புல்வெளிதேசம்.1,மெல்பர்ன்

பாங்காங் முதல் மெல்பர்ன் வரையிலான பயணம் கொஞ்சம் நீளமானது. விமானப்பயணங்களில் என்னால் தூங்கமுடிவதில்லை. அந்த அளவுக்குப் பழகவில்லைபோலும். மண்ணிலிருந்து முப்பதாயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம் என்னும் உணர்வை வெல்லவே முடிவதில்லை. மேலும் காது அடைத்துக்கொள்ளும்போது விமானத்தின் இசையும் இரைச்சலும் பேச்சுகளின் ஒலியும் கலந்து கீழ்ஸ்தாயியில் ஒலிப்பதனால் ஒருவகையான கனவுநிலை உருவாகிறது. காய்ச்சலின்போதோ சிலவகை மாத்திரைகள் உண்ணும்போதோ உருவாவதுபோன்ற ஒரு அரை மயக்கநிலை.

இரவு எட்டுமணிக்கு மெல்பர்ன் வந்துசேர்ந்தோம். பிரமையிலேயே வெளியே வந்து அம்புக்குறிகளால் வழிகாட்டப்பட்டு பெட்டிகளை மீட்கும் இடத்துக்கு வந்தேன். ஆஸ்திரேலியா அவர்கள் மண்ணுக்கு நுழையும் விஷயங்களைப்பற்றி மிகக் கவனமாக இருக்கிறது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடலால் சூழப்பட்ட அந்நிலம் அதற்கே உரிய இயற்கைச்சமநிலை கொண்டது. அங்கிருந்த தாவரங்களும் விலங்குகளும் தங்களுக்கே உரிய தனிப்பாதையில் பரிணாமம் கொண்டவை. பல உயிரினங்கள் அங்கே மட்டுமே உள்ளவை, மிகச்சிறந்த உதாரணம் கங்காரு.

அங்கே குடியேறிய வெள்ளையக் காலனியர்கள் தங்களுக்குரிய தாவரங்களையும் உயிரினங்களையும் அங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள். புதியசூழலில் உயிர்ச்சமநிலை இல்லாத  நிலையில் பல உயிர்கள் மிதமிஞ்சி பெருகின. ஆங்கிலத்தில் எதிர்மறையான அபார வளர்ச்சியைச் சொல்ல ‘கான்ஸரஸ்’ என்கிறார்கள். உதாரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த முயல் ஒருகட்டத்தில் அக்கண்டத்தையே மூடிவிடுமளவுக்கு பெருகியது. பெரும் திட்டங்கள் மூலம் வருடக்கணக்கில் கொன்று அதை ஒழிக்க வேண்டியிருந்தது– இன்னும் ஒழிக்க முடியவில்லை.

இப்போது ஆஸ்திரேலியா இதில் மிகமிகக் கவனமாக இருக்கிறது. தவாரப்பொருட்கள், மாமிசப்பொருட்கள் போன்றவற்றை எவ்வகையிலும் அனுமதிப்பதில்லை. எங்களிடம் அப்படி எந்தப்பொருளும் இல்லை. அருண்மொழி வைத்திருந்த ஷாம்பூவை பிடுங்கி பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பையில் வீசினார் பரிசோதகர். என் பெட்டியைத்திறந்து பார்த்தார்.  உள்ளே அடுக்கடுக்காக புத்தகங்கள். ”என்ன புத்தகங்கள்?” என்று கேட்டார். ”நான் எழுதிய நூல்கள்” என்றேன். மேற்கொண்டு பார்க்காமல் ”நீங்கள் போகலாம்” என்றார்.

வெளியே நல்ல குளிர் இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். பெட்டியுடன் வெளியே செல்லும்போதே குளிரடித்தது. ஆனால் அது ஒரு பிரமைதான், அவ்வளவு பயங்கரமான குளிர் ஏதும் இல்லை. வெளியே செல்லும் வழியிலேயே டாக்டர் நடேசனும் முருகபூபதியும் எங்களைப் பார்த்துவிட்டார்கள். கையசைத்தார்கள். இந்த விசித்திரமான விஷயத்தை பின்னர் கவனித்தேன். இந்தியாவில் நாம் ஓர் விமானநிலையத்தில் இறங்கினோம் என்றால் நம்மை அடையாளம் காண கொஞ்சம் கஷ்டப்படுவார்கள் — நாம் ரஜினிகாந்தாக இல்லாமலிருக்கும்பட்சத்தில். வெளிநாட்டில் அந்தச்சிக்கல் இல்லை. உடனே கண்டுகொள்கிறார்கள். மாநிறத்தோலே ஒன்றிரண்டுதான் கண்ணில்படும் என்பதனால்தான்

டாக்டர் நடேசன் கோட்டு கொண்டுவந்திருந்தார். ஆவலாகப் போட்டுக்கொண்டேன். ”ஒண்ணும் கேக்கலியா?” என்றார் முருகபூபதி.”புஸ்தகங்களை பாத்ததுமே விட்டுட்டான்” என்றேன். ”இலங்கைன்னா புச்தகம் இருந்தா தள்ளிகிட்டு போயிடுவான்” என்றார் . பெட்டிகளைத்தள்ளியபடி நடந்து லி·ப்ட் வழியாகச்சென்று கார் பார்க்கிங் பகுதியை அடைந்தோம்.  முதல் உலக நாடுகளுக்கே உரிய சுழல்சுழலான மாபெரும் கார்நிறுத்துமிடம். அது எ·ப் பிளாக்கா  இல்லையா என்று டாக்டருக்கும் முருகபூபதிக்கும் குழப்பம். ஒருவழியாக காரைக் கண்டுபிடித்து கிளம்பினோம்.

மெல்பர்ன் விமானநிலையம் வழக்கம்போல மெல்பர்னுக்கு சம்பந்தமில்லாமல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து கிளம்பி ஒருமணிநேரம் கிட்டத்தட்ட அறுபது கிலோமீட்டர் சென்றால்தான் முருகபூபதி வசிக்கும் கிராமம் வருகிறது. அது மெல்பர்னின் வெளிஎல்லை. அங்கிருந்து கிளம்பி மெல்பர்னைத்தாண்டி மறுபக்கம் சென்றால்தான் டாக்டர் நடேசனின் வீடிருக்கும் பகுதி.

இரவு பத்து மணிக்கு முருகபூபதி வீட்டுக்குச் சென்றோம். லெ.முருகபூபதி இலங்கையில் நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர். தினக்குரல் நாளிதழில் நெடுங்காலம்  உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்து பதினாறு வருடங்களாகின்றன. அவரது இரு மகள்களுக்கும் திருமணம் ஆகி தனியாக இருக்கிறார்கள். மகன் இருபதுவயதில் ஆஸ்திரேலிய ராணுவத்தில் சேர்ந்து மறுவருடமே ஒரு ஆஸ்திரேலியப்பெண்ணை மணமும் செய்துகொண்டிருக்கிறார்.

”அவன் கிழக்கு திமோருக்கு போகிறான்”என்றார் முருகபூபதி. கிழக்கு திமோர் சுதந்திரம் கிடைத்தபின்னரும்கூட ஐக்கியநாடுகள் சபையின் கண்காணிப்பில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலிய ராணுவம் அங்கே அமைதிப்படையாக இருந்துகொண்டிருக்கிறது. ”அங்கே போர் ஒண்ணும் இல்லியே”என்றேன். ”இருந்தா என்ன? இவனாகவே விரும்பித்தானே சேர்ந்தான்…” என்றார் முருகபூபதி. அவரது மனைவி மாலதி வீட்டில் இருந்தார்கள்.

மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுசெய்த இடியப்பம் சிக்கன் குழம்பு சாப்பிட்டேன். மதியம் சாப்பிடாதது போல் இருந்தது. அல்லது சாப்பிட்டது எந்நேரம் என்ற குழப்பம். எங்களுக்கான அறையில் பெட்டிகளை வைத்துக்கொண்டு வந்து அமர்ந்தோம். முருகபூபதி அவர் தமிழகத்துக்கு முதல்முறையாக வந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரைச்சந்தித்தாராம். அவரது பூர்வீகம் திருநெல்வேலி. மறைந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனுக்கு அவர் உறவினர். அவரது உரவினர்கள் சிலர் அப்போதும் நெல்லையில் இருந்தார்கள். பாஸ்கரத்தொண்டைமானுடைய வீட்டைச் சென்று பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்.

பன்னிரண்டு மணிக்குத் தூக்கம் வராமலேயே தூங்கச் சென்றோம். குளிரில் போர்வைக்குள் சுருண்டு தூங்குவது எனக்குப்பிடிக்கும்– முதல் அரைமணிநேரம். அதன் பின் கைகால் வலிக்கும். மாடியிலிருந்து கீழே விழுந்த உடல் போல கைகால் பரப்பி தூங்குவதுதான் ஊரில் என் வழக்கம்

காலையில் ஏழுமணிக்கு எழுந்துவிட்டேன். முருகபூபதி உரக்க ரேடியோ வைத்திருந்தார். ஆஸ்திரேலியத்தமிழர்களுக்கு வானொலி முக்கியமானது. அதுதான் ஊருடனான தொடர்பு. தமிழில் கதைத்துக்கொண்டே இருந்தது– நுரைத்துக்கொண்டே இருந்தது என்று சொல்ல வேண்டும். எழுந்ததும் தலையைச் சுற்றியது. தமிழக நேரத்தின்படி அப்போது இரவு ஒன்றரை மணி. உடல் அந்தநேரத்தைத்தான் அறியும். திருவனந்தபுரம் மிருகசாலைக்கு வந்த ஒரு அமெரிக்கப்புலி வாழ்நாள் முழுக்க விசுவாசமாக உடலில் அமெரிக்க நேரத்தைப் பேணியது என்பார்கள். ராத்திரியில் பிறந்த குழந்தைகள் ஒருமாதம்வரை ராத்திரியையே விழித்திருக்கும் நேரமாக எண்ணிக்கொண்டு நள்ளிரவில் விளையாடி தாய்தந்தையரை படுத்தி எடுக்கின்றன

ஜெட்லாக் என்னும் உடல்நேரச்சிக்கலை தீர்க்க சிறந்த வழி என்பது சென்ற ஊரின் நேரத்தை மூர்க்கமாக முதல்நாளே பின்பற்றி விடுவதுதான். கஷ்டம்தான். தூக்கித் தூக்கி போடும்தான். ஆனால் அந்த ஒருநாளைத்தாண்டிவிட்டால் பின்னர் பிரச்சினை இல்லை.

அருண்மொழியை அதையெல்லாம் சொல்லி ஏற்கவைத்துக் கொண்டுவந்திருந்தாலும் புதைந்துபோய் தூங்கிக் கொண்டிருந்தாள். மெத்தைப்போர்வையை தூக்கி வீசி புஜங்களைப் பிடித்து தூக்கி அகழ்ந்து எடுத்து உட்காரச்செய்து எழுப்பினேன். கொட்டாவிகள் விட்டபடி வந்து காபிசாப்பிட்டாள். காலையில் ரொட்டியும் குழம்பும் சாப்பிட்டதுமே கொட்டாவி விட்டபடி கண்கள் செருக உட்கார்ந்திருந்தாள். நான் ஆர்வமாக இலக்கியம்பேசி அசப்பில் பார்த்தால் ஆளைக் காணவில்லை. போய்ப்பார்த்தேன். திரும்பி தூங்க முயன்றுகொண்டிருந்தாள். அப்படியே அள்ளி மருந்துகுப்பியைக் குலுக்குவதுபொல குலுக்கினேன். ”இன்னைக்கு தூங்கினா நீ ஒருவாரம் தூங்கிட்டிருப்பே…வெளியே போகிறப்ப விட்டுட்டுபோயிடுவேன்.அப்றம் கேட்கக்கூடாது” என்று சொல்லி மிரட்டி திருப்பி கூட்டிக்கொண்டு வந்தேன்.

காலையில் முருகபூபதி மீண்டும் விமானநிலையம் சென்று மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை கூட்டிவந்தார். தெளிவத்தை ஜோசப் சிறிய உற்சாகமான கரிய மனிதர். கொழும்புவில் ஒரு சாக்லேட் நிறுவனத்தின் கணக்கெழுத்தாளர். எழுபது வயது தாண்டிவிட்டது. சமீபத்தில் நான் மானசீகமாக  எந்த மூத்த எழுத்தாளரிடமும் இந்த அளவுக்கு நெருங்கவில்லை. மிகமிக உற்சாகமான சிரிப்பு, உரத்த குரல், அழுத்தம் திருத்தமானபேச்சு. மலையகத்தில் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஆரம்பபள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்களை கூப்பிடு தூரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்.  தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள்சாவதில்லை என்னும் நாவலையும் சில சிறுகதைகளையும் நான் வாசித்திருந்தேன்.

முருகபூபதி மீன்வாங்கப்போவதாகச் சொன்னார். அவரும் நானும் அருண்மொழியும் ஜோசப்பும் அவரது காரில் கிளம்பி ஒரு பெரிய ‘மால்’லுக்கு  சென்றோம். என் அப்பா எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் சந்தையைப் பார்க்கச் செல்வார். ‘சந்தைகாணல்’ என்று அதற்குப் பெயர். சந்தை பார்ப்பதற்காகவே கிளம்பிச்செல்வதும் உண்டு. சந்தையில் அந்தப்பகுதியின் வாழ்க்கையை மரத்தை விதை வடிவில் பார்ப்பதுபோலப் பார்த்துவிடலாம். விற்கப்படும் பொருட்கள் வழியாக அங்குள்ள விளைச்சலும் உற்பத்தியும் தேவையும் தெரியும். உதாரணமாக கன்யாகுமரிமாவட்டச் சந்தைகளில் நைலான் கயிறுகளும் நீலநிறமான பிளாஸ்டிக் ஷீட்டுகளும் நிறைய விற்கும் –ஈரமான மழைமிக்க நாடு என்பதனால். கூடவே அங்குள்ள மக்கள். மால்களும் அப்படித்தான்

கடைகள்தோறும் வேடிக்கைபார்த்தோம். என்னை பெரிதும் கவர்ந்தவை இரண்டு. ஒன்று காய்கறிக்கடை. தேங்காய் அளவுள்ள ஊதாநிறமான கத்தரிக்காய்கள். பலவகையான கீரைகள்.  நம் நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத அளவுள்ள முள்ளங்கிகள், உருளைக்கிழங்குகள். பலவகையான பீன்ஸ்கள். அவற்றை வாங்கியவர்களில் அதிகமும் சீன இனத்தவரே இருந்தார்கள். ”அவங்கதாம்பா ஒழுங்கா சமைச்சு சாப்பிடுகினம். வெள்ளைக்காரங்க வாங்கிதிங்கிறவங்க” என்றார் முருகபூபதி.

இரண்டாவது சுல்தான் என்னும் மாபெரும் இறைச்சிக்கடை. பெரிய மாட்டுத்தொடைகள் இயந்திரம் மூலம் கனகச்சிதமாக ஓவல் வடிவில் குறுக்காக வெட்டப்பட்டிருந்தன. நடுவே சிறிய வட்டமாக எலும்பு. பெரிய ஒரு பூவின் இதழ்போல இருந்தது. அவற்றை வரிசையாக அழகுற அடுக்கி பாலிதீன் உறைபோட்டு காட்சிக்கு வைத்திருந்தார்கள். விதவிதமான வெட்டிய இறைச்சிகள். சிவப்பின் நிறபேதங்கள். பிரம்மாண்டமான அல்வாக்கடைபோல. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல உறைந்த உரித்த பன்றிகள்.

கடைவாசலில் ஒருவன் இறைச்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கம்பியடுப்பில் எண்ணை பொசுங்கச் சுட்டு ‘எங்கள் கம்பெனி விளம்பரத்துக்காக சார்’ என சும்மா கொடுத்துக் கொண்டிருந்தான். சிறு குழந்தைகள் வாங்கி சப்பித்தின்றுகொண்டிருந்தன. ” நெஜம்மான அன்போட கொடுக்கிறான்” என்றார் தெளிவத்தை ஜோசப்.

ஏராளமான துருக்கியர்கள் தென்பட்டார்கள். பெரும்பாலும் பெரும் குடும்பங்கள். அதீத எடைகொண்ட அப்பாவும் அம்மாவும் குழந்தைகளும் தாத்தாவும் பாட்டியும் கொண்ட குடும்பம் ஒன்று சென்றது– ஒரு வெள்ளையானைக்கூட்டம்போல. அந்தக்கிராமத்தில் துருக்கியர் அதிகம் என்றார் முருகபூபதி. கரிய முக்காடு போட்ட பெண்களும் நிறைய தென்பட்டார்கள். அவர்கள் அரேபிய நேரத்தை கடைப்பிடிக்கிறார்கள். அரேபியா ஆயிரம் வருடம் பழைமையான நேரத்தை கடைப்பிடிக்கிறது.

வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்டோம். எனக்கு தூக்கக்கலக்கத்தில் பேச்சு அவ்வப்போது குழறியது. நான் பார்த்தபோது பலமுறை அருண்மொழியின் கண்விழிகள் மேலே செருகி இருந்தன. இருந்தாலும் பிடிவாதமாக அமர்ந்திருந்தோம்.

மதியம் தாண்டியதும் வெளியே சென்றுவரலாம் என்றார் முருகபூபதி. அருகே ஒரு சிங்கள பௌத்த கோயில் புதிதாகக் கட்டப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் சிங்களர்கள் ஏராளமாக வந்து குடியேறி வலுவான சமூகமாக இருந்தார்கள்.

ஊருக்கு வெளியே ஒரு புல்வெளிநடுவே இருந்தது சிங்கள பௌத்தக் கோயில். இலங்கையில் பிரபலமாக இருப்பது தேரவாத பௌத்தம். ஸ்தவிரவாதம் என்று சம்ஸ்கிருதம். மாற்றமில்லாத என்று பொருள். ஹீனயானம் என்பதன் இன்னொரு பெயர். ஹீனயானிகள் -சிறிய பாதையைச்சேர்ந்தவர்கள்- என்பது மகாயானிகள் போட்டபெயர். புத்தரையே மகாதர்மத்தின் பருவுடல்வடிவமாக பார்க்கும் மகாயான பௌத்தத்தின் நோக்கை ஏற்காமல் அவரை ஒரு வீடுபேறடைந்த ஞானியாக மட்டுமே காண்பவர்கள். ஆகவே இவர்களில் உருவவழிபாடு இருந்ததில்லை. பின்னர் உருவ வழிபாடு வந்தபோதுகூட அதில் மகாயான பௌத்ததின்றைறைவழிபாட்டுத் தன்மைகள் பலதும் இருக்கவில்லை.

கான்கிரீட்டால் கட்டப்பட்ட கோயில். நாங்கள் சென்றபோது யாருமே இல்லை. ஒரு பிட்சு மட்டும் புன்னகைசெய்தபடி கடந்து சென்றார். ஒரு சதுக்கத்தின் நடுவே பெரிய புத்தர்சிலை.  இந்தியாவில் உள்ளது போன்ற புத்தர் அல்ல. அலங்காரங்களும் பெரிய கிரீடமும் கொண்ட மைத்ரேய புத்தர். புத்தர் ஞானத்தின் அவதாரம் என நம்பும் தேரவாதிகள் அவர் மறுபடியும் வருவார் என  எண்ணுகிறார்கள். அந்த இரண்டாம் புத்தரே மைத்ரேய புத்தர். அவர் பெரும் வலிமையுடன் தண்டிக்கும் புத்தராக வருவார் என நினைக்கிறார்கள். இந்த பௌத்தக் கருத்துருவம் சில நூற்றாண்டுகள் கழித்து பட்டுப்பாதை வழியாக மத்திய ஆசியாவுக்குச் சென்று கிறிஸ்துவின் மறுவருகை என்னும் கருத்தாக ஆகியது.

சதுக்கத்தின் நான்கு மூலைகளிலும் போதிசத்துவர்களின் சிறிய கோயில்கள். அவற்றுக்குள் சிறிய உலோகச்சிலைகள். நுட்பமான நகை போல அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிலைகள் அவை. பொன்னிறமான சிலைகள் மூன்று. ஒருசிலை நீலவண்ணமானது

அங்கே அனுராதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட போதி [ அரசமரம்] மரத்தின் கிளையை நட்டு மிகுந்தசெலவில் அதற்கு தட்பவெப்ப நிலையில் இருந்து பாதுகாப்பளித்து வளர்த்து வருவதைக் கண்டோம். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அசோகரின் மகள் சங்கமித்திரை புத்தரின் செய்தியுடன் கையில் ஒரு அரசமரக்கிளையுடன் இலங்கைக்குச் சென்றாள். இலங்கையில் இன்றிருக்கும் பல புனித அரசமரங்கள் அந்த மரத்தின் வழித்தோன்றல்கள்தான்.

இருட்டுவது வரை அங்கிருந்துவிட்டு திரும்பிவந்தோம். குளிர ஆரம்பித்திருந்தது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தாலும்கூட இஸ்லாமியர்ருக்கு இந்துமதம்குறித்தும் இந்துக்களுக்கு இஸ்லாமியமதம்குறித்தும் ஒன்றுமே தெரியாது. அதேநிலைதான் இலங்கையிலும். ஈழத்தவர்களில் பௌத்தம் பற்றிய அறிமுகமோ ஆர்வமோ கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. இன்றைய பிரச்சினைகளுக்கு முன்னரேகூட அதுதான் நிலைமை. சிங்கள மொழியில் இருந்து ஒரு நல்ல படைப்புகூட தமிழர்களால் மொழிபெயர்க்கப்பட்டதில்லை.

திரும்பி வரும் வழியில் குருத்வாரா ஒன்றைப்பார்த்தோம். பெரிய வெங்காய வடிவக் கும்மட்டங்களுடன் தாஜ்மகாலை நினைவுறுத்தும் கட்டிடம். ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒரு முக்கியமான சமூகம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். பிற சமூகத்தவர்களைப்போல  அகதிகளாகவோ அல்லது தொழில்நிபுணர்களாகவோ இவர்கள் வரவில்லை. பெரும்பாலும் விவசாயம்செய்யவே வருகிறார்கள். நிலங்களை வாங்கி கடுமையாக உழைத்து விவசாயம்செய்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் அதிகமாக வாழைப்பழம் உற்பத்தி செய்பவர்கள் இவர்கள்தான். அவர்கள் தங்களை  ஒரு மூடிய சமூகமாகவே வைத்திருக்கிறார்கள். திருமணங்கள் அதிகமும் இந்தியாவில் இருந்துதான்.

ஆஸ்திரேலிய வாழைப்பழம்  இந்தியாவின் ரோபஸ்டா பச்சைவாழைப்பழத்தின் ஒரு வகை. சப்பென்று இருக்கிறது. அதை சர்தார்ஜிகள் வெயில் இல்லாமலேயே விளையவைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

 

 

முருகபூபதி

 

 

போதிசத்வர் கோயில்முன் தெளிவத்தை ஜோசபுடன்

 

 

தெளிவத்தை ஜோசபுடன்

 

புத்த மைத்ரேய சிலை

 

 

தெளிவத்தையின் உற்சாகச்சிரிப்பு

 

போதிசத்வர் சிலை

 

டாக்டர் நடேசனுடன் தெளிவத்தை

 

ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி

  • பயணம்:கடிதங்கள்
  • ஊர்திரும்புதல்
  • முந்தைய கட்டுரைதியானம் கடிதங்கள்
    அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் – 2,புதர்த்தீ