வாசிப்பு – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடந்த ஒரு வருடமாகத் தங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். நான் உங்களின் வலைப்பதிவுகளை வாசித்து, அவை மீதொரு பற்று ஏற்பட்டு இரு புதினங்கள் வாங்கினேன். ஒன்று ‘காடு’. மற்றொன்று ‘கன்னியாகுமரி’. முதலில் காடு வாசித்தேன். அதிகம் வாசித்துப் பழக்கமில்லாததால் அது ஒரு ‘adventure-thriller ‘ என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அதனை வாசித்து முடித்த கொஞ்ச நாட்களில் ‘அறம்’ தொகுப்புகளைத் தாங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்தீர்கள். அதனைப் படிக்கும்பொழுது ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் மனிதர்களையும் அறத்தையும் படித்தபொழுது மனதில் ஒரு இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு ஏற்பட்டது. அது பல உணர்வுகளின் கலவை என்றே சொல்லவேண்டும். “நான் அந்த மனிதர்களைப் போன்ற நல்லவனாக அறமுடையவனாக இருக்கவில்லையே” என்பதும் ஒன்று.

சோற்றுக்கணக்கு பதிவிற்கு வந்த ஒரு கடிதத்தில் வாசகர் ஒருவர் ‘நாயகன் ஏன் ராமலட்சுமியை மணந்து கொண்டான்?’ என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒரு இடத்தில் இரு வரிகள் இருக்கும். ‘கதையை வாசிப்பவர்களுக்கு ஏன் என்ற கேள்வி வரக்கூடாது. அப்படி வந்தால் அது கதையின் புரிதலை பாதிக்கும். அது அப்படிதான் இருக்கிறது. அதனை அப்படியே எடுத்துக்கொண்டு அனுபவிப்பதே சரி ‘ என்று. (இந்த வார்த்தைகள் சரியாக நீங்கள் சொன்னதேதானா எனத் தெரியவில்லை ஆனால் பொருள் இதுவாக இருந்தது. அந்தப் பதிவைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க இயலவில்லை.) சிறுவயதில் இருந்து அதிகம் தமிழ் புதினங்கள் படித்திராத, ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஓரத்தில் இருந்த எனக்கு இது ஒரு வேத வாக்காகவே இருந்தது.

எல்லாவற்றையும் ஏதோ துப்பறியும் நாவலாகவும் அல்லது செய்தியாகவுமே படித்து பழகி இருந்த எனக்கு இலக்கியம் என்பது அது போன்றது அல்ல, இலக்கிய வாசிப்பு என்பது புரிதலில், அனுபவிப்பதில்தான் தொடங்கும் எனத் தெரிந்தது. அறம் கதைகள் வந்த பொழுதுகளில் நாள் முழுதும் கதையின் தாக்கத்திலயே இருப்பேன். தற்பொழுது அந்தப் புத்தகங்களின் பிரதியை எனது பெற்றோருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளேன்.

இது கொடுத்த நம்பிக்கையில் நான் அடுத்துப் படித்தது ‘கன்னியாகுமரி’. நான் அந்தக் கேள்வி-பதிலில் கற்றதை அப்படியே செயல்படுத்திப் பார்க்க ஏற்ற ஒரு படைப்பு. கதையின் நாயகன் காதலியை ஏன் வெறுக்க ஆரம்பிக்கிறான் என்பதும், அவளைப் பழிவாங்குவதற்காக அந்த ரௌடியை ஏன் ஹோட்டலிற்கு அழைத்து வருகிறான் என்பது முக்கியம் அல்ல. அவன் காதலி அவன் அவளுக்கு செய்த கோழைத்தனமான விஷயங்களை ஏன் மன்னித்தும் மறந்தும் வாழ்கிறாள் என்பதும் முக்கியம் அல்ல. அவள் அப்படித்தான். அவன் அப்படித்தான். இந்த ஏன் கேள்விகளைத் தாண்டிச் செல்லும் பொழுதே நம்மால் அந்தக் கதைக்குள் பயணிக்க முடிகிறது. அவன் மன ஊடாடல்களை அறிய முடிகிறது.

எனக்கு எப்பொழுதும் தமிழின் மேல், தமிழ் வாசிப்பின் மேல் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அழியாச்சுடர்களின் உதவியால் அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, லா.ச.ரா. ஆகியோர்களின் படைப்புகளையும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒரு பெரும் உற்சாகம் தந்துள்ளது இது. நமது மொழி இவ்வுளவு அழகானதா, இவ்வுளவு உணர்ச்சியுடையதா என்று வியந்து கொண்டு இருக்கிறேன்.

இப்பொழுது எனக்கு மீண்டும் ‘காடு’ படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் தற்பொழுது உயர் கல்விக்காக ஜெர்மனி வந்துள்ளேன். கையில் ‘காடு’ புத்தகம் இல்லை. வீட்டில் சொல்லி தபாலில் அனுப்பச் சொல்லி இருக்கிறேன். மீண்டும் வாசிப்பேன். இனி என்னால் அந்தக் காட்டிற்குள் புது உணர்வோடு செல்ல முடியும். அந்தக் காட்டினை, அதன் அழகினை, அதன் சுற்றத்தை, குட்டப்பனின் கசாயத்தையும், நாயகனின் துக்கத்தையும், நாயகியின் மரணத்தையும், காட்டு அதிகாரி ஐயரின் கருத்துக்களையும் உணரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு நான் உங்களுக்கும்,எனக்கு உங்களை அறிமுகப்படுத்திய என் தோழிக்கும் நன்றி சொல்லவேண்டும். தாங்கள் இலக்கிய வாசிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பல கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். இது எனக்குப் பெரும் உதவியாய் இருக்கிறது.

தங்கள் இந்தியப் பயணம் இனிமையாக இருக்க என் வாழ்த்துக்கள். தங்களின் உதவியால் இனி என் வாசிப்பு அதிகமாகும். என் வாசிப்பின் புரிதலும் அதன் இனிமையும் அதிகமாகும். வருங்காலத்தில் உங்களுடன் நானும் இது போன்றதொரு பயணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை உண்டாக்குவேன்.

நன்றி, வணக்கம்.
மீனாட்சி சுந்தரம்.க

*

வணக்கம் ஐயா,

தங்கள் பயணம் சீராக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள். என்ன ஒரு அனுபவமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலும் அறிந்துகொள்வது கஷ்டமே. எனது முதல் கடிதத்தை உங்கள் அலைச்சலில் மறந்தே இருப்பீர்கள். அதுவும் நல்லதுதான். அதில் தவறுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நான் தமிழில் இவ்வாறு கடிதங்கள் அனுப்புவது அரிது. எனவே தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

ஜெர்மனியில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது கஷ்டம். இவர்கள் எதையுமே ஜெர்மனில் மொழிபெயர்த்துதான் படிக்கிறார்கள். தாங்கள் முன்னர் கூறியது போல நம் இந்திய மொழிகளில் வரும் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகவும் முக்கியம். சொல்வனம் இணையதளத்தில் பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன.  ஆனால், பெரும்பாலும் மற்ற மொழியில் இருந்து தமிழுக்கே. மிகச் சிலரே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். எனக்கு சோற்றுக்கணக்கு கதையினை மொழிபெயர்க்கவேண்டும் என்று ஆசை. நிறைவேற்றிவிட்டுக் கூறுகின்றேன். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதுவும் மிகச் சில புத்தகங்கள் மட்டுமே. நான் சார்லஸ் டிக்கன்சுடைய ‘Great Expectations’ புத்தகமும் ‘Crime and Punishment’ புத்தகமும் வாங்கினேன். ‘Great Expectations’ ஏற்கனவே வாசித்திருக்கிறேன். தங்களின் பதிவுகளில் உள்ள குறிப்புகளைத் தொடர்ந்து ‘Crime and Punishment’ வாங்கினேன். அற்புதம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தை அதனை சரியாக விவரிக்கும் எனத் தெரியவில்லை.

நான் Dostoevsky அவர்களின் ‘White Nights’ சிறுகதை வாசித்திருக்கிறேன். காதலை அவரைப்போல் உணரவைக்க முடியாது என்று நினைப்பேன். திரும்பத் திரும்ப அந்தக் கதையைப் படிப்பேன். ‘Crime and Punishment’ வாசித்தபிறகு அவரால் குற்ற உணர்ச்சியையும், தனிமையையும், காதலையும், நட்பையும்… அவர் எதை உணர்கிறாரோ அதனை நம்மை உணரவைப்பார் என்று அறிந்தேன். அவரின் சிறப்பு அது என்று நினைக்கிறேன். நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் Raskolnikov இன் மனம் அவனுக்குத் தரும் தண்டனையை அழகாகக் கூறியிருக்கிறார். மனதின் நேர்மையும் சக்தியும் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. மூளை (அறிவு) தான் ஒருவனை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கெட்டவனாக மாற்றுகிறது.

நான் முன்னர் கூறியிருந்ததைப் போலவே தங்கள் படைப்புகளான ‘காடு’ மற்றும் ‘அறம்’ என் நண்பன் மூலமாக இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இங்கு இருக்கும் என் வெளிநாட்டு நண்பர்களுக்கு இரு புத்தகங்களின் அட்டைப் படமும் (முக்கியமாக காடு) மிகவும் பிடித்திருந்தது. நான் அவர்களுக்கு சோற்றுக்கணக்கு சிறுகதையை மொழிபெயர்த்துக் கூறினேன். கெத்தல் சாகிப் பற்றிக் கூறியதும் ஆச்சர்யபட்டார்கள். இப்பொழுது வாசிப்பது ‘காடு’. பனிபொழியும் இம்மாதங்களில் ‘காடு’ வாசிக்க சுகமாக இருக்கிறது. குட்டப்பன் கருப்பட்டி டீ போடும் போதெல்லாம் நானும் சென்று ‘black டீ’ போட்டுக்கொள்வேன். இப்பொழுது தேர்வு விடுமுறை வேறு. காடு வாசிப்பது, சமைத்து சாப்பிடுவது தவிர வேறு வேலை கிடையாது. விடுமுறைகளில், நாம் சோர்வாக அசமந்தமாக அங்கும் இங்கும் நகர்வதே ஒரு சுகம். இங்கு அந்த சுகத்தோடு அப்படியே காட்டினுள் தொலைந்து விடுகிறேன். நீலியை, மிளாவைத் தேடி அலைகிறேன். ஐயருடன் பேசுகிறேன். சந்தோஷமாக இருக்கின்றது உங்கள் படைப்பின் துணை. உலகத்தை விட்டுத் தன்னந்தனியாக நான் மட்டும் அந்தக் காட்டினுள் செல்வது போல இருக்கிறது. ஒரு சுகமான வனவாசம் என்றே கூறவேண்டும். வெளியில் வர மனமில்லை. ‘Solitude is the best feeling you could get, if you have one friend to whom you can say how it feels to be in solitude’ என்று Honore de Balzac கூறுவார். அத்தகைய ஒரு நண்பனாக, முடிவே இல்லாத தேடலாக இருக்கிறது ‘காடு’ :)

நன்றி,
மீனாட்சி சுந்தரம்.க

அன்புள்ள மீனாட்சி சுந்தரம்,

உண்மையிலேயே உங்கள் முதல்கடிதம் பயண அவசரத்தில் வாசித்து மறந்து போன ஒன்றாக இருந்தது. செந்தில்குமார் தேவன் மூன்று வருடங்கள் முன்பு ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள் போல இருக்கின்றன உங்கள் கடிதங்கள். ஆர்வமும் தேடலும் தனிமையும். அவர் இன்று இங்கே எங்கள் நண்பராக இருக்கிறார். சென்ற இந்தியப் பயணத்தில் அவரும் இருந்தார்.

நான் கதைகளை ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாசிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. அது என் கருத்து அல்ல.

ஆரம்பநிலையில் இலக்கிய விஷயங்களை வாசிக்கையில் பொதுவான புரிதல்களை உருவாக்கிக்கொள்வது பிழை. அது நம்மை வெகுவாக திசை திருப்பிவிட்டுவிடக்கூடும். நாம் ஒன்றை நினைவில் வைத்திருக்கையில் அது சரியான சொற்றொடர்களில் இருந்தாகவேண்டும். அந்த ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும்போது அவரது அதே சொற்களில் மேற்கோளிட்டுத்தான் கேட்கவேண்டும்.

ஏன் என்ற கேள்விக்கான விடைகளைக் கதைகளுக்குள்ளேயே தேடவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பேன். அப்படித்தேடுவதே நல்ல வாசிப்பை, நுணுக்கமான புரிதலை உருவாக்கும். அப்படி வினாக்களை எழுப்புவதே நல்ல படைப்பு. பதில்களைத் தேடி அடைவதே நல்ல வாசிப்பு.

ஆனால் வாசிப்பு என்பது ஆராய்தல் அல்ல. தர்க்கப்படுத்துதல் அல்ல. சொற்கள் வழியாகக் கற்பனைமூலம் நிகர்வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக்கொள்ளுதல். அந்த வாழ்க்கையில் இருந்து வினாக்களை எழுப்பிக்கொள்ளவேண்டும். அதாவது கெத்தேல் சாகிப்பை நேரில் சந்திப்பதுபோன்ற அனுபவத்தை நாம் அக்கதையில் இருந்து அடையவேண்டும். அந்த அனுபவத்திடமிருந்தே வினாக்கள் எழவேண்டும்.

அதாவது ஓர் உண்மையான வாழ்க்கைநிகழ்வு நமக்கு என்னென்ன குழப்பங்களை, கேள்விகளை அளிக்கிறதோ அதேயளவுக்குக் குழப்பங்களையும் கேள்விகளையும் இலக்கியம் அளிக்கவேண்டும். நாம் அவற்றை ஆராய வேண்டும்.

உதாரணமாகக் கன்யாகுமரியில் நிகழ்வனவற்றை ‘ஆசிரியர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? வேறுமாதிரி எழுதியிருக்கலாமே?’ என்று எண்ணினால் அந்நூலுக்குள் செல்ல முடியாது. ‘இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?’ என்று எண்ணிக்கொண்டால் அந்த நாவலுக்கு உள்ளே செல்லமுடியும். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாவலுக்குள் பதில்கள் உள்ளன.

இவ்வாறு ஒரு படைப்புக்குள் வாசகன் தன் சிந்தனை மூலமும், கற்பனை மூலமும் கேட்டு கண்டடையவேண்டிய விஷயங்களையே வாசக இடைவெளி என்கிறார்கள். அதை நிரப்பிக்கொள்ளும் வாசிப்பையே நுண்வாசிப்பு என்கிறார்கள். அத்தகைய வாசிப்பை மேலும் மேலும் அளிக்கும் நூல்களே இலக்கியத்தரமானவை.

தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பது நிறைவளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பின் எல்லாச் சிக்கல்களும் வாசிப்பு வழியாகவே தீரும். அதுவும் நாம் நம்பவே முடியாத அளவுக்கு விரைவாக.

ஜெ