கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2

இந்திய அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, மக்களின் எரியும் வாழ்க்கைப்பிரச்சினையை எப்படிக் கையாளும் என்பதை சென்ற கால்நூற்றாண்டாகக் கண்கூடாகக் கண்ட அனுபவம் தமிழர்களுக்குண்டு. இலங்கைத்தமிழர் பிரச்சினை இந்திய அதிகாரிகளின் அறியாமை, அலட்சியம், ஆணவம் மூன்றினாலும் திசைமாறி, சீரழிந்து, பேரழிவில் முடிந்த ஒன்று என்றால் மிகையல்ல. அதன் ஒவ்வொரு படியிலும் இந்தியாவின் வெளியுறவுத்துறையும்,உளவுத்துறையும், உள்ளூர் பாதுகாப்புத் துறைகளும்,இராணுவமும் முடிந்தவரை எல்லாச் சிக்கல்களையும் உண்டுபண்ணியிருக்கின்றன. ஒரு தருணத்திலேனும் அப்பிரச்சினையுடன் தொடர்புள்ள மக்களின் வாழ்க்கைச்சிக்கல்களோ உணர்ச்சிகளோ கருத்தில் கொள்ளப்படவில்லை.

பி.ஏ.கிருஷ்ணன்

ஒவ்வொருமுறையும் இந்த அதிகார வர்க்கம் தான் எடுத்த முடிவுகளை மேலிருந்து மக்கள் மேல் சுமத்தியது. அது மக்களைப் புரிந்துகொள்ளவில்லை, மாறாகத் தாங்கள் புரிந்துகொண்டபடி அவர்கள் மாறவேண்டுமென அது எதிர்பார்த்தது. அதனால் உருவான எல்லா அழிவுகளுக்கும் அம்மக்களையே அது குறை கூறவும் செய்தது. இன்று அதிகாரிகள் எழுதும் சுயநியாயப்படுத்தல்கள் நிறைந்த வரலாற்றுப்பதிவுகளினூடாகவே நாம் அதை வாசிக்கமுடிகிறது. நாளை அவர்களில் ஒருவர் இன்னும் ஆழத்துக்குச் சென்று அதை நேர்மையாக எழுதுவாரென்றால் அந்த மாபெரும் சோக-அபத்த நாடகத்தின் முழு விரிவையும் நாம் அறிய முடியலாம்.

இந்தப் பின்னணியால் பி.ஏ.கிருஷ்ணனின் ‘கலங்கியநதி’ தமிழுக்கு முக்கியமானதாகிறது. இந்நாவல் அஸ்ஸாமியப் பிரச்சினையை மையமாகப் பேசுகிறது. ஒரு தமிழ் வாசகன் தொடர்ந்து ஈழப்போராட்டத்தை நினைவுகூர்ந்து, ஒப்பிட்டுக்கொண்டே இதை வாசிக்க முடியும். அது பல திறப்புகளை, சலிப்பின், சோர்வின் உச்சநிலைகளை அளிக்கக்கூடிய வாசிப்பனுபவமாக அமையும். இப்படித்தான் அதிகார அமைப்பு செயல்படுகிறதென நாம் ஏற்கனவே உள்ளூர அறிந்திருக்கிறோம் என நமக்கே காட்டுகிறது இந்நாவல். பின்னர் எப்போதுமே இது இப்படித்தான் இருந்திருக்கிறதா என்ற சலிப்புக்குள் மெல்ல மெல்ல நம்மைக் கொண்டுசெல்கிறது.

இந்நாவலின் அமைப்பை இரு சரடுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அஸ்ஸாமியப் பிரிவினைப்போராட்டம். இன்னொன்று இந்திய ஆட்சிப்பணியின் ஊழியனான ரமேஷ் சந்திரன் அந்த அதிகார அமைப்பைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளமுடியாமல் முரண்பட்டு அடையும் தனிப்பட்ட துயரம். இரு சரடுகளையும் ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய ஒன்றாகப் பின்னிச்செல்லும் கதை உத்தியைக் கிருஷ்ணன் மேற்கொண்டிருக்கிறார். தான் சார்ந்துள்ள அமைப்பின் பிரம்மாண்டமான செயலின்மையின் அபத்தத்தை ரமேஷ்சந்திரன் அஸ்ஸாமியப் போராட்டத்தை அந்த அதிகார அமைப்பின் பிரதிநிதியாக நின்று எதிர்கொள்ளும்போதுதான் புரிந்துகொள்கிறான். அது ஒரு சுய கண்டடைதல். அந்தக் கண்டடைதலுடன் அவன் அந்த அதிகார அமைப்புக்கு எதிராகத் திரும்பி வெளியே தள்ளப்படுகிறான். ஆனால் அந்த சுய பகிஷ்காரம் மூலம் அவனுள் ஆழமான ஒன்று நிறைவைக் கண்டடைகிறது.

இந்த இரு சரடுகளையும் பின்னிச்செல்ல கிருஷ்ணன் மீபுனைவு என்னும் வழிமுறையைக் கையாள்கிறார். இது ரமேஷ் சந்திரன் படுக்கையில் இருந்தவாறு எழுதும் ஒரு நாவலாக நாவலுக்குள் விரியும் கதை. ரமேஷின் நாவலுக்குள் வந்து நாவலின் வாசகர்களாகவும் இருக்கும் மூவர் முக்கியமான கதாபாத்திரங்கள். ரமேஷின் மனைவி சுகன்யா. அவனது பிரிட்டிஷ் நண்பரான ஹெர்பர்ட். வங்காள நண்பரான சுபிர். மூவரும் மூன்று கோணங்களில் இந்த நாவலின் நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாகிறார்கள். அந்த மூன்று விமர்சனங்களும் ரமேஷின் நாவல் வழியாக வெளிப்படும் நிகழ்ச்சிகளுக்கான மூன்று விமர்சனங்களாக வாசகன் விரித்துக்கொள்ளமுடியும்.

கூடவே ரமேஷ் தன் நாவலில் எழுதும் நிகழ்ச்சிகளுக்கும் ரமேஷின் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்நிகழ்ச்சிகளின் உண்மை வடிவுக்கும் இடையேயான முரண்பாடுகளும் இந்நாவலின் வாசிப்பில் இன்னொரு தளத்தைத் திறக்கின்றன. எதை அவன் விட்டுவிடுகிறான், எதை அவன் மாற்றியமைக்கிறான் என்பது நுணுக்கமாக அவனுடைய அக உலகைக் காட்டக்கூடியதாக அமைகிறது. முக்கியமாக இந்நாவலின் மர்மமான கதாபாத்திரமான அனுபமாவின் கதையை அவன் நாவலில் நுணுக்கமாக மாற்றி எழுதுகிறான். அந்த மாறுதல் மூலமாகவே அவனுக்கும் அனுபமாவுக்கும் இடையேயான உறவின் சொல்லப்படாத ஒரு சிறு சாத்தியக்கூறு நாவலில் திறக்கிறது, அதுவும் அவன் அப்படி மாற்றி எழுதியதைக்கொண்டு மட்டுமே அதை ஊகிக்க முயலும் சுகன்யா வழியாக.

மூன்றாவதாக நாவலின் முக்கியமான அம்சம் ரமேஷ்சந்திரனின் மனநிலையை பாதித்திருக்கும் அவன் மகளின் மரணம். அடிவாங்கிக் கன்றிய உடற்பகுதி மிகமிக நுட்பமான தொடு உணர்ச்சி கொண்டதாக ஆவதுபோல அந்த இழப்பின் மூலம் அவன் மனம் ஆகிவிட்டிருக்கிறது. கலங்கிய நதி என்ற தலைப்பு ஒரு வகையில் அதைக்கூடக் குறிக்கிறது. அந்த இழப்பை ஒட்டி உருவான தனிமை, உறவுச்சிக்கல்கள், வெறுமை ஆகியவையே அவனைப் பிற அதிகாரிகள் போல அல்லாமல் அந்த அமைப்பின் அடித்தளத்தில் உள்ள அத்தனை அதிர்வுகளையும் வாங்கிக்கொள்ளச் செய்கின்றன. அவனுடைய ஒட்டுமொத்தச் செயல்பாட்டுக்கும் பின்னாலிருப்பது இந்த அம்சம்தான்.

பிரம்மபுத்ரா

ரமேஷ் சந்திரனின் மகள் ப்ரியாவின் மறைவு ரமேஷ் சந்திரனுக்கும் அவன் மனைவி சுகன்யாவுக்குமான உறவில் உருவாக்கும் கலங்கல் பல திறப்புகள் கொண்டது. மரணத்துக்கு சுகன்யாவின் எதிர்வினையை மிக நுட்பமாக விவரிக்கிறது இந்நாவல். நாம் எதிர்பார்க்கும் வழக்கமான அம்சங்களேதும் இல்லாமல் ஆனால் முற்றிலும் நம்பகமாக அந்த அதி உளவியல் நிலையைச் சொல்கிறது. அடிப்படையில் ஓர் அரசியல் நாவலான இதை அந்தரங்கமான தளத்துக்குக் கொண்டுசென்று ஆன்மீகமான ஓர் அழுத்ததை அளிப்பது இந்த அம்சமே.

சுகன்யா ப்ரியாவை முழுக்க மறக்க முயல்கிறாள் என்பதே ஆச்சரியமானது. ப்ரியாவின் எல்லா உடைமைகளையும் இல்லத்தில் இருந்து இல்லாமலாக்கிக்கொள்கிறாள். அது உண்மையில் சுகன்யா வாழ விரும்புவதன் அடையாளம். மரணத்தில் இருந்து தூர விலகவே உயிர்கள் விரும்புகின்றன. எவருடைய மரணமாக இருந்தாலும். மரணம் இறந்த காலம் சார்ந்தது. வாழ்க்கை எதிர்காலம் நோக்கியே பெருகிச்செல்ல முடியும். சுகன்யா கடைசியில் ரமேஷ் சந்திரனிடமிருந்து இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்வதன் மூலம் மீண்டு வருவது அந்த வாழ்வாசையின் விளைவே. பெண்ணின் இயல்பான வழிமுறை அதுவே.

ஆனால் ப்ரியாவை மறக்க விரும்பும் சுகன்யா கூடவே ரமேஷ் சந்திரனை பாலுறவுக்கு அனுமதிக்காமல் விலக்கி வைக்கிறாள். அது மிக நுட்பமான மனநாடகம். இந்நாவலில் என்னை மிக ஆச்சரியப்படுத்திய அம்சம் இது சகஜமாக உருவாகி வருவதுதான். அவளுக்குத்தேவை ரமேஷின் குழந்தைதான். ஆனால் அதை அவளுடைய சுயம் ஒப்புக்கொள்ள தயங்குகிறது. அதில் அவமானமடைகிறது. ஆகவே ரமேஷை உதறுவதுபோல, வெறுப்பது போல அவளையறியாமலேயே அவள் நடிக்கிறாள்.

அந்த நடிப்புக்கு ஆதரவாக அவளுக்குக் கிடைக்கும் காரணம் ப்ரியாவின் மரணத்துக்கு ரமேஷை காரணமாக்கலாம் என்ற சாத்தியம். அதைக்கொண்டு அவள் ரமேஷை ஆழமாகப் புண்படுத்துகிறாள். இந்த மனநாடகமும் ஆண்பெண் உறவில் எப்போதும் உள்ளது. தன் இணையை புண்படுத்துவதன் மூலம் தன்னைப் புண்படுத்திக்கொள்வது ஒரு சிக்கலான வழிமுறை. சுயவதையை விரும்பும் பெண்கள் எப்போதும் செய்வது அது. அந்த நடிப்பு மூலம் அவளுடைய கருப்பை தாகத்துடன் அவனை நெருங்கியும் வருகிறது.

ப்ரியாவை ஒவ்வொரு நாளும் நினைத்துக்கொள்ளும் ரமேஷின் மனநிலை இன்னும் கொஞ்சம் பூடகமானது. அவன் அவளை மறக்க விரும்பி மேலும் மேலும் அவள் நினைவாக ஆகிறான். அவன் எப்படி ப்ரியாவின் நினைவில் இருந்து சகஜமாக விடுபடுகிறான் என்பதை கவனித்தால் அவனுடைய அகம் ப்ரியா என்ற வலிமிக்க நினைவை எப்படிப் பயன்படுத்தியது எனப் புரியும். அவன் ராஜவன்ஷியைச் சந்தித்து தன் மனசாட்சி தூண்டப்பட்டு அதன் பாதையில் ஆபத்தான ஒரு வழியைத் தேர்வு செய்யும்போதுதான் அவனுக்குள் ப்ரியா உருவாக்கிய வலி அடங்குகிறது.

ரமேஷ் அவன் வாழ்ந்த உயரதிகாரியின் வசதிகள் மிக்க வாழ்க்கைமேல் உள்ளூரக் கண்டனம் கொண்டவனாக இருக்கிறான். அந்த வாழ்க்கையின் இன்பத்தின் உச்சமென அவன் ப்ரியாவை நினைக்கிறானா? அந்த வாழ்க்கையில் இருந்து துண்டித்துக்கொள்ள, மனசாட்சியை தூண்டிக்கொள்ள அவளுடைய மரணத்தை ஒரு காரணமாகக் கொண்டானா? ப்ரியாவின் மரணத்துடன் அவன் ஒரு வழக்கமான ஆட்சிப்பணி அதிகாரியல்லாமல் ஆகிறான். அந்த மாற்றம் விவரிக்கப்படவில்லை. ஆனால் நாவலில் இருக்கிறது.

மரணம் ஓர் இழப்பாக மட்டுமல்லாமல் ஆன்மீகமான பரிணாமத்துக்கான காரணமாகவும் அமைவதே கலங்கிய நதியை முக்கியமான ஒரு படைப்பாக ஆக்குகிறது. இந்நாவலின் நுட்பமான கலையமைதி கைகூடியிருப்பதும் இங்கேதான். அந்த ஆன்மீகப்பயணம் இரு திசைகளில் நிகழ்கிறது. ரமேஷ் அவனுள் இருந்த இலட்சியவாதியை கண்டெடுக்கும்போது சுகன்யா அவளுக்குள் இருந்த வலுமிக்க அன்னையை மீட்டுக்கொள்கிறாள்.

உல்ஃபா கொலை

இந்த உள்விரிவுச்சாத்தியங்களைப் புனைவு மூலம் நிகழ்த்தியபின் பி.ஏ.கிருஷ்ணன் நேரடியான ஆவணத்தன்மையுடன் கதையைக் கொண்டு செல்கிறார். கதையின் இரு அடித்தளங்களும் இயல்பான நகைச்சுவை கொண்ட சித்தரிப்பு மற்றும் நுண்ணிய தகவல்கள் வழியாக நேரடியாகச் சொல்லப்படுகின்றன. இந்திய அதிகார அமைப்பு இன்னும்கூட பிரிட்டிஷார் உருவாக்கிய அதே மனநிலைகள் கொண்டது. ஓர் இந்திய உயரதிகாரி தன்னை ஏகப்பட்ட கறுப்பு தேசிகளைக் குற்றேவல் செய்யவைத்துக் ‘கட்டிமேய்க்கும்’ ஒரு வெள்ளை ஆட்சியாளராகவே கற்பனை செய்துகொள்கிறார்.

இந்திய அதிகார வர்க்கத்தை அறிந்தவர்களுக்கு உயரதிகாரிகளிடமிருக்கும் பிரிட்டிஷ் பாவனைகள் கேலிச்சித்திரம்போலத் தோன்றலாம். தன் மேஜை மேல் இருக்கும் ஒரு பொருளைத் தன் கைக்கு எடுத்துத் தர சேவகனை மணியடித்துக் கூப்பிடுவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடக் கச்சிதத்தைக் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள். தன் இருக்கையில் விரிக்கப்படும் புதிய வெள்ளை டர்க்கிடவலில் ஓரம் மடிந்திருந்ததனால் சேவகரை ஆங்கிலத்தில் திட்டி, கோப்புகளைக் கீழே வீசிய ஓர் அதிகாரியை எனக்குத் தெரியும். அதிகாரி சரியாகப் பதினொரு மணிக்கு காபி சாப்பிடுவார் என பத்து ஐம்பதுக்கு அலாரம் வைக்கும் டவாலியைக் கண்டிருக்கிறேன்.

ஆடம்பரம் அதிகாரத்தின் இன்னொரு முகம். நானறிந்த எல்லா உயரதிகாரிகளும் பதவி ஏற்றதுமே தங்கள் அறையை விரும்பிய நிறத்திலும் அமைப்பிலும் பல லட்சம் ரூபாய் செலவில் மாற்றிக்கட்டியிருக்கிறார்கள். தான் நடந்து வரும்போது ஷூவின் ஒலி டக் டக் எனக் கேட்கவேண்டுமென்பதனால் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தை அகற்றி மூங்கில்தரை போடச்சொன்ன அதிகாரியைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நடை உடை மட்டும் அல்ல, அவர்களின் மொழிகூட நூறாண்டுபழைய லண்டனைச் சேர்ந்தது. கோப்புகளில் உயரதிகாரிகள் எழுதிவைக்கும் குறிப்புகளைப் பார்த்திருக்கிறேன். நிறையத் தருணங்களில் அந்த மொழியைக் கண்டு வாய்விட்டுச் சிரித்துவிட்ட அனுபவம் கூட உண்டு.

அவர்களின் பாவனைகள் இன்னும் அற்புதமானவை. பெரும்பாலான அதிகாரிகள் கண்டிப்பானவர்களாக, தாராளமானவர்களாக, தண்டிப்பவர்களாக, புரவலர்களாக, கலைநுண்ணுணர்ச்சி கொண்டவர்களாக, வேலையை மட்டுமே கவனிப்பவர்களாக, நகைச்சுவை கொண்டவர்களாக, இறுக்கமானவர்களாக உருவம் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அந்தந்தத் தருணங்களில் மேற்கொள்ளவேண்டிய ‘கதாபாத்திரத்தை’ அந்தக் கணங்களில் தேர்வுசெய்கிறார்கள் என்பதே உண்மை. அதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. கீழ் ஊழியர்கள் அதைப் புரிந்துகொள்ள முயல்வதில்லை. அந்தந்த நடிப்புகளுக்கு அவர்கள் அந்தந்தக் கணங்களில் இசைவாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

கலங்கியநதியில் ரமேஷ் சந்திரனுக்கும் அவனது துறைச்செயலருக்குமான உறவின் வேடிக்கையும் வேதனையுமே இந்த நாவலின் துவக்கப்புள்ளியாக எனக்குப் பட்டது. தன் முன் சேவகன் கொண்டுவைக்கும் டீயை மறந்து போய்த் தாமதமாகக் குடித்துவிட்டு அது சூடாக இல்லை என்பதற்காகத் துறையின் துணைச்செயலரான ரமேஷை நேரில் வர அழைத்து செய்தி அனுப்பும் துறைச்செயலர் அவரது ‘கடுமையான பணிச்சுமை’ நடுவே ரமேஷையே மறந்துவிடுகிறார்.

‘யார் நீ?’. ‘சந்திரன் சார்?’. ‘சந்திரனா? ஓ, வெளியுறவுத்துறை சந்திரனா?’. ‘இல்லை சார், உங்கள் துறையில் இயக்குநராக வேலைபார்க்கிறேன்’. ‘நீ அந்த சந்திரனா? வருவதற்கு இத்தனை நேரமா?’. ‘அப்போதே வந்துவிட்டேன். வெளியில் காத்திருந்தேன்’. ‘சரிசரி…என்ன பிரச்சினை?’. ‘எனக்குப் பிரச்சினை ஒன்றுமில்லை. நீங்கள்தான் வரச்சொன்னீர்கள்’. ‘நான் வரச்சொன்னேனா? யெஸ், இவ்வளவு சோம்பேறித்தனமான உதவாக்கரை கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. முப்பத்தைந்து வருடமாக வேலைபார்க்கிறேன். உன் கூட்டம்தானே அவர்கள்?’ ‘என் கூட்டமா?’ ‘சரிதான் இந்தத் துறையின் காண்டீனுக்கு நீதானே பொறுப்பு?’

மிக மிக யதார்த்தமாக நிகழும் ஓர் உரையாடல். ஆனால் கவனித்தால் இந்த உரையாடலின் ஒவ்வொரு வரியும் முட்டாள்தனம். காண்டீனின் வருடாந்தர நிர்வாகக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது தவிர சந்திரனுக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால் அவன்தான் அந்த டீ சூடில்லாமல் இருந்ததற்கு பதில் சொல்லியாகவேண்டும். அந்தத் துறையின் மூளை கலங்காத ஒரே மனிதர் என ரமேஷ்சந்திரன் நினைக்கும் கூடுதல் செயலரிடம் சென்று தகவலைச் சொல்கிறான்.

‘உன்னை அவருக்குத் தெரியுமா?’. ‘இல்ல சார், இப்போத்தான் முதன்முதலா பாக்கிறேன்’. அப்ப பாத்தோங்கிறதையே மறந்திரு. அவருக்கு ஞாபகம் இருக்காது’. அதுதான் நிர்வாகத்திற்குள் இருக்கும் மிகமிகச்சிறந்த பிரச்சினைதீர்க்கும் வழி. ஆனால் செயலர் விடவில்லை. ‘நமது துறையில் இருக்கும் காண்டீன் இத்துறைக்கே ஓர் அவமானம். அதன் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் அதிகாரியிடம் நேற்று பேசினேன். அவரால் கையைப் பிசைவது தவிர ஒன்றும் சொல்லமுடியவில்லை. இன்னும் ஒருவாரம் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் நிலைமை சரியாகாவிட்டால் தலைகள் உருளும்’ எனக் கடிதம் வருகிறது.

அந்தக் கடிதத்துக்கு ரமேஷ்சந்திரன் அளிக்கும் பதில் அபத்த நாடகத்தின் உச்சம். முற்றிலும் நிர்வாக மொழியில், துல்லியமான தகவல்களுடன், டீ என்ற பானத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தொட்டு எழுதப்பட்ட அக்குறிப்பு செயலருக்கு டீ சூடாக இருப்பதை அறிவித்துக்கொண்டே இருக்கும் ஒரு கருவியின் அவசியம் குறித்துப் பரிந்துரைக்கிறது. அக்குறிப்புக்குக் கீழே செயலர் வழக்கமான இயந்திரத்தனமான கையெழுத்தைப் போட்டுத் திருப்பி அனுப்பிவிடுகிறார். துறையெங்கும் அந்தக் குறிப்பு நகலெடுத்து வழங்கப்படுகிறது.

அடிமைத்தனம் என்பது இந்த அமைப்பின் எழுதப்படாத விதி. எதிர்வாதங்கள், மாற்றுக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பணிமூப்பு என்ற ஒரே தகுதியால் மேலே சென்று சேர்பவர்கள் தங்கள் காலம் முழுக்க தாங்கள் புரிந்துகொண்ட இந்தியாவை தாங்கள் பழகிவந்த முறைப்படி நிர்வாகம் செய்கிறார்கள். அங்கே ஒரு உயரதிகாரி தனக்குக் கீழே உள்ள இன்னொரு அதிகாரியைக் குளிரில் வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே அமர்ந்து டிவி பார்க்கலாம். எந்த விளக்கமும் கேட்காமல் முட்டாள் என்று சொல்லலாம்.

இந்த அபத்தமான பெரும் யந்திரம் அதற்குக் கீழே எரிமலைக்குழம்பு போலக் கொந்தளிக்கும் ஒரு மாபெரும் தேசத்தைக் கொண்டிருக்கிறது. அந்த தேசத்தை அது கையாள்கிறது, கட்டுப்படுத்துகிறது. அந்த மறுபக்கத்தை நாம் ரமேஷ் சந்திரனின் அஸ்ஸாமிய அனுபவம் வழியாக அறிகிறோம். தன் துடுக்குத்தனம் காரணமாகத் துறைதோறும் வீசப்பட்டு கடைசியில் மின்பகிர்மானம் சார்ந்த ஒரு துறைக்கு வந்து சேர்கிறான் ரமேஷ். அது என்ன என்றே அவனுக்குத் தெரியாது. இந்திய ஆட்சிமுறையின் அபத்தங்களில் ஒன்று இது. ஒரேஒரு தேர்வு எழுதி வென்று பதவி பெறும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அறிவியல், சமூகவியல், வணிகம், சுற்றுலா என இந்தியாவின் எந்த ஒரு துறைக்கும் தலைமை வகிக்கமுடியும்!

அந்தப்பதவியில் இருந்து ரமேஷ் அஸ்ஸாம் செல்கிறான். காரணம் அவன் கச்சிதமான ஒரு பலியாடு என்பதுதான். அஸ்ஸாமில் அவன் துறையைச் சேர்ந்த பொறியாளரான கோஷ் அஸ்ஸாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறான். அவர்கள் அவனைப் பணயக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு மீட்புக்குப் பெருந்தொகை கேட்கிறார்கள். அந்தக் கடத்தலை இந்திய அதிகார வர்க்கம் கையாள்வதன் ஒவ்வொரு படியிலும் இருக்கும் நம்பமுடியாத அபத்தங்கள் இந்நாவலை முன்னெடுத்துச்செல்கின்றன.

முதலில் அவர்கள் இதற்காகத் தேர்வுசெய்வது கொஞ்சம்கூட அனுபவம் இல்லாத, அஸ்ஸாமையே அறிமுகமில்லாத ரமேஷ்சந்திரனை. அதுவும் அவனைப் பழிவாங்கவேண்டும் என்பதற்காக மட்டும். அதன்பின் நிகழும் ஒவ்வொன்றையும் பார்த்தால் அனுபவமுள்ளவர்கள் சென்றிருந்தால் கோஷ் விடுதலையே ஆக முடியாதென்று தோன்றும். அஸ்ஸாமில் தீவிரவாதிகள் அதிகாரிகளைக் கடத்திச்செல்வதென்பது ஓர் அன்றாட நிகழ்ச்சி. ஆகவே போலீஸோ அஸ்ஸாமிய அரசோ அதை ஒரு பெரிய விஷயமாக நினைப்பதில்லை. கடத்தப்பட்ட அதிகாரியின் முக்கியத்துவம் என்பது அவர் வகிக்கும் பதவி சார்ந்தது. பெரிய அதிகாரிகள் அனேகமாக மாட்டுவதில்லை. சிறிய அதிகாரி மீது எவருக்கும் அக்கறை இல்லை.

இந்தக் கடத்தல் விவகாரத்தினூடாக அஸ்ஸாமில் நிர்வாகம் நடக்கும் விதம் பற்றிய பி.ஏ.கிருஷ்ணனின் சித்தரிப்பையே நான் இந்நாவலின் மிக முக்கியமான அரசியல்புரிதல் என்பேன். நீண்டகாலமாக ஒரு களத்தில் மோதிக்கொண்டிருக்கும் அரசியல்சக்திகள் மெல்ல மெல்ல அதை ஒரு சமரசமாக, அரசியல் விளையாட்டாக ஆக்கிக்கொள்கின்றன என்பதைக் காட்டுகிறது நாவல். ஒருபக்கம் தீவிரவாதிகளை அரசு வேட்டையாடுகிறது. அகப்படுபவர்களைச் சுட்டுத்தள்ளுகிறது. அதேசமயம் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் பரஸ்பர புரிதல் மூலம் உருவாகும் ஒரு அதிகாரப்பகிர்வும் இருக்கிறது.

இந்நாவலுக்குள்ளேயே இதை நுட்பமாக வாசித்து எடுக்க முடியும். இந்தச் சமரசம் எப்படி ஆரம்பிக்கிறது? முதல் விஷயம் இருதரப்புக்கும் இடையே ஏதேனும் ஒரு தொடர்பு ஊடகம் வேண்டும் என்பதுதான். அந்த ஊடகத்தை இரு சாராரும் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் சமரசம் ஆரம்பிக்கிறது. அதனூடாக இருசாராரும் உரையாடுகிறார்கள். அங்கிருந்து ஒன்றொன்றாக பரஸ்பரப்புரிதல்கள் உருவாகின்றன. ஆட்ட விதிகள் பிறக்கின்றன. அஸ்ஸாமின் முதல்வருக்கும் போலீஸ்துறைக்கும் ஏதோ ஒரு மர்மமான முறையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது. அவர்களுக்குத் தெரியவேண்டியதை அவர் தெரிவிக்கிறார். அவர்கள் விரும்பும் சிலவற்றை அவர் செய்கிறார். அவர் விரும்பும் சிலவற்றை அவர்களும் செய்கிறார்கள். ஆனால் போர் நடந்துகொண்டும் இருக்கிறது.

ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்காலம் இதே போன்ற ஓர் அதிகாரப்பகிர்வுச் சதுரங்கம் ஈழத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே இருந்தது என்பதை நாமறிவோம். உண்மையில் அந்த அரசியலாடலின் உள்ளுறைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது இந்தச் சித்தரிப்பு. இந்த அரசியலாடலில் பகைமைக்கும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கும் அரசியலறங்களுக்கும் இடமில்லை. இது முழுக்கமுழுக்க நடைமுறை நோக்கு மட்டுமே ஓங்கிய ஒரு விளையாட்டு.

ஒரு தீவிரவாத அமைப்பு நீண்டநாளாகச் செயல்படும்போது அதுவும் ஓர் அதிகார அமைப்பாக, அரசாங்கமாக ஆகிவிடுகிறது. அதிகார அமைப்புகளுக்குரிய எல்லா அபத்தங்களும் வந்துவிடுகின்றன. அதன் தனி உறுப்பினருக்கு அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எல்லைக்கு அப்பால் எதுவுமே தெரிந்திருப்பதில்லை. அவர் செய்யும்செயலின் பின்புலமோ விளைவோ அவரால் அறிந்துகொள்ளச் சாத்தியமானவை அல்ல. அவர் கட்டளைகளைச் செயல்படுத்துபவர் மட்டுமே. அந்த அர்த்தமின்மைக்கு அவர் தன்னை ஒப்புக்கொடுத்தாகவேண்டும்.

அதிகார அடுக்கின் ஒவ்வொரு உறுப்பினரும் இப்படி என்றால் தலைமையும் இதே நிலையில்தான் இருக்கிறது. அவர்கள் எங்கோ விலகி இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லப்படுவது மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அடித்தளத்தில் என்ன நிகழ்கிறதென அவர்கள் அறியமாட்டார்கள். ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பு, திரவம் பள்ளங்களை நிரப்புவது போல வரலாற்றின் சந்தர்ப்பங்களை நிரப்பியபடி செயல்பட்டுக்கொண்டிருக்க நேர்கிறது. அரசு என்ற அபத்ததின் அபத்தமான ஆடிப்பிம்பம்.

இந்த அபத்த நாடகத்தில் விளைவுகள் எப்போதுமே துயரமானவை. கடத்தப்படும் சாத்தியத்துக்காக, ஒருவேளை பெரிய எவரும் கடத்தப்படாமலிருக்கும்பொருட்டு, அரசு கோஷ் போன்றவர்களைக் காவுகொடுக்கிறது. அதேபோல அரசால் சுட்டுக்கொல்லப்படும் எல்லா தீவிரவாதத் தலைவர்களும் அவர்களின் தலைமைகளால் அரசுக்கு முன்னால் தள்ளிவிடப்பட்டவர்கள். உதாரணமாக, நாவலில் முதலில் ரமேஷுடன் பேச்சுநடத்தவரும் தலைவர் கொல்லப்படும் விதம் பரிதாபகரமானது. அவர் வந்துசேரும் இடத்தில் போலீஸ் தாக்கும் என்ற சேதி அவரைத்தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தன்னந்தனியாக வந்துசேர்ந்து சுட்டுத்தள்ளப்படுகிறார். ஈழப்போராட்டத்தில் இதற்கிணையான பற்பல நிகழ்ச்சிகளை நாம் அறிந்திருக்கிறோம்.

அரசின் பிரதிநிதியாக வரும் ரமேஷ்சந்திரன் அரசு என்ன உத்தேசிக்கிறது, எப்படிச் செயல்படுகிறது எதைப்பற்றியும் அறியாமல் இருக்கிறான். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனுபமா, அவனுடைய ஆடிப்பிம்பம் போல இருக்கிறாள். அவளுக்கும் அந்த அமைப்பு என்ன உத்தேசிக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என ஏதும் தெரியாது. இரு அதிகார அடுக்கமைப்புகள் கண்ணைக்கட்டிக்கொண்டு காட்டுக்குள் ஒளிந்து விளையாடுகின்றன. அந்த அரசுகளின் விரல்நுனிகளாக அவர்கள் உரசி விலகுகிறார்கள், அவ்வளவுதான். ஆச்சரியமாக அனுபமாவின் முடிவும் ரமேஷின் முடிவும் ஒன்றுபோலவே இருக்கின்றன. தங்கள் அமைப்பாலேயே பலிவாங்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பில் நெடுங்காலமாக இருப்பவர்கள் சிலர் இது இப்படித்தான் என்று அறிந்து அதற்கான மனவிலக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்பின் அபத்தத்தை நோக்கி சிரித்துக்கொண்டே இதற்குள் செயல்படுகிறார்கள். பூயான் மிகச்சிறந்த உதாரணம். அவருக்கு அவரது அமைப்புக்குள் உள்ள ஐந்தாம்படைவேலைகள், அரசாங்கத்தின் குறுக்குச்சால் ஓட்டல்கள், அரசியல்வாதிகளின் அன்றாட அயோக்கியத்தனங்கள் எல்லாம் தெரியும். அவருக்குக் கொள்கை,நம்பிக்கை என ஏதுமில்லை. தன் வேலையை அதன்மீது உணர்வுரீதியான ஈடுபாடு ஏதுமில்லாமல் செய்கிறார். ஆனால் அவர் ஒரு திறமையான அதிகாரி என்பதும் நாவலில் உருவாகி வருகிறது. நிர்வாக அமைப்புக்கு உள்ளேயே உழன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்க முடிந்த இத்தகைய நம்பகமான சித்திரங்களே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன.

கோஷை விடுவிக்க ரமேஷ்சந்திரன் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. அவர் கடைசியில் மிகக்குறைவான ஈட்டுப்பணத்திற்கு விடுதலை பெறுகிறார். அந்த நிகழ்ச்சிப்பரிணாமத்தின் ஒவ்வொரு தளமும் அபத்தம் என்றே சொல்லவேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் அன்றாட நிகழ்ச்சிவரிசையாக இருக்கும் அதைத் தர்க்கபூர்வமாக அடுக்கிப்பார்த்தால் அபத்தம் முகத்திலறைகிறது. சிரிக்கக்கூட முடியாத அபத்தம்.

கோஷை மீட்க ரமேஷ்சந்திரன் தீவிரமாக முயல்வதே அவனுக்கு முதிர்ச்சியும் அனுபவமும் இல்லை என்பதனால்தான். கொஞ்சம் விஷயமறிந்த அதிகாரி என்றால் செய்யவேண்டிய காகிதச்சடங்குகளை முறையாகச் செய்துவிட்டுப் போயிருப்பார். ரமேஷ்சந்திரன் அவனுடைய அசட்டு ஆர்வத்தால் எல்லா வழிகளிலும் முயல்கிறான். அந்த அசட்டுத்தனம் காரணமாகவே கடைசியில் கோஷ் விடுதலை ஆக முடிகிறது. இந்த உண்மையை ரமேஷைச் சுற்றியிருக்கும் எவரும்- கோஷின் மனைவிகூடப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கோஷ் அவனும் அரசு அதிகாரி என்பதனால் புரிந்துகொண்டு நன்றி கூறுகிறான்.

கோஷ் விஷயத்தில் அரசு எப்போதும் செய்யும் உத்தியையே கடைப்பிடிக்கிறது – ஆறப்போடுதல். ஊடகங்களின் கவனம் விலகும்வரை கொஞ்சநாள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அப்படியே வேறுவிவகாரங்களுக்குச் சென்றுவிடுவதே அரசதிகாரத்தின் இயல்பு. கலங்கிய நதி அதுபாட்டுக்குக் கொஞ்ச நேரம் சுழித்துத் தெளியும்போது அதிருஷ்டமிருந்தால் கோஷ் எஞ்சுவான். ஆனால் தன் ஆர்வத்தால் அந்த விவகாரத்தைத் தொடர்ந்து உயிருடன் வைத்திருக்கிறான் ரமேஷ். கோஷின் மனைவியைக்கொண்டு ஊடகங்களில் கவன ஈர்ப்பு செய்கிறான். ஜனாதிபதிக்கு மனு அனுப்பச்செய்கிறான்.

அவன்தான் அதைச்செய்கிறான் என உடனே அமைச்சர் உணர்கிறார். ஆனாலும் அவருக்குத் தெரியும், அது கொஞ்சநாளைக்குத்தான் என்று. ரமேஷின் முயற்சிகளால்தான் கோஷை மீட்க வேறுவழியில்லாமல் அரசு ஏதோ செய்கிறது. ஆனால் அதிலுள்ள அபத்தம் என்னவென்றால் மீண்டும் அந்தக் கடத்தல் மறக்கப்பட்டு, கோஷை எல்லாரும் கைவிட்டபின், அப்படிக் கைவிடப்பட்ட ஒரே காரணத்தால்தான் கோஷ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்படுகிறான். முதலில் கோரப்பட்ட தொகையை விட இருபது மடங்கு சிறிய தொகைக்கு!

கலங்கியநதி என்ற சொல் இங்கே எப்போதும் கலங்கிச்சுழன்றோடும் பிரம்மபுத்திராவுக்கும், அதைக் குறியீடாகக் கொண்டு அஸ்ஸாமியப் பிரிவினைவாதத்துக்கும் பொருந்துகிறது. கலங்கிய நதி அல்ல, கலக்கப்பட்ட நதி என்ற எண்ணமே மேலோங்குகிறது. எப்போதும் அதுதான் அதிகாரத்தின் வழி. இருசாராரும் சேர்ந்து கலக்கிய இருளில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மக்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தவெளியில் லட்சியவாதம் அல்லது மனிதாபிமானம் போலக் கோமாளித்தனமாக ஆவது பிறிதொன்றில்லை. ஆனால் ரமேஷுக்கு அது தேவையாகிறது. இரு காரணங்களை நாவல் நமக்களிக்கிறது. ஒன்று, பிரியாவின் மரணத்தால் நிலைகுலைந்துபோன குடும்ப உறவு காரணமாக அவன் எதிலாவது தன்னை அமிழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னைத் தனக்கே நிரூபித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் தண்டித்துக்கொள்ளக்கூட வேண்டியிருக்கிறது.

இன்னொரு உள்ளார்ந்த காரணம், ரமேஷ் சந்திரனின் அகத்தில் ஓர் இலட்சிய வடிவமாக வாழும் அவனுடைய தந்தை. காந்திய இலட்சியங்களில் நம்பிக்கை கொண்டவராக வாழும் அவர் அவனுக்குள் குடியேற்றிய காந்தி. காந்தி ரமேஷ் சந்திரனுக்குள் ஒரு விசித்திரத் தொந்தரவாக இருந்துகொண்டே இருக்கிறார்.

அதிகாரஅமைப்பின் அர்த்தமின்மைவெளிக்குள் இலட்சியவாதம் முழுக்கிறுக்குத்தனமாக ஆவதன் சித்திரமாக இந்நாவலில் மிஸ்ரா வருகிறார். அவர் வழியாக ரமேஷ் சந்திரன் ஒரு பெரும் ஊழலின் நுனியைக் கண்டுகொள்கிறான். அந்த ஊழலை வெளிக்கொணர, அதைச்செய்த மாபெரும் நிறுவனத்திடமிருந்து நஷ்டஈடு கேட்டுப் பெற அவன் முட்டாள்தனமான வேகத்துடன் முயல்கிறான். எச்சரிக்கைகளை மீறி, எதிர்விளைவுகளை அலட்சியம் செய்து அதில் ஈடுபடுகிறான்.

அதன் மூலம் சாதகமான விளைவுகள் ஏதும் நிகழவில்லை என்றே சொல்லவேண்டும். அவனை அவமதித்து வெளியே தள்ளுகிறது அரசதிகார அமைப்பு. மனச்சோர்வும் கொந்தளிப்புமாகத் தனக்குத்தானே காயமேற்படுத்திக்கொண்டு படுக்கையில் இருக்கும் அவன் தன்னுடைய சோர்வையும் அலைபாய்தலையும் எழுத்துமூலமாகக் கடந்துசெல்ல முயல்கிறான். அதன் பொருட்டு ரமேஷ் எழுதிய நாவலே கலங்கிய நதி.

அந்த ஊழல் பற்றிய தகவல்கள் இந்நாவலில் மிகத்துல்லியமாக அளிக்கப்படுகின்றன. வழக்கமாக வாசிப்பவர்கள், மின்கடத்திகளை நிறுவுவதில் உள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கு ஒரு புனைவில் என்ன வேலை என்ற எண்ணத்தை அடையக்கூடும். ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எனக்கு இன்னொரு மனச்சித்திரத்தை அளித்தன. இன்றைய அமைப்பில் நிதிச்செயல்பாடுகள், சட்டச்செயல்பாடுகள், நிர்வாகச்செயல்பாடுகள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து மிகச்சிக்கலாகவே இயங்குகின்றன. எளிமையாக ஏதும் நிகழ்வதில்லை.

அந்தச் சிக்கல்கள் மூலம் உருவாகும் நுட்பமான இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டுதான் இங்கே ஊழல்கள் செய்யப்படுகின்றன. உண்மையில் அந்தச் சிக்கல்களின் மூலம் உருவாகும் ‘கலங்கல்’தான் அந்த ஊழல்களுக்கான முக்கியமான மறைவு. அந்நிலையில் ஊழல் என்ற ஒன்றைக் கண்டறிவதென்பது தேர்ந்த வைத்தியன் நாடியைத் தொட்டு நோயறிவது போன்ற ஒரு செயல். அந்த ஊழலை மறைக்கவும் நியாயப்படுத்தவும் பயன்படுவதும் அச்சிக்கல்கள்தான்.

பெரும் ஊழல்கள் வெடிக்கும்போது அவற்றை ஒட்டி நிதி, சட்டம்,நிர்வாகம் சார்ந்த நிபுணர்வாதங்கள் எப்போதும் எழுவது இதனால்தான். எந்தப் பெரும் ஊழலையும் ஊழலே அல்ல, சின்ன நிதி, சட்ட, நிர்வாகச் சிக்கல்மட்டும்தான் அது என ‘தர்க்கபூர்வமாக’ விளக்கிவிடமுடியும். இன்றுள்ள மாபெரும் ஊழல்கள் எவற்றையும் நம் பொதுமக்களிடம் விளக்கிக் கூறிவிட முடியாது. அவற்றை எளிமைப்படுத்தி ஒற்றைவரியாக ஆக்கித்தான் அரசியல்வாதிகள் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அது தேர்தலுக்கு உதவுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் அச்சிக்கல்கள் சிடுக்கெடுக்கப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்படுவது நெடுங்காலப்பணி. அதற்குள் பொதுமக்களின் கவனம் மறைந்துவிடும். அக்கறை அகன்று விடும். இந்த நடைமுறை காரணமாகவே இங்கே ஒருபோதும் ஊழல் தண்டிக்கப்படுவதில்லை.

ஆகவே உண்மையில் இத்தகைய ஊழல்களில் உள்ள சிக்கல்களை நீக்கிவிட்டு அவற்றைச் சொல்லமுடியாது. அச்சிக்கலை விரிவாகப் பின்னிப்பிணைத்து பி.ஏ.கிருஷ்ணன் அளிக்கும் அந்த ஊழலின் சித்திரம் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உள்ளது. அதை அந்தத் தனியார் நிறுவனம் எதிர்கொள்ளும் விதமும், அதிகாரிகள் அதனுள் நெளிந்து நெளிந்து ஆடும் நடனமும் எல்லாம் நிர்வாகத்தின் தலைமையகத்தில் உள்ளே நுழைந்துவிட்ட உணர்வை அளிக்கின்றன.

ஆரம்பம் முதலே இந்த உலகியல் நம்பகத்தன்மையை வலுவாக நிலைநாட்டிக்கொண்டு இந்நாவல் முன்னகர்வதனால் ரமேஷ்சந்திரனின் கதை அதற்கு இயல்பாகச் சாத்தியமான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது – முடிவேதும் இல்லை என்ற சோர்வை நோக்கி. தன் நாவலில் காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தப்போய் அடிபட்டுத் தான் சாவதாக ரமேஷ் முடிக்கிறான்.

அந்நாவலுக்கு வெளியே உண்மையில் நடந்ததை சுகன்யா சொல்கிறாள். அப்படி அஞ்சலி செய்யச்சென்று அடிபட்டுக் கால் உடைந்து கிடக்கும் அவனைப்பற்றி. கோஷ் விடுதலை என்பது ரமேஷின் முயற்சியால் நிகழவில்லை, அவன் மீதான பரிதாபத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது அது என அவளுக்குத் தெரியும். அது அவனுக்குத் தெரியாது. காந்தியவாதியான ராஜவன்ஷி சொன்னதைப்போல ‘விரல் சூப்பிக்கொண்டிருக்கும்’ இலட்சியவாதியாகவே அவன் இருந்துகொண்டிருக்கிறான் என அவள் அறிந்திருக்கிறாள்.

ஆனால் உண்மையில் அது உள்ளூர ரமேஷ் சந்திரனுக்கும் தெரியும். நடைமுறையில் அவனால் ஒன்றும் செய்யமுடியாதென்று. அவன் செய்யும் கைசூப்புதல்தான் அந்த நாவல். தன்னை உயர் இலட்சியத்துக்காக வாழ்ந்து சாகிறவனாகக் கற்பனைசெய்துகொண்டு படுக்கையில் கிடந்து குண்டாகிப்போன உடலும் இரட்டைத்தாடையுமாக அமர்ந்திருக்கிறான்.

இரக்கமற்ற நிகழ்காலம் அவனை மீண்டும் அந்தப் படுக்கையில் இருந்து எழுப்பும். மீண்டும் அவன் பணிக்குச் சேரலாம். கொஞ்சகாலம் அந்த ஊழலின் பின்னால் அலைந்துவிட்டு சமரசமாகலாம். அனைத்தையும்விட அவன் ஒட்டுமொத்தமாக மறக்கப்படலாம். அவன் நம்பியதும்,செய்ததும் அவனுக்கன்றிப் பிற எவருக்கும் ஒரு பொருட்டாகவே தோன்றாமலிருக்கலாம். தன் நினைவுகளும் புலம்பல்களுமாக அவன் தனித்துவிடப்படலாம்.

என்னவேண்டுமென்றாலும் நடக்கும் என்பதற்கான நுட்பமான ஊடுசெய்திகள் ஆசிரியரால் நாவலுக்குள் விடப்பட்டுள்ளன. அந்த ஊழல் வெளிவருவதற்கு ஆதாரமான கடிதம் அந்த நிறுவனத்தாலேயே வெளியே விடப்பட்ட ஒன்று. இந்த நாவலுக்கு வெளியே அதற்கு அந்நிறுவனத்துக்குத் தனிக் காரணங்கள் இருக்கலாம். இன்னொருமுறையும் ரமேஷ் சந்திரன் தன்னால் சற்றும் புரிந்துகொள்ளமுடியாத ஒரு மாபெரும் சதுரங்கத்தில் அப்பாவித்தனமான காயாக ஆடிக்கொண்டிருக்கலாம்.

இந்த அபத்த அம்சம்தான் கலங்கியநதி நாவலின் சாராம்சமான தரிசனம் என்று சொல்லலாம். வரலாறெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் அபத்தத்தின் ஒரு சிறு துளி. அதுவே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது.

[மேலும்]

பி ஏ கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்-சொல்வனம்..

சேதுபதி அருணாசலம்-கலங்கியநதியும் திரும்பிய விமானமும்-சொல்வனம்

முந்தைய கட்டுரைவாசிப்பு – கடிதம்
அடுத்த கட்டுரைகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] – 3