அடுத்தகட்ட வாசிப்பு

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கியக் கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையைக் குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குரிய அந்த நுட்பமான குறியீடு, படிமம் போன்ற விசயங்கள் என எதுவும் தென்படுவதுபோன்று தோன்றுவதில்லையே! என்ன எழுதியிருக்கிறதோ அதை அப்படியே படித்த உணர்வுதான் ஏற்படுகிறதே தவிர கவிதையில் உணரும் நுட்பமான விசயங்களை, அனுபவங்களை சிறுகதை, நாவலில் உணர முடியவில்லையே! அணுகுமுறையில் அல்லது வாசிப்பு முறையில் ஏதேனும் மாற்றம் தேவையா!

நன்றி

பூபதி

சுந்தர ராமசாமி

அன்புள்ள பூபதி,

முதல்முறையாக இதைக் கேள்விப்படுகிறேன். வழக்கமாகக் கவிதையில் உள்ள குறியீடுகள் போன்றவை புரியவில்லை என்றுதான் வாசகர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

எல்லா இலக்கியமும் அடிப்படையில் ஒன்றுதான். அவற்றில் கவிதைதான் ஒப்புநோக்க வாசிப்புக்கு எளிதானது, ஆனால் புரிந்துகொள்ள நுட்பமானது. பெரும்பாலும் கவிதை வாசிப்பவர்கள் தங்களுடைய ரசனை வட்டத்துக்குள் ஏற்கனவே வந்துவிட்ட கவிதைப்பாணியையே ரசிக்கிறார்கள். கவிதையை வாசித்ததுமே சொல்ல வருவதென்ன, என்ன குறியீடு என்றெல்லாம் அது அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பிரச்சினையே இல்லை.

ஆனால் தங்கள் ரசனையை சீண்டும் புதிய கவிதையையே நல்ல வாசகர்கள் தேர்வுசெய்வார்கள். அதை ரசிப்பது எளிய வேலை அல்ல. அது தன்னை அந்த கணத்தில் புதியதாக நிகழ்த்தியிருக்கும். ஏற்கனவே உள்ள வழிகள் எவையும் அதை வாசிப்பதற்கு உதவ மாட்டா. அந்த வாசிப்பின்போதே அதற்கான வழிகளை வாசகன் கண்டறிய வேண்டும்.

சிறுகதை, நாவல் எதுவாக இருந்தாலும் ரசனையின் வழிகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவைதான். இலக்கியம் மொழியைப் பயன்படுத்தி மொழிக்குள் ஒரு பூடகமான மொழியை, மீமொழியை, உருவாக்கிக் கொள்கிறது. அந்தப் பூடக மொழி என்ன சொல்கிறதென வாசிக்கப் பழகிக்கொள்வதையே ரசனைப்பயிற்சி என்கிறோம்.

அப்படி வாசிக்கும்போது இலக்கியப்படைப்பு என்னென்ன விடுபடல்களை நிகழ்த்துகிறது, எங்கெங்கே மௌனமாகிறது என கவனிக்கிறோம். அந்த மௌனங்களைத் தொட்டு விரித்தெடுக்கும்போதுதான் நாம் அந்தப்படைப்பை நமக்குரியதாக ஆக்கிக்கொள்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் ஓர் இலக்கியப்படைப்பை வைத்துக்கொண்டு அது சொல்லும் வாழ்க்கையைக் கற்பனைசெய்வதே வாசிப்பு.

சுகுமாரன்

கவிதை அளவில் சிறியதாக இருப்பதனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கமுடிகிறது, நாவல் அப்படி இல்லையே என நீங்கள் சொல்கிறீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன்.

அதற்குரிய வழி என்பது வாசிப்பு முடிந்ததும் ஒட்டுமொத்தமாகப் புனைகதைகளை நினைவில் தொகுத்துக்கொள்ளுவதுதான். அப்போது நினைவில் ஓங்கி நிற்கும் நிகழ்ச்சிகள், பொருட்கள் ஆகியவற்றை கவனிக்கலாம். அவை ஏன் நினைவில் நின்றன, ஏன் அந்த அனுபவத்தை அளித்தன என யோசித்தால் போதும், அவை எப்படிப் படிமங்களாக ஆகின்றன என்பது புரியும்.

வண்ணதாசன்

சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலை வாசித்தால் அந்தப் புளியமரம் நம் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. அந்த மரத்தின் அழிவு நம்மை பாதிக்கிறது. ஏன்? ஒரு மரம் அழிவது ஏன் நம்மை பாதிக்கவேண்டும்? அப்படியென்றால் அது மரம் அல்ல. குறியீடு. எதன் குறியீடு?

அந்தக் கேள்வியுடன் புளியமரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். தன்போக்கில் குளம் நடுவே நின்ற மரம். அதை மன்னர் நகர் நடுவே கொண்டுவருகிறார். ஆனால் நவீன வணிக ஜனநாயகமோ அதை வெட்டி அழிக்கிறது. என்ன அர்த்தம் இந்த நிகழ்ச்சிக்கு?

அந்த வினாவுடன் முன்னகர்ந்தால் ஒரு நிகழ்ச்சி நம் கவனத்தைக் கவரும். நகர் நடுவே இருந்த காற்றாடித்தோப்பை அழித்து அங்கே பூங்கா உருவாக்குகிறார்கள். காற்றாடித்தோப்பு கட்டற்றது, காடுபோல. பூங்காவில் செயற்கையாக செடிகளை வெட்டி உருவாக்குகிறார்கள்.

‘எதுக்கு மரத்தை வெட்டுறாங்க?’ என ஒருவிவசாயி கேட்கிறார். ‘பூங்கா கட்ட’ ‘எதுக்கு பூங்கா?’ ‘காற்று வருவதற்காக’ ‘அட பைத்தியக்காரர்களா மரத்தை வெட்டி செடிவைத்தாலா காற்று வரும்?’ என அவர் கேட்கிறார்.

அந்த வினாவை புளியமரம் அழிக்கப்பட்டதுடன் சேர்த்துக்கொண்டால் சுந்தர ராமசாமியின் நாவலில் திரண்டு வரக்கூடிய விமர்சனம் என்ன என்பது பிடி கிடைக்கும். அந்தப் புளியமரம் நம் மனதில் குறியீடாக ஆகும்.

இன்னொரு சிக்கல், கவிதையில் படிமங்கள் ‘இதோ படிமம்’ என்ற பாவனையிலேயே அளிக்கப்படுகின்றன. ‘அடிவாரத்தில் மரணத்தை உச்சரித்து நகரும் பாதரச நீர்க்கோடு’ என சுகுமாரன் கவிதை அதைப் படிமமாகவே காட்டுகிறது. ஆனால் புனைகதை வாழ்க்கை நிகழ்ச்சியையே அளிக்கிறது. அதை நாம்தான் குறியீடாகக் காணவேண்டியிருக்கிறது.

உதாரணமாக வண்ணதாசனின் ‘நிலை’ என்ற கதை. அதில் வேலைக்காரச்சிறுமி தேர் பார்க்க ஆசைப்படுகிறாள். எல்லாரும் போகிறார்கள், அவளுக்கு சாத்தியப்படவே இல்லை. கடைசியில் அவள் ஓடிப்போகும்போது தேர் நிலைக்கு வந்துவிட்டது. அசையாத தேரைப் பெருமூச்சுடன் பார்க்கிறாள்.

ஒரு சிறுமி தேர்பார்க்கமுடியாமல் போகும் சோகமாக மட்டும் இக்கதையை வாசிக்கலாம். ஆனால் தேரைக் குறியீடாகவும் எடுத்துக்கொள்ளலாம். அந்நிலையில் அது அச்சிறுமிக்கும் அவளைப்போன்றவர்களுக்கும் தவறிப்போகும் வாழ்க்கையின் சின்னம். அந்த வாசிப்பு கதையை இன்னும் பெரிதாக ஆக்குகிறது.

இப்படி எதைக் குறியீடாகக் கொள்வது? எந்த விஷயம் கதை முடிந்தபின்னர் நம் உணர்ச்சிகளை பாதித்து நம்மைத் தொடர்ந்து அக்கதை பற்றி எண்ணசெய்கிறதோ அதுதான் அக்கதையின் மையப்படிமம்.

அந்த வாசிப்பு மனதில் வந்த பின்னர் நாம் கதையை மீண்டும் மனதில் ஓட்டிக்கொள்ளவேண்டும். தேர் பற்றிய எல்லா வரிகளையும் தேருடன் சம்பந்தப்பட்ட எல்லா உரையாடல்களையும் நினைவுகூர வேண்டும். தேருடன் எல்லா நிகழ்ச்சிகளையும் தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டும். அதற்காகக் கதையை இன்னொரு முறை வாசிக்கலாம்.

தொடர்ச்சியாக கவனமாக வாசிப்பது, வாசித்ததை நினைவில் தொகுத்துக்கொள்வது, இன்னொரு வாசிப்பை அளிப்பது ஆகியவை மூலமே நாம் குறியீட்டு ரீதியான முழுமையான வாசிப்பை அளிக்கமுடியும்.

ஜெ

Mar 11, 2012 முதற்பிரசுரம். மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 2
அடுத்த கட்டுரைஅசிங்கமான மார்க்ஸியம்