இந்தியா ஒன்றா?

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன்.

இதேபோல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவலக நிமித்தமாகவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் ‘இந்தியா ஆபத்தான நாடா’ என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களை தங்கள் முன் வைக்கிறேன்.

இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார ரீதியிலேயே உள்ளது என்றே நினைக்கிறேன். ஒரே இதிகாச பின்புலத்தில் கட்டப்பட்ட இரு வேறு கட்டமைப்புகளாக இருக்கிறது. உதாரணம் நம் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தெய்வ விக்கிரகங்கள். வடக்கு கிழக்கு மேற்கு மாநிலங்களில் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியே உள்ளன. ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும் கேரளத்தில் வேறு மாதிரியாகவும் தென்னிந்தியாவில் உள்ளது. இந்தப் பிரிவின் வரலாற்று அறிவு எனக்கு எட்டவில்லை. இரு வேறு கலாச்சாரங்கள் எங்கே இணைந்தன? காரணங்கள் யாவை?

இந்து மதத்தின் ஆறு பெரும் வழிபாட்டு தெய்வங்களில் சுப்பிரமணிய வழிபாடு பெருமளவு வட இந்தியாவில் இல்லை. அது ஏன்?

என் பார்வையில் வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு தென் மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் அதிகம்.

ஜாதியின் சமுதாய ஆளுமை கேரளா, தமிழ்நாட்டைக்காட்டிலும் மற்ற பிரதேசங்களில் இன்றும் வலுவாகவே உள்ளது. வளமான மாநிலமான மகாராஷ்டிராவில் சில பெரும் நகரங்கள் பொருளாதார மேன்மையில் இருந்தாலும் பரவலாக வறுமை இருக்கிறது. மாநில உள்கட்டமைப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ம.பி., ஓடிசா, உ.பி., பிஹார், சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இன்னும் மோசம். அவர்களின் நிலைமையும் பிரச்சினைகளும் பரவலான ஊடகங்களில் இடம் பெறுவதேயில்லை.

குஜராத் உள்கட்டமைப்பிலும் வாழ்வின் தர வரிசையிலும் முதன்மையாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

வரலாற்றுக் காரணங்களால் மத நல்லிணக்கம் சற்று குறைவாகவே வட மாநிலங்களில் உள்ளது. உள்ளழுத்தம் எந்த ஏதுவான சூழலிலும் உடனே வெடிக்குமளவு உள்ளது என்பதே என் எண்ணம்.

இவை எல்லாவற்றிற்கும் கீழே இழையும் இறையாண்மை நம்மை இணைக்கும் கருவாகவே உள்ளது. அப்படி இந்த பூலோகப் பகுதியை இணைக்கக் காரணம் என்ன? ஒரு காலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளும் நம் கலாச்சார ஆளுமையிலும் பிராந்திய எண்ண ஓட்டத்திலும் இணைந்தே இருந்தது. ஆனால் இன்று நாடுகளாகப் பிரிந்தமையால் காலப்போக்கில் இந்த வரலாற்றுத் தாக்கங்களிலிருந்து விலகிவிடும்.

அதேபோல் வெறும் ஒன்றுபட்ட நாடாக நாம் இருக்கிறோம் என்ற காரணத்தினால்தான் இந்த ஒற்றுமையைக் காணவிழைகிறோமா அல்லது வேறு ஏதாவது பிராந்திய உள்ளுணர்வு ஒன்று இருக்கிறதா?

அன்புடன்
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்,

இந்தியாவில் பயணம் செய்யும்போது நாம் தொடர்ச்சியாக எல்லாமே மாறிக்கொண்டு வருவதைக் காணலாம். முக்கியமாக முகங்கள். மொழி, உடை, உணவு, வீடுகள் எல்லாமே மாறுபடுகின்றன. இசை மாறுபடுகிறது. ஏன் மாடுகளின் கொம்புகளில் கூட தொடர்ச்சியான வேறுபாட்டைக் காணலாம்.

அதேசமயம் தொடர்ச்சியாக ஓடும் பொதுத்தன்மையையும் காணலாம். இந்தப்பொதுத்தன்மை இருவகை. ஒன்று இந்தியாவில் நவீனகாலகட்டத்துக்குப் பின்னர் உருவாகி வந்த வணிகப்பண்பாட்டு அம்சங்களால் ஆனது. இது மேலோட்டமானது.

இன்னொன்று, சமூக வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் எல்லாம் உள்ள ஆழமான பொதுத்தன்மை. இது மிகமிகத் தொன்மையானது. லோத்தலிலும் டோலாவீராவிலும் உள்ள ஐந்தாயிரமாண்டுப் பழமை உடைய சின்னங்களைப் பார்க்கையில் அன்று முதல் இன்றுவரை அந்தப் பண்பாட்டுப்பொதுத்தன்மை நீடிக்கிறது என்றும் தோன்றுகிறது.

ஒருவர் வேற்றுமைகளைக் காண விரும்பினால் அவற்றைக் காணலாம். ஒற்றுமைகளைக் காண விரும்பினால் அவற்றை கவனிக்கலாம். நான் இந்த வேற்றுமைகளை அந்த ஒற்றுமை எப்படி கோர்த்திணக்குகிறது என்பதையே கவனிக்க விரும்புவேன். ஏனென்றால் அந்த ஒற்றுமையே நமது பலம். அது சிதறினால் உருவாகும் அழிவு பிரம்மாண்டமானது.

இந்தியச்சிற்பக்கலையின் வெவ்வேறு பாணிகளைப்பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. கே.ஆர்.சீனிவாசன் எழுதிய ‘தென்னிந்தியக் கோயில்கள்’ என்ற நூல் நல்ல அறிமுகத்தை அளிக்கக்கூடியது.

இந்தியச் சிற்பக்கலை வடக்கே காந்தாரக்கலை வழியாக வந்த குகைக்குடைவு கோயிற்கலையும் , இங்கே இருந்த செங்கல்கோயிற்கலையும், மரக்கட்டிடக்கலையும் இணைந்து உருவான ஒன்று. அதாவது இது ஆங்காங்கே தனித்தனியாக உருவானதல்ல. ஒன்றுடன் ஒன்று உரையாடி மெல்லமெல்ல திரண்டு வந்தது.

இந்த உரையாடல் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சரிவிகிதத்தில் நிகழ்ந்தது. அதுவே வெவ்வேறு பாணிகளாக ஆகி வளர்ந்தது.

இந்தியச்சிற்பக்கலையில் மூன்று பாணிகள் உள்ளன என்பது சிற்பநூல்களின் வரையறை. நாகரம், வேசரம், திராவிடம் என அவை வகைப்படுத்தப்படுகின்றன. திராவிடம் என்ற சொல் தென்னகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்குரியவை.

ஆனால் இந்த வேறுபட்ட தன்மைக்குள் பொதுக்கூறுகள்தான் அதிகம். முதல்பார்வைக்கு மூன்று பாணிகளும் வெவ்வேறு எனத் தெரியும். பார்க்க ஆரம்பித்தால் அவற்றின் பொதுவான அழகியல் ஆச்சரியமூட்டும். அதாவது ஒரு பாணிக்குள் மற்ற பாணிகளின் செல்வாக்கு ஊடுருவி இருக்கும்.

கேரளத்திலும் வடகிழக்கிலும் உள்ள கோயில்பாணி இந்த மரபான சிற்பசாஸ்திர வரையறைக்குள் வராது. அது சீன செல்வாக்குடையது. மரத்தாலும் ஓடுகளாலும் ஆனது. ஆனாலும் அவற்றிலும்கூட கட்டிட அமைப்பில் பிறவகையான இந்தியக் கோயில்களுடன் உள்ள ஒப்புமையே அதிகம்.

திராவிட கோயிற்கலைக்குள்ளேயே பல வளர்ச்சிப்படிநிலைகள் உள்ளன. மாமல்லபுரம் ரதக்கோயில்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை கவனிக்கலாம். கோயிற்கலைப் பாணிகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும் உண்டு. கஜுராஹோ கோயிலுக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியமூட்டுவது. குஜராத்திலும் ராஜஸ்தானிலும் திராவிடபாணி கோயில்கள் பல உள்ளன.

கோயில்களின் அமைப்பில் உள்ள இந்த வேறுபட்ட தன்மைகூட சிற்பங்களில் இல்லை. சிற்பங்களின் முத்திரைகளில், சின்னங்களில் நுண்ணிய மாறுபாடுகள் உண்டு. அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறிக்கொண்டே இருக்கும். அத்துடன் ஒவ்வொரு பேரரசும் அதிகமுக்கியத்துவம் கொடுத்து வடிக்கும் சிற்பங்கள் உண்டு. எப்படி சோழர்களுக்கு நடராஜர் ஒரு பண்பாட்டு அடையாளமோ அப்படித்தான் ராஷ்டிரகூடர்களுக்கு பூமாதேவியை ஏந்திய பூவராக மூர்த்தி.

ஆகவே வடக்கு தெற்கு என ஒரு பிளவு உள்ளது என்பது உண்மை அல்ல. இங்கே இருப்பது வெவ்வேறு கலைப்பாணிகள். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. கோயில்களையும் சிற்பங்களையும் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதை உணரலாம்.

இந்திய நிலப்பரப்பில் இருந்த வெவ்வேறு பண்பாட்டு மூலங்கள் காலப்போக்கில் இணைந்து உரையாடுவதன் மூலமே இந்திய, இந்துப் பண்பாடு உருவானது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் அதற்கான பங்களிப்பு இந்த மைய ஓட்டத்தில் உள்ளது. அதன்பின் இந்த மைய ஓட்டத்தில் இருந்து ஏராளமான கிளைகளும் பிரிந்து வளர்ந்தன.

உதராணமாக நெல்லையப்பர் கோயிலில் உள்ள கற்சாளரம் போன்றவை மரத்தாலான கட்டுமானத்தை கல்லில் பிரதி செய்பவை. தெளிவாகவே சேரச் செல்வாக்கு தெரியும். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் தெளிவான பாண்டியச் சிற்பக்கலைப் பாதிப்பு உள்ளது.

வட இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டுவரைக்கும் குமரக்கடவுளை முக்கியமான தெய்வமாகக் கொண்ட கௌமாரம் பெரும் செல்வாக்குடன் இருந்துள்ளது. அங்கே பத்தாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட கோயில்களில் எல்லாம் ஏராளமான முருகனின் சிலைகள் உள்ளன.

முருகனுக்குரிய பெருநூலான ஸ்காந்தம் [ஸ்கந்த புராணம்] சம்ஸ்கிருதமொழியில்தான் உள்ளது. அதன் மொழியாக்கமே கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம். முருகனைப்பற்றிய ஒரே இந்தியப் பெருங்காவியம் காளிதாசனின் குமாரசம்பவம். குப்தர் காலத்தில் முருகன் முக்கியமான தெய்வமாக இருந்திருக்கலாம். கோயில்களும் இருந்திருக்கலாம்.

எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் உருவான பக்தி இயக்கம் சைவ, வைணவ மதங்களை பெருமதங்களாக வளர்த்தெடுத்தது. கௌமாரம் சைவத்தில் இணைந்தது. பக்தி காலகட்டத்தில் வடக்கே சைவத்தைவிட வைணவம் பிரம்மாண்டமாக வளர்ந்தது. ராமனும் கிருஷ்ணனும் பக்தி இயக்கத்தால் அங்கே இந்து மதத்தின் மையக்கடவுள்களாக ஆக்கப்பட்டனர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்திலும் தமிழகத்திலும், சைவம் வலுவாக நீடித்தது. அதில் தமிழகத்தில் மட்டும்தான் முருகன் பெருந்தெய்வமாக ஆனார். ஆனால் தமிழ்நாட்டில்கூட சைவ, வைணவப் பேராலயங்கள் அளவுக்கு முருகனுக்கு முக்கியமான ஆலயங்கள் இல்லை என்பதே உண்மை.

உண்மையில் இந்தியாவிலேயே முருகனுக்கான தனிப்பேராலயம் என்பது திருச்செந்தூர் மட்டுமே. அது பிற்காலத்தில் கட்டப்பட்டது. மற்ற ஆலயங்கள் எல்லாமே சிறியவை. காலப்போக்கில் முருகக்கோயில்களாக விரிவாக்கம் செய்யப்பட்டவை. உதாரணமாக திருப்பரங்குன்றத்தில் மையத்தெய்வம் முருகன் அல்ல, கொற்றவை.

நீங்கள் ஒரு பொதுவான மனப்பதிவில் இருந்து அடுத்ததுக்குத் தாவிச் செல்கிறீர்கள். இந்தியா விரிவான நிலப்பரப்பு. இங்கே ஒவ்வொரு இடத்துக்கும் அங்குள்ள இயற்கைவளம், வரலாற்றுப்பின்புலம் சார்ந்து சமூக வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் உள்ளது. வறண்ட ராஜஸ்தானும் மத்தியப்பிரதேசமும் வளர்ச்சி குன்றியவை. மக்கள்நெருக்கம் கொண்ட பிகாரும் உத்தரப்பிரதேசமும் நெருக்கடிகள் நிறைந்தவை.

தென்னாட்டு மாநிலங்கள் துறைமுகங்கள் கொண்டவை. அந்த அம்சம் அவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பாற்றுகிறது. ஆறுகள் செழித்த பஞ்சாப் இந்தியாவின் முக்கியமான மாநிலமாக உள்ளது. குஜராத்தின் கதை வேறு. அது பட்டேலின் தனிக்கவனத்துக்கு உள்ளானது. மொரார்ஜி தேசாய் போன்ற மாபெரும் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டது.

நீங்கள் வேறுபாடுகளை மட்டுமே பார்க்கிறீர்கள். ஒற்றுமைகளைப் பார்க்க ஆரம்பித்தால் வேறுபாடுகள் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை என்பதை உணர்வீர்கள். இத்தனை பெரிய நிலப்பரப்பில் இந்த அளவுக்காவது வேறுபாடுகள் இல்லாமலிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

மார்க்ஸிய ஆய்வாளரான கெ.சச்சிதானந்தனின் ஒரு கட்டுரையில் இந்திய வரலாறு முழுக்க இங்கே நிகழ்ந்த எல்லாமே ஒரு ‘அகில இந்தியத்தன்மையுடன்’ மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன என்று மிக விரிவாக விளக்குகிறார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே வைதிகமதமும், வேதாந்தஞானமும் இந்தியா முழுக்க ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் பரவின. பின்னர் பௌத்த, சமண மதங்களும் அவ்வாறே இந்தியா முழுக்க ஒரே வீச்சாகப் பரவின.

பின்னர் பக்தி இயக்கம் தென்னகத்தில் இருந்து வடக்கே பரவி ஆட்கொண்டது. பிற்கால வேதாந்த ஞானிகளான சங்கரரும், ராமானுஜரும், மத்வரும் தெற்கில் இருந்து வடக்கே தங்கள் ஞானத்தை விரித்துப் பரப்பினர். இஸ்லாம் வடக்கே இருந்து தெற்கே வந்தது. இந்துமதச் சீர்திருத்த இயக்கங்கள் அகில இந்தியத் தன்மை கொண்டிருந்தன. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அகில இந்தியாவையும் ஒரே அலையாக நிறைத்தன. நக்சலைட் இயக்கமும், தலித் இயக்கமும் அவ்வாறே அகில இந்தியத் தன்மை கொண்டவை.

ஏனென்றால் இந்த நாடு ஒரே மக்கள்திரளையே கொண்டிருக்கிறது. அந்த மக்கள்திரள் தங்கள் எண்ணங்களால், வாழ்க்கைமுறையால் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஒன்றாகவே சிந்திக்கிறார்கள்.

இந்தியா முழுக்க மக்கள் நூற்றாண்டுகளாக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் மாநிலங்களில் வங்கம், கேரளம் போன்ற சில மாநிலங்கள் தவிர பிற இடங்களில் எல்லாமே ஈராயிரம் வருடமாக தொடர்ந்து வெளியே இருந்து மக்கள் வந்து குடியேறியபடியே இருக்கிறார்கள். எல்லா மொழிவாரி மாநிலங்களிலும் வேற்று மொழி பேசுபவர்கள் மூன்றில் ஒரு பங்கேனும் இருக்கிறார்கள்.

இந்த நிலப்பரப்பு நூற்றாண்டுகளாக மக்கள் குடியேறிக்குடியேறி கலந்து கலந்து உருவம் கொண்டதாக உள்ளது. இங்கே உள்ள மக்களை நிலம், மொழி, இனம் என்னும் அடிப்படைகளில் பிரிக்க முடியாது. நன்றாக கலக்கி ஒரே சமூகமாக ஆக்கிவிட்டிருக்கிறது காலம்.

இந்த தேசத்து மக்களை ஒன்றாக இணைக்கும் சக்தி என்ன என்றால் இந்தக் கலப்பைத்தான் சொல்வேன். இம்மக்கள் கலக்க ஆரம்பித்த பின்னர்தான் உலக நாகரீகமே உருவாகத் தொடங்கியது. இந்தக் கலப்பை பின்னோக்கிக் கொண்டு சென்று இம்மக்கள்திரளை பல தனித்தனிப் பண்பாடுகளாக, தேசங்களாகப் பிரிக்கலாம் என்பது ஆதிக்கவாதிகளாக பிரிட்டிஷாரின் திட்டம். இன்று அமெரிக்க-ஐரோப்பிய ஆதிக்கசக்திகளின் கனவு.

இந்தக் கலப்புநிகழ்வு மூலம் இந்த நிலத்து மக்கள் நாலாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒரு தொடர் உரையாடலில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் நாகரீகம், வாழ்க்கைமுறை, மதம், கலைகள், இலக்கியங்கள் எல்லாமே இந்தக் கலப்பின் விளைவாக உருவானவை. அவைதான அவர்களின் ஆழ்மனத்தை உருவாக்குகின்றன.அந்த ஆழ்மனத்தால் அவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் ஒன்றாகச் சிந்திக்கிறார்கள்.

இந்த ஒற்றை உடலை இயந்திரபாகங்களைப் பிரிப்பதுபோலப் பிரிக்க முடியாது. ஆதிக்கவாதிகளும் அரசியல்வாதிகளும் அப்படிப் பிரிக்க முனைந்தால் பேரழிவுதான் உருவாகும். அந்தப் பிரிவின் ரணங்கள் நூற்றாண்டுகள் தாண்டியும் ஆறாது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் அழிவுகளும், தொடர்ந்து வந்த போர்களும், இன்றும் நீடிக்கும் கசப்புகளும் வெறுப்புகளும் அதையே நிரூபிக்கின்றன.

இந்தியர் ஒன்றாக இருப்பதன் ரகசியம் இதுவே. ஒரே பெற்றோருக்குப் பிறந்து ஒரே வீட்டில் பல்லாயிரம் வருடங்களாக வாழும் சகோதரர்கள் இவர்கள்.

ஜெ

[பிகு: நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை பல கட்டுரைகளிலாக முன்னரே எழுதியிருக்கிறேன். இணைப்புகளைப்பாருங்கள். பொதுவாக, பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வரும் கேள்விகள் அதிகமாக வருகின்றன இப்போதெல்லாம். இருந்தாலும் மீண்டும் நான் சொல்ல விரும்பும் பதில் என்பதனால் இதை எழுதுகிறேன்]


நமது கட்டிடங்கள்
சிற்பச்செய்திகள்
சுசீந்திரம்
சோழர்கலை
தென்னிந்தியக் கோயில்கள்
முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி’’

அ.கா.பெருமாள் அறுபது

திருவட்டாறு பேராலயம்- ஒருவரலாறு

முந்தைய கட்டுரைபுஷ்டிமார்க்கம் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி-மனோகர்