அன்புள்ள ஜெ ,
இவரை நான் நேராக சந்தித்துள்ளேன. பசுமைப் புரட்சிக்கு முன்பு இந்தியாவில் 110000 அரிசி வகைகள் இருந்தன, அதனை FAO-வும் அங்கீகரித்துள்ளது, இதில் 90% சதவிகிதம் பசுமைப்புரட்சி அழித்துவிட்டது, பசுமைப் புரட்சியே ஒரு பெரிய தோல்வி என்றும் இவர் கூறினார். அதனைப் பலவகையில் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று பட்டது .
Green Revolution என்ற வார்த்தை அமெரிக்காவில் உருவாகி அதனை இந்திய அரசியல்வாதிகள் அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிச்சு இதனை விவசாயிகள் மீது திணித்தனர். இதனால் நாம் இழந்த பாரம்பர்ய விவசாயம் மிக அதிகம். அதற்கு மேல் நமது விவசாயத் தற்கொலைகள், பூச்சிக் கொல்லி மருந்துகள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் நாம் இழந்த விதைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14000 வருடத்தின் ஞானம். இது இயற்கையும் மனிதனும் சேர்ந்து நிகழ்த்திய ஆட்டம், இதனைப் பசுமைப் புரட்சி 30 வருடத்தில் அழித்துவிட்டது.
இவர் செய்யும் வேலை மிக முக்கியமான ஒன்று. இவர் தனியாளாக 720 அரிசி வகைகளை ஒவ்வொரு அரிசி வகையின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்து தொகுத்து அதனை எந்த ஒரு கம்பெனியும் மரபணு மாற்றம் செய்து விற்க முடியாதபடியும்,விவசாயிகளே அதனை ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்ய வழிவகுத்துள்ளார். அந்த அரிசிவகைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு சொந்தம் என்று ஒரு புத்தகமும் பதிப்பித்துள்ளார். இவரின் நேர்காணல் , மற்றும் இணைய தளம்:
http://www.youtube.com/watch?v=x7WiKL953sY&feature=BFp&list=FLSIv0fba-0HjVLiqXxZ95Tw
சில வகை அரிசிகள் ஒரு நெல்லில் மூன்று அரிசி, ஒரு நெல்லில் இரண்டு அரிசி, 10 அடி ஆழம் இருந்தாலும் வளரக்கூடிய நெல், வெள்ள எதிர்ப்பு, வறட்சி எதிர்ப்பு, வெள்ள வறட்சி இரண்டும் சேர்ந்த எதிர்ப்பு சக்தி, உப்புத்தண்ணீரில் வளரக்கூடிய நெல், இது மாதிரி ஒவ்வொரு அரிசிக்கும் ஒரு குணநலன் உண்டு. நிறமும் வேறுபடும். மரபணு மாற்றத்தால் வாசனையையோ, நிறத்தையோ பாரம்பரிய அரிசியைப்போல் கொண்டுவர இயலவில்லை. மரபணு மாற்றம் ஒரு தொழில்ரீதியான விளையாட்டே தவிர, அது அறிவியல் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மரபணு மாற்று வந்தால் உணவின் பன்முகத்தன்மை மாறிவிடும். சில கம்பெனிகள் கையில் உலக உணவுப் பாதுகாப்பு போய்விடும். விளைச்சல் மிகுந்த பாரம்பரிய அரிசிகள் உள்ளன. அதனை சர்வதேசக் கம்பெனிகளால் அறிவு சலவை செய்யப்பட்ட வேளாண் பல்கலைகழகங்கள் சீண்டக்கூட வரவில்லை. ஆனால் சர்வதேசக் கம்பெனிகள் மரபணு மாற்றம் கொண்டுவந்த அரிசியை இவர்கள் இறக்கிவிட ஆவலுடன் இருக்கிறார்கள்.
இதன் பின்புலத்தில் வரப்போகும் மசோதா “BRAI” (biotechnology regulatory Authority of India), மரபணு மாற்றத்தைப் பற்றி BRAI தவிர யாரும் எதிர்க்கருத்து தெரிவிக்க இயலாதபடி ஒரு மசோதா. வெளிநாட்டு வேளாண் கம்பெனிகளுக்குத் தகுந்தபடி அதில் அனைத்து எதிர் வாதங்களும் வராதபடி அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். அதிலும் வேளாண் விஞ்ஞானிகளே முடிவெடுக்க முடியும்.
இதையும் கூடங்குளத்தையும் ஒரு அளவுக்கு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. எந்த விஞ்ஞானி அவர் கற்றதை எதிர்த்துக் கருத்து சொல்லுவார், யாரும் கூறமாட்டார்கள். கைல துட்டு வாயில தோசை. முற்றிலும் அயோக்கியத்தனமான ஒன்று என்னவென்றால் மரபணு மாற்றத்தைப் பற்றி எதிர்க்கருத்து இருந்தால் சிறையாம். இந்த மசோதா வந்தால் விதையும் விவசாயியின் கையை விட்டுப் போய்விடும். விதைதான் விவசாயியின் உயிர் நாடி. விதையை விவசாயி விலை கொடுத்து வாங்கும் நிலைமை வந்தால், இந்திய கிராமங்கள் முற்றிலும் விற்கப்பட்டுவிடும்.
நம்மாழ்வார் அய்யா தலைமையில் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விதைகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதனைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குப் போதுமான அளவு விஷயம் சென்றடைவதில்லை. அவர்கள் உண்ணும் உணவின் பன்முகத்தன்மை முற்றிலும் அழிக்கப்படும் நிலைமை உள்ளது. அந்த தளத்தில் இவர்கள் ஆற்றும் பணி மிகமுக்கியமான ஒன்று .
நன்றி
லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்