கயா – இன்னும் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

கயா கோயில் பிரச்சினையின் பின்னணி குறித்து இன்னொரு கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிறந்த வரலாற்று ஆசிரியரும், பௌத்த அறிஞருமான கொய்ன்ராட் எல்ஸ்ட் இதன் ஆசிரியர். பிரச்சினையின் வேர் உண்மையில் பிளவுவாத பௌத்தத் தரப்புகளே அன்றி இந்துக்கள் அல்ல என்று இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. நீங்கள் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பிரச்சினை செய்வதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். ஆனால் உண்மையில் அவை இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து அமைதியையும் சமாதானத்தையுமே வலியுறுத்தி வந்துள்ளன. 1990களில் கயாவில் இருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்த முயன்றவர்கள் தூண்டிவிடப்பட்ட பௌத்தர்களே.

கெய்ன்ராட் எர்ஸ்ட்

எல்ஸ்ட் சொல்லும் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கத் தக்கது. பௌத்தத்தின் முக்கிய எதிரிகளாக இன்று இருப்பவை கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம் ஆகிய ஆபிரகாமிய சித்தாந்தங்களே. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது புத்த நாடாக இருந்த மலேசியா நான் வேலைக்குச் சேரும்போது இஸ்லாமிய நாடாகி விட்டிருந்தது. அனேகமாக என் மகள் கல்லூரியில் படிக்கும்போது தென் கொரியாவிலும், வியட்நாமிலும் பௌத்தம் பெரும்பான்மை மதமாக இருக்காது. (இப்போதே, உலகில் மிக அதிகமாகக் கிறிஸ்தவ மிஷனரிகளை அனுப்பும் நாடு என்ற “புகழை” தென்கொரியா பெற்றிருக்கிறது). இந்த ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்து உலகளவில் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத சர்வதேச பௌத்த அமைப்புகளும் துறவிகளும், பௌத்தத்திற்கு முழு சுதந்திரமும், மரியாதையும் அளித்திருக்கும் இந்திய இந்துக்களை விரோதிகளாகக் கருதிக் களமிறங்குவது ஒரு குரூரமான வேடிக்கை. கொடுமையை எதிர்க்கத் துணிவற்றுப் போய்த் தங்களுக்கு உதவும் சாதுவைக் குச்சியால் அடிக்கிறார்கள். இதுதான் கயை விஷயத்தில் நடந்து கொன்டிருக்கிறது.

அன்புடன்,
ஜடாயு

http://bharatabharati.wordpress.com/2012/03/15/the-background-of-the-mahabodhi-temple-controversy-koenraad-elst/

முந்தைய கட்டுரைகோட்டி – கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியின் சனாதனம்-6