நவீனத்துவத்தில் எவ்வாறு இந்திய மரபின் அடித்தளமும், இந்திய பின்புலத்தின் வரலாற்று வெளிப்பாடும் இல்லையோ அதே போல, பின்னவீனத்துவ படைப்புக்களிலும் இல்லை.
இவை இரண்டுமே இரண்டாம் உலகப்போர், தொழில்நுட்பத்தின் விளைவுகள் உருவாக்கிய
cathartic அனுபவங்கள் மேலை மக்கள் தங்கள் நம்பிய்வற்றை கேள்வி கேட்க வைத்தன.
இவை இலக்கிய / தத்துவ வடிவம் கொள்ளும்போது உருவானவையே நவீனத்துவமும், பின் நவீனத்துவமும். இப்படிப்பட cathartic experience நமக்கு இல்லாதபோது அதே
பாணியில் உருவாக்கப்படும் படைப்புகள் நம்மை விட்டு விலகியவை. அவை மேலைநாட்டில் ரோடு இப்படி இருக்கிறது பார் என்ற மேடைப்பேச்சின் இலக்கிய வடிவங்கள்.
இப்படிப்பட்ட கத்தார்டிக் அனுபவங்களின் ஊடே பதிந்த இலக்கிய படைப்புகளான தமஸ், 18ஆம் அட்சக்கோடு போன்றவை உருவாக்கும் இலக்கிய தடங்கள் அசலானவை. அவைகளின் தத்துவ வீச்சுக்களையும், கேள்விகளையும் தத்துவப்படுத்தாமல் அவற்றை மேலைவடிவ தத்துவங்களோடு பொருத்துவது அந்த இலக்கிய படைப்புகளுக்கு செய்யப்படும் அநீதி.
நவீனத்துவ படைப்புக்களில் இந்திய மரபின், வரலாற்றின், பின்புலத்தின் தாக்கம் இருக்கலாம். அதே போல பின் நவீனத்துவமுயற்சிகளின் படைப்புகளிலும் இருக்கலாம்.
வரலாறும், அதன் சமூக பின்புலனும் இல்லாத முயற்சிகள் வெறும் முயற்சிகளே.
துகாராம் கோபால்ராவ்
[எழுத்தும் எண்ணமும் குழுவில் எழுதிய கடிதம்]
அன்புள்ள துகாராம் கோபால்ராவ்,
உண்மையான பின்புலத்தில் பார்த்தோமென்றால், இந்திய மொழிகளில் புத்திலக்கியதின் கொடியை ஏற்றியவர்களில் பாரதி,குமாரன் ஆசான், தாகூர், ஜீபனனானந்த தாஸ், குவெம்பு ஆகிய முதல் முன்னோடிகளையெல்லாம் கற்பனாவாத
அழகியல் கொண்டவர்கள் என வகுக்கலாம். ஆங்கிலேயக் கவிஞர்களான ஷெல்லி,கீட்ஸ்,வெர்ட்ஸ்வர்த் ,டென்னிசன் ஆகியோரின் பதிப்பு கொண்டவர்கள் இவர்கள். அதை வெளிப்படையாக எழுதியவர்கள். அனைவருமே ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளை மொழியாக்கம் செய்து கவிதை பயின்றவர்கள். பாரதி ஷெல்லிதாசன் என்றே புனைபெயர் வைத்துக் கொண்டவர்.
அதன்பின்னர் இந்தியாவில் உரைநடை இலக்கியம் தொடங்கியபோது மேலைநாட்டு யதார்த்தவாதம், இயல்புவாதம் ஆகியவை ஆழமான பாதிப்பைச் செலுத்தின. காந்திய யுக படைப்பாளிகள் தாரா சங்கர் பானர்ஜி, மாணிக் பந்த்யோபாத்யாய, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், பிரேம்சந்த், பன்னலால் பட்டேல், வி.ஸ.காண்டேகர், சதத் ஹ¤சைய்ன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர்
ஆகியவர்கள் யதார்த்தவாத அழகியல் கொண்டவர்களே. அவர்கள் முன்னோடிகளாகக் கொண்டது தல்ஸ்தோய், தாமஸ் மன் போன்ற யதார்த்தவாத எழுத்துக்களை.
இதேகாலத்தில் பிரிட்டிஷ் உணர்ச்சிக்கதைகளின் [‘ரொமான்ஸ்’] வடிவை இங்கே எழுதியவர்கள் வணிக/ கேளிக்கை எழுத்தை உருவாக்கினர். பெரும்பாலும் வல்டர்
ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் படைப்புகளை போல இவை எழுதபப்ட்டன. சி.வி.ராமன் பிள்ளை, கல்கி என உதாரணங்கள்
அதன்பின் முற்போக்கு இலக்கியம். அதற்கு தொடக்கத்தில் யதார்த்தவாதமும் பின்னர் இயல்புவாதமும் முன்னுதாரணங்கள். ஆரம்பத்தில் இதன்பொருட்டே ருஷ்ய
யதார்த்தவாத நாவல்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பின்னர் எமிலி ஜோலா போன்ற இயல்புவாத எழுத்தாளர்களின் நாவல்கள் தமிழ் உள்பட எல்லா இந்திய மொழிகளுக்கும் வந்து முன்னுதாரணம்
அமைத்தன. யதார்த்தவாத முற்போக்கு எழுத்துக்கு பிமல் மித்ரா, ஆஷாபூர்ணா தேவி, யஷ்பால், ராஜேந்திரசிங் பேதி ஜெயகாந்தன், தகழி சிவசங்கரப்பிள்ளை
போன்றவர்கள் உதாரணம். முற்போக்கு இலக்கியத்தின் இயல்புவாத நுனியே தலித்
இலக்கியமாக மாறியது.
இதன்பின்னர்தான் நவீனத்துவம் வந்தது. அதீன் பந்த்யோபாத்யாய, சுனீல் கங்கோபாத்யயா, யு.ஆர்.அனந்தமூர்த்தி, ஓ.வி.விஜயன், குர் அதுல் ஐன் ஹைதர், அமிர்தா பிரீதம், என எல்லாமொழிகளிலும் முன்னோடி நவீனத்துவப் படைப்பாளிகள்
உருவானார்கள். நம்மிடமும் சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,நகுலன் என பலவகை நவீனத்துவர்கள் உருவானார்கள்.
இலக்கியம் இலக்காக்கும் வாழ்க்கை இந்த இரு நூற்றாண்டில் உலகமெங்கும் ஒரேவிதமான பரிணாம மாற்றங்களையே அடைந்துள்ளது.ஆகவே உலகில் உள்ள எல்லா
இலக்கியச் சூழலிலும் ஒரேவிதமான இலக்கிய அலைகளே நிகழ்ந்துள்ளன. உடனடியான அரசியல் சமூகச் சூழல் பலவாறாக மாறுபட்டிருக்கலாம்– அடிப்படையான மனநிலை
அதிகம் மாறுபடுவதில்லை.
ஐரோப்பாவில் நவீனத்துவம் உருவாக தொழில்மயமாதல் காரணம் என்றால் இந்தியாவில் காலனியாதிக்கம் காரணம். அங்கே உலகப்போர் உருவாக்கிய சோர்வு நவீனத்துவத்தை முற்ற வைத்தது என்றால் இந்தியாவில் சுதந்திரத்துக்கு
பின்னால் அவ்ந்த இலட்சியவாத வீழ்ச்சி அதை நிகழ்த்தியது. ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.
இந்த பொதுபோக்குக்கு அப்பால் நிற்கும் ‘தூய’ இலக்கியங்கள் ஏதுமில்லை. சம்ஸ்கிருதத்திலேயே செய்யுட்களில் வெர்ட்ஸ்வெர்த் பாணி கற்பனாவாதம் வந்துவிட்டது!
ஆனால் இப்படைப்புகள் இவ்வடையாளங்கள் மட்டும்தானா? இலக்கியத் தன்மை கொண்ட ஒரு ஆக்கம் கண்டிப்பாக இத்தகைய அடையாளங்களில் முழுமையாக அடங்குவதாக
இருக்காது. அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன்
இருக்கும்.
இப்படிச் சொல்லலாம். படைப்பின் ஒருநுனி இத்தகைய உலகளாவிய கலை-சிந்தனை பாதிப்பினால் உருவாகிறது. மறுநுனி அபப்டைப்பாளியின் அந்தரங்கத்தால்
உருவாகிறது. படைப்பு என்பது இரு சக்திகளின் முரணியக்கத்தின் விளைவு. வாசகன் இரண்டையுமே காண்கிறான். அபப்டைப்பைப்பற்றி பேசும்போது அதன்
தனித்தன்மையை கணக்கில் கொள்கிறான். அதை பொதுவாக வகைபப்டுத்தும்போது உலகளாவிய பொதுத்தன்மைகளைக் காண்கிறான்.
கலையில் புறப்பாதிப்பு என்பதை தவிர்க்கவே இயலாது. அதன் மூலம் கலை எப்போதும் வளர்ச்சியே அடைந்துள்ளது என்பது உலக வரலாறு. படையெடுப்புகள் மட்டுமே உலகளாவிய செய்திப் பரிமாற்றத்துக்கு காரணமாக அமைந்த
சென்றகாலங்களில் அதன்மூலமேகூட கலை மாற்றம் அடைந்துள்ளது. இந்திய சிற்பங்களில் நாம் காணும் சாமுத்ரிகா லட்சணம் என்பது கிரேக்க பாதிப்பால்
உருவானது. காந்தாரக் கலை என்று அதற்குப் பெயர். எகிப்திய கட்டிடக் கலையிலிருந்து வந்த வேதிகை, கபோதம் போன்ற அமைப்புகளே பௌத்த கட்டிடக் கலை வழியாக நம் ஆலய நிர்மாணத்துக்கு வந்திருக்கின்றன. ‘கர்நாடக சங்கீதம்’
எனப்படும் தமிழிசை மட்டுமல்லாமல் தமிழ் நாட்டுப்புற இசைகூட இஸ்லாமிய [அரபு] இசையின் பாதிப்பு இல்லாமல் இல்லை.
திராவிட இயக்கம் , இந்துத்துவ இயக்கம் பற்றிய உங்கள் புரிதல் வியப்பளிக்கிறது. இவ்வியக்கங்கள் மிக மிக ஐரோப்பியத்தன்மை கொண்டவை என்பதை ஓரளவு கவனித்தாலே அறியலாம். திராவிட இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவுவாதத்தை [ராஷனலிசம்] முன்வைத்தது. இங்கர்சால்,பெர்னாட் ஷா என்றுதான் அது பேசிக் கோண்டிருந்தது. ஐரோப்பிய பகுத்தறிவு வாதம் கிறித்தவ மதசிந்தனைகளுக்கு எதிராக கிரேக்க மரபை முன்வைத்தபோது இவர்களும் இங்கே சாக்ரடீஸ் ,அரிஸ்டாடில் என்று பேசினார்கள்– இந்திய நாத்திக
சிந்தனையாளர்களைப்பற்றி எங்குமே பேசவில்லை. பெரியார் ஒரு சுத்தமான ‘நவீனத்துவ’ சிந்தனையாளர்.
இந்துத்துவம் இந்தியமரபின் பன்மைத்தன்மையை எங்காவது பேசியிருக்கிறதா? பண்பாட்டுக்கூறுகளை அரசியல் நோக்குடன் தொகுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனைகளால் வடிவமைக்கபப்ட்டது அது. இந்துத்துவமும்
சரி திராவிடவாதமும்ச் சரி சொல்லும்படியான இலக்கிய பங்களிப்பை எதையும் ஆற்றவுமில்லை. இரண்டுக்கும் ஒரே ஊற்றுமுகம்தான். பண்பாட்டு அடிப்பபடைவாத
அரசியல். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் உருவானது.
நாம் நம் மீது ஐரோப்பிய பாதிப்பை பற்றி மட்டுமே பார்க்கிறோம். ஐரோப்பா மேல் நம் பாதிப்பை பார்ப்பதில்லை. கீழைமெய்யியல் நூல்கள் ஜெர்மனி, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விளைவாகவே ஐரோப்பிய கற்பனாவாதம் உருவாகி வளர்ச்சி அடைந்தது. வெர்ட்ஸ் வர்த் ,டென்னிசன் முதலியவர்களின் மேல் உபநிடதங்களின் பாதிப்பு மிக வலுவானது. கதே, வால்டேர், ரூஸோ,
எமர்சன், தோரோ போன்றவர்களில் கீழைமெய்யியல் நூல்கள் அழுத்தமான பாதிப்பை செலுத்தின. இயற்கைவாதம் [நாச்சுரலிசம்] இயற்கை வழிபாடு போன்ற கருத்துக்கள் மேலைநாட்டுக் கற்பனாபாவாதத்தில் ஊற இந்திய மெய்யியலும் ஜப்பானிய மெய்யியலும்தான் காரணம். அவையே மீண்டும் திரும்பி பாரதிக்கும் தாகூருக்கும் வந்துசேர்ந்தன.தாமஸ் மன் , ஹெர்மன் ஹெஸ் முதல் இன்று வரை இப்பாதிப்பு நீள்கிறது. போர்ஹெயில் மார்க்யூஸில். மார்க்யூஸ் தன் நாவல் ‘நூற்றாண்டுதனிமை’க்கு மகாபாரதம் முன்னுதாரணமாக அமைந்ததைப்பற்றி
சொல்லியிருக்கிறார், சமீப காலமாக இந்திய மொழியியல் கருத்துக்கள் மேலைநாட்டை அதிகமாக கவர்ந்து வருகின்றன.
இது ஓர் உலகளாவிய கொடுக்கல் வாங்கல். இன்றும் நிகழ்வது. நாளையும் நிகழும். இதை தடுக்க இயலாது. தகவல்தொழில்நுட்பம் வளர்ந்த இருபதாம் நூற்றாண்டில் உலகமெங்கும் கலைப்பரிமாற்றமும் கருத்துப் பரிமாற்றமும்
மிகத்தீவிரமாக இருந்து வருகிறது. இன்றைய கலைக்கு உலகளாவிய ஒரு பொதுமுகம் கண்டிப்பாக இருக்கும். அது கலையாக இருக்குபட்சத்தில் தனித்துவமான பண்பாட்டுஅடையாளமும் இருக்கும்.
கலையும் சிந்தனையும் கற்சிலைகள் அல்ல. அவை மரங்கள். அவற்றின் வேர்கள் நான்குபக்கமும் பரவி புதிய சத்துக்களுக்காக ஏங்கித்துடித்தபடியே உள்ளன.
வேர்களை வெட்டினால் பான்சாய் மரம் மட்டுமே வரும்.