‘கருத்துவேறுபாடு’

நீண்ட நாட்களாகவே இக்கேள்வியை நம் குழுமத்தில் எழுப்ப எண்ணி இருந்தேன். இப்போது பீலி சேர்ந்து அச்சு முறிந்தாயிற்று. திருமதி கவிதாவின் கடிதத்திலும் வழக்கமான (“உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்”) இந்தத் தேய்ந்து போன வார்த்தைகள். அறம் கதைகளின் முன்னுரையிலும் ஷைலஜா இதைப் பயன்படுத்தியிருந்தார். ஜெ தளத்தில் வரும் அநேகக் கடிதங்களில் இது தவறாமல் இடம்பெறுகிறது. நேர் பேச்சில் நண்பர்களிடம் ஜெ-வைப் பற்றிப் பேசும்போதெல்லாம் முன்னுரையாக அவர்கள் தவறாமல் உதிர்க்கும் வாக்கியம் இது. இதுவரை ஜெ-யின் எந்தக் கருத்து தவறானது, எவ்வாறு தாம் மாறுபடுகிறார்கள் என எவ்வளவு வலியுறுத்தியும் யாரும் என்னிடம் விளக்கியதில்லை.

இப்புதிரின் விடை என்ன, இந்த முன் ஜாக்கிரதையின் அடிப்படை என்ன ?

இதற்குப் பதிலளிக்கவில்லை என்றால் ஜெ உட்பட உங்கள் அனைவரின் தலைகள் சுக்கு நூறாக வெடித்துச் சிதறட்டும்.

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்

என்னுடன் அறிமுகம் செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் ‘நான் உங்கள் கதைகளை விரும்புகிறேன், ஆனால் எனக்குக் கருத்துவேறுபாடுகள் உள்ளன’ என்ற வரியுடன்தான் ஆரம்பிப்பது பலகாலமாகவே வழக்கம்தான். தொடர்ச்சியாகக் கருத்துச்செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள்,  நான் பேசும் தளங்களில் தங்கள் தரப்பைத் திட்டவட்டமாகப் பதித்துக்கொண்டிருப்பவர்களே அந்தவரியைச் சொல்லத் தகுதி படைத்தவர்கள். மற்றவர்கள் இரு காரணங்களுக்காகச் சொல்கிறார்கள். முதன்மையானது என் மேல் காழ்ப்போ கோபமோ கொண்ட பிற நண்பர்களுடன் உரசல் வராமலிருக்கும் முன்னெச்சரிக்கைதான்.

பொது வாசகர்களைப் பொறுத்தவரை அதற்கு ‘என்னை ஒரு தனித்துவம் உள்ள ஆளுமையாக அங்கீகரித்துப் பேசுங்கள்’ என்பது மட்டுமே பொருள். அது ஒருவகையான தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு, ஆனால் இயல்பானது. தன்னுடைய கருத்துக்கள் பேச்சில் இயல்பாக வெளிப்பட்டுத் தன் தனித்தன்மை தெரியவரட்டுமே என்ற தன்னம்பிக்கை இருந்தால் அதைச் சொல்லத் தேவையில்லை.

பொதுவாக இவ்வாறு சொல்பவர்கள் இருவகையினர். பெரும்பாலானவர்கள் உண்மையில் எதிர்க்கருத்து எதையும் கொண்டிருப்பதில்லை. சொல்லப்போனால் என்னுடைய கருத்துக்கள் எதையும் விரிவாக யோசித்திருப்பதுகூட இல்லை. பேச்சுக்களில் என்னுடைய கருத்துக்கள் என அவர்கள் சொல்வதில் பெரும்பாலானவை உண்மையில் நான் சொன்னவையாக இருக்காது. எங்காவது கேள்விப்பட்ட, அல்லது அவர்களே குத்துமதிப்பாகப் புரிந்துகொண்ட ஒன்றாக இருக்கும். அதை எங்கே வாசித்தோம் என்றுகூட அவர்களால் சொல்ல முடியாது. ‘நீங்க இப்டி சொல்றீங்களே’ என அவர்கள் சொல்லும்போது ‘நான் அப்டி எங்கயுமே சொல்லலை’ என்றோ ‘எந்த எடத்திலே சொல்லியிருக்கேன் சொல்லுங்க’ என்றோ நான் சொன்னதுமே அப்படியே நின்றுவிடுவார்கள்.

உண்மையில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் நான் சொன்ன தரப்பைத் திட்டவட்டமாக அதே சொற்களில் மேற்கோள் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அதைப்பற்றி அவர்கள் பல கோணங்களில் ஏற்கனவே யோசித்திருப்பார்கள். பலரிடம் விவாதித்திருப்பார்கள். பிறருக்குப் புகைமூட்டமான நினைவுகளே இருக்கும்.

இதற்குக் காரணம், இவர்கள் பெரும்பாலும் அறிமுக வாசகர்கள் என்பதே. என்னுடைய எழுத்துக்களுக்கு மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கும் சிந்தனைத்தளத்துக்கும் புதியவர்கள். நான் என்ன பேசிக்கொண்டிருக்கிறேன், எந்தப் பின்புலத்தில் அவை முன்வைக்கப்படுகின்றன என்ற எந்த புரிதலும் இவர்களிடம் இருப்பதில்லை. புதியதாகக் கல்லூரியில் சேர்ந்த கிராமத்து மாணவன் போல ஒட்டுமொத்தமான ஒரு திகைப்புதான் இருக்கும். அந்தத் திகைப்புக்குள் தொலைந்து போய்விடக்கூடாது, தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையும் இருக்கும். ‘நானும் ஒரு ஆள்தான்’ என்ற சுயபோதம் அது. அதுவே அச்சொற்றொடராக வெளிப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் ‘எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு’ என ஒருவர் சொன்னதுமே ‘என்னென்ன கருத்துக்களிலே வேறுபடுறீங்க? அதுக்கு என்னென்ன ஆதாரங்கள வச்சிருக்கீங்க?’ என உடனே கேட்டு மடக்கும் துடிப்பு எனக்கிருந்தது. இப்போது அதை ஒரு பரிவுப் புன்னகையுடன் எதிர்கொள்ளப் பழகிவிட்டேன். நம் சூழலின் பொது மனநிலையின் இயல்பான ஒரு பகுதி அது, அவ்வளவுதான்.

உண்மையில் என் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து என்பது இயல்பாக எழுந்து வருவது. மாற்றுக்கருத்து உடையவர் அதைப்பற்றியே யோசிப்பார். அதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் திரட்டிக்கொண்டிருப்பார். அதன்பின் அவரால் அதைக் கோர்வையாக முன்வைக்காமலிருக்க முடியாது. அப்படிப் பல வாசகர்கள் எழுதிய பதில்கருத்துக்களையும் என் விளக்கங்களையும் இணையத்தில் காணலாம். அவர்கள் ‘எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும்’ என பொத்தாம் பொதுவாக சொல்லிச்செல்வதில்லை.

நான் ஒற்றைவரிக் கருத்துக்களைச் சொல்வதில்லை என்பது உண்மையில் மாற்றுக்கருத்துடன் என் தரப்பை வாசிப்பவர்களுக்குத் தெரியும். வரலாற்றுப் பின்புலத்துடன் தர்க்கபூர்வமாக விரிவாக என் தரப்பைச் சொல்ல எப்போதும் முயன்றிருப்பேன். ஆகவே ‘அது அப்டி இல்லீங்க’ என ஒற்றை வரியில் என் தரப்பை ஒருவர் மறுக்க முடியாது. என் கருத்துக்களுக்கு உண்மையான மாற்றுத்தரப்பு உடையவர் அவரிடமும் இதற்குப் பெரும்பாலும் சமமான ஒரு வரலாற்றுப் பின்னணியையும் தர்க்கத் தொடர்ச்சியையும் வைத்திருப்பார்.

அவ்வாறு முழுமையான ஒரு மாறுபட்ட கருத்து இல்லாமல் இருக்கும் வெறும் அபிப்பிராயங்கள் என்னைப்பொறுத்தவரை இல்லாதவை மட்டுமே.

ஆனால் ஒன்றுண்டு. இன்று என்னுடைய நல்ல வாசகர்களாக இருக்கும் பலரும் இப்படிச் சொல்லிக்கொண்டு அறிமுகமானவர்களே. தொடர்ந்து வாசித்து, விவாதித்து மெல்லமெல்ல நெருங்கி வருகிறார்கள். அதன்பின் அந்த முன்ஜாமீன் அவர்களுக்குத் தேவையிருப்பதில்லை. நண்பர்களாக ஆகி சொல்லவேண்டியவற்றை நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே ஒருவர் அந்த வரியைச் சொல்லும்போது, புன்னகையுடன் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாவல்கோட்டம் – கடிதம்
அடுத்த கட்டுரைநயினார்