அழியாச்சித்திரங்கள்

1

இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் காட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன்.

சக்ரவர்த்தினீ

எனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 48. இந்தப்படத்தில் நாற்பதுக்குள்தான் இருக்கும். அப்படியென்றால் இது அறுபதுகளின் தொடக்கத்தில்.

ஒரு வரலாற்றுத்தருணம் இது. ஒரு படம் அளிக்கும் நினைவுகள், கடந்தகால ஏக்கங்கள் அளவிடற்கரியவை. என் இளமையில் நான் கேட்ட பாடல்கள், அப்பாடல்கள் ஒலித்த அன்றைய நிலப்பரப்புகள், அதனுடன் இணைந்த முகங்கள்…

புகைப்படம் காலத்தின் நேர்ப்பதிவு. சினிமா காலத்தின் நினைவோட்டப்பதிவு. வேறெந்தக் கலைக்கும் இந்த அம்சம் இல்லை என்று தோன்றுகிறது. இலக்கியமும் வரலாறுதான். ஆனால் அது அப்பட்டமாக அப்படியே பதிந்த வரலாறல்ல. நேற்றைய இலக்கிய ஆக்கங்களை இன்று வாசிக்கையில் அவை நேற்றையவை என்று தோன்றுவதில்லை. இன்றைய கற்பனையால்தான் அவை உருவம் கொடுத்து எடுக்கப்படுகின்றன. நேற்றைய வாசிப்புக் கூட இன்றைய சிந்தனையால் மீட்டெடுக்கப்படுகிறது. இருபத்தைந்தாண்டு முன் வாசித்த மோகமுள் நேற்றைய அனுபவம் அல்ல, இன்றைய அனுபவம்.

ஆனால் சினிமா முற்றிலும் புறவயமான ஒரு பதிவு என்ற எண்ணம் எழுகிறது. கடந்தகாலத்தில் பார்த்த ஒரு சினிமாவை இன்று மீண்டும் பார்க்கையில் அது முழுக்க முழுக்க நேற்றைய அனுபவமாகவே இருக்கிறது. அதை எவ்வகையிலும் இன்றுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புகைப்படமும் சினிமாவும் பெருமளவுக்கு யந்திரத்தை, தொழில்நுட்பத்த்தைச் சார்ந்தவை என்பதனால் இருக்குமோ? யந்திரம் மொழி போல அகவயமானதல்ல. அப்பாவித்தனமான புறவயத்தன்மை கொண்டது.

இரவில் இப்பாடல்களைக் கேட்கும்போது காலத்தை உறையச்செய்து பார்க்க முடிகிறது. கடந்தகாலம் எனக்கு இழப்புணர்வை உருவாக்கவில்லை. நிகழ்காலம் எவ்வளவு அரியது என்று எண்ணச்செய்கிறது. ஒவ்வொரு துளியும் இனியது என்ற பிரக்ஞையை உருவாக்குகிறது.

ஆனால் அந்தச் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? மூத்த நடிகர் ஒருவரின் ஒப்பனையாளர் சொன்னார், அந்நடிகர் முதிர்ந்து நடிக்காமல் வீட்டில் இருந்த நாட்களில் தான் நடித்த பழைய படங்களைப் பார்த்து கண்ணீர்விடுவதுண்டாம். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்தகால வாழ்க்கை எல்லாருக்கும் நிகழ்கால நினைவாக இருக்கிறது, அவருக்கு அப்படியே கண்ணெதிரில் அது ஓடுகிறது.

கேக்கலையோ கேக்கலையோ

யூ டியூபில் கஸ்தூரிமான் படத்தில் இந்தப்பாடலைத் தேடி எடுத்தேன். 2004 டிசம்பரில் லோகியால் கஸ்தூரிமான் படம் திட்டமிடப்பட்டது. 2005 பிப்ரவரி முதல் படத்தை எடுக்க ஆரம்பித்தார் லோகி. நான் முதல்முறையாக ஒரு சினிமா எடுக்கப்படுவதை அருகில் இருந்து பார்த்தேன். படத்தின் திட்டமிடல், தயாரிப்பு அனைத்திலும் கூடவே இருந்தேன்.

கஸ்தூரிமானுக்கு இசையமைக்கும்போதுதான் இளையராஜாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய ஆர்மோனியத்தை இசைத்தபடி மெட்டுக்களைப் பாடிப் பதிவுசெய்து லோகிக்குக் கொடுத்தார். அவற்றில் இருந்து லோகி தேர்ந்தெடுத்த ஐந்து மெட்டுக்களை அவர் பாடலாக்கினார். ஒரு மெட்டு சொற்களைப் பெற்று, இசைத்துணுக்குகளைச் சேர்த்துக்கொண்டு, மின்னதிர்வுகளாக மாறி, ஒளிக்கோடுகளாக வடிவம்பெற்றுப் பதிவாகும் அற்புதத்தை அவருடன் அருகமர்ந்து கண்டேன்.

பின்னர் அந்தப்பாடலை லோகி திரைவடிவமாக்கினார். உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் கால்வாய் கரையிலும் அணையை ஒட்டிய சிறிய காட்டிலும் கொஞ்சம் மைசூரிலுமாக எடுக்கப்பட்டது அந்தப்பாடல். எடுக்கும்போது ஓர் ஆர்வத்தை மட்டுமே ஊட்டியது. இப்போது பார்க்கும்போது ஓர் அலை போலக் கடந்தகால ஏக்கம் வந்து அறைகிறது. லோகி இன்றில்லை. அந்த நிலம் எப்படி எப்படியோ மாறியிருக்கும். அந்தப் படத்தில் நடித்த பிரசன்னாவும் மீராஜாஸ்மினும் மாறியிருப்பார்கள். ஆனால் அந்தக்காட்சி மட்டும் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ காலம் எங்கோ ஒரு இடத்தில் அப்படியே மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கும்.

அந்தப் பாடலின் கடைசி காட்சித்துளியில் புல்லாங்குழல் இசைக்கும் சமையற்காரர் கோபாலும் லோகியின் உதவியாளர் ஈஸ்வரனும் நினைவுக்கு வருகிறார்கள். சினிமா மீது பித்துக் கொண்டு வந்து சினிமாவின் ஏதோ ஒரு துளியில் இருந்துகொண்டிருக்கும் இரு ஆன்மாக்கள். எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? ஒரு மாயக்கரமாக முடிவின்மை அவர்களையும் தொட்டுச்சென்றிருப்பதை அறிவார்களா?

கஸ்தூரிமான்

மறுபிரசுரம். முதற்பிரசுரம்a Feb 28, 2012

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 14
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44