அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். நலமா? “நான் கடவுள்” திரைப்படம் வந்த நேரம். அப்பொழுது எனக்குப் புத்தகத்தின் மீது ஆர்வம் குறைவுதான். நண்பன் ஒருவன் “நான் கடவுள்” படம் “ஏழாம் உலகம்” புத்தகத்தின் உக்கிரத்தை 20% கூடத் திரையில் கொடுக்கவில்லை” என்று கூறினான்.
‘நான் கடவுள்’ படமே என்னை உலுக்கிய நிலையில், மீதி உலுக்கலையும் எதிர் கொள்ளத் தயாராய் “ஏழாம் உலகம்” புத்தகத்தை வாங்கினேன் (நான் வாங்கிய முதல் புத்தகம் இதுவே). கருப்பு நிற அட்டையின் கீழே வெள்ளை நிறத்தில் “ஏழாம் உலகம்”. எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் உலவிக்கொண்டிருந்தது. ஒரு நல்ல நாள் பார்த்துப் படிக்கத்தொடங்கினேன். சுத்தமான நாஞ்சில் நாட்டு மொழி (நானும் நாஞ்சில் நாட்டவன்தான்). 10, 20 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஏனென்றால் அப்பொழுது அதிகம் புத்தகம் படித்துப் பழக்கம் இல்லாதவன். “ஏழாம் உலகம்” எனது அறையில் அடங்கிக் கிடந்தது.
பின்னர் நான் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டு சுஜாதா, பாலகுமரான், ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து சிறிது காலம் நாஞ்சில் நாடன், ராமகிருஷ்ணன் என்று உலவிக்கொண்டிருந்தேன். தங்களின் வலையை தினமும் படிக்கப் படிக்க உங்களது மொழி மெல்ல மெல்லப் புரியத்தொடங்கியது.
மீண்டும் ஒரு நாள் அலுவலகத்தில் நண்பர்கள் மூலம் “ஏழாம் உலகம்” பற்றிய பேச்சு. அந்த நண்பர்கள் (இருவரும் பலகாலம் புத்தகம் படிப்பவர்கள்) ஏழாம் உலகத்தைப் படிக்க முற்பட்டதாகவும், ஆனால் நாஞ்சில் நாட்டு மொழியைக் கடக்க இயலாமல் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் கூறினர். நாஞ்சில் நாட்டு மொழி, மற்றும் உங்களின் எழுத்தின் மீது எனது புரிதலின் முன்னேற்றம் ஆகியவற்றின் துணையோடு இம்முறை நான் “ஏழாம் உலகம்” படிக்கத் தயாரானேன்.
பிச்சைக்காரர்களின் இருள் உலகம். அந்த அடர் இருட்டிலும் சுடர்விடும் நக்கல், நையாண்டி, சிறு சிறு மகிழ்ச்சி, அவர்களை முதலாகக் கொண்டு பிழைக்கும் ஒருவன், வியாபார யுக்தி, அவனது குடும்பம் என்று நிகழ்வுகள் எங்கெங்கோ விரிகிறது. புத்தகத்தின் பல இடங்களில் அப்படியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மேலே படிக்கமுடியாமல் திணறியிருக்கிறேன். குறிப்பாக தனக்கு ஒரு ஊனமுற்ற குழந்தை (ஒற்றைவிரல்) பிறந்ததும் அதனை எவ்வாறெல்லாம் கொஞ்சினாள் என்று தாய் விவரிக்கும் இடம். அதே போல் அதன் தந்தையும் குழந்தையை முதல் முறை தொட முயலும் தருணம். அந்தத் தாய் ஓர் இடத்தில் கூறுவாள் “அந்த ஒற்றை விரல் கொண்ட கையினை மீண்டும் மீண்டும் தடவிக் கொடுத்தேன் அதில் விரல் வளர்ந்து விடாதா என்று ஒரு எண்ணத்தில்”. என்னை மிகவும் உருக்கிய இடம். மூளையை மனது தோற்கடிக்கும் இடங்கள் பல. ஆனால் அதே “ஒற்றைவிரல்” கடைசியில் கதையைப் புரட்டிப் போட்டபோது மறுபடியும் புத்தகம் மூடினேன். இந்தப் புத்தகத்தை அப்படியே தமிழ்நாட்டில் திரைப்படமாக எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே!.
எனக்கு மிகப்பெரும், மிக முக்கியமான அனுபவத்தைக் கொடுத்த ஒரு அற்புதமான புத்தகம் “ஏழாம் உலகம்”. சிக்னலிலும், கோவிலிலும் பிச்சைக்காரர்களைக் காணும் போதெல்லாம் ஏழாம் உலகம் முன்வந்து என்னை மிரட்டுகிறது. பலமுறை பிச்சைக்காரர்களைக் கடந்து சென்று பின்னர் புத்தகத்தின் மிரட்டலால் திரும்பி வந்து அவர்களுக்குப் பிச்சையிட்ட அனுபவமும் உண்டு.
ஓர் இருள் உலகத்தைக் கதைக்களனாகக்கொண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகம் “ஏழாம் உலகம்”. அதனை எழுதவேண்டும் என்ற எண்ணமே பாராட்டத்தக்கது. “ஏழாம் உலகம்” அனைவரும் படித்து அறியவேண்டிய ஓர் அனுபவம். இன்றும் “நான் கடவுள்” திரைப்படம் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பனின் வார்த்தைகளே மனதில் தோன்றுகிறது.
இப்படிக்கு,
பிரவின் சி.
அன்புள்ள பிரவின்,
ஏழாம் உலகத்தை நிறுவுவது அந்த மொழியும்கூடத்தான். எருக்குவும் குய்யனும் வேறு மொழியில் பேசியிருக்கமுடியாது. பொதுவாக எந்த ஒரு நாவலுக்குள்ளும் நுழைவதற்கு ஒரு மனத்தயாரிப்பு தேவை. அந்த உலகுக்குள் நுழைவது வரை ஒரு தடுமாற்றம் இருக்கும். புனைவுகளை அதிகம் வாசிக்காதவர்களுக்கு அந்தத் தடுமாற்றமே தடையாக அமைந்து விடலாம்.
உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழாம் உலகம் இருளைப்பற்றிய நாவல். ஆனால் ஒளியைப்பற்றிப் பேசுகிறது. இருள் இல்லாமல் ஒளியை அறியமுடியாதே.
ஜெ