தற்கொலை தியாகமாகுமா?

இன்று கி.ரா.வின் கோபல்லபுரத்து மக்கள் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் “என்க்கிச்சி” என்ற பெண் கணவன் கொலையுண்டபின் உடன்கட்டை ஏறும் காட்சியும் அதை அச்சமூகம் சில விதிமுறைகளுடன் அனுமதிப்பதையும் படித்தேன். உக்கிரமும் உன்னதமும் கலக்கும் பக்கங்கள் அவை . உணர்வெழுச்சியும், பிணைப்பும், தியாகமும் வெளிப்படும் இடம் அது. கி.ரா. கலை எழுச்சியுடன் விவரித்திருப்பார். நமது பகுத்தறிவும், தர்க்கமும் வெட்கி ஒதுங்கி நிற்கும் இலக்கியப் பக்கங்கள் அவை. படிக்கும்போது இதை மானுட உச்சமாகவே நான் உணர்கிறேன்.

உறவுக்கான தனிமனித அர்ப்பணமும், முத்துக்குமரன் மற்றும் சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி வரை நாம் அறிவுஜீவிக் குரலுடன் இவைகளை மூடத்தனம் என்றோ, கணநேர வேகம் என்றோ பகுத்து விமர்சிக்கிறோம்.

எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா, தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா, தற்கொலைகளில் தியாகமாக, ஒரு மானுட உச்சமாக, ஒரு அருஞ்செயலாக ஒப்புக்கொள்ளப்படும் விதிவிலக்குகளே இல்லையா?

கிருஷ்ணன்

வடக்கிருந்து உயிர்துறக்கும் 71 வயதான சமணத்துறவி கேசவ்ஜி

கிருஷ்ணன்,

எந்த ஒரு சமூகத்திலும் தியாகம் என்ற ஒன்று உயர் விழுமியமாகவே இருக்க முடியும். ஏனென்றால் ஒரு சமூகம் சில பொது விழுமியங்களை நிறுவுவதன் மூலமே உருவாக்கப்பட்டு நிலைநாட்டப்படுகிறது. தனிமனித மனமோ எப்போதும் சுயநலத்தால் ஆனது. அந்த சுயநலத்துக்கு மேலாக விழுமியங்களை நிலைநாட்டவே தியாகம் வலியுறுத்தப்படுகிறது.

காமம், வன்முறை, சுயநலம் ஆகிய மூன்றுமே [காம குரோத மோகம்] மானுடனின் அடிப்படை மிருக இச்சைகள். மேலை உளவியலில் இவை இட் [id] எனப்படுகின்றன. இவற்றை அடக்கி, வென்று, கடந்துசெல்லாமல் பண்பாடு அமையாது. ஆம், பண்பாடு என்பது ஒட்டுமொத்தமாகவே மானுட அடிப்படை இச்சைகளுக்கு எதிரான பயணம்தான்.

கடந்துசெல்லுதலின் முக்கியமான வழிமுறை என்பது உன்னதமாக்கல் [sublimation]. ஒன்றை அதன் உச்சநிலைக்குக் கொண்டு சென்று, அதை மையமாக நிறுவி, எல்லா உணர்ச்சிகளையும் அந்த உச்சநிலை நோக்கிச்செல்வதாக அமைத்துக்கொள்ளுதலே உன்னதமாக்கல். உலகமெங்கும் எல்லா சமூகங்களிலும், பழங்குடிச்சமூகங்களில்கூட, இதுவே பண்பாட்டு உருவாக்கத்தின் வழிமுறை. ஆகவே உன்னத விழுமியங்கள் இல்லாத சமூகங்களே இல்லை.

காமம் காதலாக உன்னதமாக்கப்படுகிறது. வன்முறை வீரமாக உன்னதமாக்கப்படுகிறது. சுயநலமும் பேராசையும் தியாகமாக உன்னதமாக்கப்படுகிறது. கொடை என்பதும் தியாகம்தான். காதல், வீரம், கொடை என்ற முப்பெரும் விழுமியங்களே பண்பாட்டின் அடித்தளம். சங்க இலக்கியங்கள் அவற்றைப்பற்றியே பேசுகின்றன.

தியாகங்களில் உயிர்த்தியாகம் முக்கியமான ஒன்றுதான், அன்றும் இன்றும். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, நாட்டுக்காக, உயர்விழுமியங்களுக்காக, நம்பும் நெறிகளுக்காக செய்யப்படும் உயிர்த்தியாகம் கண்டிப்பாக மகத்தானதே. நம் பேரிலக்கியங்களே சான்று.

உயிர்த்தியாகம் செய்யும் மக்கள் அறவே இல்லாத ஒருசமூகம் சுயநலச் சமூகமாகவே இருக்க முடியும். அது வாழ முடியாது. காலப்போக்கில் அதன் ஆன்ம வல்லமை மட்டும் அல்ல, புறவல்லமையே அழியும்.

எதை நம்பி தியாகம் செய்வது, அந்தக் காரணம் நாளை தவறாக ஆகுமென்றால் என்ன செய்வது என்பதெல்லாம் வெறும் லௌகீகக் கேள்விகள். தியாகிகள் அதைப்பற்றி நினைப்பதே இல்லை. உயிர்த்தியாகத்துக்கு எதிராகச் சொல்லப்படும் எல்லா வாதங்களையும் பொதுவாகவே தியாகத்துக்கு எதிராகவும் சொல்லலாமே.

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி வாழ்க்கையை இழந்தவர்கள் இந்திய சுதந்திரமே காங்கிரஸின் கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்டது என இப்போது உணரலாமே? அந்த எண்ணம் வருபவன் தியாகமே செய்வதில்லை. அடைவதைவிட இழப்பதில் மேலும் ஆனந்தம் உள்ளது என அறிந்தவனே தியாகி.

எல்லா தியாகமும் முக்கியமானதே. இன்று தியாகமே இல்லாமல் சுயநலம் மட்டுமேயாக அரசியல் மாறியுள்ள நிலையில் தியாகங்கள் இன்னும் முக்கியமாகின்றன. செங்கொடியும் முத்துக்குமாரும் பெறும் முக்கியத்துவம் அப்படி உருவாவதே. நான் அவர்கள் தாங்கள் நம்பியவற்றுக்காக இறந்ததை வணங்குகிறேன்.

விளைவுகளைக் கொண்டு அந்தத் தியாகங்களை மதிப்பிடக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அவற்றை தற்கொலைகள், அசட்டுத்தனங்கள் என்றெல்லாம் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்தமாக தியாகம் என்பதற்கு எதிரான சுயநல மனநிலையையே வளர்க்க உதவும் என்பதே என் எண்ணம்.

காந்தியவாதி டாக்டர் ஜோஷி உண்ணாவிரதமிருந்து உயிர்துறக்கிறார்

ஆனால் மதம் போன்றவற்றால் மூளைச்சலவை செய்யப்பட்டு, உச்சகட்ட வெறுப்பின் விளைவாகச் செய்யப்படும் உயிர்த்தியாகங்களை நாம் பிரித்துப்பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதாவது எதிர்மறை மனநிலைகளில் செய்யப்படும் உயிர்த்தியாகங்கள் அபாயகரமானவை. அவை தியாகங்களே அல்ல. பலிகள்.

அதேபோல குற்ற உலகில் எத்தனையோ குற்றவாளிகள் தெரிந்தே சண்டைகளில் சாகிறார்கள். குழுவுக்காக உயிர்த்தியாகம் செய்கிறார்கள். பணத்துக்காகவே தற்கொலைப் படையாக ஆகிறார்கள். அதையும் தியாகம் எனச் சொல்லமுடியாது.

இந்த வேறுபாடுகள் பெரும்பாலும் நமக்கே உள்ளூரத் தெரியும். ஏனென்றால் நாம் என்ன விவாதித்தாலும் இந்த விஷயங்களை மனசாட்சியைக் கொண்டே நம்முள் புரிந்துகொள்கிறோம்.

இந்திய ஞானமரபில் உயிர்துறத்தல் என்பது பாவமல்ல. தற்கொலைசெய்த ஜீவன் பேயாய்த் திரியும், நரகத்துக்குச் செல்லும் என்பதெல்லாம் செமிட்டிக் மதநம்பிக்கைகள்.

இந்திய மரபில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தெய்வங்களாகவே ஆகிறார்கள். நம் நாட்டார் தெய்வங்களில் கணிசமானவர்கள் அப்படிப்பட்டவர்களே.

ஏனென்றால் இந்திய ஞானமரபின்படி உயிர் அல்லது மானுடப்பிறவி என்பது அதைக்கொண்டு அடுத்த படிக்குச் செல்வதற்கான பயணமே. ஆகவே இதை முழுமையாக வாழ்ந்தாகிவிட்டதென உணரும் ஒருவர் அதை முடித்துக்கொள்வதென்பது அடுத்தபடிக்குச் செல்வதே.

அதாவது உடல் ஒரு உடைதான். அதைக்களைந்து புதிய உடையை அணிவதும் சரி, அல்லது மீண்டும் உடையே தேவையற்ற ‘பரிநிர்வாண’ நிலைக்குச் செல்வதும் சரி, சாதாரணமானதே.

ஆகவேதான் சமண, பௌத்த மதங்களில் வடக்கிருந்து உயிர்துறத்தல் [சல்லேகனை] இகவாழ்க்கையின் சிறந்த முடிவாகச் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் ஜீவசமாதி என்ற வழக்கம் இருந்து வருகிறது.

நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் காசியில் வாழும் காலத்தில் ஒரு முதிர்ந்த துறவி பிற துறவிகளை வரச்சொல்லி ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தார். அதன்பின் ஒவ்வொரு துறவியிடமாக வணக்கம் சொல்லி, விடைபெற்று, கங்கைக் கரைக்குச் சென்றார். உடையைக் களைந்து வீசிவிட்டு, கங்கையில் குதித்து ஜலசமாதி ஆனார். மற்றவர்கள் ‘கங்கா கீ ஜே’ என ஆரவாரம் செய்து அதைப் பார்த்து நின்றார்கள்.

நித்யாவின் மேலைக்கல்வி பயின்ற மனம் அதிர்ச்சி கொண்டது. அருவருப்பும். அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் பின்னர் நடராஜகுருவுடனான உறவு அதைத் தெளிவாக்கியது. பின்னர் அவரது நண்பரே உண்ணாவிரதமிருந்து உயிர்துறப்பதற்கு அவர் உதவினார்.

நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் என்றாவது அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் பயணத்தின் உச்சநிலையாகவே எண்ணுவேன்.

சமீபத்தில் குஜராத்தில் டாக்டர் ஜோஷி என்பவர் தன் தொண்ணூறாவது வயதில் அப்படி உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார் என செய்தி வந்தது. காந்தியைக் கண்டு பழகி, அந்த இலட்சியங்களின்படி மகத்தான தியாக வாழ்க்கை வாழ்ந்த மருத்துவர் அவர். பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண்சிகிழ்ச்சை அளித்தவர்.

அவருக்கு ‘அவ்வளவுதான் போதும்’ எனத் தோன்றுவது எளிய விஷயமா என்ன? அவருக்கு உபதேசம் செய்யத் தகுதி கொண்ட எவர் நம்மிடையே உள்ளனர்?

நம் நாளிதழ் அசடுகள் அவருக்கு நக்கலாக அளித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் நம் கல்விமுறை எந்த அளவு ஆன்மா இழந்ததாக ஆகிவிட்டது, அதைக்கொண்டு மரபையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வது எப்படி முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பதற்கான சான்றுகள்.

நாம் எப்போதும் நம்முடைய சொந்த மனநிலையை, நம்முடைய சொந்த சாத்தியக்கூறுகளைக் கொண்டே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறோம், தீர்மானிக்கிறோம். நம் எளிய லௌகீக சுயநல வாழ்க்கைக்குள் வைத்து தியாகங்களையும், முழுமைநிலையையும் புரிந்துகொள்ள முடியாது.

எளிமையாக இதைப் புரிந்துகொள்ளலாம். எதிர்மனநிலைகளால் தூண்டப்பட்டு உயிர்நீப்பது தற்கொலை. நேர்மனஎழுச்சிகளால் செய்யப்படுவது தியாகம். செயல்அல்ல, அதன்பின்னால் உள்ள மனநிலையே அது என்ன என்பதைத் தீர்மானிக்கிறது.

மகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே.

‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கடைசியில் ஏசு வரும்போது இதே கேள்விதான் அவரிடம் கேட்கப்படுகிறது. அவர் பதில் சொல்கிறார்.

துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர் பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொளும் உணர்வுகளில் மகத்தானது.

‘கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டு கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்!

‘ஏனெனில் தியாகிகளின் இரத்தமே பூமியை சுத்திகரிக்கிறது. நிரபராதிகளின் கண்ணீர் பூமியில் மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறது!

‘ஆகவே நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். நீதியின்பொருட்டு பசிதாகமுள்ளவர்களாக இருங்கள். நீதியின் பொருட்டு நீங்கள் உங்களை பகிஷ்காரம் செய்துகொள்ளுங்கள். நீதியின்பொருட்டு உங்களை சிரச்சேதம் செய்துகொள்ளுங்கள்!

‘தியாகிகள் அறிக. இலக்குகளுக்காக தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகள் மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்களோ என் பிதாவுக்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.’

ஜெ

http://articles.timesofindia.indiatimes.com/2011-02-08/vintage-wisdom/28230522_1_santhara-jain-community-veritable-fount [டைம்ஸ் ஆஃப் இந்தியா அளித்திருக்கும் நக்கலான தலைப்பை கவனிக்கவும்]

http://ibnlive.in.com/news/94yearold-freedom-fighter-fasts-unto-death/100308-3.html

முந்தைய கட்டுரைகல்வி – இரு கட்டுரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 8