வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே,
குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக, தத்துவ சிந்தனையாளராக, ஆன்மீக வழிகாட்டியாகக் கண்டு விளக்குபவையாகவே இருப்பது வழக்கம். அதுவே இயல்பும் கூட
ஆனால் அவர் ஓர் இலக்கியவாதியும்கூட. கேரளத்தில் ஓர் இலக்கியவாதியாக அவருக்கு அழியா இடம் ஒன்று உண்டு. அவருடன் உரையாடி அதன்மூலம் தன்னை உருவாக்கிக் கொண்ட படைப்பாளிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவனாகவே நான் இங்கு பேச வந்துள்ளேன். என் பணி நித்யாவை ஒரு குருவாக மட்டுமிலலமல் ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும் நினைவுகூர்வதேயாகும்.
சென்றசில நாட்களுக்குமுன்னர் நான் இகோர் கூஸெங்கோ என்ற எழுத்தாளர் எழுதிய The Fall of a Titan என்ற நாவலின் தமிழாக்கத்தைப் படிக்க நேர்ந்தது. 1954ல் மூலநூல் வெளிவந்த மறுவருடமே வாணி சரணன் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டும்கூட இங்கே அதை எவரும் கவனித்ததாக தெரியவில்லை. மிக முக்கியமான நாவல் இது .
கூஸெங்கோ ருஷ்ய உளவமைப்பில் குறியீடுகளை பகுப்பாய்வுசெய்யும் நிபுணராக கனடாவில் வேலைபார்த்தார். அப்போது அவருக்கு ஒரு தகவல் கிடைக்கிறது, அவரை ருஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப போகிறார்கள். அவ்வளவு விஷயங்கள் தெரிந்தவரை கண்டிப்பாக அங்கே கொலைசெய்துவிடுவார்கள்.ஆகவே இகோர் கூஸெங்கோ தன்னிடமிருந்த 109 முக்கியமான ஆவணங்களுடன் கனடா அரசிடம் சரணடைகிறார். அந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடா ,பிரிட்டன் நாடுகளில் பரவியிருந்த ருஷ்ய உளவாளிகள் பலர் பிடிபட்டனர்.
கூஸெங்கோ ஒரு சுயசரிதையும் இநத நாவலையும் எழுதியிருக்கிரார். இந்நாவல் மக்ஸீம் கோர்க்கியைப்பற்றியது. இதில் கோரின் என்றபேரில் கோர்க்கிமையக்கதாபாத்திரமாக வருகிறார். கோரின் ருஷ்யப்புரட்சியின்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஸ்டாலினின் அழைப்பின்பேரில் அவர் ருஷ்யா திரும்புகிறார். ஸ்டாலினின் சர்வாதிகாரக் கொடுங்கோலாட்சி மீது பரவலாக ஐயங்கள் ஏற்பட்ட காலம் அது. ஆகவே கோரினின் வருகை ஸ்டாலினுக்கு தேவைபபட்டது
தொடக்கத்தில் ஸ்டாலின் காட்டிய சித்திரங்களை நம்பி கோரின் ஸ்டாலினின் சீர்திருத்தங்களை புகழ்ந்து எழுதுகிறார். பின்னர் உண்மை தெரிகிறது. அவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லை. ஆகவே சொந்த ஊரான ராஸ்டோவுக்கு கோரின் திரும்பி வருகிறார். அங்கே ஸ்டாலினின் உளவமைப்பு அவரை வற்புறுத்தியமையால் பயங்கர இவான் என்ற பழைய ருஷ்ய சக்ரவர்த்தியை புகழ்ந்து அதன் மூலம் கொடுங்கோலாட்சியை நியாயப்படுத்தி ஒரு நாடககத்தை எழுதுகிறார் கோரின்
அந்நாடகத்தை பெரிய அளவில் தேசம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். உலகமெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள். கோரின் ஆதரவளித்தது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் கோரினை கொல்ல முடிவெடுக்கிறார்கள். ஸ்டாலினின் உளவுத்துறையால் தன் மகன் கொல்லபப்ட்டதை அறிந்த கோரின் மனமுடைந்து செயலிழந்து இருக்கிறார். அவரும் கொல்லப்படுகிறார். அவரை இயற்கையாக மரணமடைந்தவர் என அறிவித்து கம்யூனிசத்தின் மாபெரும் படைப்பாளியாக புகழ்ந்து நினைவுச்சின்னம் உருவாக்குகிறார்கள். இதுதான் நாவலின் கதை.
இந்நாவலில் கொலையாளி நோவிக்கோவ் என்பவன் கோரினைக் கொல்வதற்கு முன் அவருடன் பேசும் ஆழமான உரையாடல் மிக அழுத்தமாக உள்ளது. ‘நீதான் எங்கள் மனதில் கனவுகளை எழுப்பினாய். இன்றைய அனைத்து சரிவுகளுக்கும் காரணம் உங்கள் தலைமுறையே. கொலைக்கு அஞ்சாத என்னைப்போன்றவர்களின் தலைமுறை நீங்கள் படைத்ததே ‘ என்கிறான்.
பல வருடங்களுக்கு முன் நித்யா கோர்க்கிபற்றிய ஒரு முழு நூலை மலையாளத்தில் எழுதினார். புகழ்பெற்ற அந்நூல் எழுதப்படுகையில் நான் அடிக்கடி வந்து நித்யா சொல்வதையும் பிறர் எழுதுவதையும் கேட்டிருப்பேன். நித்யாவுக்கு மிகவும் பிடித்தமான ருஷ்யப் படைப்பாளி தல்ஸ்தோய்தான். எனக்கு அப்போது தஸ்தயேவ்ஸ்கி. அதைப்பற்றி நாங்கள் விவாதித்திருக்கிறோம்.
நித்யா இருவரையுமே மேதைகள் என்பார். ஆனால் தல்ஸ்தோய் ஒருபடி மேல் என்று சொல்வார். தஸ்தயேவ்ஸ்கியால் மனிதப்பிரச்சினைகளை மட்டுமே பார்க்க முடிந்தது, வரலாற்றையும் அதில் மிகச்சாதாரண உயிர்கள் கூட பங்காற்றுவதையும் அவரால் பார்க்க முடியவில்லை. ஆன்மீகமான தெளிவு ஒருவிதமான நிதானத்தை உருவாக்கும். அதற்கு முந்தையநிலையே ஆன்மீகமான கொந்தளிப்புநிலை. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கியைவிட நிதானமானவர் என்பது நித்யாவின் கருத்து. பிற்பாடு இதை நானே ஏற்றுக்கொண்டேன். என்னுடைய ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் இவ்விரு படைப்பாளிகளையும் ஒப்பிடும் ஒருபகுதி உள்ளது
அப்படியானால் நித்யா ஏன் கோர்க்கிபற்றி எழுதினார்? நான் அதைக் கேட்டேன். நித்யா சொன்னார், ஒருபெரும் கனவு கலைந்து மனிதன் நிதரிசனத்தின் வெட்ட வெளியில் வெயிலில் தகித்து நிற்கும் காலம் இது. அக்கனவினை உருவாக்கியவர்களில் ஒருவர் கார்க்கி. அக்கனவின் சிருஷ்டாக்களில் அவரே மாபெரும் கனவு ஜீவி. அவரைபற்றி மேலும் ஆராய விரும்பினேன். இலட்சியவாதத்தின் எழுச்சி வீழ்ச்சி பற்றி எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு, என் வாழ்நாளெல்லாம் நான் ஒரு லட்சியவாதியாக, கனவாளியாகவே இருந்திருக்கிறேன்.
அப்போதுதான் நான் என் நாவலுக்கான வாசிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த காலம். கார்க்கியைப்பற்றி படித்தேன். எனக்கு ஆழமான மனச்சோர்வை அளித்தது கார்க்கியின் வாழ்க்கை. திரும்பி ருஷ்யாவுக்குவந்த கோர்க்கி உடனடியாக தன் கனவுகள் குரூரமாக கலைந்துவிட்டதை உணர்ந்திருப்பார். கலைஞன் அப்படி உணராமலிருப்பான் என நான் நினைக்கவில்லை. அவனுக்கு ஒரு துளி தகவலே போதும். சொந்த சகோதரர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை கோர்க்கி அறிந்திருப்பார். சக எழுத்தாளர்கள் கட்டாய உழைப்பு முகாம்களில் மட்கி அழிவதைக் கண்டிருப்பார். ஆனால் ஸ்டாலினை ஆதரித்து எழுதினார். ஒரு கட்டத்துக்குப் பின்னர் அவர் மௌனம் சாதித்தார்.
ஏன்? மனசாட்சியை ஏன் கோர்க்கிமூடிவைத்தார்? என்ன ஆயிற்று அவருக்கு? ஷோல்ஷெனிட்ஸினுக்கும் பாஸ்டர்நாக்குக்கும் இருந்த தைரியமும் தியாக உணர்வும்கூட இல்லாதவரா அவர்? இல்லை, அப்படி நினைக்க இடமில்லை. கோர்க்கி ஒரு மேதை, ஐயமே இல்லை. அப்படியானால் ஏன்?
கோர்க்கிஉண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.
காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.
ஆனால் அவர் வெடித்திருக்கக் கூடும். அதை உணர்ந்தமையால்தான் அவர் கொல்லபப்ட்டார். கார்க்கியின் மரணம் இயற்கையானது என சொல்லிய அரசே சில வருடம் கழித்து அவரையும் மகனையும் கொன்றமைக்காக உளவுத்தலைவர் யகோதாவைக் குற்றம் சாட்டி கொலைசெய்தது. யகோதா ஸ்டாலின் உத்தரவில்லாமல் அதைச் செய்திருக்கமாட்டார் என சின்னக்குழந்தையும் அறியும்.
ஒருநாள் நான் நித்யாவிடம் நா தழுதழுக்க கண்ணீருடன் கோர்க்கியின் இந்த வீழ்ச்சி குறித்து பேசியதை நினைவுகூர்கிறேன். அது என்னுடைய சொந்த வீழ்ச்சி. நான் சிறுவயதில் படித்து உள்ளம் பொங்கிய நாவல் ‘தாய்’. நான் முன்னுதாரணமாகக் கொண்ட படைப்பாளி கோர்க்கி. அவரது சரிவு என் நெஞ்சில் உள்ள எழுத்தாளன் என்ற பிம்பத்தின் சரிவே.
நித்யா சொன்னார், பாவம் கோர்க்கி. அவர் உண்மையான மரணத்தை அஞ்சவில்லை, ‘பிம்ப மரணத்தை’ அஞ்சினார். எல்லா எழுத்தாளர்களும் அஞ்சுவது அதையே. எழுத்தாளன் தான் இறந்தபின்னும் தன் ஆக்கங்கள் மூலம் வாழவேண்டுமென்ற பெரும் கனவு கொண்டவன். அதற்காக தன் சொந்தவாழ்க்கையையே பலிகொடுக்க தயங்காதவன். அந்த பிம்பம் தன் கண்முன் இறப்பதை அவன் மரணத்தைவிடமேலானதாகக் கருதுவான். அப்பிம்பம் அவ்னுடைய ஆக்கம், அவன் மகன் போல. தான் இறப்பதைவிட தன் மக்கள் இறப்பதையே மனிதர்கள் மிக அஞ்சுவார்கள். அதன் பொருட்டே சமரசம் செய்துகொள்வார்கள்.
ஆனால் கோர்க்கி உண்மையை எதிர்கொண்டிருந்தால் மேலும் வீரியம் மிக்க பிம்பத்துடன் காலத்தில் வாழ்ந்திருப்பார். ஏனேனில் உண்மையே அழிவற்றது. அத்துடன் பிணைத்துக் கொள்ளும்போதே மனிதர்களும் அழிவில்லாதவர்கள் ஆகிறார்கள். எழுத்தாளனை அமரனாக்குவது அவனுள் இருந்து வரும் உண்மையே.
கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி, அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றொ தர்மம் என்றோ என்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என்று வைத்துக் கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒரு துளி என அவர் உணரவில்லை. தன்னை சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரை கூன்விழ வைத்தது.
கார்க்கியின் கடைசி நாட்கள். எவ்வளவு பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய துயரத்தில் இருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும்.
கோர்க்கி கர்மவீரர். என் நூலில் அவரை நான் அப்படியே காட்டப்போகிறேன். எதிர்மறை விமரிசனங்களை சொல்லப்போவதில்லை. ஆனால் எல்லா கர்ம வீரர்களுக்கும், அவர்கள் எந்தத் துறையில் எப்படிபப்ட்ட சேவை செய்தாலும் சரி, வாழ்க்கையின் இறுதியில் மிகப்பெஇய வெறுமையும் தனிமையுமே காத்திருக்கிறது. அது வாழ்வின் நியதி. குரூரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை
ஆகவேதான் பார்த்தசாரதி கர்மயோகியாக இரு என்கிறார். ‘யோகாத்ம சிந்தனை’ என்றால் என்ன என்று நடராஜ குரு விளக்கியிருக்கிறார். அது டைலடிக்ஸ் என்று மேலைச் சிந்தனையில் சொல்லப்படும் முரணியக்கமே.
பிரபஞ்சமென்ற மாபெரும் முரணியக்கத்தை ஒவ்வொரு காலக்கணத்திலும் பார்ப்பவனே யோகி. அம்முரணியக்கத்தின் ஒரு துளியே தான் என அவன் உணர்வான். ஆகவே அவன் தன் கடமையைச் செய்வான், அதற்கு ஒரு பலனை தானே கற்பிதம் செய்துகொண்டு அதை எதிர்பார்க்கமாட்டான். அது நினைப்புக்கு எட்டாத மாபெரும் முரணியக்கத்தின் ஊகிக்கமுடியாத விளைவாக இருக்கும் என்று அறிந்து தன்னில் தான் நிறைவு கொள்வான்.
நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும்போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக் கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம்.
அச்சொற்களை மீண்டும் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்கிறேன். குருபாதங்களுக்கு என் அஞ்சலி
[25-3- 2007 ல் ஊட்டி ·பெர்ன் ஹில், நாராயணகுருகுலத்தில் நடந்த நித்ய சைதன்ய யதி நினைவு கூட்டத்தில் ஆற்றிய மலையாள உரை]
மறுபிரசுரம்