«

»


Print this Post

மகாபாரதம் -ஒரு கடிதம்


மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

தங்களை மிகவும் கவர்ந்த நூலாக மகாபாரதத்தைக் கூறி உள்ளீர்கள்.என் போன்றவர்களுக்கு மஹாபாரதம் ஒரு ஆன்மீக நூல் , சுவாராசியமான கதை மற்றும் அதிகம் எளிதில் புரியாத தத்துவங்களை கொண்ட நூல் என்பதாக ஒரு மதிப்பீடு மட்டுமே உண்டு. ஒரு ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு மற்றும் படைப்பூக்கம் கொண்டவர் என்ற முறையில் மகாபாரதத்தை எப்படி வாசிக்கிறீர்கள் மற்றும் அது பற்றிய உங்கள் பார்வை என்ன என்பதனை பகிர்ந்து கொள்ள முடியுமா ?

நன்றி.
அன்புடன்,
மதி

அன்புள்ள மதி

வியாச மகாபாரதம் அடிப்படையில் ஒரு மதநூல் அல்ல. மதம் என்றால் உறுதியான தரப்பு என்றே வடமொழியில் பொருள். அப்படிப்பட்ட ஒரு தரப்பை முன்னிறுத்தும் நூல் அல்ல அது. நெடுங்காலம் சூதர்களால் பாடப்பட்டு வந்த வம்சவழி–வீரகதைகள் எப்போதோ கிருஷ்ண துவைபாயனன் என்று அழைக்கப்படும் முதல் வியாசனால் தொகுக்கப்பட்டன. பின்னர் குறைந்தது இருமுறையாவது வேறு வியாசர்களால் அது மறு தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. வியாசர் என்றால் தொகுப்பாளன் என்றுதான் பொருள். வியாச மகாபாரதம் முழுக்க முழுக்க இலக்கியமே ஆகும்.

எந்த பண்டைப்பேரிலக்கியங்களையும் போலவே மகாபாரதத்தின் பேசுபொருள் ‘அறம்’தான்.[தர்மம்] அரச அறம், குடும்ப அறம், தனிமனித அறம் என விரிந்து, ‘பேரறம்’ என்று ஒன்று உண்டா என வினவிச்செல்லும் பயணம் அதில் உள்ளது.

காலப்போக்கில் அந்நூலில் உள்ள அறவிவாதங்களை ஒட்டி தனியான அறநூல்கள் விரித்து எழுதப்பட்டன. அவை அந்நூலிலேயே சேர்க்கப்பட்டன. அதில் ஒன்றே கீதை. அவ்வாறாக மகாபாரதத்துக்கு ஒரு தர்மசாஸ்திரத்தின் இடம் உருவாகியது. கிருஷ்ண வழிபாடு ஒரு பெருமதமாக வளர்ந்தபோது மதநூலாகவே அடையாளம் காணப்பட்டது.

இன்றைய நவீன வாசகன் மகாபாரத்தை ஒரு இலக்கிய நூலாக மட்டுமே அணுக முடியும். இந்நூற்றாண்டின் முன்னோடித் திறனாய்வாளர்கள் பலர் அத்தகைய விரிவான இலக்கியவாசிப்பை மகாபாரதத்துக்கு அளித்துள்ளனர். மிகச்சிறந்த உதாரணம் கேரள விமரிசகர் குட்டிகிருஷ்ண மாரார் எழுதிய ‘பாரத பரியடனம்’ .அது ஒரு மகத்தான நூல்.

வியாசமகாபாரதம் ஒரு செவ்விலக்கிய நூல். [கிளாசிக்] செவ்விலக்கியம் என்றால் ஓர் அறிவுச்சூழலில் பிற்பாடுவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அடிப்படையாக அமையக்கூடிய படைப்பு என்று டி.எஸ்.எட்லியட்டின் புகழ்பெற்ற விளக்கம் சொல்கிறது. மகாபாரதம் பல நூற்றாண்டுகளாக தன்னிலிருந்து பெரும்படைப்புகளை உருவாக்கியிருக்கிறது. காளிதாசனின் ‘சாகுந்தலம்’ முதல் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம் ‘ வரை இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

நவீன இலக்கியத்திலும் மகாபாரதம் தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்படுகிறது. தமிழிலேயே கிடைக்கும் நூல்களான வி.ஸ.காண்டேகரின் ‘யயாதி’ [மராத்தி] ஐராவதி கார்வே’யின் ‘ஒரு யுகத்தின்முடிவு’ [இந்தி] எஸ்.எல்.·பைரப்பாவின் ‘பருவம்’ [கன்னடம்] பி.கெ.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கலாமா?’ [மலையாளம்] எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமிடம்’ [மலையாளம்] எம்.வி.வெங்கட்ராமின் ‘நித்ய கன்னி’ [தமிழ்] எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’ [தமிழ்] போன்ற நாவல்களை நீங்கள் வாசித்துப்பார்க்கலாம்

ஏன் இவை மகாபாரதத்தை அடித்தளமாகக் கொள்கின்றன? இரண்டு காரணங்கள். ஒன்று , மகாபாரதம் அடிப்படை அறவிவாதங்களை வாழ்க்கை சார்ந்து முன்வைக்கிறது. அந்த அற அடிப்படைகளை இன்றைய நோக்கில் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் படைப்பாளிகள் மகாபாரத்தை மறு ஆக்கம் செய்கிறார்கள்.

இரண்டு மகாபாரதத்தின் கதைகள் நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு நம் மனதில் பதிந்து ஆழ்மனத்தில் ஊடுருவிச்சென்றவை. அப்படி ஆழத்துக்குச் செல்லும் ஒரு விஷயம் ‘ஆழ்படிமமாக’ [ஆர்கிடைப்] மாறுகிறது. அதற்கு நம் மனதில் பற்பல அர்த்தங்கள் உருவாகி வளர்ந்தபடியே உள்ளன. இவ்வாறாக மொத்த மகாபாரதமே ஒரு குறியீடுகளின் பெருவெளியாக மாறியிருக்கிறது. உதாரணமாக அர்ஜுனனின் வில் காண்டீபம். ஆனால் அது நம் மனதில் ஒரு படிமமும் [இமேஜ்] கூட இல்லையா?

நாம் மரபில் உள் படிமங்களைக் கொண்டுதான் படைப்புகளை உருவாக்குகிறோம். உதாரணம் தாலி. அதைப்போலவே மகாபாரதத்தின் கதாபாத்திரங்களும் பொருட்களும் எல்லாம் படிமங்களாக ஆகியிருக்கின்றன. அவற்றை இன்றைய நோக்கில் இலக்கியப்படைப்புகளுக்கு அடிப்படைகளாக ஆக்கிக் கொள்கிறார்கள் படைப்பாளிகள்.

செவ்விலக்கியங்களின் முக்கியத்துவம் இப்படித்தான் உருவாகிறது. இன்றைய வாசகனுக்கு அடிப்படையான வினாக்களை எழுப்பும் மூலநூல்களாகவும், ஆழ்மனப்படிமங்களை உருவாக்கும் மொழிப்பிராந்தியமாகவும் அவை விளங்குகின்றன.

மகாபாரதத்தை பக்தி பரவசத்துடன் படிப்பவர்கள் படிக்கட்டும். இலக்கியவாசகன் அதை ஒரு செவ்விலக்கியமாக எண்ணி படிக்க வேண்டும். அது பல்லாயிரம் விதைகள் உறங்கும் ஒரு நிலம். வாசகனின் கற்பனையின் நீர் பட்டு அவையெல்லாம் முளைக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/260/

3 comments

1 ping

 1. nasser

  வணக்கம் சார்,

  இராஜஜியின் மகாபாரதம் படித்த பிறகு மகாபாரதத்தை சுருக்கமாக இல்லாமல் வியாச மகாபாரதம் முழுமையாக படிக்க சரியான ஒன்று தேடிக்கொண்டு இருக்கிறேன் ..வி.ஸ.காண்டேகரின் ‘யயாதி’ [மராத்தி] ஐராவதி கார்வே’யின் ‘ஒரு யுகத்தின்முடிவு’ [இந்தி] எஸ்.எல்.·பைரப்பாவின் ‘பருவம்’ [கன்னடம்] பி.கெ.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கலாமா?’ [மலையாளம்] எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘இரண்டாமிடம்’ [மலையாளம்] எம்.வி.வெங்கட்ராமின் ‘நித்ய கன்னி’ [தமிழ்] எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’ [தமிழ்]..இவைகளில் முதலில் எதை தொடங்கலாம் ..

  நாசர்.

 2. ஜெயமோகன்

  யயாதி…அது மகாபாரதத்தின் சரியான மனநிலையை பிரதிபலிக்கிறது. அடுத்து பர்வ. அவை அதாவது மகாபாரதத்தை விமரிசனம்செய்யாமல் அதன் உள்மடிப்புகளை திறக்க முயல்கின்றன. ஐராவதி கார்வே, எம்.வி.வெங்கட்ராம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதை விமரிசனம்செய்கிறார்கள். அவர்களை அடுத்தபடியாக வாசிக்கலாம்

  ஜெ

 3. ஜெயமோகன்

  சார் இது விஷயமா திரும்ப தொந்தரவு தருவதற்கு மன்னிக்கவும் …புத்தக கண்காட்சியில் யயாதி ஐ கண்டுபிடிக்க முடியலை ..எந்த பதிப்பகம்னு சொன்னீங்கன்னா ….

  நாசர். [email protected]

  யயாதி இப்போது அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. அது சாகித்ய அக்காதமி பிரசுரம். நியூ செஞ்சுரி புக் கவுஸ் தான் சாகித்ய அக்காதமி, நேஷனல் புக் டிரஸ்ட் நூல்களை வாங்கி விற்கிறார்கள்.

  ஜெ

 1. மகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)

  […] 2. மகாபாரதம் (கேள்வி – பதில்) – http://www.jeyamohan.in/?p=260 […]

Comments have been disabled.