பொதுப்பிரச்சினையும் புரிதலும்

ஜெ,

பொதுப்பிரச்சினைகளில் எதுவும் சொல்வதில்லை என்பதை விளக்கியிருந்தீர்கள். அந்த விளக்கம் மிகத் தெளிவாக அப்பட்டமாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் எவருக்கும் வர வாய்ப்பே இல்லையே. அதேபோல நீங்கள் பொதுப்பிரச்சினைகளில் திட்டவட்டமாகக் கருத்துச் சொன்னால் என்ன சிக்கல் வரப்போகிறதென நினைக்கிறீர்கள்?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

கீழே உள்ள கடிதத்தை வாசிக்கவும்.

ஜெ

ஆசிரியருக்கு ,

உங்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் எந்த விஷயத்தையும் அதன் முழுப் பரிமாணத்தில் பார்ப்பவர். சமயத்தில் நீங்கள் சொல்ல வருவதை உடனடியாக என்னால் உள் வாங்க முடியாது, நெடு நேரம் ஆகும். மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பதன் மூலமே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் மக்கள் ஆட்சி முறையின் மேல் நம்பிக்கை உள்ளவர். லட்சியவாதக் குடிமை சமூகம் குறித்துப் பல கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். அறம் வரிசைக் கதைகள் லட்சியவாதம் குறித்த உங்களது உள்நோக்கிய பார்வை. நீங்கள் தர்க்கம் முறைப்படி அறிந்தவர். நான் உங்களிடம் சந்தேகம் கேட்பது விவாதமாக இல்லை. குழப்பத்தின் அடிப்படையில்தான்.

கொள்ளை சம்பவங்களை மட்டுப்படுத்த தற்போதைய ஜனநாயக இந்திய யதார்த்தத்தில் காவலமைப்புக்குக் கொலை புரிவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது சரியா? உங்களது மொத்தக் கட்டுரையை ஒரு வரியில் சுருக்க முயலவில்லை. டீக்கடை அரட்டைகளில் முதிராப்பருவத்தில் “வெக்காளி இப்படித்தாண்டா பண்ணனும். அப்பதான் அடங்குவாங்க” என்றெல்லாம் பேசுவது நினைவுக்கு வருகின்றது. இந்த சம்பவத்தின் மறு பக்கத்தின் மறு பக்கம் பார்த்து என்ன நடந்தது என்று சொல்லி உள்ளீர்கள். அது அப்படி இருந்தாலும் இதற்கு இதுதான் வழியா? உங்களை வேறு வழி சொல்லுங்கள் எனச் சொல்லவில்லை. இந்த வழி சரியா? இந்திய சமூகம் பல்வேறுபட்ட சமூகங்களின் கோர்ப்பாய் இருப்பது, அதில் எல்லாமே புனிதமாய் இருப்பது அவசியம் இல்லை, இருக்கவும் இயலாது. இந்த வகை சிக்கல்களுக்கு உயிர்ப்பலிதான் சரியான வழியாக டீக்கடை பெஞ்சுகளில் பேசப்படும், உயிர்ப்பலி உண்டாகும் பயம் விட்டால் வேறு வழி இல்லை என்றே முடிவு சொல்லப்படும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு நிச்சயம் மக்களாட்சி முறையை வலு செய்வதாய் இருக்காது, மக்கள் ஆட்சியின் புற்று நோயாகத்தான் இருக்கும். இந்த உயிர்ப்பலி தாண்டி ஒரு வழி இருக்கலாம், அது இன்றைய தினம் புலப்படாமல் இருக்கலாம். அதைத்தேடுவதும், அதன் அவசியம் சொல்லுவதும் முக்கியம் இல்லையா? அதெல்லாம் நடைமுறை இல்லை என சொல்லி முடித்து விடலாம். அப்படியானால் எதற்கு லட்சியவாதம், நடைமுறை வாதம் ஒன்றே போதுமே. எது நடைமுறை எனத் தீர்மானிக்க ஒரு குழு இருக்கும். மேலிருந்து அந்தக் குழு சுண்டும் விசையின் திசையில ஆடிச் செல்வதே வழியா? காந்தியம் ஒரு காலத்தின் நடைமுறை தாண்டி லட்சியவாதம் காண வந்த அழைப்புதானே.

இது இலக்கியவாதியின் பார்வை எனச் சொல்லி இருந்தீர்கள். ஒரு சிறுகதையிலோ, நாவலிலோ, கவிதையிலோ இந்த வகைப் பார்வை இருந்திருந்தால் அது எனக்குள் இந்தக் குழப்பத்தை உண்டாக்கி இருக்காது, ஆனால் ஒரு கட்டுரையில் வரவும் இந்தக் குழப்பம். இது ஒரு கேள்விக்கான பதில், இந்தக் கேள்வியின் பின் நிறைய உரையாடல் நிகழ்ந்து இருக்கிறது, அதன் ஒரு வெளிப்பாடே இந்த பதில் என்று நீங்கள் நினைத்து இருந்தால் நான் சொல்ல ஒன்றுமில்லை. இந்த இடத்தில் என் நிலைமை இரண்டு நாள் விட்டுவிட்டு வகுப்புக்கு வந்த மாணவன் போல ஒரு குழப்பமிருக்கும் அவ்வளவே.

உலகத்தில் நிகழ்ந்த எந்த சர்வாதிகாரப் படுகொலையும், அந்த அதிகார எந்திரத்தால் மக்களின் நல்லதுக்கே என சொல்லப்பட்டிருகிக்கின்றது. அந்தப் படுகொலைகள் காலத்தின் கட்டாயம் எனவும், அதை வேறு வழியின்றி செய்ய வேண்டியது ஆயிற்று என்றுமே சொல்லப்பட்டு இருக்கிறது. நீங்கள் சொல்வதிலும் சர்வாதிகாரக் குரலின் நிழல் இருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என சொல்வதன் அறப் பின்னணியும் எனக்குத் தோன்றுகின்றது. பூரண சமூகம் தொலைதூரக் கனவே, ஆனால் அதற்கான அறைகூவலையும் மறந்துவிட்டு நடைமுறைவாதம் பேசுவது போல் உள்ளது. நான் நினைப்பதும் தவறாக இருக்கலாம். மறு வாசிப்பு செய்து பார்க்கிறேன்.

-நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

என்னுடைய அந்தக்கட்டுரையே பொதுவாகப் பிரச்சினைகளில் ஒரு தரப்பைப்பேசும் நிலைப்பாடு எடுப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றித்தான்.

முக்கியமான சிக்கலென்பது நாம் எந்த அளவுக்கு நுட்பமாக இரு தரப்பையும் பேசினாலும் அதை ஒரு தரப்பாக எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டு நம்மிடம் அதற்கான விளக்கங்களைக் கேட்கும் வாசகர்கள்தான். அவர்களிடம் பேசமுடியாதென்பதனாலேயே பெரும்பாலும் மௌனமாக இருக்கிறேன் என்கிறேன்.

உங்கள் கடிதம் அத்தகைய வாசகப்புரிதலுக்கு மிகச்சிறந்த உதாரணம். நான் அத்தனை எழுதிய பின்னரும் நான் ஒரு நிலைப்பாடு எடுப்பதாக நீங்களே முடிவுசெய்துகொண்டு அந்த நிலைப்பாட்டுக்கு என்னிடம் விளக்கம் கோருகிறீர்கள்.

ஏன் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பதற்கு உங்கள் கடிதமளவுக்குப் பெரிய சான்று வேறு இல்லை.

ஜெ

அன்புள்ள ஜெ,

நீங்கள் பொதுப்பிரச்சினைகளில் ஏன் பேசுவதில்லை என்று சொன்னீர்கள். நீங்கள் பல சிக்கலான விஷயங்களில் கருத்துச்சொல்கிறீர்கள். அவற்றையும் வாசகர்கள் இதேபோல எளிமையாகப் புரிந்துகொள்வார்கள் என்ற அபாயம் உள்ளது அல்லவா?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

உண்மை. தமிழ்நாட்டில் ஒரு கருத்தை அதன் நேர்-எதிர் தரப்புகளுடன் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மிகமிகமிகக் குறைவு. நம் கல்விமுறையே அதற்கு எதிரானது. இணையத்தில் உதிர்க்கப்படும் கருத்துக்களில் இருந்து இந்த எண்ணம் ஆழமாக உறுதிப்படுகிறது. எதையும் சட்டென்று மேலோட்டமாக வாசித்து ஒரு முடிவுக்கு வந்து ஒரு வரியை அலட்சியமாகத் தூக்கிப்போடுபவர்களே நம்மில் அதிகம்.

ஆனாலும் பேசியாக வேண்டியிருக்கிறது. மிகச்சிலரான நல்ல வாசகர்களுக்காக. உண்மையிலேயே கருத்துக்களை விவாத வடிவில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்காக.

உடனடித்தன்மை இல்லாத விஷயங்களைப் பேசும்போது பெரும்பாலான மேலோட்டமான வாசகர்கள் உள்ளே வருவதில்லை. அத்துடன் அக்கட்டுரைகளை கறாரான தர்க்க மொழியில் முன்வைக்கும்போது கூர்ந்து வாசிக்கும் பழக்கமில்லாத பெரும்பாலானவர்களை வெளியே தள்ளிவிடலாம். எஞ்சுபவர்களில் அதிகம்பேரும் நல்லவாசகர்களாக இருப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

உடனடி விஷயங்களைப் பேசும்போது உள்ளே வரும் வாசகர்களை எதிர்கொள்வது பெரிய சிக்கல். அவர்களின் அறியாமை உருவாக்கும் தன்னம்பிக்கையை சமாளிக்கவே முடியாது.

ஜெ

அன்புள்ள ஜெ,

மீண்டும் இதே கேள்வி.

நீங்கள் பொதுப்பிரச்சினையை விவாதிப்பதில்லை. சரிதான். ஆனால் காவல்கோட்டம் விருது உடனடித்தன்மை கொண்ட பிரச்சினைதானே? அதை ஏன் விவாதித்தீர்கள்? மாதவராஜ் எழுதிய பதிவை வாசித்தீர்களா? உங்களை வழக்கம்போல ‘பாசிச ஓநாய்’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறார். நீங்கள் எழுதிய வரலாற்று விளக்கமோ இலக்கிய நுட்பமோ ஒன்றுமே அவரிடம் செல்லுபடியாகவில்லை. இதை மட்டும் ஏன் செய்கிறீர்கள்?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

விட மாட்டீர்கள் போல. நான் முதலில் வந்த அந்த அநாமதேய அவதூறைப் பொருட்படுத்தவில்லை. என் குழுமத்தில் அதற்கு என் விளக்கத்தைச் சொல்லியிருந்தேன். ஆனால் அதைப் பிரசுரிக்க நண்பர்கள் விரும்பியபோது தடுத்துவிட்டேன். காரணம் அந்த அவதூறுக்கு அதற்குமேல் இடம் கொடுக்கக்கூடாதென்பதே.

அதை விவாதிக்கக் காரணம் மாதவராஜ்தான். எனக்கு அவர் மேல் பெரும் மரியாதை உண்டு– இப்போதும். அவரைப்போன்ற நேர்மையும் அர்ப்பணிப்புமுள்ள அரசியல் செயல்பாட்டாளர்கள்தான் இன்றும் நம் சமூகத்தின் மனசாட்சி என நான் நினைக்கிறேன். அத்தகைய பல தோழர்களுடன் தொடர்ச்சியாக இருபதாண்டுக்காலம் தொழிற்சங்கத்தில் பணியாற்றியிருக்கிறேன்.

அவரது எளிமையான சிந்தனைக் கருவிகளைக்கொண்டு நான் விவாதிப்பவற்றைப் புரிந்துகொள்ளமுடியாது. அவரால் கட்சி அவருக்களித்த அடிப்படைக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். அதை நானும் நன்கு அறிவேன்.

ஆனால் அவரைப்போன்ற ஒருவர் சட்டென்று அவதூறு மற்றும் சாதியக்காழ்ப்புகளுக்கு செவிகொடுத்தது எனக்கு வருத்தமளித்தது. அதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். அந்தரங்கமாகவேனும் அதைப் புரிந்துகொண்டிருப்பார் என்றே நினைக்கிறேன். எனக்கு மார்க்ஸியர்களின் மனசாட்சி மேல் நம்பிக்கை உண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைகயாவும் தர்மஸ்தலாவும்
அடுத்த கட்டுரைசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்