சமண அறம்

அன்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நான் உங்களின் வாசகன். தங்களின் இந்தியப் பயணம் – அருகர்களின் பாதை பயணக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்தேன். நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இணைய தளத்தைக் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகப் படித்து வருகிறேன். உங்களின் சிறுகதைகளில் அறம் எனக்கு மிகவும் பிடித்தது.

நான் ஒரு பேராசிரியன். எங்களின் ஆய்வுகளில் பொருளாதார, சமூக மற்றும் வியாபார முறைகள், மக்களின் பண்பாடு, கலாசார சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் படித்து வருகிறோம். உங்களின் குறிப்புகளைப் படித்து முடித்தபின் சமணர்களின் வணிகம் சம்பந்தமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்குத் தோன்றியது.

சமணர்களின் வணிகம் நியாயம் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பதை அவர்களின் நூல்களும் துறவிகளின் போதனைகளும் வலியுறுத்தி வந்துள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்துள்ளன. எனவே அவர்களின் வணிகம், கோவில்கள் மற்றும் ஆன்மிகம் சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. பழைய காலந்தொட்டுப் பல நூறாண்டுகளாக இந்தியப் பொருளாதார வியாபார முறைகளில் அற நெறிகளும், நியாயம், நேர்மை ஆகிய உயர் குணங்களும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் சமணர்களின் முறைகள் பண்டைய இந்திய சிந்தனைகளின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. நமது பொருளாதார வியாபார முறைகள் மேற்கத்திய முறைகளுடன் வேறுபட்டு அமைந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணமாக மேற்சொன்ன நெறிமுறைகளே அமைந்திருந்தன.

அன்புடன்,

ப.கனகசபாபதி, கோவை.

அன்புள்ள கனகசபாபதி,

வணிகம் எப்போதுமே அந்தந்த சூழலின் சந்தர்ப்பங்களைப் பொறுத்தே அமையும் என்றே நினைக்கிறேன். அதில் மாறாத அறநெறிகள் ஏதேனும் இருக்குமா என ஐயமாகவே இருக்கிறது.

சமணத்தின் வணிகநோக்கு இந்தியாவுக்கு அளித்த கொடை என இரு விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, இந்தியாவின் ஏராளமான சமூகக்குழுக்களை அவர்களின் சமரசப்போக்குள்ள வணிகம் ஒன்றாக இணைத்தது. மோதலற்ற முறையில் இந்திய சமூகம் உருவாக இது காரணமாக அமைந்தது.

இரண்டு, சமண வணிகர்கள் அறக்கொடைகளைச் செய்தாகவேண்டுமென்ற கட்டாயம் மதரீதியாக உள்ளது. ஒரு தந்தையும் தாயும் இரு குழந்தைகளுடன் இருந்தால் சொத்துக்களைக் கடைசிக்காலத்தில் நான்காகவே பிரிப்பார்கள். பெற்றோர் ஆளுக்கொரு பங்கைத் தங்களுக்கென வைத்துக்கொள்வார்கள். தங்கள் இறப்புக்குப்பின் அந்தப்பங்குகள் நேரடியாகத் தங்கள் மதத்தின் அறக்கொடைகளுக்குச் சேரும்படி செய்வார்கள்.

இதன்மூலம் தங்களுடைய வணிகத்தில் செய்த பிழைகள் பொறுக்கப்படும் என்றும், மோட்சம் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். சமணர்களின் அறக்கொடைகள் இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில்கூட மிகப்பெரியவை. இந்தியாவில் அனேகமாக பெரும்பாலான அறச்செயல்கள் அவர்களாலேயே செய்யப்படுகின்றன.

இந்த முறை இங்கே நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடமும் சமீப காலம் வரை இருந்தது. பதினாறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சைவ ஆலயத்திருப்பணிகள் பெருமளவில் அவர்களாலேயே செய்யப்பட்டன.

காந்தி இந்த முறையை முன்னுதாரணமாகக் கொண்டே செல்வந்தர்கள் செல்வத்தின் அறக்கொடையாளர்களாக இருக்கவேண்டும் என்றார். இந்த முறை இந்தியாவில் மிகப்பெரிய அறச்செயல்கள் தொடர்ந்து நிகழ வழிவகுத்துள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பின் வழிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைஒரு விமர்சனம்