பயணம்: கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘அருகர்களின் பாதை’ பல புதிய கதவுகளைத் திறந்து விட்ட ஒரு அற்புதமான பயண அனுபவமாகத் திகழ்ந்தது. நம் முன்னோர்களின் விழுமியங்களை மீள் பார்வை பார்க்க நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த உன்னதமான வாசல்கள்.

கடந்த ஒரு மாத காலமாக நான் அதிகாலையில் எழுந்தவுடன் தட்டுவது உங்கள் இணைய தள நுழைவு வாயிலையே. உங்கள் பயணத் திட்டமும், தேர்வு செய்த தலங்களும், நீங்கள் எத்துணை ஆழமாக சமணத் தலங்களைப் பற்றியும், இந்திய வரலாற்றினை அதன் அனைத்துக் கூறுகளுடனும் ஆய்வு செய்து, இந்த வரைவினைத் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதனைத் தெள்ளென விளக்குகிறது. தங்களின் உடனடிப் பதிவுகளின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது. எடுத்துக்கொண்ட பணியில் உள்ள தீராத காதலே இதனைச் சாதிக்க முடியும். என்னைப் பொறுத்த வரையில் இது ஓர் அசுர சாதனையே.

இந்தப் பயண அனுபவங்கள் நிச்சயம் ஓர் நூலாக விரைவில் வரும். நீங்கள் இணையத்தில் கொடுத்ததைவிட உங்களின் ஆய்வுகள் மற்றும் வாசிப்பு சார்ந்த மிக அதிகமான தகவல்களுடன். அத்தகைய ஓர் நூல், வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு, ஓர் உன்னதமான வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும்,

சங்கரநாராயணன்

ஒரு சிறிய ஐயம். ‘அமணர்’ சமணர் என்றாகியது சரி. ‘அருகர்’ என்பதன் வேர் எது?

அன்புள்ள சங்கரநாராயணன்,

பயணக்கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. ஆம், கொஞ்சம் விரிவாக.

அமணர் என்ற சொல் சமணர் ஆகவில்லை. சமணர்கள் பழங்காலத்தில் சிரவணர் என்றே சொல்லப்பட்டனர். இன்றும் வட இந்தியாவில் ஷ்ரவணர் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. விரதம் கொண்டவர்கள் என்று அதற்குப்பொருள். அச்சொல்லே சமணர் என மருவியது.

அர்ஹர் என்ற சொல்லின் மருவே அருகர்கள். அர்ஹந்த் என்றும் அச்சொல் சொல்லப்படுகிறது. பௌத்ததிலும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு ‘நோன்பு கொண்டவர்கள்’ ‘புனிதத் தகுதி கொண்டவர்கள்’ என்று பொருள்.

சமண வழிபாடுகளில் தீர்த்தங்கரர்கள்

நமோ அர்ஹந்தானம்
நமோ சித்தானம்
நமோ ஆயார்யானம்
நமோ உவஜ்ஜயானம்
நமோ சர்வ சாதுனாம்

என வணங்கப்படுகிறார்கள்.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் அறிவு வழியாக இந்தியாவின் சில பக்கங்களை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. எனக்கு இந்திய நேரடி அனுபவம் மிகக் குறைவு. பெரும்பாலும் எழுத்து வழியாகவே அதிகம். உங்கள் எழுத்துக்களுடன் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் பேசும் சித்திரங்கள். மனிதனின் வளர்ச்சிக்குப் பகுத்தறிவு மிக அவசியமானது. ஆனால் பகுத்தறிவின் பெயரால் ஒரு பண்பாட்டின் சாட்சியங்கள் தமிழ் நாட்டில் காப்பாற்றப்படாமல் இருப்பது வேதனை. உங்கள் கட்டுரை தமிழகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

அன்புடன்
க.சரவணபவன்

அன்புள்ள சரவணபவன்,

எவ்வளவு வாசித்தாலும் இந்தியா என்ற அனுபவம் மூலமே உண்மையான மனச்சித்திரத்தை அடைய முடியும். கூடுமானவரை சிறிய அளவிலேனும்.

ஜெ

முந்தைய கட்டுரைமாடல்ல மற்றையவை
அடுத்த கட்டுரைவாசிப்பின் வழிகள் – கடிதம்