அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,
தங்கள் வலைப்பகுதியில் (http://jeyamohan.in/?p=2540) வெளியான ராம்,ஜடாயு அவர்களின் கடிதங்கள் கண்டேன். கருணாமிர்த சாகரத்தைப் பற்றிய பல உண்மையில்லா செய்திகள் கண்டு வியப்படையவில்லை. அந்த புத்தகம் சரியாக வாசிக்கப்படவுமில்லை, இப்போது கிடைப்பதுமில்லை.
என் வலத்தளத்தில் எழுதிய வட்டப்பாலை முறை (http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/karunamirtha_sagaram.html) பதிவிற்கு பிறகு இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன்.
இதில் வெளியான சில கேள்விகளுக்கு , என்னுடைய பதில்கள்:
——————–
இந்த கடிதத்திற்கான பதிலைத் தொடங்குமுன், சில விதிகளை முன்வைக்கிறேன். இசை ஆர்வலர்கள் மட்டுமல்ல, எல்லாவித கலை படைப்பிற்கும் எத்தனை விதமான விமர்சனங்களும்,விமர்சகர்களும் உண்டோ, அத்தனை விதமான கற்பிதங்களுமுண்டு. எந்த இரு ஆய்வாளர்களும் தங்கள் முடிவுகளில் ஒத்துப்போனதாக சரித்திரம் கிடையாது.இது நுண்கலைகளுக்கு கொஞ்சம் அதிகமாக பொருந்துவதால்,அகவயமாக வரையறுக்கப்படும் இசையில் இந்த ஆரோக்கியமான மோதல்கள் அதிகமாகவே நடைபெறும். இக்கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் அதே உணர்வுடன் எழுதப்பட்டவையே.
முதலில் ராம் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் . தமிழிசை என்று தனியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதவில்லை. கர்நாடக சங்கீதம்,நாம் அறிந்தவரையில் சங்கதிகளான – நாதம், சுரம், ராகம், சுரஸ்தானம், தாளம், ஆவர்த்தம்(ஆவர்த்தனம்), துவிதிய-திரிதிய காலம் என பல்கிக்கொண்டே போகும் அலங்காரங்களை கொண்டது. இசையின் ஆரம்ப வேர்களை இறுதியிட்டு கூற முற்படும் பிரம்மாண்ட வேலையை நம்மால் செய்ய முடியாது.அப்படி ஆராய நினைப்பவர்களே இதைப் போன்ற தீர்மானங்களை அறிவிப்பார்கள். பரத முனிவர், பண்டிதர் போன்றோர் அதை கூறவல்லர்.தமிழர்கள், அல்லது இன்னும் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டுமென்றால் – தமிழ்நாட்டில் வாழ்ந்த பல அறிஞர்கள் சங்க இலக்கியங்களில் உள்ள இசைக் கூறுகளை முன்வைத்து தங்கள் படைப்பை நிறுவவேயில்லை. அவர்கள் கதை சொல்லிகள். நமக்கு அந்த கதைகளை கூற அவர்கள் கட்டிய அமைப்புகளை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். அவர்கள் காலத்தை தீர்மானிப்பதே இந்த பிரம்ம அமைப்புகள்தாம். இசை கூறுகளை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தி, அதன் மூலம் அவர்களின் காலத்தில் இருந்த நுண்கலையை கூறிச்செல்கிறார்கள். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது ஒரு நுண்கலையே அல்ல, அவர்களின் தொடர்புறுத்தல் வழியே இயல்-இசை-நாடகம் தானே!
அவர்கள் இசை விதிகளை பகுத்து அலங்காரங்களுக்கு பெயர் சூட்டினார்கள். சுரங்கள் கோர்வையாய் வந்தால் சுரமாவளி என்றும். சுரங்களின் ஒலி குறைந்துகொண்டே போகும் தொடருக்கு ‘இறங்குநிரல்’ , ஏறிக்கொண்டே சென்றால் ‘ஏறுநிரல்’ என்றும் வகுத்தனர் ( கொற்றவை படித்து கொண்டிருப்பதால் இதைப் போல தொடர் வந்து விழுந்துவிட்டது.மன்னிக்கவும்).அவர்கள் செய்தது இதுமட்டுமே. இந்த இசைக் கூறுகளை, எந்த சமுதாய இசையிலும் கண்டுபிடிக்க முடியும்.(Chords,chromatic scale – மேற்கிசை இசைச் சொற்கள்). இந்த சங்கதிகளை கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானியிலும் கூட கண்டுபிடிக்க முடியும். இதை தனித்தமிழ் இசை என்றால் , எல்லா இசையும் தமிழிசைதான். குழந்தை கூறும் ‘ம்மா’ என்ற வார்த்தையிலும் இதே இசை தான். Leonard Bernstein என்ற இசையமைப்பாளர் ‘ம்மா’ என்ற குழந்தையின் சொல்லே பல முக்கிய மேற்கிசையின் ஆதார சுருதி என கண்டுபிடித்துள்ளார் .The Unanswered Questions,Joy of Music போன்ற அவரின் புத்தகங்களில் இந்த சொல்லின் இசை சுருதிகள் மோசார்ட்,பீத்தாவேன் முதல் ஆரன் கோப்லாண்ட்(Aaron Copland) வரை எப்படி உபயோகித்துள்ளார்கள் எனவும், இதனாலேயே நமக்கு இந்த இசை வடிவங்களும், சத்தங்களும் இனிமையாக இருப்பதாகவும் விவாதித்துள்ளார்.இதே போல ஒரு ஆராய்ச்சியையே பண்டிதரும் இயற்றியுள்ளார்.அவர் நிறுவியுள்ள சிலவற்றை கீழே ஜடாயுவிற்கான பதிலில் தந்துள்ளேன்.
அடுத்து ஜடாயு கேட்டிருக்கும் சில கேள்விகள்.
கருணாமிர்த சாகரம் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. அந்த புத்தகத்தில் பண்டிதர் King George V முன்னிலையில் பரோடாவில் நடத்திய இந்திய இசை மாநாட்டில் படித்தவை உள்ளன. பண்டிதர் முன்வைத்த கருத்தை – Sheldon Pollock தன் Cosmopolitan and vernacular in history என்ற புத்தகத்திலும், David Reck தன் An Introduction to the music of the world’s people என்ற புத்தகத்திலும் ஆராய்ந்துள்ளார்கள். சரி, அப்படி என்னதான் பண்டிதர் விளக்கினார்? தனித்தமிழிசை பற்றி கண்டிப்பாக கிடையாது.
சுருதியின் பண்புகளை சாரங்க தேவ் தன் சங்கீத ரத்னாகரத்தில் அடைந்த முடிவுகளையும், பரத முனிவர் (கவனிக்க: 5 AD என இக்கால கட்டத்தை குறிப்பிடுகிறார் – இது ஆய்வுக்குறியது) கண்ட சுருதி அளவையுமே பண்டிதர் ஆராய்கிறார். ஒரு சுரஸ்தானத்தில் 22 சுரங்கள் இருப்பது இவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வது. என்ன 22 என்ற கணக்கு?
சுரம் Sa Re Ga Ma Pa Dha Ni Sa
. 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
இதில் வரும் 7 சுரங்களின் (ச,ரி,க,ம,ப,த,நி,ச) நுண்ணலைகளுக்குள் ஒரே வித்தியாசம் இல்லை. இடைவெளி சீராக அமையாத காரணத்தில், இந்த சுருதிகளின் இடையில் பல புதிய ஒலிகள் அமைக்கப்பட்டது.இவை நுட்பசுரங்களாகும்.
‘அகநிலைக்குரிய நிரம்பின திரட்டி
நிறை, குறை கிழமை பெறுமென மொழிப’ – சிலப்பதிகாரம் 8:39
இந்த நுட்பசுரங்களை நிறை, குறை என வகுத்து சுரஸ்தானத்தின் ‘ச’ முதல் இரண்டாவது ‘ச’ வரை சமமாக 22 சுரங்களாக பிரித்தனர். பிரச்சனை இதிலும் இல்லை.
இசையின் சுரங்கள் விகித முறைப்படியே கணக்கிட முடியும். பல சுரஸ்தானங்கள் (octaves) இருந்தாலும் இரு சுரங்களுகுள்ள விகிதம் ஒரே அளவில் இருக்கும். உதாரணம் – கீழ் ச/ப – 2/3 எனவும், ச/ம-3/4 என்ற விகிதத்தின் படியே அமையவேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அசைவு எண்கள் (frequency in Hz) ஒரு சுரஸ்தானம்.
ச ரி க ம ப த நி ச:
240 256 300 320 360 384 450 480
ஆதார சுருதிகளான ‘ம’ மற்றும் ‘ப’ இடையிலான நுட்பசுரங்கள், அவற்றின் விகிதங்களை ‘cent’ என்ற குறியீட்டில் குறிப்பிடுவர். ஒரு சுரம் 100 cent என்று வழங்கப்பட்டு வந்தது. அப்படியானால் ஒரு சுரஸ்தானத்தில் 22 சுரங்கள் இருந்தால், மொத்தம் 2200 cents இருக்கவேண்டும்.
இந்த cents விதியை இந்த எண்களுக்கு அமைக்க முடியும். எந்த சுரஸ்தானத்திற்கும் இதே விதி அமைவதால், அதே ஒலி intensity மட்டுமே மாறுபடும்.
பண்டிதர் தன் ‘சுருதி முறை’ என்ற தலைப்பில் எழுதிய அனைத்தும், இந்த விதிகளை(துவவிம்சதி சுருதிகளை) சாரங் தேவ், பரதரும் எப்படி மீறுகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் இளங்கோவடிகளால் இந்த விதிகளை இசை முறையாக இசைத்தமிழில் எப்படி இயற்றியுள்ளார்கள் என்பதையே நிறுவியுள்ளார்.
இந்த நூலில் சுரங்கள்,சுருதி,தாளத்தை முறையின் வேராகக் கொண்டு தன் ஆராய்ச்சியை தொடங்குகிறார். நாம் அறிந்த ராகங்கள் கர்நாடக இசையில் இயற்றப்பட்டதற்கு எந்தவித மாற்றமும் பண்டிதர் குறிப்பிடவில்லை. நீங்கள் கூறியதுபோல பண்டிதர் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவேயில்லை.
ஆனாலும் இதை சொல்லியே ஆகவேண்டும். இந்த அடிப்படை சுருதிகளின் காலங்களும், அசைவு எண்களும் சற்றே மாறுவதால், ராக அமைப்பில் மிகச் சில மாற்றங்களை பண்டிதர் நிறுவினார். இதனால் அவர் ராக அமைப்பையே மாற்றினார் என சொல்லமுடியாது.வட்டப்பாலை முறைப்படி சில ராகங்களை பகுத்து வழங்கி, இவை தமிழிசையில் இருந்ததற்கான ஆதாரங்களை கூறினார்.
அந்த நூலில் பல கர்நாடக விவரங்களை , தமிழிசையில் எப்படி கையாண்டார்கள்.குறிப்பாக ‘கமகம்’ என நாம் குறிப்பது ‘பாடலமுதம்’ என வழக்கிலிருதிருக்கிறது.யாழ் இசைக்கருவியிலிருந்த நுட்பமான கமக வகைகளும், அது வழக்கொழிந்ததால் நம் தமிழிசையின் பெருமையும் போனதாகவும் குறிப்பிடுகிறார்.
சுரங்களை – ஆயப்பாலை முறைபடியும்.
பண் மற்றும் ஜதி – வட்டப்பாலை முறைபடியும்.
நுட்ப சுரங்களை – திரிகோணப்பாலை மற்றும் சதுரபாலை முறையில்
தமிழிசையில் ஏற்கனவே நிறுவியுள்ளதையும் குறிப்பிடுகிறார்.
இதற்கெல்லாம் பண்டிதர் தரும் மிக முக்கிய ஆதாரம் – சிலப்பதிகாரம்.
‘தாரத் துழைதோன்ற பாலையாழ் தண்குர
லோருமுழைத் தோன்ற குறிஞ்சியாழ்-நேரே
இளிகுரலிற் றேன்றி மருதயாழ் துத்த
மிளியிற் பிறக்கநெய்தல் யாழ்’
என பாலை முறை , யாழ் என்ற இசை கருவியில் மீட்டப்படும் சுருதிக் கோர்வைகளை விளக்குகிறார். யாழ் என்ற தந்திக் கருவியில் சங்க காலமுதல் இசைக்கப்பட்டு வந்துள்ளதும், அவற்றின் தந்திகளில் எவ்விதமான சுரங்களையும், ஜதிகளையும் மீட்ட முடியுமென நுட்பமான அம்சங்களை விவரிக்கிறார்.
ஆதலால் ராக முறைகளை மாற்றினார், தமிழிசையே ஆதி முதல் இசை என பண்டிதர் உரைப்பதாக உள்ள தகவல் பிழையாகும். கணித முறைப்படி சுர,சுருதி மற்றும் நுட்ப சுரங்களை நிறுவி பாலை முறையை நிலைநாட்டியது, ராகங்களில் உள்ள நுட்ப சுரங்கள் – இவற்றை பாடியும், இசை மீட்டும் சபை முன்னே வழங்கினார்.
சமஸ்கிருத் பயிற்சி இல்லாதோரும்,இசை பாரம்பரியம் இல்லாதோரும் கூறுவதை நாம் கவனிக்கக் கூடாது.ஏனென்றால் அவர்கள் கூறுவது உண்மையில்லை. ‘இந்திய எல்லை தாண்டி பேசப்படவில்லை’ – என்பதும் தவறு. இதை David Reck, Pollock போன்றோர் ஆராய்ந்திருக்கிறார்கள். இதைப் பற்றிய புரிதல் இல்லாததாலேயே பல கருத்துகளும் உலா வருகின்றன.
அன்புடன்,
ரா.கிரிதரன்.
http://beyondwords.typepad.com