அய்யப்பண்ணனும் ஆச்சியும்

”அய்யப்பண்ணனை இண்ணைக்கு காணல்லியே…வாற நேரமுல்லா?”என்று வேலப்பன் டீக்கடையில் பேச்சு எழுந்தால் புதியவர்கள் ஒரு ஐம்பதுவயதுக்காரரை கற்பனைசெய்யக்கூடும். அய்யப்பன் பிள்ளைக்கு வயது அதற்கு இருமடங்கு. நூறுதாண்டிவிட்டது என்று ஐதீகம். கிருஷ்ணவகை சமூதாயகாரர். இறுக்கமான ஒல்லி உடல். சுருங்கி சுருங்கி உள்ளே ஒடுங்கிய வயிறு. பழங்காலத்து முண்டாத்தசைகள் இப்போது சுருங்கிவிட்டாலும் கைகள் நீளமாக காட்டுக்கொடிகள் போல இருக்கும். வாயில் பற்கள் இல்லை. ஆகவே மெல்லும்போது முகம் நெடுக்குவாட்டில் அப்படியே சப்பி விடும். மதியச்சாப்பாட்டுக்குப் பின் தூங்கி எழுந்து நான்குமணிவாக்கில் பொடிநடையாக டீ குடிக்க வருவார்.பிள்ளைகள் எல்லாம் இறந்துவிட்டார்கள்.பேரன்களே பலர் முதுமை எய்தி இறந்துவிட்டார்கள். அய்யப்பண்ணன் கிணற்றுக்குள் ஊறிய பழைய நெல்லிக்கட்டை. சில்லென்னு இருப்பார்.

”நூறாச்சா?” என்றால் அய்யப்பண்ணனுக்கு பிடிப்பதில்லை. எழுபது என்றோ எண்பது என்றோ தோதுபோலச் சொல்வார். அந்தரங்கமாக கேட்டேன்.”அதிப்பம் கேட்டா பிள்ளே, அந்தக்காலத்தில வீரியம் கூடுதலாக்கும். இண்னைக்குபோல இல்ல. பக்கத்திலகூட ஒருநடை நடந்தா போரும், அப்பம் கெர்ப்பம் கேறிப்போடும்…” என்றார் அய்யப்பண்ணன்.”பிள்ளைய கூடுதலுல்லா? பிள்ளைய கணக்கே அண்ணைக்கு திட்டமா தெரியாது. கிளவிகளிட்ட பிள்ளிய எம்பிடுண்ணு கேட்டா பதினாறா பதினேளாண்ணு இல்ல பதினெட்டாண்ணு கண்ணு தள்ளி சிந்திப்பா…. காலம்பற வெளிக்குப்போறது போலயாக்கும் பிள்ளைய வந்து விளுறது. அதில நாயெடுத்தது நரியெடுத்தது காஞ்சு விளுந்தது எல்லாம் போக மிச்சம் எம்பிடுண்ணு நேரம் கிட்டும்போ எண்ணிப்பாப்பாவ. அப்பம் பின்ன வயசெல்லாம் எங்க எண்ணி வைக்குகது? அது இருக்கும் ஒரு எம்பது தொண்ணூறு…போட்டு மணிகண்டா, லே மக்கா, ஒரு வட எடுலே…”

பருப்புவடையை அய்யப்பண்ணன் விரும்பி சாப்பிடுவார். இரு முன் ஈறுகள் நடுவே வடையை கடித்து உடைத்து ஈறுகளாலேயே அதை நசுக்கி கடைவாயில்போட்டு ஊறவைத்து மீண்டும் ஈறுகளால் அரைத்து விழுங்கி நடுவே சூடான டீயையும் உறிஞ்சிக் கொள்வார். ஒரு டீ ஒரு வடை ஒருமணிநேரம் உலகம் போகிற போக்கை தெரிந்துகொள்ளுதல். ”இந்த பய கருணாநிதி என்னெடுக்கான்?” என்று அரசியலில் புகுவார். ”வெவரம்கெட்ட சின்னப்பயக்க வந்து ராஜ்ஜியம் ஆண்டா பின்ன மயிரா வெளங்கும்?” என்ற வழக்கமான இறுதிக்கூற்றுக்கு போகும் வழிதான் அது. கருணாநிதி அய்யப்பண்ணனைவிட முப்பதுவருடம் இளையவர், அவர் பார்த்து வளர்ந்த சின்னப்பயல். ”நாடாரு இருந்தப்ப ஒரு கூறு இருந்தது. காறிலே போனாலும் நிறுத்தி என்ன அய்யப்பாண்ணு அருமையாட்டு கேப்பாரே…” காமராஜ் ஒருமுறை அய்யப்பண்ணனை காரிலேயே ஏற்றியிருக்கிறார்.

ஆனால் அய்யப்பண்ணன் ராஜபக்தர். ”ராஜ்ஜியமுண்ணா என்னலே? ஏல அது ராஜ்யலெச்சுமியாக்கும். கிரகலெச்சுமி மாதிரி. ஒருத்திக்கு ஒருத்தன்தாம்லே ஆமக்கன். லே, மக்கா, உனக்க கெட்டியவளுக்கு அஞ்சுவருசத்துக்கு ஒருக்கா ஆளுமாத்தி கெட்டணும்ணா நீ சம்மதிப்பியாலே நீக்கம்புல போறவனே…”. ஆமக்கன் செத்தால் ராஜ்யலக்ஷ்மி அறுத்து கட்டலாமா கேட்டு ஆறுமுகப்பெருமாள் நாடார் அய்யப்பண்ணலால் இன்றும் வசைபாடப்படுகிறார்.”எல்லாரும் ராஜ்யமாளணும்கியானுக. லே அப்பம் ஆடுமாடெல்லாம் என்னனலே தெற்று செய்து போட்டு…? அதுகளுக்கும் குடுங்கலே ஓட்டு…சனநாயகம்…மயிரு…” காமராஜுக்கு ஒரு ராஜ லட்சணம் உண்டு, கைகள் முழங்கால்வரை வரும்.ஆகவே பரவாயில்லை. அதற்குப்பின்னர்தான் மழை பொய்த்துப்போக தொடங்கிற்று—

”இப்ப பெய்யுத இந்த மழை பின்ன என்ன?” என்று நான் கேட்டேன். ”பிள்ளய்க்கு ஒரு சொல்லுவெளக்கம் இல்லியே. இப்பம் அறுப்புகாலமாக்கும். இப்பம் பெய்யுத மழைய மழைண்ணா சொல்லுகது? ஓரோந்நுக்கும் அதுக்குண்டான நேரம் காலம் உண்டுல்லா? கெட்டினவளானாலும் உச்சைக்கு உற்சவப் பறம்பிலே கோமணத்தை அவுக்கேண்ணு சொன்னா வாரியல எடுத்துப்போடமாட்டாளா?”

அய்யப்பண்ணன் சொல்லும் பழமொழிகளை வேறு யாருமே சொல்லி கேட்டதில்லை. ”நாறப்பயகிட்டே நாலு நல்ல வாக்கு சொல்லலாமுண்ணு நிண்ணேன். பீயத்தொட்டு ஏனம் வெளக்கின கதையாட்டுல்லா போச்சு?” தல்லுகொள்ளி அப்புக்குட்டனுக்கு உபதேசம் செய்யமுற்பட்டதன் அலுப்பு. ஆயா ஏசுநேசம்மையிடம் பேசிவிட்டு வந்து ”…அவளுக்க பேச்சு…தூ.. ஆமணக்கெண்ணையக் கோரி குண்டி கழுவினமாதிரி…”

அய்யப்பண்ணன் அந்தக்காலத்தில் அழகுணர்ச்சி உடையவராக இருந்தார். பல தொடுப்புகள். அவை பற்றி ஆச்சிக்கு வருத்தம் இல்லையா என்றேன்.நேர்மாறு என்றார். புருஷனுக்கு நல்ல தொடுப்புகள் இருப்பதில் ஆச்சிக்கு பெருமைதான். ”நமக்கு ஒருநாளைக்கும் மூணுக்கு கூடினதில்ல, கேட்டேளா? எளவெடுத்த கெளவி ஆருகேட்டாலும் அஞ்சுக்கு கொறைக்க மாட்டா…”. ஆண்களின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் எப்போதும் அதில் கொஞ்சம் கவனமாக இருப்பார் ”இல்லேண்ணா ஆப்பை எடுத்துட்டு அண்டிய விட்ட கதையாட்டுல்லா போவும்?”

புதிய காலத்தை அய்யப்பண்ணன் ஐயத்துடன் கண்கள் மீது கைவைத்து வாய் திறந்து கூர்ந்து பார்ப்பார். ”பிள்ள ஒரு நோக்கு பாக்கணும்…அந்நா போறது ஆணா பெண்ணா?”. நான் பார்த்துவிட்டு ”பெண்ணாக்கும்…” என்றேன் ”ஆமா. அதுவும் செரிதேன். கெட்டினவனுக்குத் தெரிஞ்சா போராதா? போறவனும் வாறவனும் என்ன மயித்துக்கு ஆணா பெண்ணாண்ணு அறியணும்?”

ஆனால் பெண்களைப் பார்ப்பதில் அய்யப்பண்ணனின் மோகம் தணியவேயில்லை. ”அதிப்போ, ஆணுக்க காமம் கண்ணிலயாக்கும் பிள்ளே. கண்ணுள்ளவரை காமம் உண்டு…” சாலையில் போகும் பெண்ணை கூர்ந்து நோக்கி ”பிள்ளே அவளுக்க கம்மலுக்குமேலே ஒரு செயினு இளுத்து காதிலே கெட்டியிருக்கே அது என்னத்துக்காக்கும்? கனக்கூடுதலு கொண்டா?” அது ஒரு ஸ்டைல் என்று நான் விளக்கினேன். ”என்னத்த டைலு? அந்தக்காலத்தில குணுக்கும் தக்கையும் பாம்படமும் போடுவாளுக. அதுமாதிரி வருமா?” பாம்படம் போட்ட பெண்களை பார்த்தே பலவருடங்கள் ஆகின்றன என்று அய்யப்பண்ணன் ஒருநாள் சொன்னார்

மறுவாரமே சாலையில் ஒரு பாட்டி கீரையுடன் சென்றாள். வேலப்பன் பரபரப்பாகி ”அந்நா போறா அய்யப்பண்ணனுக்க ஹீரோயின். விளி அவள…ஆச்சீ…இஞ்சேருங்க ஆச்சீ.. கீர என்ன வெல?”

”விக்கதுக்கு இல்ல மக்கா” என்றாள் பாட்டி.

”வாருங்க ஒரு வாய் வெள்ளம் குடிச்சிட்டு போங்க” என்றான் வேலப்பன் ”அய்யப்பண்ணா ஆளு வாறா….. இண்ணு அய்யப்பண்ணனுக்கு கோளுதான்…”

”போலே மயிராண்டி” என்று அய்யப்பண்ணன் வெட்கினார்.

”யப்போ…மாதாவே”என்று கிழவி அமர்ந்து ”கடுப்பம் கூட்டி இடு மக்கா…”என்றாள்.

”அய்யப்பண்ணா வல்லதும் கேக்கணும்” என்றான் வேலப்பன்

அய்யப்பண்ணன் தொண்டையை செருமினார். முகம் சிவந்திருந்தது. புருவங்கள் எழுந்தெழுந்து அமர்ந்தன.

”என்னத்த கேக்க…கீர விக்கதுக்கு இல்ல..” கிழவி குந்தி அமர்ந்து டீயை சுழற்றி ஊதும்போது அய்யப்பண்ணன் கம்மிக் குழறிய குரலில் முதல் கேள்வியை கேட்டார்.

”நீங்கள்லாம் செக்காலப்பிள்ளமாராட்டி?”

”இல்ல….ஆரு சொன்னா? நாங்க வேதம்கூடின நாடாக்கமாருல்லா?”

”சும்மா கேட்டேன்… கீரைய வெல சொல்லு…”

”சொன்னேம்லா? விக்கதுக்கு இல்ல”

”அதுசெரி, நாப்பது ரூவாய்க்கு குடு”

”இல்ல..விக்கதுக்கு இல்ல”

அய்யப்பண்ணன் தன் முழுவலிமையையும் பெற்று ”கெட்டினவன் இருக்கானா?” என்றார்

”இல்ல…அவிக போயி வருசம் பதினாறாச்சுல்லா?”

”உனக்க குடியெங்கடீ? பெருமாகோயில் பக்கமா?”

”இல்ல… மாதாகோயில்பக்கமுல்லா?” கிழவி எழுந்தாள் ”வாறன் பிள்ள…நல்லா இரு”

கிழவி போனதுமே வேலப்பன் வெடித்தெழுந்தான் ”அய்யப்பண்ணா நீரு ஆளு ரெஸிகனாக்குமே…ஒம்மாணை ஓய், இந்தளவுக்கு நானும் நினைக்கேல்ல….நீரு செமினியில்லா, நல்ல ஒரிஜினல் செமினி !”

”என்ன ?”என்றேன் புரியாமல்

”சாரு இங்க என்னத்த பாத்தது? அய்யப்பண்ணன் கேட்ட கேள்விகளை கெவுனிச்சியளா? அவ வந்து இருக்க்கப்பமே மாதாவேண்ணு சொல்லியாச்சு.கண்டப்பமே நாடாத்தியாக்கும்ணு தெரிஞ்சாக்கும் அய்யப்பண்ணன் செக்காலப்பிள்ளமாராண்ணு கேக்காரு. களுத்தில நூலு இல்லேண்ணு கண்டுட்டு கெட்டினவன் உண்டாங்கியாரு. நாடாக்கமாருண்ணு சொன்னப்பறம் பெருமாகோயில் தெருவாங்குதாரு…கீர விக்கமாட்டேன்னு சொன்னம்பெறகு வெல கேக்காரு…”

”ஏன்?”

”இல்லேண்ணு சொல்லி தலைய ஆட்ட வச்சு பாக்குறதுக்கு…பாம்படக்காது ஆடணுமில்லா?”

நான் அய்யப்பண்ணனை பிரமிப்புடன் பார்த்தேன். அவரது ஆச்சியின் கணக்குதான் சரியாக இருக்கும் என்று பட்டது. ஈறு தெரிய சிரித்தபடி ”ஓடினாத்தான் குதிர ,ஆடினாத்தான் பாம்படம்” என்றார்.

”அப்பம் அய்யப்பண்ணனுக்கு இண்ணைக்கு கோளாக்கும்…”என்றார் பெருமாள்நாடார்

”ஆமா…கோளு…ஏல எட்டுகட்ட டார்ச்சடிச்சு தேடியாக்கும் ராத்திரி ஒண்ணுக்கு போறது”

”முற்றத்தில எடம் தேடுவேளா?” என்றேன்.

”பண்டத்த தேடுவேன். வேலப்பா…இவரு ஒருமாதிரி மசப்பு சென்மமாக்குமே..”

”அய்யப்பண்ணன் எப்பமாக்கும் கடைசீல வெடி பொட்டிச்சது?” என்றான் வேலப்பன்

”சரித்திர சம்பவம்லா? எளுதி வச்சுக்கோ…”

”தெரியணுமே…..எதுவரைக்கும் போவுதுண்ணு. எங்க சென்மத்தில ஒரு நூறுவயசுக்காரன இனி எங்க காணப்போறம்? சொல்லும்…”

”அதாச்சுடே ஒரு பதினாறுவருசம்…”

”எம்மா! …அப்பம் அய்யப்பண்ணனுக்கு வயது எம்பத்தியெட்டு…. ஆளாராக்கும்?”

”எம்பத்தெட்டு வயசு கெளவனுக்கு பின்ன கொமரி வருவாளா? அவதான்லே, உனக்க வலிய ஆச்சி…”

”எனக்கு வல்லாதே வருதே…அப்பம் ஆச்சிக்கும் எம்பது இருக்குமே”

”இருக்கும்… ஒருபாடு நாளைக்குள்ள கணக்காக்கும். ஒருக்காலும் சம்மதிக்க மாட்டா… பக்கத்திலே செண்ணு கேட்டா பாக்குவெட்டியால அடிச்சுப்போடுவா…வீட்டில எங்க பாத்தாலும் ஆளு. பேரப்பிள்ளைய,கொள்ளுபேரன் எள்ளுப்பேரன் சள்ளுப்பேரன்னு… என்னண்ணு சொல்ல?”

”ஆச்சிக்கு நல்லா காது கேக்காதுல்லா? நீரு ரகசியம் சொல்லணுமானா மைக்கு வேணுமே?”

”அதுக்கெல்லாம் கைபாசை உண்டுலே…”

”அப்பம் ஆச்சிக்கு அது ஓர்மை இருந்திருக்கு….”

”அது மறக்குமா? அவ என்னை கெட்டும்பம் பத்து வயசு. எளுவது வருசமுல்லா பழகியிருக்கா?”

”எழுபது வருஷம்!” என்றேன் ”அதுக்குள்ள இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு மறுபடியும் கைவிட்டு போயாச்சு”

”சங்கதியைச் சொல்லும் அய்யப்பண்ணா…ரெஸக்கொறை போடாம”

”என்ன… மனசுருகி பிரார்த்திச்சா மண்டைக்காட்டம்மை கேப்பாள்லா? மண்டைக்காட்டுக் கொடைக்கு வீடே கலைஞ்சு கெளம்பி போயாச்சு. செறு மழை உண்டு. வீட்டிலே நானும் கிளவியும் தனிச்சு… ஈச்சைநாயரு கடையிலே இருவது ரூவாய்க்கு அலுவா வேங்கிட்டு போனேன். அலுவாண்ணா அவளுக்கு ஒரு பெலஹீனதயாக்கும். சீனிக்க ரோகம் உள்ளதினால பேரப்பிள்ளைக கேட்டா வேங்கிக் குடுக்க மாட்டானுக… கண்டதுமே வந்து பிடிச்சுகிட்டா….”

”அவள நீரு பிடிச்சுகிட்டீரு…. ஜோறுதான்…”

”சோறும் கஞ்சியும்….ஒண்ணும் ரெசப்படேல்ல. அவளுக்கு எங்க தொட்டாலும் ஒரு இது இல்ல…”

”இதுண்ணா?”

”லே கிக்கிளிலெ..சொரண… அது இல்ல. முகத்தப்பாத்தா நாம தொட்டோமா இல்லியாண்ணு நமக்கே சம்சயம் வந்துபோடும். ஒருவளியாட்டு கரகேறி மூச்சு எடுத்தேன். அவ இந்நாண்ணு கெடக்கா அலுவாயும் திண்ணுட்டு….”

”அப்பம் இதுக்கு தொண்ணூறு வரை கேரண்டி உண்டு…”என்றான் வேலப்பன் பெருமூச்சுடன்.

”எந்திரிச்சு நாலு சொல்லு நல்லா பேசிட்டிருந்தப்பம் அவளுக்க பாம்படத்தை எங்கேண்ணு கேட்டேன். காது அறுந்திரும்ணு களட்டி வச்சிட்டேண்ணு சொன்னா… வடிச்சு நீட்டின காதைப் பிடிச்சு இளுத்தேன். யம்மா அய்யோண்ணு ஒரே சிரிப்பு! நெளிவும், வளவும்… கிக்கிக்கீங்கியா…என்னாண்ணு சொல்ல? அங்கிண தொட்டாமட்டும் கூச்சமாம்… எளவு இப்பிடி ஒரு சூச்சுமம் இருக்குண்ணு ஒரு பத்து நிமிசம் முன்னால தெரியாமப்போச்சேண்ணு ஏங்கிப்போயிட்டேன்…நம்ம கொடுப்பினை அம்பிடுதான். அடுத்தமாசம் நாலு சுட்ட பனங்கெளங்கு தின்னவ நெஞ்சு எரிக்குதுண்ணு வெள்ளம் கேட்டா. குடுக்கதுக்குள்ள போய்ச்சேந்தா…”

”அய்யப்பண்ணன் அடிக்கடி நெனைக்கதுண்டா?” என்றேன்

”பிள்ள ஒண்ணு எளுதிவச்சுகிடணும். சாதாரணமாட்டு கெட்டினவனை பெஞ்சாதிமார் கடசீவரைக்கும் மறக்க மாட்டாகண்ணு சொல்லுகதுண்டு. மறக்க மாட்டாளுக. ஆனா நாலுபிள்ள பெத்துவளத்தா பின்ன அவளுகளுக்கு பிள்ளயும் பேரப்பிள்ளையுமெல்லாம்தான் முதல் கணக்கு. ஆனா ஆம்பிளப்பய கணக்கு அதில்ல. அங்கிண இங்கிண மோந்து நடந்தாலும் சங்குக்கு உள்ள கெட்டினவ அல்லாம அவனுக்கு வேற ஒரு மொகம் இல்ல… பெற்றம்மை, பெத்தபிள்ளைக ஒண்ணும் அவனுக்கு கணக்கு இல்ல பாத்துக்கிடுங்க. எனக்கு இந்நா எல்லாம் தீயணைஞ்சு சாம்பலாயாச்சு. இப்பமும் ராப்பகல் சவத்துமூதி நெனைப்புல்லா…? பாவிமகள மனசு நெறைஞ்சு நெனைக்காம எம்பதுவருசத்தில ஒருநாளு இருந்திருக்குமா?போட்டு, நம்மள வச்சு அவன் களிக்குதான். களி முடிஞ்சா களம் விட்டு எடுப்பான்….வேலப்பா மக்கா ஒரு கடும் சாய எடுலே”

முந்தைய கட்டுரைநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …
அடுத்த கட்டுரைஇந்தியா இஸ்லாம்-கடிதம்