மானுட ஞானம் தேக்கமுறுகிறதா? – கடிதம்

பதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும்.

என் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, மானுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான புறவயமான அறிவுத் தொகுப்பும் எந்த ஒரு போட்டியாளரையும் ‘சமாளிக்கும்’ பொருட்டு உருவானதல்ல. எனவே இனிமேலும் மானுட வளர்ச்சிக்கு அப்படி எந்த ஒரு உயிரினமும் ஞானச் சவால் விடவேண்டியதில்லை.

மனித இனத்தின் ஒட்டுமொத்த புறவயமான ஞானச் செல்வமும் அவன் போட்டியாளர்களை வென்று தன் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் என்றால், அவன் குரங்கினத்திலிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேட்டையாடக் கற்றுக் கொண்டதே போதும். அத்துடன் அவனது அறிவுத் தேடல் நின்றிருந்திருக்கலாம்.

ஆனால், அப்படி வேட்டையாட அவனைத் தூண்டியதே பரிணாமக் கொடையாக மனித இனத்திற்குக் கிடைத்த பெரிய அளவுள்ள மூளைதான். மனிதனுக்கு, மரபணு ரீதியாக மிக நெருங்கிய பேரினக் குரங்குகளை விட மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் – மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis).

எனவே பரிணாமத்தின் முதல் பெரும் கொடையே அறிவை விரிவு செய்ய விதிக்கப்பட்டிருப்பதால் மனிதனின் அறிவுத் தேடல் – ஞான சேகரம் எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தொடரும் எனவே நினைக்கிறேன். ஜெ கூறியபடி மானுட ஞானம் என்னும் நீர்ப்படலம் அது பரவும் நிலத்தின் அமைப்பிற்கேற்ப அமைகிறது. மொழி, எழுத்து, இசை என்று தேவைப்பட்ட காலங்களில் அந்தப் பள்ளங்களை நிரப்பியும், பிறகு இன்று காணும் யாவையுமாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட, இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதே இன்னும் சுவாரஸியமானதாக ஆக்குகின்றது.

இந்த இடத்தில் விஷ்ணுபுரத்தில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்றான “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்பதை நினைத்துக் கொள்கிறேன். ஆம், மானுட ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் இதுகாறும் ‘உருவாக்கித்’ தொகுத்தவையாகவே இருக்கும். வாழும் சூழல் கொடுக்கும் சவால் மட்டுமே பரிணாமத்திற்குக் காரணமாக வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால அறிவுச் செயல்பாடு, கட்டற்ற இன்றைய ஞானம் உருவாக்கும் சிக்கல்களை சமாளிப்பதும், எல்லைகளை மீறுவதும் ஆக இருக்கலாம். இன்றைய மனிதனே நாளைய மனிதனுக்கு போட்டி அல்லது சிந்தனைகளை வடிவமைப்பவன். இப்பொழுதே இது என் எளிய ஊகமே. அல்லது முன்னொருமுறை என் கேள்விக்குப் பதிலாக ஜெ சொன்னது போல, ‘தனியொரு கரையான், தானும் சேர்ந்து கட்டும் புற்றின் பிரம்மாண்டத்தை ஒரு போதும் கற்பனை செய்யக்கூட முடியாது. அது போலவே மானுட ஞானம் வழியாக பிரபஞ்ச விதி அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாது’.


*
சில மாதங்களுக்கு முன் மானுட இனத்தின் எதிர்காலத்தை யூகித்து Mark Changizi என்பவரால் எழுதப்பட்ட Harnessed: How Language and Music Mimicked Nature and Transformed Man என்றொரு புத்தகத்தின் அறிமுகக் கட்டுரை படிக்க நேர்ந்தது. http://seedmagazine.com/content/article/humans_version_3.0/

கட்டுரையாளர் சொல்வதன் சுருக்கம்:

1. இயற்கைத் தேர்வில் (Natural selection) பேரினக்குரங்கிலிருந்து மனிதன் (human 1.0) உருவானான். நாம் இப்போது இருக்கும் நிலை அதை விட ஒரு படி மேல் – மனிதன் 2.0. மனிதனின் முதல் பண்புகள் பேச்சு, எழுத்து, இசை யாவும் இயற்கைத் தேர்வினால் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உருவானவை என்கிறார். ஆனால் அது பிரக்ஞை பூர்வமாக நாம் உருவாக்கிக் கொண்டதல்ல, நமது ஆதி நடத்தைப் பண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தில் இயல்பாக எழுந்தவை. நமது விழிப்புலத்திற்கு ஏற்றவாறு எழுத்து, நம் கேள்விப் புலத்திற்கு ஏற்ப பேச்சு, நமது செவிப்புலத்திற்கும், அகஎழுச்சியைத் தூண்டும் இயக்கமுறைகளுக்கும் ஏற்ப இசை உண்டானது என்கிறார். சுருக்கமாக நாம் இயற்கையில் இருக்கும் அமைப்பிற்கு தகுந்தாற் “போலச் செய்கிறோம்”.

2. மனிதன் 3.0 என்கிற அடுத்த கட்டத்திற்கான நகர்வு, மரபணு மாற்றம் அல்லது செயற்கை அறிவாற்றல் போன்று செயற்கையாகத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாக இருக்காது, இயற்கையை போத பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்வதாக இருக்கும். காரணம் இயற்கையில் நாம் இவ்விதம் பரிணமித்திருப்பதே ஆகச்சிறந்த வடிவத்தில், ஆற்றலுடன்தான்.

3. இப்போது நாம் நமது மூளை அல்லது மற்ற உறுப்புக்களை பரிணாமத்தில் அடிப்படையான அளவிற்கு மட்டுமே போதுமானவையாக உருவாகியிருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் அவை மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எந்தத் தொழில் நுட்பத்தாலும் (மரபணு, Artificial Intelligence) அடையக்கூடியதைவிட மிக அதிகமான கற்பனை செய்யமுடியாத சக்தி நம்மிடம் இப்பொழுதே இருக்கும் இயற்கையான அமைப்பில் இருந்து கிடைக்கும் – அதற்கு நாம் அந்த இயற்கை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (harnessing). ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும், அப்படி அடையப்பெறும் சக்தி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது.

அறிவியல் ஊகங்கள் – இன்று வரை கண்டுபிடிக்கபட்டவை, இதன் நீட்சியாகச் சாத்தியமானவை, பின்னர் அதன் மேலதிக கற்பனை என்று நம்பத்தகுந்ததாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தக் கட்டுரையாளர் செய்வது அடிப்படை அறிவியல் விளக்கங்களை வைத்துக்கொண்டு தாவும் பெரும் கற்பனைப் பாய்ச்சல். ஆனால் அதுதான் சாத்தியமும் கூட. புராணங்களில் வரும் கந்தருவர், யக்ஷர் போன்ற அதீத சக்தி படைத்த அடுத்த மானுட வடிவம் வரும் என்கிற உற்சாகம். தொட்டுக்கொள்ள இயற்கைத் தேர்வு, உயிரியல் தகவமைப்பு என்று கொஞ்சம் பரிணாமவியல். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் அவரது கூற்று தான் – “அளப்பரிய சக்தி கிடைக்கும், ஆனால் அது என்ன, எப்படி அடைவோம் என்று சொல்லமுடியாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சில வீடியோ கேம்கள், முப்பரிமாணக் காட்சி போன்றவை நாம் ஏற்கனவே நமது மூளையின் இயற்கை அமைப்பிற்கேற்ப அவற்றை முன்னேற்றுகிறோம் என்பது ஒரு அடையாளம்”.

*

தத்துவம் அறிவியல் சிந்தனைக்கு என்ன தூண்டுதல் தர முடியும் என்கிற கேள்விக்குப் பதிலாக ஜெயமோகனின் இந்த வரிகளைக் கூறலாம், “ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா? அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.”

“பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்சி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.” அருமை! ஒரு உயிரியல் ஆய்வு மாணவனாக என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய கருத்து இது. இதன்படி யோசித்தால் எதிர்கால மானுட ஞானம் என்பதே சூழலுடன் முரண்பட்டு/போரிட்டு பரிணமிக்காமல், ஒட்டுமொத்த உயிர்ச் சூழலுடன் ஒத்திசைந்து தன்னைத் தக்கவைக்கும் வழியைத் தேடுவதே அடுத்தகட்ட ஞானத் தேடலாக இருக்கலாம். அதற்கான நெருக்கத்தை மற்ற உயிர்களுடன் உருவாக்குவதே அடுத்த காலத்தின் அறிவியலாக இருக்கலாம். இன்னும் நிறைய சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது. நன்றி ஜெ.

மேலும், உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரினங்களை விட பலசெல்/கூட்டு உயிரினங்கள் பரிணாமத்தில் மேம்பட்டவை என்று கருதப்படுகிறது. சில சமயம் இதையே தலைகீழாகப் போட்டுப் பார்த்து யோசித்தால், ஒரு அறையை அடைத்துக்கொண்டு இருந்த பிரும்மாண்ட கம்ப்யூட்டர்களைவிட இன்று உள்ளங்கைக்குள் அடங்கும் கணினிகள் வளர்ச்சிப் ‘பரிணாமத்தில்’ மேம்பட்டவையாகக் கருதப்படுவது போல ஏன் பெரும், பல செல் உயிரினங்களை விட கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் நுண் உயிரிகள் பரிணாமத்தில் மேம்பட்டவையாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு செல் உயிரினங்கள் அவை அப்படி இருப்பதாலேயே பரிணமிக்கும் வேகம் மனிதனை (எல்லா பெரும் உயிரினங்களையும்) விட மிக மிக அதிகம். ஆகவேதான் தொடர்ந்து பெரிய பலசெல் உயிரினங்களுக்குச் சவால் விட்டுத் தாக்குப் பிடிக்க முடிகிறது (எச்.ஐ.வி. உட்பட பல நோய்க்கிருமிகளை உதாரணம் சொல்லலாம்).

மேலும் அவற்றின் இருத்தல் தனித்தனியானாலும், கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாகவே இயங்குவதால் இருத்தலுக்கான போட்டியில் வெற்றிகரமாக தனது சந்ததியைப் பெருக்கி மரபணுவைக் கடத்தி தன் இனத்தை நீடித்துக்கொள்கின்றது. எனவே ஜெ சொன்னது போல “பரிணாமம் சுழற்சி மூலமாக நிகழ்கிறதெனக் கொண்டால்” எதிர்கால மானுட ஞானம் இவ்வாறு மீண்டும் தனிச் செல்களாக உதிர்ந்து ஓரிடத்தில் கூடி வாழ்வதைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஒரு மாபெரும் வைரஸ் தொகை அந்த வைரஸின் உயிர்ப்பிரக்ஞையுடன் இருப்பது போல அப்பொழுதும் மானுட செல்கள் மானுடப் பிரக்ஞையுடன் இருக்கலாம். பரிணமிக்கும் வேகத்திலும் மற்ற ஒருசெல் உயிர்களுடன் போட்டியிட முடியும்.

இந்த மாதிரியெல்லாம் சிந்திப்பது எனக்கும் பிடிக்கும், எனது ஆய்வுத்துறைக்கும் இந்த ‘விபரீதக்’ கற்பனைகள் பலன் தரும். சில சமயம் ‘லூசுத்தனமாக’த் தோன்றினாலும், அறிவியல் ஊகத்தை யாரும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. எனவே இவற்றை கதைகளாக எழுதி வைத்துவிடுவேன். அங்கு கதாசிரியனின் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாதில்லையா? :))

சிந்தனைகளைக் கிளறி விடும் உரையாடல்களுக்கு மீண்டும் நன்றிகள் பல ஜெ.

-பிரகாஷ்
www.jyeshtan.blogspot.com

முந்தைய கட்டுரைதிருவண்ணாமலையில்…
அடுத்த கட்டுரைஐயாறப்பனை அழிப்பது – கடிதம்