ஒரு தொடர் முயற்சியே, இந்த மண்ணில் சுயமாய் நிற்கும் ஒரு விழிப்புணர்வு பெற்ற சமூகமே காந்தி சொன்ன சுதந்திரம் என நினைக்கிறேன். அவர் நம்மை சுதேசி அரசியலுக்கே தயார் செய்து கொண்டிருந்தார். பிரிட்ஷ் குமாஸ்தாவை இந்திய குமாஸ்தா கொண்டு மாற்றுவது காந்திக்கு சுதந்திரமாய் நிச்சயம் பட்டிருக்காது என நம்புகிறேன்.

ஜனநாயக விழுமியங்கள் தொடர் பயிற்சியின் பொழுது வரக் கூடியவை. அதைச் சொல்லும் திறன் கொண்ட ஆசிரியர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். காந்தியின் நம்பிக்கைக்கு உட்பட்ட அவரது நண்பர்களே வாரிசு அரசியல், சொந்தங்கள் சூழும் பண்ணையார் அமைப்பை அடிப்படையாக கொண்ட ஆட்சி முறை, வரிப்பண முறைகேடு என பல காந்தியம் நீர்த்துப் போகச் செய்யும் விஷயங்களை ஆரம்பித்து வைத்தனர். காந்தி இது போன்ற மனித பலவீனங்களுக்கு அப்பால் சிந்தித்து உள்ளார். அவர் உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் இன்னும் மேம்பட்ட பொருளில் நமக்கு அர்த்தப்படுத்தப்பட்டிருக்கலாம். அவரது ஜனநாயக முயற்சிகள் சுதேசி சுரண்டல் வழிகளை நோக்கிய விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கும்.

தங்களது கட்டுரை மிகச் சிறப்பாய் புதிய தளங்களைத் திறக்கின்றது. நன்றி.

-நிர்மல்


“ஐரோப்பியக் கல்விகற்ற உயர்மட்ட இந்துக்கள் முதலில் தங்கள் பெற்றோரிடமிருந்து அன்னியப்பட்டார்கள். தங்கள் பெற்றோர் தங்களைவிட அறிவிலும் விவேகத்திலும் குறைவானவர்கள் என நினைத்தனர். அவர்களை விட அதிகமான தார்மீகத்தகுதியும் உலக அனுபவமும் தங்களுக்குண்டு என நம்பினர்.

இந்த உயர்வுமனப்பான்மையே இன்றுகூட ஐரோப்பியக்கல்வி பெற்ற இந்துக்களின் பொதுவான இயல்பு என்பதைக் காணலாம். தங்கள் பெற்றோரை விட, தங்கள் ஒட்டுமொத்த மூதாதையரை விட, தங்களை ஒரு படி மேலானவர்களாக அவர்கள் நினைக்கிறார்கள். அந்த மனநிலையில் இருந்தே இங்குள்ள ‘சீர்திருத்த’நோக்கு உருவாகிறதென்பதைக் காணலாம். இன்று நம்மிடையே மரபையும் மதத்தையும் விமர்சனம் செய்து தங்களை முற்போக்காளராக, சீர்திருத்தவாதியாகக் காட்டிக்கொள்ளும் எவரிடமும் இருக்கும் பொது அம்சம் என்பது அவர்களுக்கு அவர்கள் மண்ணின் பல்லாயிரம் வருட மரபு மீதிருக்கும் இளக்காரமான எண்ணமே.”

என்னால் இந்த வரிகளைத் தாண்ட இயலவில்லை.இதில் பொதிந்திருக்கும் உண்மை மறைமுகமானது. தனிஅனுபவம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் இதை சுட்டிக்காட்ட இயலாது.

நான் பொதுவாக ஜே.கிருஷ்ணமூர்த்தி அதிகம் படிப்பதுண்டு. எதை ஆராய்கிறோம் என்பதைவிட ‘எந்த மனது ஆராய்கிறது அதை’ என்பார். அது தன் குழப்பத்துக்கு ஏற்ற மாதிரிதான் ஆராயும். நம் மனமே ஐரோப்பியக் கல்வி கொண்டு உருட்டிய உருண்டை. அது ஆராயும் போது கூடவே அகங்காரமும் சேர்ந்து (‘நான் நினைப்பது எப்படி தவறாகும்’) நிறைய விஷயங்களை வாழ்வில் தவற விடுகிறோம்.

நம் மரபு சார்ந்த எல்லாவற்றையும் (100%) தவறாகப் பார்த்த தருணங்கள் நிறைய உண்டு. அடி முட்டாளாக நம் ஜனத்தை மதிப்பிட்ட காலம் உண்டு.

-மாயன்(அகமும் புறமும்)

http://ahamumpuramum.blogspot.in/

முந்தைய கட்டுரைகாந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
அடுத்த கட்டுரைகூடங்குளம்