நித்ய சைதன்ய யதி

nithyachaithanyayathi.jpg.image.784.410

 

‘ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்” என்றார் நித்ய சைதன்ய யதி

”என்ன கஷ்டம்? என் காலில் இத்தனைபேர் விழுந்தால் நான் உயிரைப்பணயம் வைத்து தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பகவத் கீதை படிப்பதற்கும் தயார்” என்றேன்

”அது சாதாரணக் கொடுமை. வேறு எவ்வளவு இருக்கிறது!” நித்யா சொன்னார். ”பிரச்சினை ஒன்று, சாமியார்களுக்கு காவி இன்றியமையாதது. ஆனால் சாயம்போகாத காவித்துணி பருத்தியில் கிடைக்கவே கிடைக்காது. இது என் ஐம்பதாண்டுக்கால துறவு வாழ்க்கையின் அனுபவம். காவிச்சாயம் வியர்வையில் ஒட்டி இரவில் உடலில் பல இடங்களில் அடிபட்ட தடம் போல தெரியும். சாமியார் அடிபட்டிருக்கிறார் என்றால் அபவாதம் ஆகும்தானே? எங்காவது ஆற்றில் குளத்தில் குளித்தால் சாயம் கலங்கி ஓடும். அதை அழுக்கு என்று நினைத்து நம்மை குளிக்காத அழுக்குச்சித்தர் என்று நினைத்து பக்தர்கள் நமக்கு அணிமா மகிமா சக்திகள் உண்டா என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.சாயம் போகிறது என்றால் சாமியார் சாயம் வெளுத்துவிட்டதே என்பார்கள்…”

”பாலிஸ்டர் சாயம்போகாதே”

”போகாது.ஆனால் நான் அதை ஒற்றைவேட்டியாகத்தானே கட்ட முடியும்? கோவணம் வெளியே தெரியும். நான் அந்தராத்மா பற்றி ஆழமாக பேசிக் கொண்டிருக்கும்போது அடியவர்கள் அடியுடையைப்பார்த்தால் குழம்பிப்போக மாட்டார்களா? மேலும் அது காற்றடித்தால் இருபக்கமும் எழுந்து பறக்கும். சிறகுகள் போல. குரு உடலுடன் சொற்கத்துக்கு எழுந்து செல்லப்போகிறார் என்று சில பக்தர்கள் எண்ணி பரவசம் அடைந்துவிட்டால் வேறுவழியே இல்லை. போய்த்தான் ஆகவேண்டும். எல்லாருமாகச் சேர்ந்து தூக்கி மேலே ஏற்றிவிட்டாலும் விடுவார்கள்… வம்பு”

நித்யா படும் பாட்டை நானும் நேரில் பார்த்திருக்கிறேன். வேன் பிடித்து பக்த மகாஜனங்கள் கூட்டம்கூட்டமாக வந்து இறங்குவார்கள். ”சசீ எடீ. அச்சன்றெ கையில் பிடிச்சு கொள்ளூ…நாராயணா மிண்டாதே வா” என்றெல்லாம் கூச்சல்கள்.

எல்லாரும் இறங்கியபின் சின்னப்பிள்ளைகளை வரிசையாக நிறுத்தி உபதேசம். ”குரு கேட்கும்போது பெயரை நன்றாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் குச்சியாலே அடிப்பார். பாடச்சொன்னால் ‘தெய்வமே காத்துகொள்க’ பிரார்த்தனையை தெளிவாக பாடவேண்டும். அம்புஜம் நீ தெளிவாக பாடுவே தானே. நீ முன்னால் நில்லு. டேய், ராமா நீ சொதப்புவே. நீ பின்னால் நில்லு. உன் ஓட்டைப்பல்லைக் காட்டக்கூடாது. வீட்டுக்குப்போனால் கழட்டி கையில் கொடுத்துவிடுவேன்… அடீ பாகீரதீ பார்த்துவாடீ…தறவாட்டில் பிறந்தவளைப்போல இருடீ எரப்பே…”

”எரப்ப உங்க தந்தை, கோரடிக்கல் கேசவன் வைத்தியர். …வந்திட்டாரு…”

”சீ வாய மூடு நாயே..அடிச்சேன்னா”

”ஆமா அடிப்பீங்க… ஒருமாதிரி நல்லவார்த்தை வாயிலே வருது எனக்கு”

”அப்பா இங்க வச்சு சண்டை வேண்டாமே…இது குருகுலம்”

”குருகுலம் நொட்டிச்சு…இவளையும் கொன்னுட்டு நானும் சாவேன். பத்து முப்பது வருஷமா இந்த மாரணத்தை நான் கெட்டி சுமக்கிறேன்…”

”மாரணம் சுமக்கத்தானே எங்கப்பா நாப்பது பவனும் எட்டேக்கர் ரப்பரும் தந்தார்?”

”உங்கப்பன் குடம் உடைச்சான்…சும்மா வாடீ எரப்பே…”

ஒருவழியாக பக்தர்குழு குருகுல வாசலை அணுகுகிறது. அத்தனைபேரும் பிரமைபிடித்ததுபோல அமைதியாகிறார்கள். முகத்தில் எப்போதும் பாய்ந்து ஓடப்போவதற்கு முந்தைய பாவனை எஞ்சிநிற்கும் குடும்பத்தலைவர் கைகூப்பி வணங்கி உள்ளே செல்கிறார். வெளியே வரும் பிரம்மசாரி ”ஆரு?”என்றதும் ”குரு தர்சனத்துக்கு வந்ததாக்கும். குருவருள் அடியங்களுக்கு வேணும்…”

”உள்ள போங்க.சத்தம் போடப்பிடாது…”

அனைவரும் கனவில் செல்பவர்கள்போல மெல்ல நகர தரையில் அவர்களின் நிழல்கள் கூடவே செல்ல குழந்தைகள் பராக்குபார்த்து ”அம்மா ஆனை”

”சும்ம வாடா”.

 

”ஆனை கையிலே பூ..”

”சத்தம் போடாதே”

”பூவிலே ஒரு லைட்டு”’ .

அம்மா பல்லைக்கடித்து உறுத்துப்பார்க்க ”ஏன், ஆனையப் பாத்தா கிள்ளுறே?”. மேலும் ரகசியக்குரலில் ”ஆனையை பாக்கக்கூடாதா?”

உள்ளே சென்று குருவைக் கண்டதும் குடும்பத்தலைவர் உரக்க ”குருர் பிரம்மா குருர் விஷ்ணோ குருர் தேவோ மஹேஸ்வரஹ! குரு சாட்சாத் பரப்பிரம்ஹா தஸ்மைன் ஸ்ரீ குருவேஹ் நமஹ!” என்று கர்ஜித்தபடி ஓடிப்போய் குருகாலில் விழப்போக கடிதங்களை உறைகிழித்து படித்துக் கொண்டிருந்த நித்யா கிழித்தஉறைகளை போடுவதற்கு வைத்திருந்த குப்பைக்கூடை நடுவே இருக்க குடும்பத்தலைவர் குழம்பி குப்பைக்கூடை வழியாகச் சுற்றி அவர் காலைத்தொட்டு வணங்கி மும்முறை கண்களில் ஒற்றிக் கொண்டு பல்லைக் கடித்தபடி கிசுகிசுப்பாக ”கும்பிடுங்க…ம்ம்” என்றார். பிள்ளைகள் மிரண்ட கண்களுடன் திறந்த வாய்களுடன் கும்பிட பதின்பருவக்குமரி சிரிப்பை அடக்க கீழுதட்டை கடித்தபடி தவிக்க நித்யா ”நந்நாயி வரட்டே”என்று ஆசியளித்தார்

”குரு இவளுக்கு கணக்கு கொஞ்சம் மோசம்…டியூஷன் வச்சாலும் படிக்க மாட்டாள். வெளையாட்டு… கும்பிடுடீ”

பெண்மணி வணங்கி ”மனசுக்கு ஒரு சுகமில்ல குரு’

நித்யா புன்னகையுடன் ”…இனியும் ஒரு நூறுவருஷம் ஸ்த்ரீகள் ஆண்களை சகித்தும் மன்னித்தும்தான் ஆகவேண்டும் .வேறே வழியில்லை…அவர்கள் அப்படித்தான்…போகட்டும்” என்றார்.

”குரு இவளுக்கு எப்போதும் ஒரு கோபம். அடிக்கடி ஒற்றைத்தலைவலி. மூட்டுவலியும் உண்டு…”

”…எல்லாம் சரியாய் போய்விடும்”என்றார் நித்யா. குழந்தையிடம் ”…உன்பேர் என்ன சஸிதரனா?”

நெற்றியில் சந்தனக்குறி போட்டிருந்த, மூக்குவியர்த்த சஸிதரன் அதை சரியாக கவனிக்காமல் உடனே பதற்றத்துடன் கைகூப்பி ”தெய்வமே கைதொழாம் காத்தருள்க என்னெ நீ…”. என கீச்சுக்குரலில் அரைக்கால் கட்டையில் எடுக்க ”அய்யே…” என்று அக்கா வாய்பொத்திச் சிரிக்க குடும்பத்தலைவர் ”..அவன் அப்டி ஒரு மடயனாக்கும் குரு…இன்னும் ஏபிசிடி படிச்சு முடியல்ல” என்றார்.

”ஆனா நல்லா பாடுறானே… நல்ல தைரியசாலியாகவும் இருக்கான். சஸி இங்கவா நாம ரெண்டுபேரும் சேர்ந்து பாடுவோம். தெய்வமே கைதொழாம். காத்தருள்க என்னை நீ….”

சஸிதரன் ஆங்காங்கே தப்பான இடங்களில் மூச்சு வாங்கியும் ஓரக்கண்ணால் சகோதரர்களை பார்த்தும் பாடி முடித்துவிட்டு திருப்தியுடன் ”நான் ஜனகணமனயும் பாடுவேன்…” என்று சொல்ல ”அதைச் சாயங்காலம் பாடலாம்…” என்றார் நித்யா.

”நீங்க இந்தக் கம்பாலே அடிப்பீங்களா?”

”இதுவா? இது சிங்கம் புலி காண்டாமிருகம் எல்லாவற்றையும் அடிப்பதற்கான கம்பு தெரியுமா?”

”ஏன்?”

”சின்னப்பிள்ளைகளை கடிக்கவந்தால் பின்னே சும்மா விடுவதா? அடிக்க வேண்டாமா?”

”துப்பாக்கியாலே டோ டோன்னு சுடணும்..”

”அப்படியெல்லாம் சுடக்கூடாது. அப்புறம் அவர்களெல்லாம் போய் அப்பாவிடம் சொல்லி விடுவார்கள். அப்பா நம்மைக் கூப்பிட்டு காதைப்பிடித்து கசக்கி இனிமே சுடுவியா சுடுவியா என்று கேட்பார்…”

சஸி ஓரக்கண்ணால் குடும்பத்தலைவரை பார்த்து ”அப்பாவா?” என்றான்.

”ஆமா. இந்த அப்பா இல்லை. இது ஒரு பாவம் அப்பா. பெரிய அப்பா இருக்கார். என்னோட அப்பா…”

”அவருக்கும் தாடி உண்டா?”

”பின்ன? எனக்கே இவ்வளவு பெரிய தாடி இருக்கிறதே? அவர்தான் ஆடு மாடு நாய் கோழி எல்லாத்துக்கும் அப்பா….”

குடும்பத்தலைவர் ‘சின்னப்பிள்ளை விளையாட்டை’ ஒருவழியாக முடிவுக்குக் கொண்டு வந்து தன் ஆன்மீகச் சிக்கல்களைச் சொல்கிறார். ஆபீஸில் மதிப்பு இல்லை. மாடுமாதிரி வேலை செய்தாலும் வசைதான் மிச்சம். பெண் வயதுக்கு வந்தாகிவிட்டாள். அவள் படிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் டிவி. ஏதாவது சேர்த்து வைக்கலாமென்றால் வீட்டுக்காரி கண்ணில்பட்டதையெல்லாம் வாங்குகிறாள். பிரிட்ஜ் இல்லாவிட்டால் தான் என்ன? குளிரவைத்த உணவு உடம்புக்கு கேடு. ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கெ. குருவுக்குத்தெரியும்…பேசாமல் எல்லாத்தையும் தலைமுழுகிவிட்டு குருகுலத்துக்கே சாமியாராக வந்துவிடலாமென்றால் பிள்ளைகளின் முகத்தைப்பார்த்தால் அப்படி மனம் வரவில்லை. குருவருள் இருந்தால் எப்படியாவது சமாளித்து மேலேபோகலாம்.

நித்யா அவர் தலையில் தொட்டு கண்மூடி ஏதோ சொல்லி ஆசீர்வாதம் அளித்தார். ”எல்லாம் சரியாகப்போய்விடும்…” என்றார். அவர் வணங்கி பின்பக்கம் காட்டாமல் நகர்ந்தார்.

நான் ”நித்யா, நீங்கள் என்ன மந்திரம் சொன்னீர்கள்?” என்றேன்.

”மந்திரம் அவருக்காக அல்ல. எனக்காக. ஆசியளிப்பவன் அந்த இடத்தில் இருக்கவேண்டுமென்றால் அவனுக்கு மனவலிமை வேண்டும். அதற்குத்தான் மந்திரம்…”

”என்ன மந்திரம்?”

”…மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் போவார்கள். நான் மட்டும் சென்றபடியே இருப்பேன்!” என்றார் நித்யா ஆங்கிலத்தில் ”…எனக்கு ஆழமான ஒரு வலிமையை அளிக்கும் மந்திரம் அது..பள்ளிக்கூடத்திலேயே படித்துவிட்ட வரி…”

பக்தர்கள் நித்யாவை கடவுளுக்கு நிகராக கொண்டுசெல்லும் இடங்கள் உண்டு. பேதி கண்டிருந்தாலும் பாலும் பழமும்தான். சமயங்களில் மூன்றுவேளையும் அதுவே. ஒருமுறை நித்யாவின் ஆசிரியர் நடராஜ குருவை அழைத்துச்சென்ற ஒரு கூட்டத்தில் நீர் தெளித்து தெளித்து காலைமுதலே வைக்கப்பட்டிருந்த ரோஜாமாலையை சூட்டினார்கள். உடம்பெங்கும் படைபடையாகக் கொட்டிக் கடித்த சிற்றெறும்புகளால் நடராஜ குரு பல்லைக்கடித்துச் சிவந்து நடந்தபோது ”என்ன ஒரு தேஜஸ் இல்ல?”என்று கூட்டம் மகிழ்ந்தது.”தேள் கீள் இருந்திருந்தால் நடராஜ நிருத்யமே கண்டிருப்பார்கள்” என்றார் நித்யா

சொற்பொழிவாற்றும்போது எந்த ஓசையும் இல்லாமல் கண்மூடி அமர்ந்து ஆழ்ந்து தியானம் செய்பவர்களே அதிகம். பேச்சுமுடிந்து கூட்டமாக ‘ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி’ என்று சொன்னதுமே சரியாக விழித்துக் கொண்டு நிறைவுடன் பெருமூச்சுவிடப் பழகியவர்கள். குரு ஆசியளித்து ஏதேனும் கொடுக்க வேண்டுமென்றுன் ஆசைப்படுவார்கள். அவருக்கு கூழாங்கல் பொறுக்கும் வழக்கம் உண்டு. அழகிய கற்களைப்பொறுக்கி ஒரு சின்ன ஜாடியில் போட்டு வைப்பார். கொஞ்சநாள் அதில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார் — பக்தர்களில் ஒருவர் வந்து குரு ஆசியளித்துக் கொடுத்த சிவலிங்கத்தை பூஜையறையில் வைத்து மூவேளை நைவேத்யம் செய்து வணங்குவதாகச் சொல்லும்வரை.

இன்னொருவருக்கு அது சாளக்கிராமம் என்று எண்ணம். சைவ வைணவப்போரே நிகழ வாய்ப்பிருந்தது. ”அடாடா, இனி என்ன கொடுப்பது?”என்றார் நித்யா.

”நாமெல்லாம் இந்துக்கள். கொடுக்கும் எதையுமே கடவுளாக ஆக்க நம்மால் முடியும் குரு. ஆலஞ்சோலையில் ஒரு இடத்தில் பழைய இரும்புவாளி ஒன்று கவிழ்க்கப்பட்டு வழிபடப்படுகிறது”என்றேன்.

நித்யா பெருமூச்சுடன் ”தெய்வங்களை திட்டக்கூடாது. திட்டத்திட்ட தெய்வம் பெருகும். தெய்வம் இல்லை என்று சொன்னவன் உடனே தெய்வமாகி விடுவான். அதனால்தான் யாராவது என்னிடம் கேட்டால் நான் அவன் என்ன சொல்கிறானோ அதையே சொல்லி தப்பித்து விடுகிறேன்”

வேறுவகை ஆட்களும் வருவதுண்டு. ஞானம் தேடி. பரட்டத்தைலை,முகவாயில் மட்டும் தாடி, ஒல்லியான உடலில் ஜிப்பா. தோளில் பை. அதில் ஆன்மீக நூல்கள். குறிப்பேடு. பெரும்பாலும் நல்ல கணீர் குரல் இருக்கும். சம்ஸ்கிருதம் ஒலிக்கும் மலையாளம் . சிலசமயம் ஆங்கிலம். அபூர்வமாக தமிழ். வந்ததுமே சம்பிரமமாக ஒரு நமஸ்காரம். சிலசமயம் நல்ல சம்ஸ்கிருத மந்திரம். ஒருவர் ”யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை !”என்று கூவியதை பார்த்திருக்கிறேன்.

ஒல்லி மனிதர் அமர்ந்ததும் ஆழமாக பெருமூச்சுவிட்டு குனிந்தே அமர்ந்திருக்க நித்யா அவர் பாட்டுக்கு புத்தகம் வாசித்தார். அவர் ஓரக்கண்ணால் பார்க்க நித்யா பொருட்படுத்தவில்லை. பார்வை நகம் கடித்து அமர்ந்திருந்த என்னைத் தீண்டிச் சென்றது. மீண்டும் ஒரு பெருமூச்சு. அதற்கும் எதிர்வினை இல்லை என்று கண்டு அறுந்தது போல சடேரென்று ”…இப்பதான் பாண்டிச்சேரியிலேருந்து வரேன்…”

”ஓகோ? அங்கயா வீடு?” என்றார் நித்யா.

பதிலுக்கு ஒரு சுயஏளனக் கசப்புச் சிரிப்பு .”ஏது வீடு, என்ன வீடு? விட்டாத்தானே அது வீடு? விட்டவனுக்கு விட்டதெல்லாம் வீடுதானே?குரு, நீங்க என்ன சொல்றீங்க?”

”வாஸ்தவம்” என்றார் குரு தாடியை தடவியபடி கண்கள் சிரிக்க.

”அரவிந்தாஸ்ரமத்திலேருந்து அப்டியே எறங்கிட்டேன்…”

‘அடாடா , பஸ்ஸ¤க்கு பணம்?”

”அதை நான் எப்பவுமே பையிலே வச்சிருப்பேன்…குரு, அரவிந்தர் ஸமாதியிலே புஷ்பங்கள் வைக்கிறாங்க. ஸமாதியிலே எதுக்கு புஷ்பம்? அது சாயங்காலமானா வாடும். வாடாத புஷ்பங்களை அல்லவா நாம் தேடணும்?”.

” சமாதியிலே பிளாஸ்டிக் பூ வைக்கமாட்டாங்களே”

அவர் சற்று தடுமாறி ”நான் அதைச் சொல்லல்ல. ஞானம் வாடாத பூ அல்லவா?”

”பரமார்த்தம்” என்றார் குரு.

”அதுக்கு முன்னாடி புட்டபர்த்தியிலே கொஞ்சநாள் இருந்தேன். ஆத்மாவிலே கேள்விகள் பெருகிட்டே இருந்தது…”

”ஆமாமா அங்க இருந்தா அப்டித்தான்…”.

”… அதுக்கு முன்னாடி ரிஷிகேசத்திலே….”.

”சிவானந்தாஸ்ரமத்திலேதானே?” .

ஆச்சரியத்துடன் அவர் ”எப்டித்தெரியும்?”

”அங்க சாப்பாடு நல்லா இருக்கும். சப்பாத்திக்கு நெய்விட்ட டாலும் சப்ஜியும் உண்டு. கோடைகாலமானா தயிர்..”

ஒல்லி சற்று சிந்தனை செய்து என்னை புருவம் வளைத்து நோக்கி ”சிவானந்தர் ஒரு ஞானி இல்லை. வெறும் சாமியார்…”

”ஆமா. மொட்டைவேறு போட்டிருக்கிறார்” என்றார் நித்யா. ””தாடி இலேன்னா என்ன சாமியார்?”

”குரு, இனி எனக்கு நீங்கதான் குரு. எனக்கு மெய்ஞானம் வேணும் குரு…”

”நீங்க சாப்பிட்டாச்சா?”

”இல்லை. வந்ததுமே நேரா இங்கதான் வந்தேன். குருசரணம் மம ஸ்வஸ்தின்னு…”

”போய் சாப்பிடுங்க. இங்கயும் இண்ணைக்கு சப்பாத்திதான். பச்சைப்பட்டாணிக் குருமா…”

”குரு, இதுக்கு என்ன மந்திரம்?” என்றேன் அவர் போனதும்.

நித்யா கண்களால் சிரித்து ”தண்ணீர்! தண்ணீர்! எங்கும் தண்ணீர்! குடிக்கத்தான் ஒரு துளி இல்லை!”என்றார்.

 

Apr 6, 2010 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைஇலக்கியம், இருள்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71