கடற்கரைக்குடி

அன்புள்ள ஜெ,

தங்கள் குடி கட்டுரை படித்தேன். குடி என்பது ஒரு நோய் என்னும் கருத்து முற்றிலும் உண்மையே.
 
எனக்கு கடலோடு மிக நெருங்கிய தொடர்பு உள்ளதனால், எனது சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்..
 
கடற்கரையைப் பொறுத்தவரையில், இது பதின்பருவத்து இரகசிய நோயாகத் துவங்கி முதிற்பருவத்து புற்று நோயாக முடிகின்றது. குடி என்பது ஆண்கள் வயதுக்கு வருவதன் அடையாளம்.  பீர் குடிப்பதில் நண்பர்களுக்குள்  போட்டி வேறு உண்டு. குடிக்காதவர்களை, நண்பர்கள் சற்று வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். குடிப்பதும், குடிக்காததும் நீங்கள் சொல்வது போல் நண்பர்களைப் பொறுத்துதான் அமைகின்றது.
 
எனக்குத்தெரிந்து என்னுடைய பல நண்பர்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்கள். இவர்கள் அனைவருக்கும் பொதுவான காரணம் பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு முறை அல்லது தந்தை குடிப்பழக்கம் இல்லாதவர். இந்த பிரிவைச் சார்த்த நண்பர்கள், நன்கு படித்து நல்வாழ்க்கை அமைத்துக் கொண்டார்கள். இவர்கள் தான் நீங்கள் சொல்லும் அசாதாரணமான பொருளியல் வளர்ச்சியை அடைந்தவர்கள்.
 
குடிப்பழக்கமில்லாத எனது நண்பர்களில் சிலர் இப்போது குடிக்கின்றார்கள். இதன் பொதுக்காரணம் மனம் சார்த்தது. இவர்களை குடியிலிருந்து விடிவிப்பது மிகவும் இயலாத காரியம். காரணம் இவர்கள் வாழ்க்கையை இழந்த்தவர்கள் (என்று நினைப்பவர்கள்). தங்களை இறந்தவர்களாக நினைப்பவர்கள். இவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
 
எனது ஒரு தம்பி கடலுக்கு செல்லாத நாட்களில் குடிக்காமல் வீட்டுக்கு வருவதில்லையாம். இவனது நண்பர்கூட்டத்தில் அனைவரும் குடிப்பவர்கள். இவர்கள் 10லிருந்து   40  நாட்கள் வரை  தொடர்த்து ஆழ்கடலில் தங்கி  சுறா மீன் பிடிக்கச்செல்பவர்கள். கரையில் 3-4 நாட்கள் சற்று ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் ஆழ்கடலுக்கு செல்லவேண்டும். இவர்கள் அந்த 3-4 நாட்களையும் மகிழ்ச்சியாக கழிக்க நினைப்பவர்கள். இவர்களை குடியிலிருந்து விடிவிப்பது மிகவும் எளிது.
 
இன்னொருவகையினர் உள்ளூரில் மீன்பிடிக்கும் சற்று வயதானவர்கள். இவர்களைப் பாம்பு என்று அழைப்பார்கள். இவர்கள் குடித்துவிட்டு ரோட்டில் வளைந்து நெளிந்து வரும் அழகே தனிதான். இவர்கள் நடந்து செல்லும்போது வாகனங்கள் ரோட்டில் ஊர்வலமாக இவர்கள் பின்னல் செல்லும். இவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது. இவர்களைக் குடியிலிருந்து மீட்பது தான் மிகவும் சவாலானது. (அறிவுரை சொல்பவர்கள் இவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அறிவுரை சொல்பவர்களுக்கு இவர்கள் குடியின் அருமையை சொல்லித்தருவார்கள் :) ). இவர்கள்தான் பெருவாரியானவர்கள். இவர்கள் அனைவருக்கும் பொதுக்காரணம் கல்வியறிவின்மை. இவர்களுக்கு குடியின் கெடுதலை போதிப்பதைவிட, இவர்களின் குழந்தைகளுக்கு கல்வியின் அருமையை போதிக்க வேண்டும். அதுதான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியிருக்கின்றது. காரணம், இப்போதெல்லாம் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்களைப் பார்ப்பது சற்று கடினம். இன்னும் சிலவருடங்களில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
 
அதைப்போல் நீங்கள் குறிப்பிடும் குடிக்கு எதிரான இயக்கம் எங்களூரில் நல்லமுறையில் செயல்படுவதாக அறிகின்றேன். எனது இன்னொரு தம்பி “குடிக்காதோர் சங்கத்தில்” உறுப்பினராக இருப்பதாகச்சொன்னான். இவரது நண்பர்கூட்டத்தில் அநேகம் பேர் குடிக்காதவர்கள்.
 
“குடிக்காதோர் சங்கம்” (நிஜமாகவே இதுதான் சங்கத்தின் பெயரென்று அறிகின்றேன்) கடற்கரையில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம் இவர்களின் இலக்கு இளைஞர்கள்.
 
திரு. பிரான்ஸிஸ் செயபதி அடிகளாருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றியும்.
 
அன்புடன்
கிறிஸ்டோபர்

 

 

அன்புள்ள கிறிஸ்டோபர்

நலம்தானே? குடி குறித்த உங்கள் கட்டிதம் துல்லியமக இருந்தது. நானே இதை கடற்கரையில் அவதானித்திருக்கிறேன். தமிழ் நாட்டில் எந்தெந்த சாதிகளிடம் குடி பற்றிய மனவிலக்கு உள்ளதோ அவை மட்டுமே சீராக முன்னேறுகின்றன– பிராமணார் கொங்குகவுண்டர் மற்றும் செட்டியார். குடிக்கும் பழக்கத்தை இயல்பாகக் கொன்ட ஆதிகளில் ஒருங்கிணைந்த முன்னேற்றம் மிக மிகக் குறைவு

மீனவர்கள் துயிலெழ வேண்டிய நேரம் இது
ஜெ

 

குடி.கடிதங்கள்,2

குடி.கடிதங்கள்

குடி

முந்தைய கட்டுரைகர்ணாமிர்த சாகரம்:கடிதம்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம்- 5, வீடு,சாலை,வெளி