கயாவும் இந்துக்களும்

அன்புள்ள ஜெ,

உங்கள் முந்தைய இந்தியப் பயணத்தில் போத்க்யா குறித்து விரிவாக எழுதியிருந்தீர்கள்.

புத்தர் ஞானமடைந்த இந்தப் புனிதத் தலத்தில் மிகப் பெரிய கோயில் வைதீக இந்து மன்னர்களான குப்தர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டு இடிபாடுகளாகியது. பிறகு 15ஆம் நூற்றாண்டில் பைராகிகளான சைவத் துறவிகள் காட்டுக்குள் இருந்த இந்த இடத்தைக் கண்டுபிடித்து அதைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டார்கள், ஆயினும் கயாவின் பௌத்த வழிபாட்டு மரபை மதித்து, அதனைப் பாதுகாத்து வந்தார்கள். அப்போதிருந்து அந்தக் கோவிலின் நிர்வாகம் சைவ சமய ‘மஹந்த்’கள் கையில்தான் இருந்தது. மேலும், கயா ஆதி முதலே இந்துக்களுக்கும் புனிதத் தலம். பிறகு 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வரலாற்று ஆய்வாளர்களால் பிரபலமாக்கப்பட்டு உலகெங்கும் உள்ள பௌத்தர்கள் வந்து செல்லும் புனிதத் தலமாகியது. இது வரலாறு.

சுதந்திர இந்தியாவில், அந்த ஆலயத்தின் நிர்வாகக் கமிட்டியில் நான்கு பௌத்தர்களும் ஒரு இந்துவும் இருக்க வேண்டும் என்று பீகார் சட்டசபை தீர்மானம் செய்து, அது சுமுகமாகத் தொடர்ந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் 75 வயதான பௌத்தத் துறவி ஒருவர் இந்தக் கமிட்டியில் இந்து ஒருவர் இருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அதை மாற்ற வேண்டும் என்றும் வழக்குத் தொடுத்திருக்கிறார். அதை நீதிமன்றமும் அனுமதித்திருக்கிறது.

உங்கள் சமீபத்திய பயணங்களில் ஒவ்வொரு இடத்திலும் சமண ஆலயங்களை இந்து மன்னர்கள் கட்டியிருப்பதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பௌத்தர்கள் யாருமே இல்லாதிருந்த பல நூற்றாண்டுகளிலும் புத்தகயா உட்பட பல பௌத்த புனித தலத்தைப் பாதுகாத்துப் பராமரித்தவர்கள் இந்துக்களே. எதேச்சாதிகார சீனாவின் அடக்குமுறையின்போது திபேத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இந்துப் பெரும்பான்மை இந்தியாதானே? இந்த பௌத்தத் துறவி உண்மையில் அந்தப் பெருந்தன்மையைப் போற்ற வேன்டும். ஆனால் அவமதிக்கிறார். இந்துக்களை வேறுபடுத்தி விலக்கப் பார்க்கிறார். ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு இந்து வெறுப்பு?

இது தொடர்பான ஒரு கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=2202

அன்புள்ள ஜடாயு,

சென்ற இந்தியப்பயணத்தில் நாங்கள் போத் கயா செல்லும்போதே இந்தப் பிரச்சினை அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. புத்த கயா மீது சைவ மடாதிபதிகளின் ஆட்கள் கையேற்றம் செய்ய முயன்று பௌத்தர்களைத் தாக்கியதாகச் செய்திகள் வந்தன.

இந்த விஷயத்தை ‘விஜயவாணி’ ஒரு விரிந்த இந்தியப்பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் நின்று நோக்குவதாகத் தெரியவில்லை. இந்துமதம் சார்ந்த குறுகிய பார்வையுடன், இந்து அரசியல் சார்ந்த பிரிவினைக் கண்ணோட்டத்திலேயே நீங்கள் சுட்டும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இன்றுள்ள சிக்கல்கள் சட்டப்போராட்டங்கள் பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. இணையத்திலேயே நிறைய தகவல்களை நீங்கள் பெறலாம். சாதாரணமாக அவற்றை வாசிப்பவர்கூட நீங்கள் அடையும் உணர்வுக்கு எதிரான மனநிலையையே பெறுவார்.

போத் கயா புத்தர் தியானம் செய்து தர்மஞானம் பெற்ற இடம். தர்மசக்கரத்தை அவர் தொடங்கிவைத்து சாட்சியாகத் தொட்ட மண். அவர் ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா எனக் கொண்டாடப்படுகிறது. ஃபால்குனா நதிக்கரையில் இருக்கிறது இந்த இடம். இங்கிருந்து அவர் சாரநாத் சென்று தன் முதல் தர்மப்பேருரையை நிகழ்த்தினார்.

போத் கயா பற்றி ஐந்தாம் நூற்றாண்டில் பாஹியானும் ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். இங்கே முதல் ஆலயம் அசோகரால் கட்டப்பட்டது. குஷானர் காலத்திலும் குப்தர் காலத்திலும் அது மீண்டும் விரிவுபடுத்திக் கட்டப்பட்டது.

பிரம்மாண்டமான ஆலயமாக இருந்த போத் கயா 1203இல் பிகார் மற்றும் வங்கம் மீது படைகொண்டுவந்த சுல்தான் பக்தியார் கில்ஜியின் படைகளால் முற்றாக அழிக்கப்பட்டுக் கற்குவியலாக ஆகியது. பக்தியார் கில்ஜிதான் நாளந்தாவையும் பிற பௌத்தத் தலங்களையும் முற்றாக அழித்தவர். அங்கிருந்த பல்லாயிரம் பிக்குகள் கொல்லப்பட்டனர் என அவரது சொந்த வரலாற்றாசிரியர்களே பதிவுசெய்திருக்கிறார்கள்.

பௌத்தம் ஏற்கனவே ஆதரவிழந்த நிலையில் இருந்தது. பௌத்தத்தை ஆதரித்த வட இந்திய சாம்ராஜ்யங்கள் குஷானர் படையெடுப்பாலும் துருக்கியப் படை எடுப்பாலும் நிலைகுலைந்து வட இந்தியா முழுக்க அரசியல் வெற்றிடம் நிலவிய காலகட்டம் அது.

மேலும் பத்தாம் நூற்றாண்டு முதலே எழுச்சி பெற்ற பக்தி இயக்கத்தால் மக்களாதரவு இல்லாமல் தத்துவார்த்த மதமாக எஞ்சி, கல்விச்சாலைகளில் மட்டுமே நீடித்திருந்த புத்தமதம் அத்துடன் அழிந்தது. ஆங்காங்கே சிறிய குழுக்களாக அது நீடித்து மேலும் ஒரு நூற்றாண்டுக்குள் மறக்கப்பட்டது. நாளந்தாவிலும் கயாவிலும் இந்துத் துறவிகள் சிலர் பிடிவாதமாக அங்கிருந்த கல்வி மரபைத் தொடர்ந்தார்கள். ஆனால் மெல்ல அவர்களும் இல்லாமலாயினர்.கயா இடிபாடுகளில் மறைந்தது.

கயா, இந்துக்களுக்கு இன்னொரு வகையில் முக்கியமான ஊர். நீர்க்கடன்கள் செய்வதற்குரிய புனிதத் தலங்களில் ஒன்று. எப்படி வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரமோ அப்படி தென்னகத்தினருக்கு கயா. இதன்பொருட்டு அங்கே எப்போதும் ஏராளமான இந்துக்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்காக அங்கே ஒரு புரோகித சமூகம் உருவாகி நீடித்தது. அவர்களுக்குத் தலைமை வகிக்கும் ஒரு மடம் அங்கே உருவாகியிருந்தது. கயை முழுக்க பின்னர் எழுநூறு வருடம் இந்தப் புரோகிதர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

நீங்கள் சொல்வது போல போத் கயா இந்துக்களால் ‘பாதுகாக்கப்’படவில்லை. கைவிடப்பட்ட இடிபாடுகளாக அங்கேயே கிடந்தது. இந்தியாவில் நிலங்களில் கணிசமான பகுதி மடங்களின் கட்டுபாட்டில் இருந்தது போல அப்பகுதி முழுக்க கயையின் தலைமை மடாதிபதியின் [மகந்த்] கட்டுப்பாட்டில் இருந்தது. 1851இல் இந்திய நிலம் முழுக்க அளந்து பட்டா போடப்பட்டபோது மடத்தின் சொத்தாக ஆகியது.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் ‘கண்டுபிடித்துச் சொன்ன’ பிறகுதான் இந்துமதம் இந்துக்களாலேயே சமண, பௌத்த மதங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது. அதுவரை எல்லாரும் எல்லா இடங்களிலும் வழிபட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். புத்தகயையின் இடிந்த கோயில்பகுதிகளில் புத்தருக்கு இந்துக்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள். இன்றும்கூட பௌத்தகயையில் ஒவ்வொருநாளும் ஏராளமான கிராமத்து எளிய இந்துக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

1880 வாக்கில்தான் உண்மையில் நாம் இன்று காணும் வடிவில் பௌத்தம் மீட்டு எடுக்கப்பட்டது. அன்று உலகமெங்கும் சிதறிக்கிடந்த பௌத்த மதப்பிரிவினர்கள் நடுவே ஒருவருக்கொருவர் அறிமுகம் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் பின்பற்றுவது ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகள் என்ற எண்ணமும் இருக்கவில்லை.

பௌத்தத்தை மீட்டு இன்றைய வடிவில் ஒரு பெருமதமாக ஆக்கியவர்கள் மூன்று வெள்ளைய ஆய்வாளர்கள். கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் [Henry S. Olcott ] அவர்கள் 1881 ல் எழுதி 1908ல் வெளிவந்த பௌத்தஞானச்சுருக்கம் [The Buddhist Catechism] என்ற நூல்தான் பௌத்தர்களுக்கு பௌத்த ஞானத்தை அறிமுகம் செய்தது. பால் காரஸ் [Paul Carus] 1894 ல் எழுதிய எழுதிய ‘புத்தரின் நற்செய்தி’ [The Gospel of the Buddha] புத்தரை உலகம் புரிந்துகொள்ள வழிவகுத்தது. ரய்ஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids] எழுதிய பௌத்த இந்தியா [Buddhist India] பௌத்த மதத்தின் வரலாற்றைக் கட்டமைத்தது.

1881இல் கயாவில் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டு மகாபோதி நின்ற இடத்தையும், அசோகர் காலத்து ஆலயத்தையும் கண்டடைந்தனர். 1883 முதல் நடந்த விரிவான அகழ்வாய்வுகளின் வழியாக அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் கயாவின் புராதனமான ஸ்தூபிகளை மீட்டு எடுத்தார். ஜெ.டி. பெக்லர் மற்றும் ராஜேந்திரலால் மித்ரா ஆகியோர் ஆய்வில் இணைந்து பணியாற்றினார்கள்.

இக்காலகட்டத்தில் புத்த கயையைத் தலைமை பௌத்தத் தலமாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பௌத்தர்களிடம் வந்தது. அதற்காக இலங்கை, பர்மா, திபெத் ஆகியநாடுகளில் செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆல்காட்டின் மாணவரான இலங்கை பௌத்தத் துறவி அநகாரிக [தங்காத] தம்மபாலா 1891இல் அந்த இயக்கத்தை முன்னெடுத்தார்.

உண்மையில் இச்சந்தர்ப்பத்தில் இந்துக்கள் பரந்த மனத்துடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அந்த இடம் மீதான பௌத்தர்களின் மரபுரிமையை மதித்து அதை பௌத்தர்களிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கவேண்டும். நட்பும் புரிதலும் கொண்ட ஒரு கைமாற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும். அது இந்தியாவின் மரபுக்கு ஏற்ற ஒரு மகத்தான வரலாற்றுத்தருணமாக இருந்திருக்கும்.

அந்த நிலை நோக்கி உயர வெறும் புரோகித மடாதிபதியான சங்கராச்சாரியாரால் முடியவில்லை. அந்நிலம் காலங்காலமாகத் தங்களுக்குரியது என கயையின் சங்கரமடத்தின் தலைமை மகந்த் உரிமை கொண்டாடினார். நிலத்தை விட்டுத்தர மறுத்து நீதிமன்றம் சென்றார். இது அப்போதே உலகமெங்கும் பௌத்தர்களிடம் ஆழமான கசப்புக்கு வழிவகுத்தது.

பௌத்தர்கள் அந்த நிலம் புராதனமான பௌத்தத் தலமே என அகழ்வாய்வு ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த இடத்தின் மேல் தங்களுக்கான வழிபாட்டுரிமையைப் பெற்றார்கள். ஒரு கூட்டு நிர்வாகக்குழுவை உருவாக்கிய பிரிட்டிஷார் அங்கே மகாபோதி ஆலயம் உருவாக்க அனுமதி அளித்தனர்.

அதன்பின்னரே இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து போதியின் கிளை இங்கே கொண்டுவந்து நடப்பட்டு போத் கயா பழைய புகழை அடைந்தது. இப்போதுள்ள ஆலயம் பர்மியர்களால் எடுத்துக்கட்டப்பட்டது. இந்த வளாகத்திலேயே முந்தைய ஆலயத்தின் சிறிய செங்கல் வடிவம் ஒன்று இருக்கிறது. அதை முன்வடிவமாகக் கொண்டு வரைந்து இன்றைய புதிய ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெறும் வரை நீதிமன்றங்களில் அந்தப் பூசலை நீடிக்கச்செய்து நிலம் மீதான அதிகாரத்தை மகந்த் கைவசம் வைத்திருந்தார். 1949இல் நேருவின் தலையிடலால் அந்நிலம் கைவசப்படுத்தப்பட்டு பிகார் அரசுக்குரியதாக ஆகியது.

ஆனால் தொடர்ந்து சங்கர மடத்தின் மகந்த் தலைமையில் புரோகிதர்கள் பிரச்சினை செய்யவே அங்கே பௌத்தர்கள் வருவதும் தங்குவதும் முடியாத நிலை வந்தது. விளைவாக ஒரு சமரசத்திட்டமாக மகாபோதி ஆலயத்தின் நிர்வாகக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் உள்ள ஒன்பது உறுப்பினர்களில் இந்துக்களே எந்நிலையிலும் பெரும்பான்மையாக இருக்கவேண்டும் என விதி சேர்க்கப்பட்டு இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது.

நான் அறிந்தவரை இன்றும் போத்கயாவின் நிர்வாகக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஐவர் இந்துக்களாகவும் நால்வர் பௌத்தர்களாகவும் இருக்கவேண்டும். தலைமை மகந்த் சிறப்பு உறுப்பினராக இருப்பார். குழுவின் தலைவராக கயாவின் மாவட்ட நீதிபதி இருப்பார். அவர் இந்து அல்ல என்றால் இன்னொரு இந்துவைக் குழுத்தலைவராக நியமிக்கவேண்டும். இதுவே சட்டம்.

தொடர்ச்சியாக கயா வளர்ந்துகொண்டே வந்தது. அங்கே உலகமெங்கும் உள்ள பௌத்தப் பிரிவினரின் தனித்தனி மடாலயங்களும் வழிபாட்டிடங்களும் வந்தன. போத் கயா யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில் இன்றுவரை கயாவின் புரோகிதர்கள் நடந்துகொண்ட விதம் எவ்வகையிலும் இந்து மதத்தின் தத்துவார்த்தமான மனவிரிவுக்கு உதாரணமாக இருக்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் அதை ஒரு சொத்தாக மட்டுமே பார்த்தார்கள். கயை வளர வளர அந்த சொத்தில் பங்குக்காகவே சண்டை போட்டார்கள். அந்த இடம் பௌத்தர்களின் தலைமையான புனித இடம் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. அதன் வழிபாட்டுமுறைகளைக் கையகப்படுத்த இப்போதும் முயன்று வருகிறார்கள்.

நாம் இந்த மனநிலையைப் பெரும்பாலான இந்திய ஆலயங்கள் முழுக்கக் காணலாம். காசி, ஹரித்வார், பண்டரிபுரம், பூரி, உடுப்பி என எங்கு சென்றாலும் அந்த ஆலயத்தையும் சுற்றியிருக்கும் இடத்தையும் புரோகிதர்கும்பல் ஒன்று கையகப்படுத்தி வைத்திருப்பதைக் காணலாம். அந்த இடத்தை எல்லாவகையிலும் மலினப்படுத்திப் பணம் பறிக்கும் மையங்களாக ஆக்கி வைத்திருப்பார்கள். காசியில் புரோகிதர்களின் தொழில்முறை ரவுடிக்கும்பலே உள்ளது.

அசிங்கங்களில் உழன்று, நெரிசல்களில் சிக்கி, அவமானப்பட்டுப் பணம் பறிகொடுத்து மனம் கசந்துதான் நாம் அந்த ஆலயங்களில் இருந்து வெளிவர முடியும். சிலசமயம் வன்முறைக்கும் ஆளாகவேண்டியிருக்கும்.அடிவாங்கிப் பணத்தை இழந்து அவமானப்பட்டுத் திரும்பவேண்டுமென்றால் ஒருவர் இந்து கயைக்குச் சென்று அங்குள்ள புரோகிதர்களிடம் நீர்ச்சடங்கு செய்ய பேரம்பேசினால் போதும். நான் பயணங்களில் மிக வலுவாக எழுதிய விஷயம் இந்து ஆலயங்களில் இருந்து இந்த அராஜகக் கும்பலை வெளியே தள்ளவேண்டும் என்பதைப்பற்றித்தான்.

அதற்காக ஆலயங்கள் அரசின் கையில் செல்லவேண்டியதில்லை, சிதம்பரம் போல. ஆலயங்கள் இந்துக்கள் அனைவருக்கும் பங்குள்ள பொதுவான நிர்வாக அமைப்பின் கீழே கொண்டுவரப்பட வேண்டும். பக்தர்களை மதிக்கும் நவீன நிர்வாகமுறை கொண்டுவரப்பட வேண்டும். அந்நிலையில் இந்து ஆலயங்கள் அனைத்தையுமே சிறப்பாக நிர்வாகம் செய்வதற்குரிய மிகப்பெரிய நிதி இங்கே வந்து குவிவதை உணரலாம். அந்நிதியை இந்து சமூகத்தின் பொதுவான மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். பிற மதங்கள் செய்யும் சேவைகளை விடப் பலமடங்கு சேவைகளைச் செய்யமுடியும். திருப்பதி அதற்குச் சிறந்த உதாரணம்.

வட இந்தியாவில் ஆலயங்களுக்கு அளிக்கப்படும் நிதி முழுக்க இந்தப் புரோகிதர்கள் மற்றும் மகந்துக்களின் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் பாரதிய ஜனதாவின் அடித்தளத்தைக் கைப்பற்றி வைத்திருப்பதனால் அக்கட்சி இந்த உண்மை தெரிந்தும் அவர்களுக்காகவே வாதாடுகிறது.

கயையில் மகந்தின் தூண்டுதலால் புரோகிதர்கள் தொடர்ச்சியாகப் பூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகச்சக்திவாய்ந்த இந்தக் கும்பலின் குரலாகவே அங்கே விஸ்வஹிந்து பரிஷத்தும் பாரதிய ஜனதாவும் செயல்படுகின்றன. 2005 இல் மகந்தின் ஆட்களும் பாரதிய ஜனதாக்காரர்களும் கோயிலுக்குள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடச்சென்றது உலகமெங்கும் பௌத்தர்களிடையே அச்சத்தை உருவாக்கியது.

பின்னர் விஷ்ணுசிலைகளை வைப்பதற்காக வன்முறையாக ஊடுருவ முயன்றிருக்கிறார்கள். புத்தரின் தர்மஸ்தம்பம் நின்ற பீடம் ஒன்று சிவலிங்கம் போல உள்ளது என வாதிட்டு அந்த இடத்தை இந்து வழிபாட்டிடமாக ஆக்க வாதிடுகிறார்கள்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் ஜடாயு, இதை இந்து வழிபாட்டிடத்தில் பிறர் செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா? ராம ஜன்மபூமி விவகாரத்துடன் மேலோட்டமாக ஒப்பிட்டுப்பாருங்கள். அறமோ மரபோ அல்ல, பெரும்பான்மை பலம்தான் நியாயத்தைத் தீர்மானிக்கிறது என நீங்கள் நினைத்தால் நான் மேலே பேச ஒன்றுமில்லை.

பௌத்த மதத்தின் தலைமைப் பீடத்தை வன்முறை மூலம் கைப்பற்ற நினைக்கும் இந்தக் குறுகிய மதநோக்கு உண்மையில் இந்தியாவெங்கும் இந்து வழிபாட்டிடங்களை ஆக்ரமித்திருக்கும் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் நடவடிக்கை மட்டுமே. இங்குள்ள இந்துக்களுக்கு இதில் பங்கில்லை. ஆனால் இத்தகைய செயல்கள் மூலம் பௌத்தர்களுக்கு இந்துக்கள் மீதான அச்சமும் அருவருப்பும் உருவானால் அதில் என்ன ஆச்சரியம்? அவர்கள் இந்துக்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றால் என்ன பிழை?

எல்லா சமண, பௌத்த ஆலயங்களிலும் இந்து தெய்வங்கள் உள்ளன. காரணம் இந்து, சமண, பௌத்த மதங்களின் தொன்ம அடித்தளம் ஒன்றுதான். பௌத்த, சமண ஆலயங்களை இந்து மன்னர்கள் கட்டியுமிருக்கிறார்கள். அங்கே இந்துச் சிலைகள் உள்ளன என்பதை ஆதாரமாகக் கொண்டு பௌத்த சமணத் தலங்களின் மீது இந்து புரோகிதர்களின் படையெடுப்பை நியாயப்படுத்த முடியுமா?

பாரதிய ஜனதா கட்சியில் விரிந்த இந்தியப்பார்வை கொண்டவர்கள் இல்லை என்பதற்கான ஆதாரமாகவே இந்நிகழ்ச்சிகளை நான் காண்கிறேன். பிளவுபடுத்தி, வேறுபடுத்திப் பார்ப்பது இந்த இந்துக்கும்பல்தான். இதன் நெடுங்கால விளைவுகளை இந்துத் தலைவர்கள் எவருமே உணர்வதில்லை.

நீங்கள் சொல்வது போல பௌத்தர்கள் இந்துக்களை வெறுக்கவில்லை. இந்துக்கள்மேல் இன்றும் ஆழமான மரியாதையுடன் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்து மதத்தின் தத்துவார்த்தமான அக விரிவுக்கும் அதன் வழிபாட்டுப்பொதுமைக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு சிறு வன்முறைக் கும்பலால் அவர்களின் அந்த மரியாதையும் அன்பும் இல்லாமலாக்கப்படுகிறது.

தங்கள் தலைமை வழிபாட்டிடத்தின் நிர்வாகப்பொறுப்பில் தங்கள் மதத்தின்மேல் மதிப்பில்லாத ஒரு நிர்வாகக் குழு மேலாதிக்கம் செலுத்தலாகாது என பௌத்தர்கள் நினைப்பதில் என்ன பிழை? இத்தனை காலம் அவர்கள் பொறுத்திருந்ததே இந்தியாவில் அவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதனால்தான். கயை உண்மையில் புரோகிதர்களின் வன்முறைப்பிடியில்தான் இன்றும் உள்ளது.

இந்துக்களை பழமைவாதிகள், வன்முறையாளர்கள் என சித்தரிக்கும் எதிர்த்தரப்பினரின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்தக் கீழ்மட்டத் தொண்டர்களின் வன்முறை நடவடிக்கைகள், சகிப்பின்மைகள், சுயநல நோக்குகள்தான் காரணமாகின்றன. இந்து மதம் மீதான அவதூறுகளையும் ஒருங்கிணைந்த தாக்குதல்களையும் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் எதிர்க்கும் நேர்மையான இந்துக்கள் அனைவரையும் ஆழமான தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களின் குரல்களை அர்த்தமிழக்கச் செய்கிறார்கள் இந்தக்குண்டர்கள்.

பௌத்தம் இந்தியாவின் கடந்த கால சாதனை. இன்றைய பெரும் செல்வம். இந்தியா மேல் பற்றுள்ள எவருக்கும் பௌத்தம் மீதான பற்றும் மதிப்புமே இருக்க வேண்டும். பௌத்தம் இந்தியாவை விட்டு நீங்கினாலும் அது மீண்டும் இங்கே தழைப்பதற்கான இடமளிக்கவேண்டும் என்றே இந்தியா மீது பற்றுள்ளவர் நினைக்கவேண்டும். அந்நிலையில் கயா விஷயத்தில் மகந்துக்கள் அன்றும் இன்றும் நடந்துகொள்ளும் முறையை இங்குள்ள இந்து அரசியல், பண்பாட்டுத் தலைமை கண்டித்திருக்கவேண்டும். அந்தப் புனிதத்தலம் இந்துக்களால் மதிப்புடன் வணக்கத்துடன் பௌத்தர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இனிமேலாவது அதைச்செய்யும் மனவிரிவு இந்துக்களுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்த மண்ணில் இந்துமரபு நீடிக்கவேண்டும் என விதி இருந்தால் அது நிகழட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஐயாறப்பனை அழிப்பது – கடிதம்
அடுத்த கட்டுரைபுத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்