பின்நவீனத்துவம் புதிதா?- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

பின் நவீனத்துவம் போன்ற புத்தம்புதிய விஷயங்களை உடனுக்குடன் இறக்குமதிசெய்து படித்தால்தான் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியுமா என்ன?… பின்நவீனத்துவ எழுத்துமுறைகள் இப்போது பிரபலமாக இல்லை என்று நீங்களே இன்னொரு கட்டுரையில் சொல்கிறீர்கள்.. [தமிழ்ச்சிறுகதை பற்றிய டைம்ஸ் மலர் கட்டுரையில்]

சுரேஷ் முர்த்தி

அன்புள்ள சுரேஷ்,

நான் இப்பகுதியில் பின்நவீனத்துவம் குறித்து எழுதவந்ததைப்பற்றி விளக்கவேண்டும். ஒருவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய ஒரு விவாதத்தின் பகுதியாக கேட்ட வினாவுக்கு பதிலிறுத்தேன், அவ்வாறு மேலும் சில கேள்விகளுக்கு பதிலிறுக்க நேர்ந்தது.

பின்நவீனத்துவம் ஒரு ‘அதிநவீன’ கோட்பாடு அல்ல. சிலகாலங்களுக்கு முன் மொழியியல் மானுடவியல் உளவியல் முதலிய சில துறைகளில் உருவான சில புதிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு சமகாலச் சிந்தனைகளை விளங்கிக்கொள்ள முயன்றார்கள். அவ்வாறாக உருவகிக்கபப்ட்ட ஒரு கண்ணோட்டமே பின்நவீனத்துவம் என்பது. இன்றைய சூழலில் பழைய நவீனத்துவ சிந்தனைப்போக்கின் பல அம்சங்கள் காலாவதியாகிவிட்டன என்றும், இன்றைய சிந்தனைகளின் பின்நவீனத்துவப் போக்கு உள்ளது என்றும், முன்வைக்கபப்ட்டது. அந்த ஆய்வுகளையே நாம் பின்நவீனத்துவ அணுகுமுறை என்கிறோம்.

இந்தக் கோணத்தில் நமது சமகால சிந்தனைகளையும் எழுத்துக்களையும் ஆராய்வது நமக்கு சில புதிய விளக்கங்களை அளிக்கக் கூடும். ஆகவே அதை அறிந்துகொள்வது அவசியமானது. மற்றபடி இவை இன்றைய ‘புத்தம்புது’ சிந்தனைகள் என்றோ , ‘உலகமே பின்நவீனத்துவ பாணியில் சிந்திக்கிறது’ என்றோ சொல்வது மிக அபத்தமான கூற்றாகும்.

சென்ற பத்துவருடங்களில் பின்நவீனத்துவ சிந்தனைகள் சார்ந்து முன்வைக்கப்பட்ட அணுகுமுறைகளும் கருத்துமுறைகளும் பெரும்பாலும் மறுக்கபப்ட்டுவிட்டன. பின்நவீனத்துவ அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எழுதப்பட்ட சோதனை இலக்கிய முயற்சிகள் பின்தங்கிவிட்டன. இன்று அது ஒரு ‘மோஸ்தர்’ அல்ல. ஒரு அறிவுத்தளம் மட்டுமே.

இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.

ஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.

முந்தைய கட்டுரைஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைமகாபாரதம் -ஒரு கடிதம்