பயணம்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம். உங்கள் ஆஸிப் பயணம் இனிதாக முடிந்திருக்கிறது.  இவ்வளவுதூரம் வந்த நீங்கள் இன்னும் ஒரு எட்டு கூட எடுத்துவைத்திருந்தால் நியூஸி வந்து போயிருக்கலாம். அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை போல.

அருணாவுக்கு இந்த தேசங்கள் எல்லாம் பிடித்திருந்ததா? ஒவ்வொரு அருமையான நிகழ்வுகளை,  விஷயங்களைப் பார்க்கும்போதெல்லாம் பிள்ளைகள் நினைவு வந்திருக்கும். இது தவிர்க்கவே முடியாதது என்பது என் அனுபவம்.

அபாரிஜன்களைப் பற்றிச் சில வரிகள் முன்பு எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இது. நேரம் கிடைக்கும்போது படிக்கவும்.

http://thulasidhalam.blogspot.com/2007/07/10.html

உங்களுக்கும் அருணாவுக்கும் என் அன்பு.

என்றும் அன்புடன்,
துளசி

 

 அன்புள்ள துளசி

ஊர்திரும்பிவிட்டேன். பயணிகளுக்கு எல்லா நாடுகளும் இனியவையே. ஆனால் பயணிகள் மட்டுமே கவனிக்கும் பல பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. ஆகவேதான் பயணக்கட்டுரைகள் முக்கியமானவை ஆகின்றன.

நியூசிலாந்து வந்திருக்கலாம். ஆனால் திரும்ப ஆஸ்திரேலியா செல்ல முடியாது. ஆகவேதான் தவிர்த்துவிட்டேன். பார்க்கலாம், இப்போதுதான் உலகமே சுருங்கி வருகிறதே

ஜெ

அன்புள்ள ஜெ

ஆஸ்திரேலியப்பயணம் முடிந்து வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பயணம் சிறப்பாக அமைந்திருக்கும். பயணத்தைப்பற்றி எழுதுங்கள். நான் உங்கள் இணையதளத்திலே விரும்பி வாசிப்பவை பயணக்கட்டுரைகளைத்தான். பயணத்தில் நீங்கள் போகிறபோக்கிலே சொல்லிப்போகும் பல அப்செர்வேஷன்கள் நமக்குஅந்த நாட்டைப்பற்றியும் பண்பாடைப்பற்றியும் நிறையச் சொல்லுகின்றன. ஆகவேதான் தகவல்கட்டுரைகளைகாட்டிலும் இந்தமாதிரி கிரியேடிவ் ஆன கட்டுரைகள் முக்கியம் என்று தோன்றுகிறது

முருகபூபதி

அன்புள்ள முருகபூபதி

ஆம், அத்துடன் இன்னொரு விஷயமும் உள்ளது. பயணக்கட்டுரைகள் சொல்சித்திரங்கள். அச்சொற்கள் வழியாக நாம் கற்பனைசெய்துகொள்ளும் இடங்கள் உண்மையில் இருப்பவற்றைவிட அழகானவையாக இருக்கலாம் இல்லையா?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் வீடுதிரும்புதல் கட்டுரை அருமையாக இருந்தது. அமெரிக்காவில் மெட்றோக்களில் நானும் இதையே நினைத்திருக்கிறேன். அமெரிக்காவின் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் எல்லாவகையான காய்கறிகளும் அழகழகாக குவிந்திருக்கும். அதைப்போலவே அமெரிக்காவில் தெருக்களிலும் எல்லா மனிதர்களும் குவிந்திருக்கிறார்கள். எல்லா இன மக்களும் வாழும் நாடு மட்டும்தான் உண்மையான ஜனநாயக நாடு. நம்முடைய நாட்டில் இனங்கள் இருக்கின்றன. கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இனப்பகைமையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். முற்றிலும் உண்மை ஜெ

நன்றி

செல்வி

பயணம்:கடிதங்கள்

ஊர்திரும்புதல்

முந்தைய கட்டுரைகுடி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழிசையா?