திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

திராவிட இயக்கமும், இந்துத்வா இயக்கமும் இந்த நாட்டின் இயற்கையான வெளிப்பாடுகள். இந்த வரலாற்று சமூக சூழ்நிலையின் வெளிப்பாடுகள். இது போன்றதொரு பண்பாட்டு அடிப்படைவாதம் வேறு நாடுகளில் தோன்றியிருக்க்கலாம், ஆனால்,
இங்கே தோன்றியதன் காரணமும், அதன் பரிமாணங்களும், அதன் நீட்சிகளும் வேறானவை.
அவற்றை ஒற்றை பரிமாணத்தில் அடைக்கவே இப்படிப்பட்ட மேற்கத்திய “காப்பி” என்ற
அடைச்சொல் உதவும்.

துகாராம் கோபால் ராவ்

[எழுத்தும் எண்ணமும் இணையக்குழுவில் இருந்து]

துகாராம்

இலக்கியத்தை அதன் பொதுவான ‘புற’ அடையாளங்களை வைத்தே பகுத்து மதிப்பிட முடியும். ‘அக’ அடையாளங்களை வைத்து உள்ளே புகுந்து அதன் ஆழத்திற்குள் செல்ல முடியும். என் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் இவ்வாறு புறஅடையாளங்களை வைத்து படைப்புகளை எப்படி ஒரே சமயம் பல வகைகளில்  அடையாளப் படுத்தலாமென விரிவாகவே விளக்கியிருக்கிறேன்.

உதாரணமாக ஆ. மாதவனை

 

1. இயல்புவாத அழகியல் கொண்டவர் என்று சொல்லலாம்

2. பெரு நகர் சார் எழுத்தின் தமிழ் உதாரணம் எனலாம். 3. ·ப்ராய்டிய உளப் பகுப்பு நோக்கு கொண்டவர் என்பதனால் உளவியல் எழுத்தாளர் எனலாம்.

4. தீமையையே அதிகமுக்கியத்துவமளித்து நோக்குபவர் என்பதனால் எதிர்மறை இலக்கியத்தின் ஆசிரியர் எனலாம்.

5. வட்டாரவழக்கு எழுத்தின் முன்னோடி எனலாம்.

6.திருவனந்தபுரம் இலக்கியக்குழுவைச் சேர்ந்தவர் எனலாம்

எல்லாமே அவரை புரிந்துகொள்ளும் முயற்சிகள் மட்டுமே. எவையுமே அவரை முழுமையாக வகுப்பவை அல்ல. அவரது ஆழம் இவற்றின் வழியாக நாம் உள்ளே சென்று நாமே அறியும் ஓர் அந்தரங்கமான புரிதலே. நாம் நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்றெல்லாம் சொல்வது இலக்கிய விமரிசன அடையாளங்களே ஒழிய படைப்பின் அடிப்படை இயல்புகள் அல்ல. ஆகவேதான் படைப்பாளியே படைப்பை அடையாளப் படுத்துவது கேனத்தனம் என்று சொல்கிறேன். அப்படி எழுதபப்டும் படைப்புக்கு அர்த்தமே இல்லை.

நீங்கள் விரும்பினால் தமிழ்ப் படைப்பாளிகளை உங்கள் கோணத்தில் வேறு அடையாளங்களுக்கு உள்படுத்தலாம். அதன் மூலம் பிற அடையாளங்களால் தொட முடியாத தளங்களை தொட்டுக் காட்டலாம். அப்போது அந்த அடையாளமும் மேல்தளம் சார்ந்ததே. படைப்பின் பொதுத்தன்மையையே அது சென்று தொடும். அகத்தை தொடஇயலாது.

ஆகவே ஒரு படைப்பை வாசிக்கும்போது பின்நவீனத்துவமா இல்லையா என்பதுபிரச்சினையே அல்ல. அதை புரிந்துகொள்ள அந்த அடையாளம் உதவும். உதாரணமாகவிஷ்ணுபுரம். அது முழுக்க முழுக்க இந்திய காவிய/புராண மரபில் இருந்து உருவானது. அதன் பேசுபொருளும் வடிவமும் முற்றிலும் இந்தியத் தன்மை சார்ந்தவை. இந்திய மரபான அழகியலில் அதை ஒருகாவியம் என்று சொல்ல முடியும்.[ஒன்பது காவிய இலக்கணங்களும் அதற்கு உண்டு.]

 

வேறு ஒரு கோணத்தில் அது பின் நவீனத்துவ தன்மைகள் கொண்டது– அதை பலர் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அது மரபை புதிய ஒரு கோணத்தில் கட்டி எழுப்ப முயல்கிறது. மையமில்லாமல் மைய ஓட்டத்தை உடைத்து பரிசீலித்தபடி முன்னகர்கிறது. விவாதத் தன்மையையே உருவாக்குகிறது. கொற்றவையும் பின் நவீனத்துவக்  கூறுகள் கொண்ட ஆக்கமே.

துக்காராம் கூறுவதை நான் ஒருவகையில் ஏற்கிறேன். நாம் நம் படைப்புகளை மேலைக் கருத்துகக்ள் சார்ந்து ‘முற்றாக’ வகுத்துக்கொள்ளக் கூடாது. அவை உருவாக்க வாய்ப்புள்ள பல்வேறு வாசிப்புகளை, சிந்தனைகளை அந்த அடையாளம் தடுத்துவிடும்

திராவிட இயக்கம், இந்துத்துவ இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள அவற்றை
நம் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இந்து மத மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் நீட்சியே இந்தியதேசிய மறுமலர்ச்சி. அதன் ஒருவகை அரசியலாக்கமே இந்துத்துவம். மூன்றையும் பிரித்துப் பார்பப்தே வரலாற்று நோக்கு. மூன்றையும் ஒன்றாகப் பார்த்தால் எழும் சிக்கல்கள் பல ஆங்கிலக் கல்வி வழியாக உலக சிந்தனைகள் அறிமுகமான போது அதன் ஒளியில்இந்துமதத்தை தொகுத்துப் பார்க்கும் நோக்கு 18 ஆம் நூற்றாண்டில் உருவானது.
அதற்கு அப்போது இந்துமத மூல நூல்கள் ஆங்கிலம் வழியாக கிடைக்க ஆரம்பித்தது ஊக்க மூட்டியது. மேலை நாட்டு பண்பாட்டு படையெடுப்பை எதிர் கொள்ள தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. விளைவாக உருவானதே இந்துமத மறுமலர்ச்சி. ராஜா ராம் மோகன் ராய் [பிரும்ம சமாஜம்] தயானந்த சரஸ்வதி[ஆரிய சமாஜம்] ராமகிருஷ்ண இயக்கம், நாராயண குருவின் இயக்கம் முதலியவை அதன் வழிகள்.

இவற்றின் பொதுவான கூறு என்பது இந்துமதத்தின் சடங்கு/வழிபாட்டு அமைப்புக்கு மேலாக இந்துமதத்தின் தத்துவ/மெய்ஞான அமைப்பை முன்னிறுத்தியதே. தத்துவத்தின் ஒளியில் நடைமுறையில் இருந்த மூட நம்பிக்கைகள், பழஞ் சடங்குகள், பேதங்கள் ஆகியவற்றைகளையும் சீர்திருத்தங்களை இவர்கள் செய்தார்கள்.

இந்துமத மறுமலர்ச்சி இந்தியதேசிய மறுமலர்ச்சிக்கு வழிவிட்டது. இந்தியா தன் அரசியல் பாகுபாடுகளை மீறி ஒரு தேசமாக பண்பாட்டு ரீதியாக கண்டு கொண்டது. பண்பாட்டுத் தேசியம் முதலில் உருவானது. அரசியல் தேசியம் பிறகு பிறந்தது. திலகர் பண்பாட்டுதேசியத்துக்கான குரல் கோகலே அரசியல் தேசியத்துக்கான குரல் இந்த பண்பாட்டு அடிப்படைகளை மேலைநாடுகளில் உருவாகிவந்த’பண்பாட்டுஅடிப்படைவாத அரசியலாக’ மாற்ற முடியும் என்ற கண்டுபிடிப்பின் விளைவே இந்துத்துவம்.

1. ஒரே குழுவாக பொது அடையாளத்தின் அடிப்படையில் திரள்தல்

2. பொது எதிரியை கட்டமைத்தல்

3 உக்கிரமான பிரச்சாரம் மூலம் அதைஅரசியலதிகாரமாக மாற்றுதல்.

திராவிட இயக்கத்தின் பின்புலம் நமது தமிழியக்கம். அதற்கு ஒரு கலாச்சார பின்னணி உண்டு. ஒட்டுமொத்த இந்தியவுக்கும் உரிய பொதுப் பண்பாட்டுக்கு மேலாக தென்னிலத்துக்கு தனியான பண்பாட்டு அடையாளம் உண்டு. அதை தக்க வைப்பதற்கான போராட்டத்தை நம் பண்டை இலக்கியமெங்கும் காணலாம்.
உதாரணமாக தென்கலை வைணைவம். திராவிடவேதம் செய்தவன் நம்மாழ்வார் என்றகூற்றுக்கு உள்ளே பெரியதோர் பண்பாட்டு எதிர்ப்பு உண்டு. இது வேதத்தை ஏற்று தன் வேதத்தை உருவாக்கும் இருபாற்பட்ட செயலாகும்.இது சைவத்திலும் உண்டு.

இந்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் இந்து தத்துவ மையம் வலியுறுத்தபப்ட்டபோது இந்துமதத்தில் உள்ள வட்டார தனித்துவங்கள் கீழே அமுக்கபப்ட்டன. அதன் விளைவாக அந்த மைய ஓட்டத்துக்கு எதிரான போக்குகள் வலிமை பெற்றன. சைவ மறுமலர்ச்சி, தனித்தமிழ் இயக்கம் ஆகியவை அவ்வாறு உருவானவையே.

அவ்வியக்கத்தின் கருத்துக்களை பண்பாட்டுஅடிப்படை வாத அரசியலாக’ மாற்றமுடியும் என்ற கண்டுபிடிப்பின் விளைவே திராவிட இயக்கம். அதன் இயக்கமுறையும் அதுவே.

முன்னால் உள்ள பண்பாட்டு இயக்கங்களை இவ்வரசியல் இயக்கங்களில் இருந்துபிரித்தே பார்க்க வேண்டும். ஆனால் அது கஷ்டம்.ஏனென்றால் அவை இப்பண்பாட்டியக்கத்தின் கோஷங்களை கடன் வாங்கி தாங்களும் ஒலிப்பவை. அதன்’உண்மையான’ நீட்சி தாங்களே என சொல்லிக் கொள்பவை. மேலும் அப்பண்பாட்டியக்கத்தின் கடைசித் தூண்களில் சிலரே இங்கு வந்துசேர்ந்திருப்பார்கள்.

பண்பாட்டியக்கங்களின் உருவாக்கத்தில் மேலைநாட்டு கருத்தியல் தூண்டுதல்உண்டு. அரசியலியக்கங்கள் மேலைநாட்டு பண்பாட்டு அடிபப்டைவாத அரசியலைஅப்படியே ‘காப்பி’ அடிப்பவை

அன்புள்ள ஜெயமோகன்

திராவிட இயக்கம், இந்துத்துவ இயக்கம் ஆகியவை அரசியல் ரீதியில் காப்பி என்பதுஒப்புக்கொள்ள இயலாதது.

இந்துத்துவ இயக்கம் பற்றிய தெற்கு மாநிலத்தவரின் புரிதலுக்கும் வடக்கு மாநிலத்தவருக்கு இருக்கும் புரிதலும் வெவ்வேறானவை என்பதை சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகம் ஒரு இயக்கத்தின் போதாமையை கண்டுகொள்ள ஆரம்பிக்கிறது. அதுவே இன்னொரு இயக்கத்தின் வளர்ச்சியாக அமைகிறது. பிரச்சாரங்கள் மட்டுமே இயக்கத்தை கட்டும் என்பதற்கும், மக்களே இயக்கத்தை உருவாக்கிறார்கள் என்பதற்கும் இடையில்தான் உண்மை இருக்கிறது

ஆகவே, திராவிட இயக்கம் ஒரு சிலரின் “கண்டுபிடிப்புகளால்” மட்டுமே கட்டமைக்கப் படவில்லை. அதற்கான தளம் இங்கே மக்களால் கொடுக்கப்பட்டது. அதற்கான தேவையை இங்கே மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் தேவையின்மை வரும்போது(ஜனநாயகம் மிச்சமிருப்பின்   அது உதறப்படும் என்றே நினைக்கிறேன்.

தேசிய கட்டமைப்பு என்பது மனித சிந்தனை. அது ஜாதி, ட்ரைப், மொழி, மதம் ஆகிய உபகரணங்களால் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கிறது. அடிப்படையில் அது ஒரு தற்காப்பு மனித உத்தி. அதனை எங்கிருந்தும் யாரும் காப்பியடிக்க தேவையில்லை என்பதே என் கருத்து.

துகாராம்

முந்தைய கட்டுரைபின்நவீனத்துவம்–ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசிதம்பரம் பகுதி நண்பர்களுக்கு