ஒரு விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே!

உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான “விமரிசன” கட்டுரை இதோ!

இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி வரும் நிலையிலும் நமது சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் சந்தைப் பொருளாதாரம் எனும் போர்வையில் இதனை ஆதரிக்கும் உள்ளூர் பார்ப்பனிய, இந்துத்துவப் போக்கையும் நமது சமூகம் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது. இப்படி போராட்டக் களம் காணும் நமக்கு சமூக விழிப்புணர்வு எண்ணம் கொண்ட எழுத்தாளர்களே முன்னோடிகள். அவ்வகையில் பலர் இருந்தாலும் இன்றைய நமது சூழலில் பெரும் எழுத்தாளர்களாக அறியப்படும் சிலர் பார்ப்பனிய, இந்துத்துவ போக்கில் செயல்படுவது வேதனையான உண்மை. அவர்களை சமுதாயத்திற்கு முன் அம்பலப்படுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.

சில மாதங்களுக்கு முன்பே இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகள். அப்போதே நாம் இதனை எழுதியிருக்கலாம்தான். ஆனால் நமது நண்பர்கள் பலரும் எழுதியிருந்தபடியால் நாம் உடனே எழுதவில்லை.

முதலாவதாக அறம் வரிசைக் கதைகளில் வெளிப்படும் இந்துத்துவ திணிப்புகள். சோற்றுக் கணக்கு கதையில் வரும் உணவக அதிபர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரராகவும், அவரால் பணம் வாங்காது உணவிடப்படும் ஒருவராக இந்து சமூகத்தைச் சேர்ந்தவரும் சித்தரிக்கப்படுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது மத நல் இணக்கம் என்பதாகத் தோன்றலாம். ஆனால், சற்றுக் கூர்ந்து வாசிப்பவருக்கு இது ஒரு இந்து மத அப்பட்ட ஆதரவு என்பது புரிந்து விடும். பணம் எதிர்பாராது உணவிடும் இடத்தில் ஒரு சிறுபான்மைச் சகோதரரைக் காட்டும் ஜெமோ, பணம் தராமலேயே உண்ணும் இடத்தில் ஒரு இந்துவைக் காட்டுகிறார். அதாவது சிறுபான்மையினர் எதையும் எதிர்பாராது இந்துக்களுக்கு உணவிட வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறார் ஜெமோ. இப்படி உணவிட்டாலும் அந்த இஸ்லாமிய சகோதரர் ஏழை ஆகி விடவில்லை என்பதைக் குறிக்க அவருக்கு வீடுகள் உண்டு, மக்களுக்கு ஆடம்பரமாகத் திருமணங்கள் செய்து வைத்தார், கார் வைத்திருந்தார் என்றெல்லாம் சொல்வதன் மூலம் சிறுபான்மை சகோதரர் பெரும்பான்மை இந்துக்களை உறிஞ்சிக் கொள்ளை அடிக்கிறார் என்ற வெறுப்பை அடிமனதில் பதிய வைக்கிறார். உணவிடுவதாகக் கூறும் அந்த இஸ்லாமிய சகோதரரையும் பயமுறுத்தும் உருவம் கொண்டவராகக் காட்டுகிற ஜெமோ, உணவு உண்ணுவோரை அவர் கரண்டியால் அடிப்பதாகக் கூறும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. சிறுபான்மையினர் இந்துக்களை அடித்து, கொடுமை செய்வதாய் வாசிப்பவரின் மனதில் ஒரு பிம்பம் ஏற்படுத்தும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது. இப்படி மறைமுகமாக அந்த சிறுபான்மை சகோதரரை அவமதித்துச் செல்லும் ஜெமோவைப் பாராட்டி கடிதங்கள் எழுதும் வாசகர்கள் பெயரும் “ராஜகோபாலன்”, “ராமச்சந்திர ஷர்மா” என்றிருப்பது தற்செயலான ஒன்றா என்ன?

சரி! இந்த அளவுக்காவது சிறுபான்மைச் சமூகத்தை சொல்கிறாரே என்போருக்கு அவரது மோசடியை அம்பலப்படுத்தும் மற்றுமொரு விஷயம் இந்தத் தொகுப்பில் ஒரு கதையில் இஸ்லாமியச் சகோதரரையும், மற்றுமொரு கதையில் கிறித்தவப் பாதிரியாரையும் மேம்போக்காகச் சொல்லிவிட்டு மற்ற அனைத்துக் கதைகளிலும் இந்து சாமியார்களை உயர்த்தி பேசியிருப்பதே. நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இன்றிருக்கும் சாதிப் புரட்டைக் கண்டுபிடித்து அதனைக் கொண்டே காலா காலமாகத் தாழ்த்தப்பட்டோரை அடிமை செய்து வைத்திருப்பது பார்ப்பன மதமான இந்து மதமே. இன்று வரை ஆதிக்க இந்து வெறியர்கள் தலித் சகோதரர்களை சாதி வன் கொடுமைக்கு ஆளாக்கி வருவது கண்கூடு. ஆனால் நூறு நாற்காலிகளில் கண்டாலே கல்லெறிந்து கொல்லப்படும் அளவுக்குக் கடையராகக் கருதப்படும் சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து சாமியார் தத்தெடுத்து வளர்த்து, முழு கல்விச் செலவையும் செய்வதாகக் கூறுவது அப்பட்டமான மோசடி. மேலும் இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு சாமியார்களே காரணம் என்பதை மாற்றி அவர்கள்தாம் இந்நிலை மாறப் பாடுபடுவதாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். இதில் ஜெமோ உள்ளர்த்தமாக, இந்நிலை மாறப் பாடுபட்ட கிறித்தவ சேவை நிறுவனங்களின் பங்களிப்பையும் மறைக்கிறார்.

பெருவலி கதையில் கடவுளை நம்பாத ஒரு முற்போக்கு எழுத்தாளரைக் கூட அவரது நோயின் வேதனையையும் மீறி இமய மலைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை ஜெமோ தனது பாணியில் சொல்கிறார். கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பாதையில் பயணம் செய்தாலும், இந்து மதத்தில் பிறந்தால் இமய மலையைக் கண்டே ஆக வேண்டும் எனும் பிற்போக்குத் தத்துவத்தை நம் மீது திணிக்கிறார் ஜெமோ. அதிலும், கடவுள் நம்பிக்கையற்ற, முற்போக்குக் கொள்கை உடைய, பகுத்தறிவு மிக்க இலக்கியவாதியான ஒருவரை இக்கதையின் நாயகனாக்கியிருப்பது ஜெமோவால் மட்டுமே செய்ய முடிந்த விஷமத்தனம்.

கோட்டி கதையில் காங்கிரஸ் அரசை எள்ளி நகையாடும் ஜெமோ, ஒரு இடத்தில் கூட பா.ஜ. அரசை, குறிப்பாக மோடி அரசைக் குறித்த கண்டனங்களைச் சொல்லவில்லை என்பதிலேயே அவரது சார்பு நிலை வெளிப்பட்டு விடுகிறது. வணங்கான், ஓலைச் சிலுவை, நூறு நாற்காலிகள் போன்ற சாதியக் கொடுமைகளைக் காட்டும் கதைகளில் கூட ஒரு இடத்திலும் ஒரு பார்ப்பனரைக் கூட மோசமானவராகக் காட்டாதது ஜெமோவின் பார்ப்பனப் பாசமன்றி வேறென்ன?

(யப்பா! எனக்கே முடியல்ல! இப்புடி யோசிச்சிட்டே போனா எனக்கே எம் மேல சிரிப்பு சிரிப்பா வருது.. ஆனாலும் இலக்கியக் கடமைன்னு ஒண்ண ஆற்றும் போது அதுல பந்த, பாசத்துக்கு ஏது எடம் .. சொல்லுங்க?)

நண்பர்களே! இலக்கியத்தின் பெயரால் இந்துத்துவக் கொடி பிடிக்கும் ஜெமோவை இதனுடன் விடப் போவதில்லை. உங்களது புரட்சி ஆதரவைப் பொறுத்து இதே பாணியில் “அருகர் பாதை” யையும் “தோலுரிக்கலாம்” என எண்ணியுள்ளேன் .
இப்படிக்கு

[ஆடு அறுக்காமலேயே தோலுரிக்கும்]

ராஜகோபாலன்.ஜா, சென்னை

[குழுமத்தில் இருந்து]

முந்தைய கட்டுரைசமண அறம்
அடுத்த கட்டுரைபுரிதலின் ஆழம்