காவல்கோட்டமும் தோழர்களும்

அன்புள்ள ஜெமோ,

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த மாதவராஜ் காவல்கோட்டத்தைப் பிரித்து மேய்ந்திருப்பதை வாசித்தீர்களா? அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்துள்ள அங்கீகாரத்தையும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் மேலான கருத்து என்ன?

பிகு: நீங்கள் அந்த நாவலை எடிட் செய்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறதே…

சங்கர்.

சு.வெங்கடேசன்

அன்புள்ள சங்கர்,

காவல்கோட்டத்தைப் பற்றிய என்னுடைய மேலான கருத்தை விரிவாக எழுதிவிட்டேன், அந்நாவல் வெளிவந்தபோதே. வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டேன். என்னுடைய எல்லாக் கருத்துக்களும் மேலானவையே, கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மாதவராஜ் விமர்சனம் எழுதவில்லை. அது அபிப்பிராயம். இலக்கிய விமர்சனம் என்பது ஒருவர் தன் இலக்கியக்கொள்கையைக் கொண்டு ஓர் இலக்கிய ஆக்கத்தைத் தர்க்கபூர்வமாக ஆராய்ந்து தன் கருத்தை முன்வைப்பது. பிடிக்கலை, பிடிச்சிருக்கு என்பது விமர்சனம் அல்ல.

மாதவராஜுக்கு வந்தியத்தேவன் குதிரையில் குந்திய தேவனாக செல்லும் காட்சி மனம் கவர்ந்தது. ஆகவே அதுவே வரலாற்று நாவல், அந்த மொழிநடையே உயர்ந்தது என அவர் நினைக்கிறார். அந்த வாசிப்புத்தரம் கொண்டவருக்குக் காவல்கோட்டம் இரும்புக்கடலை போல இருக்கும் என்பது இயல்புதான். மாதவராஜுக்குக் காவல்கோட்டம் நாவல் என்ன ஏது என்றே புரியவில்லை என்பது எவரும் எதிர்பார்க்கக்கூடியதே.

நான் கல்கியின் நாவல்களை சிறுவர்களின் ஆரம்பகட்ட வாசிப்புக்குரிய ஒரு கற்பனாவாதப் புனைவு என்றே நினைக்கிறேன். சின்னச்சின்ன வாக்கியங்களில் எளிமையாகக் கதைமட்டும் சொல்லும் அந்த நடை குழந்தைகளுக்குரியது. இலக்கியப்படைப்பின் நடை அல்ல அது. இலக்கியப்படைப்பின் நடை என்பது தகவல்களும், உணர்வுகளும், சொல்நுட்பங்களும் செறிந்தது.

மாதவராஜ்

கல்கியை ஒரு குழந்தைக்கதைசொல்லி என நினைக்கிறேன். அந்த நிலையில் அவர் தமிழுக்கு மிகமிக முக்கியமானவர் என்றே சொல்லிவருகிறேன். ஆனால் என் நோக்கில் வரலாற்றுநாவல் என்பது அது அல்ல. தமிழின் முதல் வரலாற்றுநாவல் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ தான்.

பிரபஞ்சன் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளையே தொண்ணூறு சதம் திருப்பி எழுதியிருக்கிறார். அப்படித் திருப்பி எழுதும் விதத்தில் அது நாவலாகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையிடம் இல்லாத ஒருங்கிணைவும் மையநோக்கும் மானுடம் வெல்லும் நாவலில் நிகழ்கிறது. தல்ஸ்தோய் தன் முப்பாட்டி எழுதிவைத்திருந்த குடும்ப பைபிளைப் பெருமளவுக்கு அப்படியே போரும் அமைதியும் நாவலில் கையாண்டிருக்கிறார் என்பதும் நாமறிந்ததே.

வரலாற்றுநாவல் என்றால் என்ன என விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாற்றுநாவல் என்பது சுஜாதாவின் சொற்களில் சொல்லப்போனால் ‘கச்சணிந்த பெண்களும், திமிறும் குதிரைகளும், உறைவாள்களும், உறையூர் ஒற்றர்களும் அல்ல’. வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது.

இங்கே நாம் இன்னும் வரலாற்றுக் கற்பனாவாதக் கதைகளே வரலாற்றுநாவல் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு வரலாற்றுநாவலை அது வரலாற்றில் இருந்து ‘காப்பி’ அடிக்கிறது என்று குற்றம்சாட்டுமளவுக்கு மூளைக்குறைபாடுகளுடன் வளர்ந்துகொண்டிருக்கிறோம். வானம் வசப்படும் வெளிவந்து சாகித்ய அக்காதமி விருது பெற்றபோதும் அதைக் கல்கியுடன் ஒப்பிட்டு நிராகரிக்கும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் அன்று தோழர்களுக்கு பிரபஞ்சன் கட்சி சார்பு அடிப்படையில் ஏற்புடையவராக இருந்தார். காவல்கோட்டம் தமிழின் அடுத்த முக்கியமான வரலாற்றுநாவல் – அதன் எல்லாக் குறைபாடுகளுடனும்.

மாதவராஜ் போன்ற எளிய தோழர்களின் எளிய வாசிப்பை நான் நிராகரிக்கவில்லை. அதற்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் இந்நாவல் வெளிவந்து அவர்களின் அமைப்பால் இது தூக்கிப்பிடிக்கப்பட்டபோது அவர் தன் ‘மேலான’ கருத்தை எழுதியிருக்கவேண்டும். அப்போது என்னைப்போன்றவர்கள் அந்த அமைப்புக்குள் மாற்றுக்கருத்துக்களும், இலக்கிய விவாதமும், ஏன் இலக்கியம்கூட, கொஞ்சமேனும் உள்ளன என்று நம்ப முயற்சிசெய்திருப்போம். ஒருவரை ஒருவர் தூக்கிப்பிடிக்கும் சில்லறை எழுத்தாளர்களின் கட்சிசார் குறுங்குழுதான் அது என எண்ணுவதைக் கொஞ்சம் தள்ளி வைத்திருப்போம்.

ஆனால், வெங்கடேசன் ஒரு சாதியவாதி, இந்துத்துவவாதி, இலக்கியத்திருட்டாளர், கட்சிக்குள் நாசவேலை செய்பவர் போன்ற எல்லா வசைகளும் அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றபின்னர் மட்டுமே சொல்லப்படுகின்றன என்னும்போது என்னைப்போன்ற பொதுமக்களுக்கு சில சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன. அதுவும் தோழர்களின் வழக்கப்படி யாரென்றே தெரியாத தோழர் எழுந்து முக்கியமான ஒருவரை சிலுவையில் ஏற்றும் குற்றச்சாட்டுகளை ‘சொல்வது’ ஸ்டாலின் காலம் முதலே வரும் உத்தி அல்லவா?

ச.தமிழ்ச்செல்வன்

தோழர்களின் வழிமுறைகளை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! ஒருவரை ஒழித்துக்கட்டுவதென்றால் கையில் இருக்கும் எல்லா அடைமொழிகளையும் சூட்டிவிடுவதுதான் வழக்கம். வெங்கடேசன் மீது பாலியல்குற்றச்சாட்டு மட்டும் ஏன் முன்வைக்கப்படவில்லை என்பதுதான் புரியவில்லை. உ.ரா.வரதராஜனைத் தீர்த்துக்கட்டியது அதுதானே? தோழர்கள் கனிந்துவிட்டார்களா இல்லை பயந்து விட்டார்களா?

வெங்கடேசன் இந்துத்துவர் ஆகியிருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. அவர் எத்தனைபேரை அப்படி முத்திரை குத்தியிருப்பார்! இதைத்தான் அய்யங்கார்கள் பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என விரிவாக விளக்குகிறார்கள். ஆனால் இதற்கு முன் முற்போக்கு முகாமைச் சேர்ந்த கந்தர்வன், பவா செல்லத்துரை, ஷாஜகான், போப்பு, தமிழ்ச்செல்வன், தேனி சீருடையான், கவின்மலர் எனப் பலரை நான் பாராட்டியிருக்கிறேன். அவர்களை எல்லாம் இந்துத்துவத் தரப்பிலே சேர்த்துக்கொடுத்தார்கள் என்றால் இந்துத்துவர்கள் எனக்கு ஏதாவது ‘பாத்து போட்டு’க் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்வேன்.

இந்நாவல் அச்சாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வெங்கடேசனை நான் மதுரை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாகச் சந்தித்தேன். அதற்கு ஒருவருடம் முன்னரே வசந்தகுமார் வெங்கடேசனின் காவல்கோட்டம் பற்றிச் சொன்னார். வசந்தகுமார் மாதக்கணக்கில் மதுரையில் சென்று தங்கி நாவலை வெங்கடேசனுடன் சேர்ந்து செப்பனிட்டுக்கொண்டிருந்தார் என அறிந்திருந்தேன்.

தோழரை வசந்தகுமார் அறிமுகம் செய்து வைத்தார். நேர்ச்சந்திப்பில் பொதுவாக நல்ல அரசியல்வாதிகள் செய்வது போல வெங்கடேசன் மையமாகச் சிரித்தார், கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். நான் அவர் என்னைத் திண்ணையில் ‘ஃபாசிச ஓநாய்’ என எழுதியதைச் சுட்டிக்காட்டி சிரித்தேன், அதன்பின்னர்தான் கொஞ்சம் இலகுவானார். கீழக்குயில்குடி சமண ஆலயங்கள் பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டோம். அவர் அப்பாறைகளைக் காக்க எடுக்கும் நடவடிக்கைகளைப்பற்றிச் சொன்னார். மற்றபடி நான் வெங்கடேசனை சந்திக்கவோ அவரது நாவலை முன்னரே வாசிக்கவோ இல்லை.

காவல்கோட்டம் வெளிவந்து வசந்தகுமாரால் எனக்கு அனுப்பப்பட்டபோது நான் ஊரில் இல்லை. என் மனைவி வாசித்துவிட்டு மிகநல்ல கருத்து சொன்னாள். அவள் அளவுக்கு நல்ல வாசகர்களை நான் மிகக்குறைவாகவே பார்த்திருக்கிறேன். ‘வரலாற்றில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதைச் சொல்லும் முதல் இந்திய நாவல்’ என்பது அவள் கருத்து.

மேலாண்மை பொன்னுச்சாமி

அதன்பின் மேலும் கொஞ்சநாள் கழித்து நாவலை வாசித்தேன். நாவலைப்பற்றி நான் விரிவாக எழுத இரு காரணங்கள். ஒன்று, அதில் இருந்த மார்க்ஸிய முரணியக்கவியல் அணுகுமுறை. அது எனக்கு எப்போதுமே உவப்பானது. ஒவ்வொரு வரலாற்றுச் சக்தியும் நேர் எதிரான இன்னொரு வரலாற்றுச் சக்தியினால் முரண்பட்டு இயக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய வாய்ப்பாட்டுக்கு மிக விசுவாசமான நாவல் காவல்கோட்டம்.

மார்க்ஸிய அணுகுமுறையைத்தான் நானும் வரலாற்றில் போட்டுப்பார்ப்பேன், ஆனால் வெங்கடேசன் போல அதை சொல்மாறாத சூத்திரமாகக் கொள்ளமாட்டேன். எனக்கு அது வரலாற்றின் புற விசைகளை மட்டும் அறிய உதவும் ஒரு கருவி மட்டுமே. ஆனாலும் வெறுமே கதைசொல்லுவதற்கு அப்பால் சென்று வரலாறு செயல்படும் விதத்தை எழுத முயன்ற முதல்நாவல் காவல்கோட்டம் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது – எப்படி அதைச்செய்திருக்கிறார் என விரிவாக எழுதியிருக்கிறேன்.

இந்தக் காரணத்தால்தான் மார்க்ஸிய விமர்சகரான ஞானியும் காவல்கோட்டத்தைத் தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல் என்று சொல்கிறார். திராவிடச்சார்புள்ள வரலாற்றாய்வாளரான ஆ.இரா. வெங்கடாசலபதியும் தமிழின் முக்கியமான வரலாற்றுநாவல் என்கிறார். அவர்களையும் இந்துத்துவர் என்று சேர்த்துக்கொடுத்தால் நல்லது. காவல்கோட்டத்தை அப்படிப் புகழ்ந்த இளம் விமர்சகர் பலர் இருக்கிறார்கள். [போகிற போக்கைப்பார்த்தால் தமிழகத்தில் இந்துத்துவர்கள் ஆட்சியையே பிடித்துவிடுவார்கள் போலிருக்கிறதே]

இரண்டாவதாக, நவீனத்தமிழகத்தின் முக்கியமான காவல்சக்தி நாயக்கர் அரசு. தமிழகத்தில் இன்றுள்ள ஏரிகளில் பெரும்பகுதி அவர்கள் வெட்டியவை. சாலைகளில் பெரும்பகுதி அவர்கள் போட்டவை. சந்தைகளில் பெரும்பகுதி அவர்கள் அமைத்தவை. ஆலயங்கள் அனேகமாக அனைத்துமே அவர்களால் எடுத்துக்கட்டப்பட்டவை.

ஆனால் அவர்களைத் தமிழ் வரலாற்றிலிருந்தே இருட்டடிப்பு செய்யும் ஒரு போக்கு தமிழகத்தில் உண்டு. சோழர்களையும் பாண்டியர்களையும் விதந்தோதி எழுதுபவர்கள் நாயக்கர்களைப் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதும் அவர்கள் வேளாளர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதும்தான். நாயக்கர் வரலாறு பற்றிய முதல் பெருநூல் சத்தியநாத அய்யர் எழுதியது. அது வெளிவந்து முக்கால்நூற்றாண்டாகிறது, நானறிய இன்றுவரை தமிழாக்கம் செய்யப்படவில்லை.

இந்தச் சூழலில் நாயக்கராட்சியின் ஒரு காலகட்டத்தை விரிவாகச் சித்தரிக்கும் காவல்கோட்டம் மிக முக்கியமான ஒரு படைப்பு என நினைத்தேன். காவல்கோட்டத்துக்கு எதிரான குமுறல்களில் எல்லாம் சாதியக்காழ்ப்பும் உள்ளடங்கி உள்ளது என்பதை அக்கட்டுரைகளை மேலோட்டமாக வாசித்தாலே தெரிந்துகொள்ளலாம். நான் அந்நாவலைப்பற்றி விரிவாக எழுத அதுவும் ஒரு காரணம்.

தோழர்கள் கக்கும் மடத்தனமான வசைகளைப் பொருட்படுத்தவேண்டாமென நினைத்தேன். ஆனால் தோழர்கள் விடுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு ஏதோ திட்டமிருக்கிறது. ஆகவே இந்த எதிர்வினை.

தமிழ்நாட்டில் பொதுவாக எவரும் எதுவும் செய்வதில்லை. மொத்தவாழ்நாளில் பத்துப்பதினைந்து எட்டுவரிக் கவிதை, நாலு சிறுகதை எழுதுவதற்கு அப்பால் செல்லப் பெரும்பாலானவர்களுக்குத் திராணியும் இருப்பதில்லை. பிள்ளைகளை கான்வெண்டில் படிக்கவைக்கவேண்டும், வீடுகட்டவேண்டும், பிரமோஷனுக்குப் படிக்கவேண்டும். ஆனால் எழுத்தாளர்களாக எண்ணிக்கொள்வதற்கு மட்டும் குறைவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலேயே இரண்டாயிரம் உறுப்பினர்களாம். இரண்டாயிரம் எழுத்தாளர்கள்! இதைவிட அதிக எழுத்தாளர்கள் அ.தி.மு.க. இலக்கிய அணியில்மட்டும்தான் இருக்கமுடியும்!

இச்சூழலில் எதையாவது ஒன்றைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்யும் ஒருவருக்கு இயல்பாகவே ஒரு முக்கியத்துவம் உருவாகிவிடுகிறது. அந்த முயற்சி முக்கியமானதாகவும் அமைந்தால் அவரைத் தவிர்க்கமுடிவதில்லை. அப்போது ஒன்றும் செய்யாதவர்கள் அவர் அடையும் முக்கியத்துவம் கண்டு குமுற ஆரம்பிக்கிறார்கள். வசைபாடுகிறார்கள்.

இது இப்போது உருவாகியிருக்கும் ஒரு விஷயமல்ல. ஐம்பதாண்டுக்கால தமிழ் இலக்கிய வரலாற்றை, ஆராய்ச்சி வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தெரியும். இங்கே ஐந்துபேர் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். ஐம்பதுபேர் அவர்களை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். ஆகமொத்தம் ‘பண்பாட்டு’ச்சூழலில் ஐம்பத்தைந்துபேர் ‘செயல்பட்டு’க்கொண்டிருப்பார்கள் என்பது கணக்கு. சமீபத்தில் தமிழின் தலைசிறந்த ஆய்வாளரான மயிலை சீனி வெங்கடசாமி இதைப்பற்றி எழுதியிருந்த ஒரு பழைய கட்டுரையை வாசித்தேன்.

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி பரிசு கொடுக்கப்பட்டதும் வரிசை குலைந்து போயிற்றே, மூத்த பெரும்படைப்பாளிகள் இருக்கையில் இப்படிக் கொடுக்கலாமா என்றெல்லாம் குமுறும் தோழர்களுக்கு ஆ.மாதவன், ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஞானக்கூத்தன், நாஞ்சில்நாடன், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன் என மூத்த சாதனையாளர்களின் வரிசையே இருக்கும்போது மேலாண்மை பொன்னுச்சாமி பரிசு பெற்றபோது ஒன்றும் தோன்றவில்லை. மேலாண்மை அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என அமைப்புக்குள் இருந்து ஒரு குரல்கூட எழவில்லை.

என்னைப் பொறுத்தவரை இதில் தரவரிசை, வயதுவரிசை ஏதும் எப்போதும் இருந்ததில்லை என அறிவேன். இலக்கியம் என்ற இயக்கத்தை நம்பி அதில் முடிந்தவரை ஈடுபாட்டுடன் செயல்படும் எவர் பரிசு பெற்றாலும் நல்லதே. மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய ஒரு கதையைக்கூட நல்ல கதை என என்னால் சொல்லமுடியாது. ஆனாலும் அவர் பரிசுபெற்றபோது நான் வாழ்த்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே.

ஆனால் சுந்தர ராமசாமியும் நகுலனும் இறந்தபோது ‘செத்த பிணத்தைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்’ எனக் கருத்து தெரிவித்த தோழர்களிடம் இந்த வகையான ஒரு விரிவான புரிதலை எதிர்பார்க்க மாட்டேன். தங்கள் குறுங்குழுவின் நலன்களுக்கு அப்பால் அவர்களால் யோசிக்கமுடியாது. அவர்கள் காவல்கோட்டத்தைக் கொண்டாடியதும் இந்த வழக்கமான குழு மனநிலையால்தான். ஆனால் சாகித்ய அக்காதமி என்பது அவர்களால் செரித்துக்கொள்ளமுடியாததாக இருக்கிறது.

வெங்கடேசனுக்கு இது தேவைதான். அவர்தான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலர் என நினைக்கிறேன். பத்துப்பதினைந்து வருட காலமாக அவர்தான் அந்த சங்கத்தின் கருத்துக்களை சொல்லிக்கொடுக்கிறார். அமைப்பின் உறுப்பினர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா என்று மட்டும் பார்ப்பதுடன் நின்றுவிடாமல் இலக்கியத்தின் சில அடிப்படைகளையாவது சொல்லிக்கொடுக்க முற்பட்டிருந்தால் இப்போது வசை வரும்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக வந்திருக்கும். அதைப்பற்றி நாலுபேரிடம் கௌரவமாகச் சொல்லவாவது முடிந்திருக்கும். இப்படி பெத்தானியாபுரம் டாஸ்மாக் கடையில் இருந்து எதிர்க்குரல் எழுந்திருக்காது.

எப்படியோ முற்போக்கு முகாமில் இருந்தும் ஒரு மோசமான நாவல் வர முடியும் என தோழர்கள் அரைநூற்றாண்டில் முதல்முறையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல விஷயம்.

ஜெ

காவல்கோட்டம்: மாதவராஜ்

காவல்கோட்டம் பற்றிய ஆளிலா அவதூறுக்கட்டுரை

காவல்கோட்டம் விமர்சனம் பற்றி ராஜசுந்தரராஜனும் பிறரும்


சரவண கார்த்திகேயன் விமர்சனம்

ஆ.இராவெங்கடாசலபதி விமர்சனம்

சாகித்ய அக்காதமி விவாதங்கள்

சாகித்ய அக்காதமி பற்றி

சாகித்ய அக்காதமி விருதுகள்

சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது

இலக்கிய விருதுகள்

கேள்வி பதில் – 04 சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?

நீல பத்மநாபன் பாராட்டு விழா

அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்

‘இயல்’ விருதின் மரணம்

இயல் விருது பற்றி ஒரு கடிதம்

இயல் விருது – ஒரு பதில்

இயல் விருது சில விவாதங்கள்

முந்தைய கட்டுரையானைமொழி
அடுத்த கட்டுரைமானுடம் வெல்லும், வானம் வசப்படும்