புல்வெளிதேசம் – 2,புதர்த்தீ

புல்வெளிதேசம் – 3

ஆஸ்திரேலியாவின் நிலத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அங்கே மேல்மண் ஆழமில்லை. ஒரு நிலத்தின் அனைத்து உயிரம்சமும் இருப்பது மேல்மண்ணில்தான். அடிமண் என்பது பெரும்பாலும் இறுகிய ஈரமில்லாத பாறை. மேல்மண் ஆழமில்லாத காரணத்தால் அங்கே பெரிய மரங்கள் தழைத்து வளர முடியாதென்று சொல்கிறார்கள். அங்கே உள்ள மரம் என்பது பெரும்பாலும் யூகலிப்டஸ்தான். வானுயர வளர்ந்தாலும் யூகலிபடஸ¤க்கு ஆழமான வேர் கிடையாது. ஊட்டிபோன்ற மேல்மண் இல்லாத ஊர்களில் யூகலிப்டஸை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்து நட்டு வளர்த்தார்கள் ஆங்கிலேயர்கள். ஊட்டியில் யூகலிப்டஸ் வேருடன் பிடுங்கிவிழுந்து கிடப்பதை அடிக்கடி பார்க்கமுடியும்.

கொஞ்சம் ஆழமாக மண் போகும் பள்ளமான பகுதிகளில் பைன் மரங்கள் உள்ளன. சில இடங்களில் புதர்கள். இதைத்தவிர ஆஸ்திரேலிய நிலம் என்பது முழுக்க முழுக்க புல்வெளிதான். நான் பார்த்தது ஆஸ்திரேலியாவின் ஒரு சிறு பகுதி– தெற்கு ஆஸ்திரேலிய கடலோரநிலம். அது ஒரு பெரிய கண்டம். அங்கே பெரும்பகுதி பாலைவனம். ஆனால் என்னுடைய கண்கள் ஆஸ்திரேலியா ஒரு மாபெரும் புல்வெளியாகவே நீடிக்கிறது. அலையலையாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் புல்வெளி.

ஆஸ்திரேலியாவில் மரங்கள் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணம் அங்கே மழை மிக மிகக் குறைவு என்பதுதான். பூமத்தியரேகையை ஒட்டியபகுதிகளில் மழை உண்டு. தெற்கே உடைத்துக்கொட்டும் பெரிய மழை பெய்வதேயில்லை. எப்போதும் தூறல்தான். மண் ஈரமாகுமே ஒழிய ஊறித்தேங்குமளவுக்கு மழை பெய்யாது. மலைகளில் பெய்யும் மழையும் பனி உருகும் நீருமாக ஊறி சிறிய ஆறுகளாக ஓடுகின்றன. ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பெரிய ஆறுகள் ஏதுமில்லை.

ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் கடுமையானது. இந்தியாவில் கடுமையான கோடைகாலம் என்பது வட இந்தியாவில்தான். தக்காணபீடபூமியில் இருந்து கிட்டத்தட்ட இமயமலை அடிவாரம் வரையில் உக்கிரமான கோடைகாலம் வந்து மண்ணை எரியச்செய்யும். டெல்லியில் கோடைகாலத்தில் சாலைகளில் பகலில் மனிதநடமாட்டமே இல்லாமல் ஆகும் விந்தையைப் பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவிலும் கிட்டத்தட்ட அந்த அளவுக்கு வெப்பம் உருவாகிறது. ஆனால் ஆஸ்திரேலிய வெப்பத்தின் மாற்று இன்னும் அதிகம். ஏனென்றால் அங்கே காற்றில் ஈரப்பசை மிகவும் குறைவு. காரணம் மேல்மண்ணுக்கு அடியில் கடுமையான சுண்ணாம்புப்பாறைகள் ஈரமில்லாது இருப்பதுதான்.

ஆகவே ஆச்திரேலியாவில் கோடைகாலத்தில் வெப்பம் உச்சத்தை அடைகிறது. சிறிய பொறிகள் கூட சட்டென்று பெரும் தீயாக ஆகின்றன. அத்துடன் அங்குள்ள முக்கியமான தாவரங்கள் எல்லாமே தைலத்தன்மை கொண்டவை. இக்காரணத்தால் புதர்த்தீ என்று அவர்கள் சொல்லும் பெரும் காட்டுத்தீ ஆஸ்திரேலியாவின் முக்கியமான இயற்கைச்சாபம். சென்ற பெப்ருவரியில் மெல்பர்ன் அருகே  நிகழ்ந்த பெரும் காட்டுத்தீ பல நாட்கள் தொடர்ந்து எரிந்து பலரைக் காவுகொண்ட செய்தி நம் தொலைக்காட்சிகளில்கூட தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

ஏப்ரல்பத்தாம்தேதி நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் முறை, எங்களை வெளியே கூட்டிக்கொண்டுசெல்ல அவர் காலையில் வந்தார். எங்கே போகலாமென பேசிக்கொண்டோம். புதர்த்தீ வந்த மேரீஸ்வில் கிராமத்துக்குச் செல்லலாம் என்று முருகபூபதி சொன்னார். எங்கே வேண்டுமானாலும் போகலாம், ஆஸ்திரேலிய நிலத்தைப் பார்த்தால்போதும் என்று நான் சொன்னேன். மெல்பர்ன் நகரிலிருந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்றோம். நாங்கள் சென்றபோது மழைபெய்து சிலநாட்கள் ஆகியிருந்ததனால் புல்வெளிகள் காய்ந்திருந்தன. தவிட்டுநிறமான காய்ந்த புற்பரப்புகள் பெரிய அலைகளாக பக்கவாட்டில் வந்துகொண்டே இருந்தன. பாலைவனம் என்றே சிலசமயம் தோன்றியது

அங்கே முக்கியமான தொழில் என்பது மாடு ஆடு வளர்ப்புதான். பல ஆயிரம் ஏக்கர்களுக்கு புல்வெளியை வேலிபோட்டு வளைத்து பண்ணையாக ஆக்குகிறார்கள்.  அதற்குள் ஆடுகளையும் மாடுகளையும் விட்டு வளர்க்கிறார்கள். வளர்க்கிறார்கள் என்பது தப்பு. அவை வளர்கின்றன. கிட்டத்தட்ட காட்டுவாழ்க்கை. புல்வெளியில் மேய்ந்து அங்கேயே தூங்கி குட்டிபோட்டு பெருகுகின்றன. ‘அறுவடை’ மட்டும் செய்துகொள்கிறார்கள். குதிரைகளில் சென்று மாடுகளை திரட்டிவருகிறார்கள்.வேலி வலிமையானது அல்ல. மெல்லிய கம்பிவேலி. அதில் சில நாட்கள் மெல்லிய மின்சாரத்தை ஓடவிடுகிறார்கள். அதைத் தொட்டு மின்னதிர்ச்சி பெற்று பழகிய பின்னர் அந்த வேலி மாடுகளின் உள்ளத்தில் ஒரு சமூக ஒழுக்கமாக மாறிவிடுகிறது. பிறகு மின்சாரமே தேவையில்லை.

எங்கு நோக்கினாலும் மாடுகள்தான். இந்தியாவில் ஜெர்ஸி இனப்பசுக்கள் என இவை எழுபதுகளில் அறிமுகம் செய்யப்பட்டன. கனத்த தலையும் திமில் இல்லாத மேஜைபோனற முதுகும் சிறிய கொம்புகளும் கொண்ட பெரிய பசுக்கள் அவை. இந்தியாவில் வெள்ளைப்புரட்சியின் ஒரு பகுதியாக இவை வந்தன.

ஜெர்சி நல்ல பசு. நாட்டுப்பசுவைவிட இருமடங்கு தீனி ,மூன்றுமடங்கு பால். ஆனால் அக்காலத்தில் அவை அடிக்கடி நோய்வந்து செத்துப்போகும். குறிப்பாக தகரத்தில் கொட்டகை போட்ட தொழுவங்களில் கோடைகாலத்தில் அவை தளர்ந்து விழுந்து சாகும். கொட்டகை மேல் வைக்கோலை போட்டு அதில் நீரைக்கொட்டி குளிர்விக்க வேண்டும். முதுகில் நீர் தெளித்த சாக்கை காயக்காயப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மாதம்தோறும் ஊசி போடவேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவின் குளிரில் அவை மகிழ்ச்சியாக மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன். நம்முடைய நாட்டுப்பசு அங்கே குளிரில் செத்துவிடும்.

ஆனால் உயிர்கள் எங்கும் வாழும். இப்போது நம்நாட்டில் இருப்பவை ஜெர்சியின் பத்தாம்தலைமுறை. அவற்றின் முடி குறைந்துவிட்டது. நன்றாகவே வெயில்தாங்குகின்றன. வெள்ளைப்புரட்சி இந்தியாவில் ஒரு பெரிய வெற்றி. குஜராத்தில் மொரார்ஜி தேசாயின் வழிகாட்டலில் குரியன் ஆரம்பித்தது. இன்று இந்தியாவில் உண்மை மதிப்பில் விலை குறைந்துகொண்டே இருக்கும் பொருட்கள் பாலும் கோழியிறைச்சியும் முட்டையும்தான். என் சின்னவயதில் பால் மிக அபூர்வமான ஒரு பொருள்.  வெள்ளைப்புரட்சியால்தான் நம் குழந்தைகள் இளம்வயதில் அதிக பால்குடிக்கின்றன. நம்மைவிட உயரமானவர்களாக வளர்கின்றன.

புல்வெளியைத்தாண்டி புதர்த்தீ வந்த கிராமத்துக்குச் சென்றுசேர்ந்தோம். போகும்வழியிலேயே யூகலிப்டஸ் காடுகள் அப்படியே கரிக்கட்டையாக நிற்பதைக் கண்டோம். விசித்திரமான சர்-ரியலிச ஓவியக்காட்சிபோல.  வெண்ணிற வானத்தின் பின்னணியில் கன்னங்கரிய காடு. யூகலிப்டஸ் விசித்திரமான மரம். எரிந்து கருகினாலும் முளைத்து உயிர்கொண்டு எழும். ஆகவே அவற்றை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்ற நாள் ஈஸ்டரை ஒட்டிய விடுமுறைக்காலம். ஆகவே ஏராளமானவர்கள் கிராமத்திற்கு வந்திருந்தார்கள். அது ஒரு சுற்றுலாத்தலமாக ஆகிவிட்டிருந்தது. வழியெங்கும் பளீர் மஞ்சள்நிற காப்புடை அணிந்த சிறுவர்களும் பெற்றோர்களும் நின்று உண்டியல் ஏந்தி நிதிவசூல் செய்தார்கள். கிராமத்தை மறுநிர்மாணம் செய்யப்போகிறார்கள் என்றார்கள்.

அங்கே சிலநாட்களுக்கு முன்னர் மழைதூறியிருக்கிறது. புல் தழைத்திருந்தது. கடுமையான புதர்த்தீ வெப்பத்தில் உருகிய கார்களும் மோட்டார்பைக்குகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. வீடுகள் எரிந்தபின் உருகி நெளிந்த தகரங்கள் மட்டுமே நின்றன. எங்கு பார்த்தாலும் கரியான மரங்கள்

புல்வெளியில் சென்று அமர்ந்துகொண்டோம். யூகலிபடஸ் எரியும்போது அதன் தடியும் காய்களும் வெடித்து கிட்டத்தட்ட எரிகுண்டுகள் போல பறந்து வெகுதூரத்துக்கு சென்று விழுமாம். புல்வெளியில் பல இடங்களில் அவ்வாறு விழுந்த தீக்கோளங்கள் எரிந்து கருகிய பகுதிகளைப் பார்த்தேன்.

புதர்த்தீ பற்றிய எச்சரிக்கைகளை அரசு பல இடங்களில் வைத்திருக்கிறது. புதர்த்தீக்கு எளிதில் இரையாகிறவர்கள் இருவகையினர். தீ வெட்டவெளியை நெருங்காது  எண்ணி நின்றவர்கள். தீ ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிற்கிறது என இவர்கள் எண்ணும்போது அது காற்றில் கிளம்பி சூழ்ந்து விடுகிறது. மேலும் புதர்த்தீயின் அதிக வெப்பம் காரணமாக வெப்பக்கதிர்வீச்சே ஒருவரைக் கொல்ல போதுமானது. இரண்டாவதாக காரில் தப்பி ஓடமுயல்பவர்கள். கார் மிக எளிதில் தீப்பற்றிவிடக்கூடியது. தீயின்போது தீ அணுகாத வீடுகளில் இருப்பதே பாதுகாப்பானது என்று அறிவிப்புகள் சொல்லின.

கிராமத்தில் ஓய்வான ஒரு கிராமியத்திருவிழாவின் மனநிலை. குழந்தைகள் கூவி சிரித்து ஓடி விளையாடின. பாட்டிகள் இளவெயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய கிராமத்து இசைக்குழு கிட்டாரை இசைத்து பாடிக்கொண்டிருந்தது. கண்ணாடிக்கதவுக்கு அப்பால் ‘பப்’புக்குள் ஏராளமானவர்கள் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். நிறையபேர் குழந்தைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். வெள்ளைக்கண்கள் கொண்ட குண்டு குழந்தைகள் பொம்மைகள் போல தெரிந்தன. ஒரு விஷயம் கவனித்தேன். வளர்ந்தபின்னர் வெள்ளையர் கறுப்பர் சீனர் இந்தியர்  என ஒவ்வொரு இனத்துக்கும் ஒருவகை உடல்மொழி இருக்கிறது. ஆனால் கைக்குழந்தைகளுக்கு உலகம்முழுக்க ஒரே உடல்மொழிதான்

மாலைவரை அங்கேயே சுற்றிவந்தோம். புல்வெளியில் நடந்தபடி இலக்கியம் அரசியல் என பேசிக்கொண்டோம். கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் சென்னையில் கொஞ்சநாள் இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியர். இரு பெண்குழந்தைகள் அவருக்கு. இலக்கியவாசகர். சினிமா விமரிசனங்கள் எழுதுவதும் உண்டு. நான் கடவுள் படம் பற்றி ஒரு நல்ல விமர்சனம் எழுதியிருக்கிறார்.

திரும்பும்போது கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளையும் மனைவியையும் பார்த்தோம். அந்தியில் திரும்பி முருகபூபதியின் வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.  என்ன பார்த்தீர்கள் என்றார் முருகபூபதி. நிலமும் முகங்களும்தான் ஒர் ஊர் , அதைப்பார்த்தேன் என்று சொன்னேன்.

 
 

 

 

 

கிருஷ்ணமூர்த்தியும் நானும்

 

 

புதர்த்தீ

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம்.1,மெல்பர்ன்
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா :கடிதம்