அன்புள்ள ஜெயமோகன்,
“ஆனந்த விகடனின் அவதூறு” கண்டேன்.
தூரத்திலிருப்பதால் இதழை உடன் காண முடியவில்லை.
“தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிகமிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக்கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம்” என்று நீங்கள் எனக்கு ஏற்கனவே எழுதியதை, ஒரு வெகுஜன இதழைச் சேர்ந்தவர்கள உண்மையாக்கியிருக்கிறார்கள்.
தவிர, இதைச் செய்திருப்பவர் தம்முடைய நண்பர்கள் நடுவே இதேபோலக் கிண்டல் செய்பவராகத்தான் இருப்பார். ஆனால் தமக்கிருக்கிற அந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு வழங்க மறுப்பவராகவும் அந்த மற்றவர்கள்மீது வெகுஜனக்கண்ணோட்டத்தின் வன்முறையை நாடகீயமாக ஏவிவிடத் துடிப்பவராகவும் இருக்கிறார். இதுவே உண்மையான ஆபத்து.
இந்தப்போக்கு தொடர்ந்தால் யாரும் யாரையும் கிண்டல் செய்ய முடியாமல் போகும்.
“ஆனந்த விகடன்” இதழ் செய்திருக்கும் இந்த வேலையை உறுதிபடக் கண்டிக்கிறேன்.
நாம் இன்றைக்குச் செய்வதை விடவும் அதிகக்கிண்டல் கொண்ட படைப்புகள் வரவேண்டிய தேவை இருக்கிறது.
தங்கள்
நாகார்ஜுனன்
http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_14.html
அன்புள்ள ஜெயமோகன்,
ஆனந்த விகடனின் அவதூறு
படித்தேன்.
நான் இன்னும் ஆ.வீ படிக்கவில்லை (எஸ்.ரா/உலக சினிமா/ சமீபத்தில் நாநாவின்
நேர்காணல் தவிர்த்து படித்ததில்லை). இருப்பினும், இதையெல்லாம் அறியும்
போது ஏன் தமிழர்களுக்கு நகையுணர்வற்றுப் போனது என்று சற்று எரிச்சலாகத்
தான் இருக்கிறது.
உங்கள் தளதில் இருக்கும் வேறு பகடிகளை எடுத்துக்கொள்ளவோ அல்லது சத்தான
பின்நவீனத்துவ கட்டுரைகளை எடுத்துக்கொள்ளவோ இவர்களுக்குத் தோன்றாததில்
பெரிய ஆச்சரியமொன்றுமில்லை. ஏனெனில், நீங்கள் நினைப்பது போல நோக்கத்துடன்
செயல்படுகிறார்கள் போலத் தெரிகிறது.
எத்தனையோ சவால்களைச் சந்தித்த உங்களுக்கு இதெல்லாம் என்ன பெரிதாய்
வருத்தப் படுத்திவிடும்? என்றாலும், இதற்காகவெல்லாம் பகடி செய்து
எழுதுவதை தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள் என்பதை ஒரு வாசகியாகச்
சொல்வேன். மிகப்பெரிய இழப்பாகிவிடும். பொதுவாகவே என்னைப் போன்ற உங்களின்
வாசகர்களுக்கும் இலக்கியத்துக்குமே தான். உங்களின் சமீபத்து அங்கதக்
கட்டுரைகளைப் படித்து ரசித்த என்னைப்போல நிறைய பேருக்கு இந்த மாதிரியான
கருத்து இருக்கும்.
அப்போதைக்கு சிரிக்க வைத்தும் சிந்திக்கச வைத்தும் பின்னர் தொடர்ந்து
அசைபோட வைக்கும் அருமையாக கட்டுரைகள். மீண்டும் அடுத்தநாள் ஜேமோ என்ன
எழுதியிருக்கிறார் என்று கணியின் முன்னால் இழுத்து உட்காரவைக்கும்
கட்டுரைகள். இப்போதெல்லாம் நான் நிறைய சிரிக்கிறேன், தெரியுமா,
ஜெயமோகன்?
ஒவ்வொன்றுக்கும் பதில் எழுத ஆசையாகத் தான் இருக்கும். படித்தபின்
பின்னூட்டமிட நேரமிருப்பதில்லை. இருக்கக்கூடிய அந்தக் கொஞ்சநேரத்தில்
வேறு ஏதேனும் ஒன்றைப் படிக்கலாமே, படித்து விட்டு அன்றாடக் கடமைகளைக்
கவனிக்கப் போவோமே என்று தோன்றிவிடுகிறது.
ஒருவகையில் இந்த ஆ.வியின் செயலே கூட நவீன இலக்கியத்தில் பக்கமும்,
உங்களுடைய தளத்தின் மூலம் உங்களின் எழுத்துக்களின் பக்கமும் மேலும் அதிக
வாசகர்களைக் கொண்டு வரலாமோ? இப்படியான ஒரு நல்ல பக்க விளைவையும் நான்
எதிர்பார்க்கிறேன். என் கணிப்பு தவறலாம். ஆனால், நடந்தால் நல்லது.
மிக்க அன்புடன்,
ஜெயந்தி சங்கர்
Posted by நாகார்ஜுனன்
1 comment
1 ping
Dondu1946
January 14, 2010 at 8:56 am (UTC 5.5) Link to this comment
நீங்கள் அக்கட்டுரைகளை வாபஸ் வாங்கியது எனக்கு சரியாகப் படவில்லை. சரியோ தவறோ சொற்களை விட்டது விட்டதுதான். அவை வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல. இதை நான் உங்களிடம் ஷாஜி அவர்களது இசை பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உங்களிடம் நேரிடையாகவே கூறினேன். அதில் நீங்கள் அதிகாரபூர்வமாக பங்கேற்காவிட்டாலும் அங்கு வந்தீர்கள். உங்களை இடைவேளையில் பார்த்து என்னை அறிமுகம் செய்து கொண்டு இது பற்றியும் உங்களிடம் பேசினேன்.
போலி டோண்டு விவகாரத்தில் நான் எழுதிய பல இடுகைகளுக்காக பலரால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானேன். ஆனாலும் எத்தருணத்திலும் நான் எழுதியவை எழுதியதே என்றே இருந்தேன்.
இவ்வளவு கூறிய பிறகு இன்னொன்றையும் கூறுவேன். உங்கள் மேல் வந்த நிர்ப்பந்தங்கள் என்ன என்பது என்னால் முழுக்க உணரமுடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Jeyamohan vs Anandha Vikadan - Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al « Snap Judgment
February 17, 2008 at 1:28 am (UTC 5.5) Link to this comment
[…] jeyamohan.in » Blog Archive » ஆனந்த விகடன் கண்டனம்: “் இரு கடிதங்கள்” […]